spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்சம்ஸ்க்ருத ந்யாயமும் விளக்கமும்(7): மார்ஜால கிசோர ந்யாய; மர்கட கிசோர ந்யாய!

சம்ஸ்க்ருத ந்யாயமும் விளக்கமும்(7): மார்ஜால கிசோர ந்யாய; மர்கட கிசோர ந்யாய!

- Advertisement -

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் -பகுதி -7 

தெலுங்கில்- பி.எஸ். சர்மா
தமிழில்- ராஜி ரகுநாதன்

‘மார்ஜால கிசோர நியாய: – மர்கட கிசோர நியாய:’ – பூனைக் குட்டியைப் போலவும் குரங்குக் குட்டியைப் போலவும்…!

மார்ஜாலம்- பூனை. மர்கடம் – குரங்கு.  கிஸோரம் – குட்டி.

இயற்கையை நுட்பமாக ஆராய்ந்து வாழ்ந்த நம் ரிஷிகள் அளித்தவை இந்த இரண்டு நியாயங்களும். இது பலருக்கும் தெரிந்திருக்கும்.

இறைவனிடம் பக்தனுக்கு இருக்கும் மனநிலையை இவை விளக்குகின்றன.   இவை வேதாந்த பரிபாஷை கூறும் உதாரணங்கள். ஆன்மீக குருமார்கள் இந்த இரட்டை நியாயங்கள பற்றி அளிக்கும் விளக்கங்களைப் பார்ப்போம்…

மார்ஜால- கிசோர நியாயம்:-

பூனை தன் குட்டிகளை வாயில் கவ்வி எடுத்துச் செல்லும். “குட்டிபோட்ட பூனை   ஏழு வீடுகளுக்கு தூக்கித் திரியும்” என்று தெலுங்கில் ஒரு பழமொழி உள்ளது. இது விஞ்ஞான உண்மை கூட.

பூனை 60-70 நாட்கள் கர்ப்பம் சுமந்து நான்கைந்து குட்டிகளை ஈன்றெடுக்கும். குட்டி போடும் முன்பே ஏதோ ஆராய்ச்சி செய்து ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்கும். பழைய வீட்டின் மச்சு, யாரும் பார்க்காத இடங்கள் போன்றவை பூனையின் பிரசவ அறைகள். மூன்றிலிருந்து ஐந்து அவுன்ஸ் எடையோடு பிறக்கும் குட்டிகளை தாய்ப் பூனை மிகவும் அன்போடு வளர்க்கும். கண் திறக்காத, காதுகள் மூடியுள்ள குட்டிகள் தாயை மட்டுமே அறியும். தன் குட்டிகளுக்குத் தானாக நடக்கும் திறமை வரும் வரை நிரந்தரம் தாய் பாதுகாத்து வரும்.

அதற்காக பூனை தன் பிள்ளைகளை பல்வேறு இடங்களுக்கு மாற்றிக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு குட்டியாக வாயில் கவ்வி எடுத்துச் செல்லும். அவ்வாறு எடுத்துச் செல்வதில் தாய்மை வெளிப்படும்.

குட்டிகளுக்கும் முழுமையான நம்பிக்கை தாய் மீது உள்ளது. குட்டிகளின் பாதுகாப்பின் பொறுப்பு முழுவதும் தாயுடையதே. எந்த கேள்வியும் எழுப்பாத சம்பூர்ண சரணாகதி மட்டுமே குட்டிகளின் கடமை. இந்த சரணாகதி, இந்த நம்பிக்கை, நீயே கதி என்ற நிலையே ரிஷிகள் கூறும் மார்ஜால கிசோர நியாயம்..

பிரகல்லாதனின் வாழ்க்கை வரலாறு இதற்கு நல்ல உதாரணம். “எனக்கு நீ இருக்கிறாய். நீயே கதி! நீயே என்னை ஆதரித்து இலக்கில் கொண்டு சேர்” என்ற மனநிலையே மார்ஜால கிசோர நியாயம். குருநாதர் தன்னை ஆதரிப்பார். கடவுளோ, குருவோ, ஆசிரியரோ இவர்களிடம் முழமையாக சரணாகதி அடைத்து “கரை சேர்ப்பார்” என்று தைரியத்தோடு இருப்பதே நாம் செய்ய வேண்டிய பணி.

ஸ்காந்த புராணம் இவ்வாறு கூறுகிறது…

மந்தரே தீர்தே தவிஜே தேவே தைவஜ்ஞே பேஷஜே குரௌ |
யாத்ருஸீ பாவனா யத்ர சித்திர்பவதி தாத்ருஸீ||

பொருள்: மந்திரம், தீர்த்தம், அந்தணர், தெய்வம், சத்புருஷர், குரு- இவர்களிடம் எப்படிப்பட்ட எண்ணம் இருந்தால் அப்படிப்பட்ட பலன் கிடைக்கும்.

இதுவே மார்ஜால கிசோர நியாயம் – தாய்ப் பூனை எடுத்துச் செல்லும் வழியில் குட்டிப் பூனையின் பயணம். தெய்வத்தோடு பக்தனும், குருவோடு சீடனும் செய்யும் பயணம்.

இது போன்ற பக்தியும் நம்பிக்கையும் லௌகீகமாக மிகவும் அவசியம். நமக்கு சிகிச்சை செய்யும் மருத்துவரிடம் கூட இது போன்ற விசுவாசமே அவசியம் என்று கூறுகிறது மருத்துவ அறிவியல். இதனை பிளாசிபோ எஃபெக்ட் என்பர். 

மர்கட –கிசோர நியாயம்

குரங்குக் குட்டி தன் தாயை இறுக்கி பிடித்துக் கொண்டு பயணம் செய்யும் காட்சியை அனைவரும் பார்த்திருக்கிறோம். தாய் எங்கு எடுத்துச் சென்றாலும் குட்டி அங்கே செல்லும். இதுவே மர்கட -கிசோர நியாயம். குரங்குக் குட்டியைப் போல் சீடன் குருவை விடாமல் பிடித்துக் கொண்டு ஆன்மீகப் பயணம் செய்ய வேண்டும்.

“குருதேவா! உன்னை நான் விட மாட்டேன். உன் பாதங்களை சரணடைந்தேன். சம்சாரக் கடலை தாண்டச் செய்யும் கப்பலைப் போன்றவர் நீர். என் தந்தையே! என்னைக் கரை சேர்ப்பீராக! உன்னை விட்டுப் போகும் கேள்விக்கே இடமில்லை!” என்கிறான் சீடன். இதுவே மர்கட- கிசோர நியாயம்.

பரமாத்மாவை அடையும் உயர்ந்த இலக்கோடு உள்ள பக்தர்கள் இந்த இரு வழிமுறைகளில் ஏதாவது ஒன்றை கடைப்பிடிக்கலாம் என்கிறது ஆன்மீகம்.  

குருநாதரோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறும் இரண்டு வித மன நிலைகள் இவை. இதில் எதுவும் உயர்ந்ததோ தாழ்ந்ததோ கிடையாது. எத்தகைய சூட்சுமமான ஆராய்ச்சி இருந்தால் இத்தகைய நியாயத்தை ரிஷிகள் கண்டு பிடித்திருப்பார்கள்!

முதலில் குருவை சீடன் பிடித்துக் கொள்வான். அதன் பின் குரு, சீடனை கையைப் பிடித்து அழைத்துச் செல்வார்.

ஆன்மீக சாதனையில் இந்த இரண்டுமே அனுபவத்திற்கு வருவதை அறியலாம். கீதாச்சாரியன் கூறும் இந்த சுலோகம் இவ்விரண்டு நியாயங்களுக்கும் உதாரணம்.

அனன்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாசதே |
தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் ||

(பகவத்கீதை -9/22)

பொருள்: என்னைத் (பகவான்) தவிர வேறு எதனையும் எண்ணாமல், என்னைப் பற்றியே யார் நிரந்தரம் தியானிக்கிறாரோ, எப்போதும் என்னிடமே நிஷ்டையோடு இருக்கிறாரோ அப்படிப்பட்டவரின் நலனையும் யோகங்களையும் நான் பொறுப்பேற்கிறேன். (யோகம் என்றால் தேவையானவற்றை அளிப்பது. க்ஷேமம் என்றால் பாதுகாப்பது).

அர்ஜுனன் தன் ரதத்தின் கடிவாளத்தை ஸ்ரீகிருஷ்ணனிடன் ஒப்படைத்தாற்போல வாழ்க்கையின் கடிவாளத்தை பகவானிடம் ஒப்படைப்பவனின் வாழ்க்கைப் பயணத்தில் எந்த குறையும் இருக்காது. இதுவே இந்த இரண்டு நியாயங்களின் உட்பொருள்.


நம்பிக்கையே பிடிமானம்:-

குரு மூலம் உபதேசம் பெற்ற மனிதர்களுக்கு எப்படிப்பட்ட சித்தி கிடைக்கும் என்று கேட்ட ரிஷிகளுக்கு நாரத மகரிஷி இவ்வாறு உரைக்கிறார்…

ஸ்ரத்தேவ சர்வதர்மஸ்ய சாதீவ ஹித காரிணீ |
ஸ்ரத்தயைவ ன்ருணாம் சித்தி: ஜாயதே லோகயோர்த்வயோ: |
ஸ்ரத்தயா பஜத: பும்ச: சிலாபி பலதாயநீ |

(ஸ்காந்தபுராணம் -17வது அத்தியாயம்)

பொருள்: விசுவாசம் என்பது சர்வ தர்மங்களுக்கும் நன்மை பயப்பது. இதன் மூலம் இகத்திலும் பரத்திலும் ஸித்தி பெற முடிகிறது. நம்பிக்கையோடும் சிரத்தையோடும் வழிபடுபவர்களுக்கு சிலை கூட பலனளிக்கும். (ஏகலைவ சாதனை).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe