
அண்ணா என் உடைமைப் பொருள் – 45
கேள்வி இங்கே, பதில் அங்கே
– வேதா டி. ஸ்ரீதரன் –
அண்ணாவுக்கும் எனக்கும் இடையே ஒரு நீண்ட கேள்வி-பதில் அத்தியாயம் உண்டு. என் மனதில் அவ்வப்போது எழும் கேள்வி அல்லது என்னைச் சுற்றி அவ்வப்போது நடைபெறும் ஏதாவது சம்பவம் குறித்து ஓரிரு நாட்களிலேயே அண்ணாவிடமிருந்து விளக்கம் கிடைக்கும்.
இத்தகைய பல சம்பவங்கள் வேடிக்கையானவை. சில சம்பவங்கள் உச்சந்தலையில் அடிப்பது போல பலமாக இருந்ததும் உண்டு.
இதுபோல நிறைய சம்பவங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே தருகிறேன்.
ஒருதடவை சாரதா அலுவலகத்தில் ஒரு வேலை ஆரம்பிப்பதற்காக நல்ல நாள், நேரம் பார்க்க வேண்டி வந்தது. இளங்கோவனுக்கு ஜோசியம் முதலான விஷயங்களில் ஓரளவு பரிசயம் உண்டு. அவர் பஞ்சாங்கம் பார்த்து நல்ல நாள் முடிவு செய்தார். அவர் சொன்னபடி வேலையை ஆரம்பித்தோம்.
அது ஒரு செவ்வாய்க் கிழமை.
வேலை ஆரம்பித்த பின்னர் நான் அவரைக் கேலி செய்தேன். ‘‘செவ்வாய் வெறுவாய் என்பார்கள். செவ்வாய்க் கிழமையை மங்கள வாரம் என்பதே அசட்டுத் தனம். எனக்குத் தெரிந்த ஒருவர் அதைக் கேலி பண்ணுவார்’’ என்றெல்லாம் ஏதேதோ சொல்லி இளங்கோவனை வெறுப்பேற்றினேன்.
நான் ஒன்று சொல்ல, அவர் பதில் சொல்ல என்று, அன்றைய தினம் காலை முழுவதும் எங்கள் அலுவலகம் முழுவதும் ஒரே சிரிப்பலை.

மாலையில் நானும் சாரதாவைச் சேர்ந்த இன்னொருவரும் அண்ணாவைப் பார்க்கப் போயிருந்தோம். அண்ணா அவரது புத்தக வரிசையில் இருந்து ஒரு புத்தகத்தைத் தேடி எடுக்குமாறு என்னிடம் கூறினார். நான் தேடிக் கொண்டிருந்த போது என்னிடம் ஏதோ கேட்டார். எனக்குச் சரியாகக் காதில் விழவில்லை. ‘‘என்ன அண்ணா?’’ என்று கேட்டவாறு அவரை நோக்கித் திரும்பினேன்.
‘‘சீதைக்கு அனுமார் மோதிரம் கொடுத்த கதை தெரியுமா உனக்கு?’’
‘‘தெரியும், அண்ணா.’’
‘‘பரவாயில்லையே, குழந்தைக்கு ராமாயணம்லாம் தெரிஞ்சிருக்கு. சீதைக்கு அனுமார் மோதிரம் கொடுத்தது செவ்வாய்க் கிழமையன்னிக்கு நடந்தது-ன்னு சொல்லுவா. அதனால தான் செவ்வாய்க் கிழமையை மங்கள வாரம்னு சொல்லுவா.’’
எனக்குச் சிரிப்பு வந்ததும் உண்மை, என்னுடன் வந்திருந்த நண்பருக்குக் கை கால்கள் நடுங்க ஆரம்பித்ததும் உண்மை.
பெரியவாளை சிவபெருமானின் அவதாரம் என்றே போற்றுவதுண்டு. பெரியவா என்ற சிவ அவதாரத்தின் பணி நிறைவாக வெளிப்படுவது தெய்வத்தின் குரலில் தான்.
திடீரென ஒரு தடவை எனக்கு, வியசருக்காகத் தந்தத்தை ஒடித்து மகாபாரதம் எழுதிய கை தான் பெரியவாளுக்காக தெய்வத்தின் குரல் எழுத வந்துள்ளதோ என்று தோன்றியது. அண்ணாவின் பிறப்பு விநாயகர் சதுர்த்தி என்பதும், அதனாலேயே அவருக்கு கணபதி என்ற பெயர் சூட்டப்பட்டது என்பதும் எனது எண்ணத்துக்கு வலு சேர்ப்பதாக இருந்தது.
இந்த எண்ணம் தோன்றிய ஒருசில நாட்களுக்குப் பின் நானும் இளங்கோவனும் அண்ணாவைப் பார்க்கப் போயிருந்தோம். வழக்கம் போல ஏதேதோ விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தோம். திடீரென்று அண்ணா, ‘‘வேங்கடேஸ்வரன்-னா வேங்கடத்துக்கே ஈஸ்வரன்-னு அர்த்தம்’’ என்று ஆரம்பித்து இதேபோன்ற ஈஸ்வரன் என்று வரும் ஒருசில நாமாக்களைக் குறிப்பிட்டு விளக்கினார். பின்னர், ‘‘இந்த விநாயகருக்கு மட்டும் வினோதமான பெயர் பார்த்தியோ… விக்னேஸ்வரன்-னு. விக்னம் எல்லாத்துக்கும் ஈஸ்வரன்-னு அர்த்தம்’’ என்றார்.
உடனே இளங்கோவன் அண்ணாவை இடைமறித்து ஏதோ விளக்கம் சொல்ல ஆரம்பித்தார். அண்ணா அவரைக் கவனிக்காமல் சிரித்தவாறே என்னைப் பார்த்துக் கையை நீட்டினார். அவரது வலது கையின் நான்கு விரல்களும் என்னை நோக்கி இருந்தன. கட்டை விரலை மடக்கி உள்ளங்கையில் வைத்திருந்தார். இவ்வாறு என்னை நோக்கி விரல்களை நீட்டியவாறே, ‘‘உனக்கு நான் தான் விக்னேஸ்வரன்’’ என்றார்.
எனக்கு என்ன புரிய வேண்டுமோ, அது புரிந்தது.
இளங்கோவன் ஸ்வாமி ஓங்காராநந்தருக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் அண்ணாவுக்குப் பணிவிடைகள் பண்ணுவது குறித்து ஸ்வாமிஜிக்கு ரொம்ப சந்தோஷம். ஸ்வாமிஜிக்குப் பெரியவா மீது அபார பக்தி. தெய்வத்தின் குரலைத் தொகுத்தவர் என்பதால் அண்ணாவைச் சந்திக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார்.
ஸ்வாமி ஓங்காராநந்தர் ராமகிருஷ்ண தபோவனத்தில் சன்னியாசம் பெற்றவர். அண்ணாவோ ஆசார பீடமான காஞ்சிப் பெரியவாளுக்கு நெருக்கமானவர். ஸ்வாமிஜி அவரைச் சந்திக்க வந்தால் அண்ணா அவருக்கு நமஸ்காரம் பண்ணுவாரா என்ற கேள்வி என் மனதில் எழுந்தது.

இதற்குச் சில நாட்களுக்குப் பின்னர் விநாயக சதுர்த்தி வந்தது.
விநாயக சதுர்த்தியன்று சாரதா ப்ப்ளிகேஷன்ஸ் அலுவலகத்தில் விநாயக பூஜை பண்ணுமாறு அண்ணா எங்களிடம் கூறினார். பூஜைக்கு என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்றும் பெரிய பட்டியல் போட்டுக் கொடுத்தார். மதியம் மூன்று மணிக்கு ஒரு ‘‘பெரியவர்’’ வருவார், அவரே பூஜை பண்ணுவார் என்றும் கூறினார்.
ஶ்ரீசக்ரா, சாரதா நண்பர்கள் அனைவரும் அண்ணா சொன்னது போலவே எல்லாம் ரெடி பண்ணி விட்டு ‘‘பெரியவர்’’ வருகைக்காகக் காத்திருந்தோம். மூன்று மணி கடந்து விட்டது. ‘‘பெரியவர்’’ வரவில்லை.
அங்கிருந்த நண்பர்களில் பெருமாள் என்பவருக்கு ஏதோ உள்ளுணர்வு. திடீரென வெளியே கிளம்பினார். நடைபாதையைக் கடந்து தெருவுக்கு வந்து பார்த்தார். தெரு முனையில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. கார் டிரைவர் கீழிறங்கி யாரிடமோ ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தார். பெருமாள் அவருக்கு அருகே சென்று பார்த்தால்… காருக்குள் அண்ணா அமர்ந்திருந்தார்.
எங்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி.
அண்ணா அலுவலகத்துக்குள் நுழைந்ததுமே அனைவரும் படபடவென்று விழுந்து நமஸ்கரித்தோம். என்னைப் பார்ப்பதற்காக வந்திருந்த ஒரு நண்பரும் அப்போது அலுவலகத்தில் இருந்தார். அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. வந்திருப்பது யார் என்பது தெரியாமலேயே அவரும் விழுந்து வணங்கினார்.
‘‘பெரியவர்’’ அண்ணா, சாரதாவில் முறையாக விநாயக பூஜையை நிறைவு செய்தார்.
சிவோ பூத்வா சிவம் யஜேத் என்று சொல்வார்கள். சிவனாக மாறி சிவனைப் பூஜிக்க வேண்டும் என்பது இதன் பொருள். ‘‘உனக்கு நான் தான் விக்னேஸ்வரன்’’ என்று சொன்னவரே எங்கள் அலுவலகத்தில் விக்னேஸ்வர பூஜை பண்ணி வைத்தார்.
பூஜை முடிந்ததும் அறையில் இருந்து வெளியே வந்த அண்ணா, ஹாலில் இளங்கோவன் மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த ஸ்வாமி ஓங்காரநந்தர் படத்தைப் பார்த்து, ‘‘இது தான், இளங்கோ சொல்லுவாரே… அந்த ஸ்வாமிஜியா?’’ என்று கேட்டார். ஆமாம் என்று சொன்னேன்.
தன்னை நோக்கியவாறு அந்தப் புகைப்படத்தை நன்றாகத் திருப்பி வைத்துக் கொண்ட அண்ணா, சாஷ்டாங்கமாகத் தரையில் வீழ்ந்து வணங்கினார்.
வழக்கம் போலவே, எனக்கு என்ன புரிய வேண்டுமோ, அது புரிந்தது.
அண்ணா காரில் ஏறி உட்கார்நததும், அலுவலகத்துக்குப் புதிதாக வந்திருந்த நண்பர், அண்ணாவுக்கு அருகே சென்று அவரது பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொண்டார்.
அவருக்கு அண்ணா யார் என்றே தெரியாது என்பதால் எனக்கு அந்தக் காட்சி வினோதமாக இருந்தது.
கார் கிளம்பிப் போனதும் அவர், என்னிடம், ‘‘ஶ்ரீதர், இவரைப் பார்த்தால் காஞ்சிப் பெரியவரையே நேரில் பார்ப்பது போல இருக்கு’’ என்று கூறினார்.
இதுபோல டஜன்கணக்கான நிகழ்வுகள் உண்டு.
இவற்றில் அண்ணாவிடம் நான் எப்படி வந்து சேர்ந்தேன் என்பதை விளக்கும் ஒரு நிகழ்வு ரொம்பவே குறிப்பிடத் தக்கது. அதற்கும் ‘‘பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும்’’ புத்தகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.