
விழுப்புரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை வரவேற்று திமுக கொடிக்கம்பத்தை நட முயன்ற 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் பொன் குமார் என்பவரது இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார்.
முன்னதாக அவரை வரவேற்க திமுக சார்பில் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து கட்சி கொடிகள் அலங்கார தோரணங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டனர். இப்பணியில் விழுப்புரம் டிரெயின் லே அவுட் பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் என்பவரது இளைய மகன், விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சிப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் தினேஷ் என்பவரும் ஈடுபட்டார்.
அந்த சாலையில் மின் பகிர்மான கழகம் செயல்பட்டு வருவதால் அங்கு அதிக அளவிலான உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன. இரும்பு பைப்பில் கட்டிய திமுக கொடியை சிறுவன் தினேஷ் தூக்கி நட முயன்றபோது அந்த கொடிக்கம்பம் உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கியது. இதில், தூக்கி வீசப்பட்டான் தினேஷ். படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவனை மற்ற தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
நெடுஞ்சாலைகள் மக்கள் கூடும் இடங்களில் பேனர் கொடி கம்பங்கள் வைப்பதால் இதுபோன்ற விபத்துகள் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க கடந்த அதிமுக ஆட்சியில் பேனர்கள் வைக்கவும் கொடிக்கம்பங்கள் நடவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் பேனர் கலாச்சாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
திமுக அரசின் அலட்சியத்தால் திமுக கொடி கம்பத்தை நட்ட தினேஷ் என்ற 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அங்கு உள்ளவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகள் திறக்கப்படாததால் திமுக கொடி கம்பம் கட்டிய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்துக்கு அரசு பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள சமூக ஆர்வலர்கள், இது போன்ற முக்கிய சாலைகளில் இனி வரவேற்பு பேனர் கொடிக்கம்பங்கள் நிறுவ மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அனுமதி அளிக்கக்கூடாது என்று தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் சமூகத் தளங்களிலும் பெரிதும் எதிரொலித்தது. கடந்த ஆட்சியில் நடந்த சம்பவத்தையும் தற்போதைய சம்பவத்தையும் ஒப்பிட்டு, பலரும் திமுக.,வை கடுமையாக சாடி வருகின்றனர்.