திருப்புகழ்க் கதைகள் 164
~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~
உயிர்க்கூடு விடும் – பழநி
சிவபெருமான் திருத்தலங்கள்
அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றியிருபத்தியோரவது திருப்புகழ் ‘உயிர்க்கூடு விடும்’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “பொதுமாதர் வலைப்படாமல், மயில் மீது வந்து ஆட்கொள்ள”அருணகிரிநாதர் முருகப் பெருமானிடம் இப்பாடலில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.
உயிர்க்கூடு விடுமளவும் உமைக்கூடி மருவுதொழில்
ஒருக்காலு நெகிழ்வதிலை …… யெனவேசூள்
உரைத்தேமுன் மருவினரை வெறுத்தேம திரவியம
துடைத்தாய்பின் வருகுமவ …… ரெதிரேபோய்ப்
பயிற்பேசி யிரவுபகல் அவர்க்கான பதமைபல
படப்பேசி யுறுபொருள்கொள் …… விலைமாதர்
படப்பார வலைபடுதல் தவிர்த்தாள மணிபொருவு
பதத்தாள மயிலின்மிசை …… வரவேணும்
தயிர்ச்சோர னெனுமவுரை வசைக்கோவ வனிதையர்கள்
தரத்தாடல் புரியுமரி …… மருகோனே
தமிழ்க்காழி மருதவன மறைக்காடு திருமருகல்
தநுக்கோடி வருகுழகர் …… தருவாழ்வே
செயிற்சேல்வி ணுடுவினொடு பொரப்போய்வி மமர்பொருது
செயித்தோடி வருபழநி …… யமர்வோனே
தினைக்காவல் புரியவல குறப்பாவை முலைதழுவு
திருத்தோள அமரர்பணி …… பெருமாளே.
இத்திருப்புகழின் பொருளாவது – தயிரைத் திருடியவன் என்ற வசைமொழி புகன்ற கோபிகை மாதர்களிடம் திருவிளையாடல் புரிந்த திருமாலின் திருமருகரே. தமிழ் இனிது வழங்கும் சீகாழி திருவிடைமருதூர், வேதாரணியம், திருமருகல், தநுக்கோடி என்ற திருத்தலங்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் பெற்றருளிய பெருவாழ்வே. வயல்களில் வாழ்கின்ற மீன்கள் விண்ணில் உறைகின்ற நட்சத்திரங்களுடன் மாறுபட்டு மிகுந்த போர் செய்து வென்று மீளுகின்ற தன்மை வாய்ந்த பழநி மலையில் வாழ்கின்றவரே. தினைப்புனத்தில் காவல் புரிவதில் வல்ல வள்ளிபிராட்டியாரின் தனங்களைத் தழுவுகின்ற திருத்தோளரே. தேவர்கள் தொழுகின்ற பெருமிதம் உடையவரே. பொதுமாதர் வலைப்படாமல், மயில் மீது வந்து ஆட்கொள்ள மணிபுனைந்த பாதங்களையுடைய மயிலின்மீது வந்தருள வேண்டும். – என்பதாகும்.
சீர்காழி
இப்பாடலில் தமிழ் காழி — தமிழ் வழங்குகின்ற, சீகாழி, மருதவனம் என வழங்கப்படும் திருவிடை மருதூர், திருமறைக்காடு என வழங்கப்படும் வேதாரண்யம், திருமருகல், தநுக்கோடி ஆகிய தலங்கள் பற்றி அருணகிரியார் குறிப்பிடுகிறார். இத்தலங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் பார்க்கலாம்.
சீகாழி (தற்போது சீர்காழி) என அழைக்கப்படும் தலம் சோழ நாட்டு காவிரி நதியின் வடகரைத் தலமாகும். இதனை மக்கள் சீர்காழி என்றே வழங்குகின்றனர். சிதம்பரம் முதலிய பல ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. சிதம்பரத்தையடுத்துள்ள தலம். சீர்காழியில் புகைவண்டி நிலையம் உள்ளது. திருஞானசம்பந்தரின் அவதாரத் திருத்தலம். அவர் ஞானப்பாலுண்டு அற்புதங்கள் நிகழ்த்திய தலம். முருகன், காளி, பிரமன், திருமால், குரு, இந்திரன், சூரியன், சந்திரன், அக்கினி, ஆதிசேஷன், ராகு, கேது, வியாசர் முதலியோர் இறைவனை வழிபட்டுப் பேறு பெற்ற தலம். இத்தலத்திற்குப் பன்னிரண்டு பெயர்களுண்டு.
1.பிரமன் வழிபட்டதால் – பிரமபுரம் (பிரமாபுரமேவிய பெம்மான்), 2. இறைவன் மூங்கில் வடிவமாகத் தோன்றியதால் – வேணுபுரம், 3. சூரனுக்குப் பயந்த தேவர்களுக்குப் புகலிடமாக விளங்கிய தலமாதலின் – புகலி, 4. குருவான வியாழன் வழிபட்டு, குருத்துவம் பெற்றமையால் – வெங்குரு, 5. பிரளய காலத்தில் இறைவன் உமையோடு சுத்தமாயையைத் தோணியாகக் கொண்டுவந்து தங்கியிருந்ததால் தோணிபுரம், 6. பூமியைப் பிளந்து சென்ற இரணியாக்கனைக் கொன்ற வராக மூர்த்தி வழிபட்டதால் – பூந்தராய், 7. தலைக்கூறாகிய ராகு பூசித்ததால் – சிரபுரம், 8. புறா வடிவில் வந்த அக்கினியால் சோழ மன்னன் நற்கதியடைந்தமையால் – புறவம், 9. சண்பைப் புல்லால் மாய்ந்த தம்குலத்தோரால் வந்தபழி தன்னைப் பற்றாதிருக்க, கண்ணபிரான் (திருமால்) வழிபட்டதால் – சண்பை, 10. தில்லைப் பெருமானுடன் வாதாடிய குற்றம்போக, காளி இங்கு வந்து வழிபட்டதால் – ஸ்ரீகாளி (சீகாழி), 11. மச்சகந்தியைக் கூடிய கொச்சையாம் பழிச்சொல் நீங்கப் பராசரர் பூசித்ததால் – கொச்சை வயம், 12. மலத்தொகுதி நீங்குமாறு உரோமச முனிவர் வழிபட்டதால் – கழுமலம் எனவும் பெயர் பெற்றது.
கோயில் ஊர் நடுவே நான்கு கோபுர வாயில்களுடன் அழகுற விளங்குகிறது. கணநாத நாயனார் தொண்டுசெய்து வாழ்ந்த தலம். இத்திருக்கோயிலின் இறைவன் – பிரமபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர். இறைவி – பெரியநாயகி, திருநிலைநாயகி. தலமரம் – பாரிசாதம். தீர்த்தம் – பிரம தீர்த்தம் முதலாகவுள்ள 22 தீர்த்தங்கள்.
பிரமதீர்த்தமே பிறவற்றினும் மேலானது. இக்கரையில்தான் ஞானசம்பந்தர், ஞானப்பாலையுண்டார். ‘திருமுலைப்பால் உற்சவம்’ இன்றும் சித்திரைப் பெருவிழாவில் இரண்டாம் நாள் விழாவாக நடைபெறுகின்றது. ‘திருமுலைப்பால் உண்டார் மறுமுலைப்பால் உண்ணார்’ என்பது இப்பகுதியில் சொல்லப்படும் மொழியாகும்.
இறைவன் திருமேனிகளுள் (1) அடிப்பாகத்திலுள்ள பிரமபுரீஸ்வரர் பிரமன் பூசித்தது – இலிங்கவடிவம். (2) இடைப்பகுதியிலுள்ள தோணியப்பர் (ஞானப்பால் தந்தவர்) குரு வடிவம். (3) சட்டை நாதர் சங்கமவடிவம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது.
மாவலியிடம் சென்று மண்கேட்டுப் பெற்ற மகாவிஷ்ணு, செருக்குற்றுத்திரிய, வடுகநாதர் சென்று தம் திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பிலடித்து வீழ்த்தினார். இலக்குமி மாங்கல்ய பிச்சை கேட்க அவ்வாறே அருள்செய்ய மகாவிஷ்ணு உயிர்பெற்றெழுந்து வணங்கினார். தம் தோலையும் எலும்பையும் அணிந்து கொள்ளமாறு அவர் வேண்ட, இறைவனும் எலும்பை கதையாகக்கொண்டு, தோலைச் சட்டையாகப் போர்த்து அருள் செய்தார். இவ்வடிவமே சட்டைநாதர் வடிவமாகும்.
சீர்காழி பற்றிய மேலும் சில தகவல்களை நாளை காணலாம்.