நாங்கள் பிள்ளையார் சதுர்த்தி சமயத்தில் கும்பகோணம் போயிருந்தோம்.
புதன் இரவு, எக்மோர் ஸ்டேஷனில் எள்ளு போட்டால் எள்ளு விழாத கூட்டம்.. ரயில் நிரம்பி வழிந்தது. ஒரு காலி இடம் கூட தென்பட வில்லை… பாதிப்பேர் முகத்தில் மாஸ்க் இல்லை.. கொரோனா வரவும் வாய்ப்பில்லை..
அதே நாள் பஸ்ஸில் பயணித்த என் உறவுக்காரர் சொன்னார் இதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையம் மனித வெள்ளமாக இருந்தது என்று.. கொரோனா வர வாய்ப்பில்லைதான்..
மறுநாள் வியாழனன்று ஒரு வேலையாக சப்ரெஜிஸ்டிரார் அலுவலகம் போனோம். பணம் கொழிக்கும் இடமல்லவா. வெள்ளை வேட்டிகளும், சட்டைகளுமாக அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. கூட்டமோ கூட்டம்.. உட்கார இடமில்லை. கொரோனா வர வாய்ப்பே இல்லை..
பிள்ளையார் சதுர்த்தியன்று கோவில்களுக்குள் போகாமல் வெளியே கேட்டிலிருந்து கூட்டமாக நின்று பிள்ளையாரை தரிசனம் செய்தோம். கோவிலுக்குள் போனால் கொரோனா வர வாய்ப்பு உள்ளதே..
சனியன்று நவராத்திரிக்குப் பொம்மை வாங்கலாம் என்று கும்பேஸ்வரன் கோவில் கடைவீதி போனோம். அனைத்து கடைகளும் ஜகஜ்ஜோதியாக இருந்தது. விழாக் கால வியாபாரம் சூடு பிடித்திருந்தது. எல்லாக் கடைகளிலும் நல்ல கூட்டம்..
கொரோனா வர வாய்ப்பு நிச்சயம் இல்லைதான்..
பொம்மைகளை வாங்கிக் கொண்டு கோவில் உள்ளே சென்று பார்க்கலாமே என்று உள்ளே போனோம்.
அடடா.. அனுமதி இல்லை..
கோவிலுக்குள் போனால் கொரோனா வர வாய்ப்பு உள்ளதே.. நம் போலீஸ் ஒழுங்காக செய்யும் வேலை இது மட்டும்தான் என்று நினைக்கிறேன்..
சென்னை டவுன் பஸ்களை மதிய நேரத்தில் கூட பாருங்கள்.. நிரம்பி வழிகிறது..கொரோனா வர வாய்ப்பு நிச்சயம் இல்லை..
புரட்டாசி சனிக் கிழமைகளில் ஒரு பெருமாளைக் கூட பார்க்க வில்லையே என்ற என் குறையை ஆந்திர மாநிலம் தீர்த்து வைத்தது.. நேற்று சித்தூர் மாவட்டத்திலுள்ள சுரட்டப் பள்ளி மற்றும் நாகலாபுரம் கோவில்களுக்குப் போனோம்.
ஓரளவு கூட்டம் இருந்தாலும் மக்கள் பொறுப்பாக தள்ளித் தள்ளி நின்று பொறுமையாக தரிசனம் செய்தனர்.. மாஸ்க் இல்லாமல் உள்ளே போக போலீசார் விட வில்லை. க்யூ அருகே இரு போலீசார் நின்று கூட்டத்தை தள்ளித் தள்ளி நிற்க அறிவுறுத்திக் கொண்டே இருந்தனர்.
நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்து விட்டு வந்தோம்..
ஆக, தமிழக கோவில்களில் மட்டும்தான் வார இறுதிகளில் கோவில்களுக்கு வெளியே பக்தர்களைப் பிடிக்கக் கொரோனா கிருமிகள் காத்துக் கொண்டு இருக்கின்றன என்பது நம் அரசுக்கு நன்றாகப் புரிந்த மாதிரியே எனக்கும் புரிந்தது..
நம் ஊர் போலீஸும் பக்தர்களை கோவில் உள்ளே விடாமல் தடுப்பதற்கு பதிலாக கட்டுப் பாடாக, வரிசையாக, தகுந்த சமூக இடைவெளியுடன் உள்ளே போக அனுமதிக்கலாமே..
ஆனால், அதற்குண்டான மனம் வேண்டும்.. இங்கே கொரோனா பெயரை உபயோகப் படுத்தி கோவில்களை முடிவது மட்டும்தான் லட்சியமாக இருப்பதால் அது சாத்தியம் இல்லை..
கடவுள்தான் எல்லாருக்கும் நல்ல புத்தியைத் தரவேண்டும்..
-உமா வெங்கட்