பாரதியாரின் கண்ணன் பாட்டு (பகுதி – 18)
கண்ணன் – என் சீடன்
~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~
பாரதியாரின் கண்ணன் பாட்டில் கண்ணன்-என் சீடன் பாட்டு பல தத்துவக் கருத்துக்களைக் கொண்டது. பகவத் கீதையின் கருத்து இப்பாடலில் இடம்பெறுகிறது. வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப்பட்டது.
ரிக் வேதத்திலுள்ள புருஷ ஸூக்தம், ‘இஃதெல்லாம் கடவுள்’ என்று சொல்லுகிறது,. இக்கருத்தை ஒட்டியே கீதையிலும் பகவான், ‘எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கிறானோ அவனே காட்சியுடையான்’ என்கிறார்.
நீயும் கடவுள், நீ செய்யும் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள், நீ பந்தத்தில் பிறப்பதும் கடவுளுடைய செயல். மேன்மேலும் பல தளைகளை உனக்கு நீயே பூட்டிக் கொள்வதும் கடவுளுடைய செயல். நீ முக்தி பெறுவதும் கடவுளுடைய செயல். ‘ஆனால் நான் எதற்காக தளை நீங்கும்படி பாடுபடவேண்டும்? எல்லாம் கடவுளுடைய செய்கையாய் இருக்கும் போது முக்தியடையும் படி நான் ஏன் முயற்சி செய்ய வேண்டும்?’ என்று ஒருவன் கேட்பானாயின், அதற்கு நாம் கோட்கிறோம், ‘முக்தியாவது யாது?’ எல்லாத் துயரங்களும் எல்லா அம்சங்களும் எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி.
அதனை எய்த வேண்டுமென்ற விருப்பம் உனக்குண்டாயின், நீ அதற்குரிய முயற்சி செய். இல்லாவிட்டால், துன்பங்களிலே கிடந்து ஓயாமல் உழன்று கொண்டிரு. உன்யை யார் தடுக்கிறார்கள்? ஆனால், நீ எவ்விதச் செய்கை செய்த போதிலும், அது உன்னுடைய செய்கையில்லை. கடவுளுடைய செய்கை’ என்பதை அறிந்துகொண்டு செய்.
அதனால் உனக்கு நன்மை விளையும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்பது ஸநாதன தர்மத்தின் சித்தாந்தம். எல்லாம் கடவுள் மயம், எல்லாத் தோற்றங்களும், எல்லா வடிவங்களும், எல்லா உருவங்களும், எல்லாக் காட்சிகளும், எல்லாக் கோலங்களும், எல்லா நிலைமைகளும், எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும், எல்லா சக்திகளும், எல்லா நிகழ்ச்சிகளும், எல்லாச் செயல்களும் – எல்லாம் ஈசன் மயம். (ஆதலால், எல்லாம் ஒன்றுக்கொன்று சமானம்.) ‘ஈசாவஸ்தம் இதன் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்’ என்று ஈசாவாஸ்யோப நிஷத் சொல்லுகிறது.
அதாவது:- ‘இவ்வுலகத்தில் நிகழ்வது யாதாயினும் அது கடவுள் மயமானது’ என்று பொருள்படும். பாரதியாரின் கண்ணன்-என் சீடன் பாடல் இந்தக் கருத்தையே வலியுறுத்துகிறது. இறைவன் விருப்பப்படியே அனைத்தும் நடக்கிறது என்பதால் மாணவர்களிடம் ஆசிரியர்கள் சினம் காட்டாமல் அன்பாக நடக்கவேண்டும்.
இனி அடுத்த பாடலைக் காணலாம்.
அடுத்த பாடல் கண்ணன் – என் சற்குரு பாடலாகு. இது கண்ணன் பாட்டில் ஏழாவது பாடலாகும். முதலில் பாடலைக் காண்போம். இப்பாடல் புன்னாகவராளி இராகத்தில் திஸ்ர ஜாதி-ஏகதாளத்தில் அற்புதம், பக்தி ரசங்கள் விள்ங்கப் பாடப்பட்டுள்ளது. 96 வரிகள் கொண்ட பாடல்.
சாத்திரங் கள்பல தேடினேன் – அங்கு
சங்கையில் லாதன சங்கையாம் – பழங்
கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் – பொய்மைக்
கூடையில் உண்மை கிடைக்குமோ? – நெஞ்சில்
மாத்திரம் எந்த வகையிலும் – சக
மாயம் உணர்ந்திடல் வேண்டுமே – என்னும்
ஆத்திரம்நின்ற திதனிடை – நித்தம்
ஆயிரந் தொல்லைகள் சூழ்ந்தன. . … 1
நாடு முழுதிலுஞ் சுற்றிநான் – பல
நாட்கள் அலைந்திடும் போதினில், – நிறைந்
தோடும் யமுனைக் கரையிலே – தடி
ஊன்றிச் சென்றாரோர் கிழவனார்; – ஒளி
கூடு முகமும், தெளிவுதான் – குடி
கொண்ட விழியும், சடைகளும், – வெள்ளைத்
தாடியும் கண்டு வணங்கியே – பல
சங்கதி பேசி வருகையில், … 2
என்னுளத் தாசை யறிந்தவர் – மிக
இன்புற் றுரைத்திட லாயினர் -”தம்பி,
நின்னுளத் திற்குத் தகுந்தவன், – சுடர்
நித்திய மோனத் திருப்பவன், – உயர்
மன்னர் குலத்தில் பிறந்தவன், – வட
மாமது ரைப்பதி யாள்கின்றான்; – கண்ணன்
தன்னைச் சரணென்று போவையில் – அவன்
சத்தியங் கூறுவன்” என்றனர். … 3
மாமது ரைப்பதி சென்றுநான் – அங்கு
வாழ்கின்ற கண்ணனைப் போற்றியே, – என்தன்
நாமமும் ஊரும் கருத்துமே – சொல்லி
நன்மை தருகென வேண்டினன்; – அவன்
காமனைப் போன்ற வடிவமும் – இளங்
காளையர் நட்பும் பழக்கமும் – கெட்ட
பூமியைக் காக்குந் தொழிலிலே – எந்தப்
போதுஞ் செலுத்திடுஞ் சிந்தையும், … 4
பாடலின் மீதிப் பகுதியை நாளை காணலாம்.