October 21, 2021, 1:54 pm
More

  ARTICLE - SECTIONS

  அண்ணா என் உடைமைப் பொருள் (55): அண்ணாவும் நானும்!

  ‘‘பரவாயில்லையே, நன்னா வேலை பார்க்கறயே! பேசாம நான் ஒரு மளிகைக் கடை போட்டிருக் கலாம். எனக்கு நல்ல அசிஸ்டென்டா இருந்திருப்பாய்!

  anna en udaimaiporul 2 - 1

  அண்ணா என் உடைமைப் பொருள் – 55
  அண்ணாவும் நானும் – 1
  – வேதா.டி. ஸ்ரீதரன் –

  அண்ணாவுடன் நான் பல வருடங்கள் இருந்திருக்கிறேன். ஆனாலும், எனக்கென்னவோ அவரிடம் ஆன்மிக விஷயமாக எதுவும் கேட்கத் தோன்றவில்லை. அவராக ஏதாவது சொன்னால் கேட்டுக் கொள்வேன். மற்றபடி, நானாக அவரிடம் எதுவும் கேட்டதில்லை.

  அண்ணா ஒரு ப்ரொஃபசர் வீட்டில் தங்கி இருந்த சமயம். ஒருமுறை சில மளிகை சாமான்கள் வந்திருந்தன. அவற்றை யெல்லாம் உரிய டப்பாக்களில் போடுமாறு சொன்னார், அண்ணா.

  நான் தரையில் ஒரு பேப்பரை விரித்து, எந்தப் பொருளும் கீழே சிந்தாமல், ஒவ்வொரு பொருளையும் நிதானமாக அதற்குரிய டப்பாவில் போட்டேன்.

  நான் வேலை செய்யும் விதத்தை அண்ணா வேடிக்கை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார்.

  என்னைப் பார்த்து, ‘‘பரவாயில்லையே, நன்னா வேலை பார்க்கறயே! பேசாம நான் ஒரு மளிகைக் கடை போட்டிருக் கலாம். எனக்கு நல்ல அசிஸ்டென்டா இருந்திருப்பாய்!’’ என்றார்.

  anna alias ra ganapathy6 - 2

  அவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், ஒரு மளிகைக் கடை முதலாளிக்கும், அவரது அசிஸ்டென்டுக்கும் உள்ள சம்பந்தம் மாதிரி தான் அவருக்கும் எனக்குமான உறவு இருந்தது.

  எனக்கு அவரிடம் சில எதிர்பார்ப்புகள் இருந்தது உண்மை. ஆனாலும், அண்ணா எனது எதிர்பார்ப்புகளையும், பிரார்த்தனைகளையும் புறக்கணித்தே வந்தார் என்பதும் உண்மை.

  ஆரம்ப நாட்களில், சாரதா பப்ளிகேஷன்ஸ் நல்ல நிலைக்கு வரும், ஓரளவு பணம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. விரைவிலேயே அதுவும் பொய்த்துப் போனது.

  அண்ணாவிடம் வருவதற்கு முன்பு ஓரளவு பக்தி இருந்தது. அதைத் தொடர்ந்து அண்ணா மீது முழுமையான பக்தியும் நம்பிக்கையும் ஏற்பட்டது.

  ஆனால், இவை எல்லாம் சில வருடங்களே நீடித்தன.

  அதன் பின்னர் விரக்தியும் சபித்தலும் தான்.


  ஆனால், அண்ணா-ஶ்ரீதரன் உறவு என்பது இது மட்டுமே அல்ல.

  அண்ணா காலம் முடிந்ததும் விரக்தி மிக அதிகமானது. அண்ணா எனக்கு எதுவுமே பண்ணவில்லை என்று என் மனம் ஓலமிட்டது.

  அதேநேரத்தில், அண்ணா எனக்கு ஏதோ செய்தி சொல்லி இருக்கிறார் என்று என் உள் மனம் சொன்னது. முதலில் நான் அதைப் புறக்கணித்தேன். நாளாக ஆக, அந்த எண்ணம் வலுத்தது.

  சக்திவேலிடம் இதைப் பகிர்ந்து கொண்டேன். அண்ணா என்னைப் பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறாரா என்று அவரிடம் கேட்டேன்.

  ‘‘அவன் சில காரியங்களைப் பண்ணணும்-னு இருக்கு. அதைப் பண்ணுவான்’’ என்று அண்ணா தன்னிடம் சொன்னதாக அவர் தெரிவித்தார்.

  நான் பண்ண வேண்டியது என்ன காரியம் என்பது புரியவில்லை. ஆனால், அந்தக் காரியம் எப்படி நடக்கும் என்பது, சில வருடங்களுக்குப் பின்னர், தெளிவாகவே ‘‘புரிய வைக்கப்பட்டது’’ – ‘‘நான்’’ எழுதிய காரேய் கருணை ராமாநுஜா புத்தகத்தின் மூலம்.


  அண்ணா காலத்துக்குப் பின்னர், ஒரு நண்பரின் வேண்டுகோளின் பேரில் ஶ்ரீரங்கம் கோவிலைப் பற்றி ஒரு புத்தகம் எழுத வாய்ப்புக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டில், ராமாநுஜரைப் பற்றியும் ஒரு புத்தகம் எழுதுமாறு ஓர் அன்பர் கேட்டுக் கொண்டார்.

  சில காரணங்களால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அதேநேரத்தில் எழுதும் ஆசையும் இருந்தது. எனவே, எழுதலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாறினேன்.

  anna alias ra ganapathy11 - 3

  இரண்டு பெரியவர்களிடம் இதைப் பற்றி முறையிட்டேன். இருவருமே எழுதுமாறு பணித்தார்கள். ஆசியும் வழங்கினார்கள்.

  தடுமாற்றம் இருந்த போதிலும், சிற்சில ஊர்களுக்குப் போய், சில புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டேன்.

  வழியெங்கும் ஏராளமான சுப சகுனங்கள் தென்பட்டன.

  இறுதியாக, ஶ்ரீவில்லிபுத்தூர் வந்தேன். ஆண்டாள் அவதாரத் தலத்தில் அவளுக்கென்று ஒரு தனி சன்னிதி உண்டு. அங்கே அவளைத் தரிசித்தேன். அர்ச்சகருக்கு என்ன தோன்றியதோ, என் கையில் ஒரு தாமரைப் புஷ்பத்தைக் கொடுத்தார்.

  அதைக் கண்ணில் ஒத்திக் கொண்டு நிமிர்ந்தேன். எதிரில் ஶ்ரீராமாநுஜர் சித்திரம்.

  வழக்கமாக, அந்தச் சித்திரத்தைப் பார்த்தால் எனக்குச் சிரிப்பு தான் வரும். காரணம், ராமாநுஜர் திரிதண்டம் தரித்தவர், விசிஷ்டாத்வைதி. ஆனால், அந்தச் சித்திரத்தில் அவர் அத்வைத சந்நியாசிகளைப் போல ஏகதண்டத்துடன் காட்சி தருவார்.

  ஆனால், ஏனோ, அன்று எனக்குச் சிரிப்பு வரவில்லை. மாறாக, எனக்குப் பின்னால் இருந்து யாரோ ‘‘அண்ணா’’ என்று அழைப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

  ஆகா, நல்ல சகுனம்.

  ஆண்டாளுக்குச் சீர் செய்ததால் ராமாநுஜரை ஆண்டாள் தனது அண்ணாவாகக் கொண்டாடினாள் என்பது ஐதிகம். எனவே, ஆண்டாளே, தனது அண்ணாவான ராமாநுஜரைப் பற்றி எழுதச் சொல்லி உத்தரவு கொடுக்கிறாள் என்று என் மனம் நம்பியது.

  தரிசனம் முடித்து காரில் ஏறி அமர்ந்தேன்.

  திடீரென என் மனதில், ‘‘அண்ணா என்றதும் எனக்கு ராமாநுஜர் நினைவு எப்படி வந்தது?’’ என்ற கேள்வி எழுந்தது. அண்ணா தனது கடைசி காலத்தில் என்னைச் செய்யுமாறு பணித்த ஒரு வேலையும், நான் எனது வழக்கமான சோம்பேறித்தனத்தால் அதைச் செய்யாமலேயே விட்டதும் ஞாபகம் வந்தது.


  அது ராமாநுஜரின் குருவாகிய யாதவப் பிரகாசர் பற்றிச் சொல்லப்பட்டு வரும் தவறான கருத்தைப் பற்றியது.

  யாதவப் பிரகாசர் ஓர் அத்வைதி என்றே பொதுவாகச் சொல்லப்பட்டும் நம்பப்பட்டும் வருகிறது. ஆனால், அது தவறு.

  ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டில் அவரைப் பற்றி நிறைய புத்தகங்கள் வெளியாகும். அனைத்து நூல்களிலும் இதே தவறான கருத்து தான் இடம் பெறும்.

  இதை எனக்கு விளக்கிய அண்ணா, ‘‘நீ உனக்குத் தெரிந்த மீடியா நண்பர்களிடம் சொல்லி, இந்தத் தவறைச் சரி செய்ய ஏற்பாடு செய்’’ என்று கூறினார்.

  sriramanujar
  sriramanujar

  நான் சில நண்பர்களிடம் பேசினேன். இதற்கு என்ன செய்வது என்பது அவர்களுக்குப் புரியவில்லை. எனவே, நான் அண்ணாவிடம், ‘‘ஒருசில வைணவப் பெரியார்களிடம் இதைப் பற்றிப் பேசிப் பார்க்கட்டுமா?’’ என்று கேட்டேன். ‘‘அவசியம் பண்ணு’’ என்றார்.

  ஆனாலும் நான் யாரையும் சந்திக்க முயற்சி செய்யவே இல்லை. அலட்சியம், சோம்பேறித்தனம் முதலியவை ஒரு காரணம்.

  ‘‘ராமாநுஜரைப் பற்றி மட்டுமல்ல, எல்லா ஆசார்ய புருஷர்களைப் பற்றியும் ஏராளமான கட்டுக்கதைகள் உலா வருகின்றன. இதையெல்லாம் யார் சரி பண்ணுவது, எப்படிப் பண்ணுவது? அண்ணாவுக்கு எதற்கு இந்த வெட்டி வேலை?’’ என்ற எண்ணம் இன்னொரு காரணம்.

  போகிறேன், போகிறேன் என்று தட்டிக் கழித்து விட்டேன். இதைத் தொடர்ந்து அண்ணாவே இந்த விஷயம் பற்றிச் சிலருக்குக் கடிதம் எழுதினார்.

  அண்ணா காலத்துக்குப் பின்னர் எனக்குள் இது பெரிய மன உறுத்தலாக உருவெடுத்தது. ஒருசிலரைப் பார்த்து விஷயத்தைச் சொல்லுவது கடினமான வேலையா? அண்ணா சொன்ன ஒரு சிறிய பணியைச் செய்யாமல் அலட்சியமாக இருந்து விட்டோமே என்று மிகவும் வருத்தமாக இருந்தது.

  ramanuja

  எனக்குத் தெரிந்த ஒரு வைணவப் பெரியவரைச் சந்தித்து இது பற்றி விளக்கினேன்.

  அவர், ‘‘ரா. கணபதி தான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார். யாதவப் பிரகாசரை அத்வைதி என்று குறிப்பிடும் வழக்கம் வைணவர்களிடம் இருப்பது உண்மை. ஆனால், அவர் அத்வைதி அல்ல என்பதற்கு ராமாநுஜரே சாட்சி. அத்வைத சித்தாந்தத்துக்கு மறுப்புத் தெரிவிப்பது போலவே, ராமாநுஜர், யாதவப் பிரகாச சித்தாந்தத்துக்கும் மறுப்புத் தெரிவிக்கிறார். அதற்கு என்ன அர்த்தம்? அத்வைதம் வேறு யாதவப் பிரகாச சித்தாந்ததம் வேறு என்பது தானே? யாதவப் பிரகாச சித்தாந்தம் என்பது அத்வைதத்தில் இருந்து கிளைத்த ஒரு சித்தாந்ததம். இதனால் தான் அவரை அத்வைதி என்று தவறாகக் குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு வைஷ்ணவத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை. எனவே, அதைப் பெரிதுபடுத்திக் கொள்ள வேண்டியதில்லை’’ என்று குறிப்பிட்டார்.

  அதற்கு மேல் எனக்கு வேறு எதுவும் செய்யத் தோன்றவில்லை.


  ஆண்டாள் கோவிலில் இருந்து கிளம்பும் போது இந்தச் சம்பவங்கள் எனக்கு நினைவு வந்தன. ‘‘ஆம், ராமாநுஜரைப் பற்றி எழுத வேண்டும், அதில் யாதவப் பிரகாசர் விஷயத்தை சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட விதத்தில் தெளிவாகச் சொல்ல வேண்டும்’’ என்ற உறுதி பிறந்தது. இது அண்ணாவே எனக்குக் கொடுத்துள்ள உத்தரவு என்ற உறுதியான நம்பிக்கையும் ஏற்பட்டது.

  நூல் தயாரிப்புக்காக நான் சேகரித்திருந்த புத்தகங்கள் அனைத்தும் மணிப்பிரவாள நடையில் அமைந்தவை. அவற்றைப் படித்துப் புரிந்து கொள்வது மிகவும் கடினம். ராமாநுஜர் பற்றி ஓர் உருப்படியான புத்தகம் எழுதும் அளவுக்கு விஷய அறிவைச் சம்பாதிப்பது எப்படி என்ற கேள்வி எழுந்தது.

  அதேநேரத்தில், ‘‘எந்த வஸ்து எழுதச் சொல்லி உத்தரவு கொடுக்கிறதோ, அதுவே, எழுதுவதற்குத் தேவையான அறிவையும் கொடுக்கும்’’ என்ற தெளிவும் பிறந்தது.

  விரைவிலேயே ‘‘காரேய் கருணை ராமாநுஜா’’ புத்தகமும் பிறந்தது. அதன் டைப்பிஸ்ட் வேலைக்கும், ப்ரூஃப் ரீடிங் வேலைக்கும் மட்டுமே நான் பொறுப்பாளி.

  அண்ணா, தன் வேலையைத் தானே செய்து கொண்டார் – என் மூலமாக.

  ‘‘சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?’’ என்ற வரி, அந்த நூல் உருவாக்கத்தில் என்னைக் குறிப்பதற்குப் பொருத்தமான வாசகம்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,573FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-