செய்தி தொகுப்பு: ஜெயஸ்ரீ எம்.சாரி
“மகாத்மா காந்தியின் தத்துவங்களும், கொள்கைகளும் இன்றும் உலக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதாக உள்ளதால் உலக நாடுகளின் கவனம் இந்தியா பக்கம் ஈர்க்கப்பட்டு வருகிறது.
காந்தியடிகள் தன்னுடைய வாழ்வில் பின்பற்றிய பல விஷயங்களில் ஒன்றான ‘மக்களுக்கு சுதந்திரம்’ என்பதானது தற்போது உலக நாடுகளுக்கும் உபயோகமாய் உள்ளது.
தன்னம்பிக்கை, தெளிவான சிந்தனை, நற்குணம் முதலியவற்றை தன்னுடைய வாழ்வில் மூலம் வழிகாட்டி கொண்டிருந்த காந்தியடிகளின் கோட்பாடுகளின் மூலம் இயங்கும் நம் பாரதத்தை, உலக நாடுகள் ஒரு நம்பிக்கையுடன் நோக்குகின்றன” என்று மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநரான பகத்சிங் கோஷ்யாரி கூறினார்.
கோஷ்யாரி மஹாராஷ்டிர மாநிலத்தில் வர்தாவில் உள்ள மகாத்மா காந்தி அகில உலக ஹிந்தி பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி காந்தியின் தத்துவம் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய அளவிலான கருத்தரங்கில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
திரைப்பட நடிகர் நிதிஷ் பரத்வாஜ் ,”நமது நாட்டின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் விதமாக ஹிந்தி பல்கலைக்கழகம் ஆரோக்கிய தீபோத்ஸவத்தை ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார்.
புரொபஸர் ஸ்ரீநிவாஸ் வர்கேடி, தன் உரையில் “மனித நேயத்தையும் சத்தியத்தையும் போற்றுபவராக இருந்தார் மகாத்மா காந்தியடிகள்,” என்றார். புரொபஸர் ரஜனீஷ் குமார் ஷுக்ல, பல்கலைக்கழக துணைவேந்தர், நிகழ்ச்சியில் தலைமை தாங்கிப் பேசினார்.
முன்னதாக துணைவேந்தர் ஆளுநருக்கு நினைவுச்சின்னம், ராட்டை, சால்வை, பருத்தி நூலினாலான மாலை வழங்கி வரவேற்றார்.
டாக்டர். ஜெயந்த் உபாத்யாய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், பல்கலைக்கழக பதிவாளர் காதர் நவாஸ் கான் நன்றியுரை தெரிவித்தார்.
பின்னர், மாலையில் காந்தியடிகளின் 152 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆரோக்கிய தீபோத்ஸவம் நிகழ்ச்சிய மேதகு ஆளுநர் பல்கலைக்கழகத்தில் உள்ள காந்தி ஹில்ஸ் என்ற இடத்திலிருந்து தொடங்கி வைத்தார்.
இந்த வருடமும் வர்தா நகரின் பல முக்கிய இடங்களில், வீதிகளில், வீடுகளில் மக்கள் தீபங்கள் ஏற்றி ஆரோக்கிய தீபோத்ஸவத்தை கொண்டாடி காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
டாக்டர் ராம்தாஸ் அம்பேத்கர்,சட்ட மேலவை உறுப்பினர், சரிகா காகரே, வர்தா ஜில்லா பரிஷத்தின் தலைவர், நந்தா உகடே,
உம்ரி பஞ்சாயத்தின் முதல் குடிமகள், புரொஃபஸர் ஹனுமான் பிரசாத் ஷுக்லா, பல்கலைக்கழகத்தின் சார்பு துணை வேந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிகளுக்கு முன்பாக ஆளுநர் சேவாகிராம் என்னும் இடத்தில் உள்ள பாபுகுடி என்று அழைக்கப்படும் காந்தியின் ஆஸிரமத்திற்கு விஜயம் செய்து காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
ராம்தாஸ் தடஸ், மக்களவை உறுப்பினர், வர்தா, TRN பிரபு, ஆஸிரமத்தின் தலைவர், ப்ராஜக்தா லாவங்கரே- வெர்மா, டிவிஷனல் கமிஷனர், நாக்பூர், ப்ரேர்ணா தேஷ்ப்ராதார், ஆட்சியாளர், வர்தா ஆகியோர் ஆளுநரை வரவேற்றனர்.