
கட்டுரை: மகர சடகோபன், தென்திருப்பேரை
திவ்ய தேசங்களில் கோயில் கொண்டிருக்கும் மூர்த்திகளுக்கு வெவ்வேறு மாதங்களில் வெவ்வேறு நக்ஷத்திரத்தில் அவதார தினம் என்று சொல்லி, பிரம்மோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அப்படியென்றால் , அவர்கள் யாரும் ஒன்று இல்லையா? என்ற சந்தேகம் நிலவக்கூடும். அதற்கான பதிலை இயன்றளவு விளக்க முயற்ச்சிக்கும் கட்டுரை.
ஶ்ரீமந் நாராயணன் என்ற பரபிரமத்தை ஐந்து நிலைகளில் வழிபாடு செய்யலாம் என்பதை ஸ்வாமி மணவாள மாமுனிகள் தனது திருவாய்மொழி நூற்றந்தாதியில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
செய்ய பரத்துவமாய் சீரார் வியூகமாய்
துய்ய விபவமாய்த் தோன்றி இவற்றுள் – எய்துமவர்க்கு இந்நிலத்தில் அர்ச்சாவாதாரம் எளிது என்றான்
பன்னு தமிழ்மாறன் பயின்று
பரமபதத்தில் ஶ்ரீபரத்துவமாய், திருப்பாற்கடலில் வியூக மூர்த்தியாக, விபவ அவதாரமான நரசிம்மன், ராமர் , கிருஷ்ணனாக போன்ற அவதாரங்களை, அந்தரியாமியாக ஒவ்வொரு ஜீவனுள்ளும், திவ்ய தேசங்களில் அர்ச்சையாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
இந்த ஐந்து நிலைகளில் பரமபதம் , திருப்பாற்கடல், அந்தரியாமி என்ற மூன்று நிலைகளை வேத நூல்கள் மூலம், ஆழ்வார்கள் வாக்குகள் மூலம் அறிகிறோம். விபவ அவதாரங்கள் காலத்தினால் ஏற்பட்ட நிலை. அக்காலத்தில் இருந்தவர்கள் அறிந்து, வழிவழியாக இன்றும் நாம் அறிகிறோம். அவன் உகந்து அருளிய நிலங்கள் திவ்யதேசம் என்றும், திவ்யதேங்களே எக்காலமும் நிலைத்து நிற்கும் நிலை என்பதுதான் உண்மை.

அந்த அர்ச்சை நிலையில் இருக்கும் எம்பெருமான் திவ்யதேசத்தில் எழுந்தருளிய நாள் என்பது , அந்தந்த திவ்ய தேச எம்பெருமான் திருநக்ஷத்திரமாகவும், அந்தந்த நாட்களில் பிரம்மோற்சவ திருவிழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.வெவ்வேறு காலகட்டங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படுவது என்பது பக்தர்கள் அனைவரும் ஒன்றுகூடி எம்பெருமானை தரிசனம் செய்து கண்டுகளிக்க வசதியாக இருக்கும். ஶ்ரீமந் நாராயணன் பரமபதத்திலிருந்து அடியவர்களைக் காப்பாற்றுவதற்காகவும், அதைவிட அடியவர்களுடன் கலக்கவும் அடியவர்களின் கைங்கரியத்தை எக்காலமும் ஏற்றுக்கொள்ளவும் அர்ச்சாவதாரமாக திவ்யதேசத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
ஆனாலும் கிருஷ்ண ஜெயந்தியை ஆவணி ரோகிணியிலும், இராமனின் திருநக்ஷத்திர வைபவத்தை சித்ரா புனர்பூசத்திலும், வாமன ஜெயந்தியை ஆவணி திருவோணத்திலும், நரசிம்மன் அவதாரத்தை வைகாசி ஸ்வாதியிலும் பரவலாக எல்லா திவ்ய தேசங்களிலும் சிறப்பாக ஒரே நாளில் கொண்டாடுகிறோம். மேற்கூறிய நக்ஷத்திரத்தில் அந்தந்த விபவ அவதாரங்கள் தோன்றி, அடியவர்களுக்கு அருள்பாலித்தார், இன்றும் அருள்பாலித்து கொண்டிருக்கிறார்.
எம்பெருமானுக்கு உகந்தவை அனைத்து நாட்களும் அனைத்து நக்ஷத்திரங்கள் என்றாலும், மூலமூர்த்தி ஏகமூர்த்தி ஶ்ரீமந் நாராயணன் திருநக்ஷத்திரம் திருவோணம் என்று போற்றி புகழப்படுகிறது என்பதனை ஆழ்வார்கள் ஈரச்சொற்கள் கொண்டு அறிந்துக் கொள்ளலாம்.
பெரியாழ்வார் முதல் திருமொழியில் “வண்ண மாடங்கள்” என்ற பதிகத்தில் கண்ணன் அவதரித்த சம்பவங்களை விவரித்து வந்த ஆழ்வார், மூன்றாவது பாடலில் “ திருவோணத்தான் உலகாளும்” என்று கண்ணனைப் புகழ்கிறார்.
“பேணிச்சீருடைப் பிள்ளை பிறந்தினில்*
காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார்*
ஆணொப்பார் இவன் நேரில்லைகாண்* திரு
வோணத்தான் உலகாளுமென்பார்களே”
இந்த பதிகத்தில் கண்ணன் வேறு அல்ல நாராயணன் வேறு அல்ல என்பதனை கடைசி பாசுரத்தில், மன்னு நாரணன் நம்பி பிறந்தமை” என்று பாடியிருப்பதன் மூலம் நன்றாகப் புலப்படுகிறது.
இரண்டாவது திருமொழியில்,
“மத்தக்களிற்று வசுதேவர் தம்முடை*
சித்தம்பிரியாத தேவகிதன் வயிற்றில்*
அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்*
முத்தம் இருந்தவாகாணீரே முகிழ்நகையீர்! வந்துகாணீரே.”
அத்தத்தின் பத்தாம் நாள் என்றால் “ திருவோணம்” என்றும், அத்தத்தின் பத்தாம் நாள் மேல்நோக்கி சென்றால் ரோகிணி என்றும் ஆழ்வார் மறைத்துப் பிறந்த நக்ஷத்திரத்தை குறிப்பிடுகிறார். பகவான் கண்ணனின் அவதார நக்ஷத்திரத்தை முதல் பதிகத்தில் திருவோணம் என்று சொல்லி , இரண்டாவது பதிகத்தில் திருவோணம், ரோகிணி என்று இரண்டு நக்ஷத்திரம் வரும்படி பொருள் கொள்ளுமாறு மறைத்துக் குறிப்பிடுகிறார்.

முதல் பத்து மற்றும் இரண்டாம் பத்து பாசுரங்களின்படி கண்ணனின் அவதார தினம் “ திருவோணம்” என்று தெளிவாகக் கூறியுள்ளார். கண்ணனின் அவதார நக்ஷத்திரமான ரோகிணியை விடுத்து, ஆழ்வார் மனது “ திருவோணத்தை நோக்கிச் செல்வதைக் கவனிக்க முடிகிறது.
“திண்ணார் வெண்சங்குடையாய்! திருநாள் திருவோணமின் றேழுநாள்* முன்
பண்ணோர் மொழியாரைக் கூவி முளையட்டிப் பல்லாண்டு கூறுவித்தேன்*
கண்ணாலம் செய்யக் கறியும் கலத்தரிசியும் ஆக்கி வைத்தேன்*
கண்ணா நீநாளைத்தொட்டுக் கன்றின்பின் போகேல் கோலம் செய்திங்கேயிரு”
பெரியாழ்வார் 3ம் பத்து மூன்றாம் திருமொழியில் “திருநாள் திருவோணம்” திருவோண நக்ஷத்திரத்தில் அவதரித்த கண்ணன் என்று மீண்டும் வலியுறுத்தி குறிப்பிடுகிறார்.
திவ்ய பிரபந்தம் தொடக்கமாகக் கருதப்படும் “திருப்பல்லாண்டு” பதிகத்தில் பெரியாழ்வார் ,
“எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதுமே”
“ திருவோணத் திருவிழவில் அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை” என்று மாலைச் சந்தியம் பொழுதில் நரசிங்கமாகத் தோன்றி ஹிரண்யுகசிபுவை அழித்த நாள் திருவோணத் திருவிழா என்று நரசிம்ம அவதாரத்தைக் கொண்டாடுகிறார். நரசிம்மரின் அவதார நக்ஷத்திரமான ஸ்வாதியை விடுத்து, ஆழ்வார் திருவோணம் என்று குறிப்பிடுவதைக் காணலாம்.

பல்லாண்டு பதிகத்தில் கடைசியில் இரண்டு பாடலில் “ நமோ நாரணயா வென்று” ஓத வேண்டும் என்று வலியுறுத்தியதன் மூலம், பல்லாண்டு முழுவதும் மூலமூர்த்தி ஶ்ரீமந் நாராயணனுக்கு என்பது தெளிவாகப் புலப்படுகிறது.
நீராட்டம் ” வெண்ணெய் அளைந்த குணுங்கும்” பதிகத்தில் இரண்டாவது பாடலில்,
கன்றுகளோடச் செவியில் கட்டெறும்பு பிடித்திட்டால்
தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்கு மாகாண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய்! நீ பிறந்த திருவோணம்
இன்று, நீ நீராட வேண்டும் எம்பிரான்! ஓடாதே வாராய்.
“ நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம்” என்று “ஏழு மரங்களை ஓர் அம்பினால் எய்த” இராம அவதாரத்தைச் சொல்லி, நீ பிறந்த திருவோணம் என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார். இராமன் பிறந்த புனர் பூசம் என்ற நக்ஷத்திரத்தை விடுத்து திருவோணம் என்று அறிதிட்டு அழைக்கிறார்.
நீராட்டம் முதல் பாடலில் ” நண்ணலரிய பிரானே நாரணாா நீராட வாராய்” என்று பாடி கண்ணனை நீராட்ட அழைக்கிறார் ஆழ்வார். இதிலிருந்தும் கண்ணன் , ராமன் வேறு அல்ல, நாராயணன் வேறு அல்ல என்பது தெளிவாக புலப்படுகிறது.
“வாமன ஜெயந்தி” ஆவணி திருவோணம் அன்று மிக விஷேசமாகக் கேரளாவில் கொண்டாடுவதை இங்கே கவனித்துக்கொள்ள வேண்டும். மேலும் திருப்பதி ஏழுமலையான் திருநக்ஷத்திரம் புரட்டாசி திருவோணம்
இவ்வாறாக நரசிம்மன், வாமனன், இராமன், கிருஷ்ணன், திருவேங்கடமுடையோன் திருநக்ஷத்திரம் “ திருவோணம்” என்று ஆழ்வார் அழைப்பதற்குக் காரணம், மூலமூர்த்தி பரவாசுதேவன், ஶ்ரீமந் நாராயணன் திருநக்ஷத்திரம் “ திருவோணம்” .
திருவோணம் என்பது ஶ்ரீமந் நாராயணன் திருநக்ஷத்திரம், ஆதலால் தான் ஆழ்வார்கள் அவனுடைய அவதாரம் அனைத்தையும் திருவோணத்துடன் இணைத்து பாடியுள்ளார்கள். ஶ்ரீமந் நாராயணன் திருவோணம் நக்ஷத்திரத்திலும், திரு சேர்ந்து இருப்பதன் மூலம் , அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பனாக எம்பெருமான் உள்ளது மிகவும் சிறப்பு.
“ திருவோணத்தான் தாளை
திருவுடன் தினம் பற்றி – இப்
பிறவியில் இடையறா தொழுது
பிறப்பறுத்து பேரானந்தம் நல்கவே”
Shravanam Vishnu Nakshathram -As per Puranams. Azhwar unearths that vakhyam interpolating with avatharams, there by Azhwar’s parivu out of fear due to kamsa exhibited abd importantly, tells the world The avatharas are not different from Supreme Lord ss
Well researched article on திரà¯à®µà¯‹à®£à®®à¯. Beautiful references from Azhwar.