
அறிந்து கொண்டு, அறியச் செய்து, பாதுகாத்து, செயல்புரிய வேண்டும்!
தெலுங்கில் : பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் : ராஜி ரகுநாதன்
நம் சனாதன தர்மத்திற்கும், கலாசாரத்திற்கும், இலக்கியங்களும், கோவில்களும் மகான்களும் முக்கிய ஆதாரங்கள். அவற்றை அறிந்து கொண்டு, அறியச் செய்து, காப்பாற்றிக் கொண்டால் நம் கடமையை நிறைவேற்றியவர்களாவோம். இந்த இயக்கத்தில் அனைவரும் பொறுப்பேற்கவேண்டும்.
இலக்கியங்கள்:
பேரிலக்கியங்களான வேதங்கள், ஸ்ம்ருதி நூல்கள், புராணங்கள், இதிகாசங்கள், காவியங்கள் மட்டுமின்றி ஆசாரியர்கள், அறிஞர்கள் படைத்த விரிவான நூல்கள் பல நமக்கு உள்ளன. கடல் போன்ற சமஸ்கிருத இலக்கியங்கள் மட்டுமே அன்றி, ஒவ்வொரு இந்திய மொழியிலும் அபாரமான இலக்கியங்கள் உள்ளன.
பல நூற்றாண்டுகளாக கிடைப்பவற்றின் மூலம் அனைத்து சந்தேகங்களுக்கும் விடைகளை மட்டுமின்றி, எந்த காலத்திற்கு எவ்விதம் கருத்தொருமை செய்து புரிந்து கொள்ள வேண்டும் என்று விளக்கிக் கூறும் மதிப்பு மிக்க கருத்துகள் பல உள்ளன. அவற்றை சேகரித்து இன்றைய தொழில்நுட்ப அறிவின் துணையோடு, இன்றைய வழக்கு மொழியில் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்வது தர்மத்தை மதிப்பவர்களின் முக்கியமான கடமை. படித்தறிந்து பயிற்சி செய்யும் (அத்யயனம்) குழுக்களாக ஒன்று கூடி, அவற்றைப்பற்றி விவாதித்து, அடுத்த தலைமுறைக்காக பாதுகாக்கவேண்டும்.
கோவில்கள்:
குமரி முதல் இமயம் வரை பல யுகங்களின் வரலாற்றைக் கூறும் தெய்வீகமான தீர்த்த க்ஷேத்திரங்களும், ஆகம சாஸ்திரங்களின்படி அமைக்கப்பட்ட கோவில்களும் பலப்பல உள்ளன. அவற்றின் புராண, வரலாற்று பெருமையை அறிந்து கொண்டு அவற்றை படித்தறியும் கருத்துகளாக பாதுகாக்கவேண்டும்.
பிறருடைய முற்றுகையால் அழிந்த உண்மைகளையும், அவர்கள் செய்த கொடுமைகளையும் கூட மறைக்காமல் சேகரித்து தெரியச் செய்ய வேண்டும். கோவில்களின் சுற்றுப்புறம், ஆலயங்களின் சொத்து விவரங்கள் போன்றவையும் சாமானியன் கூட அறியும்படி தெரியச் செய்ய வேண்டும். பண்டைய காலத்திலிருந்து பாரம்பரியமாக நடக்கும் ஆலய கைங்கர்யங்கள், உற்சவங்கள் போன்றவற்றின் விவரங்களையும் அறிந்து கொள்ளவேண்டும். அவற்றில் தவறுகள் நடந்தால் தேவஸ்தானங்களை கேள்வி கேட்கவேண்டும்.
அதே போல் கோவில் சொத்து, வருமானம் ஆகிய விவரங்களும் மக்களாட்சி அமைப்பில் வெளிப்படைத் தன்மையோடு விளங்க வேண்டும். கோவில்களை அரசாங்கங்கள் திசை திருப்பினால், நிற்கவைத்து கேள்வி கேட்க வேண்டும்.
இதற்காக தன்னார்வத்தோடு பக்தர் சங்கங்கள் அமைத்து செயல்திட்டத்தோடு, மக்களுக்கு புரிதல் ஏற்படுத்தி, ‘நம் கோவில்களை நாம் காப்பாற்றிக் கொள்வோம்’ என்ற பொறுப்புணர்வை பலப்படுத்த வேண்டும். அரசாங்கங்களுக்கு பொறுப்பேற்பை (Accountability) பழக்கமாக்க வேண்டும்.
கோவில்களை இடித்தாலோ, அவற்றுக்கு அபச்சாரம் செய்தாலோ, பாரம்பரியத்தை அவமதித்தாலோ அந்த தலைவர்கள் மீண்டும் அரசாட்சிக்கு வர விடாமல் செய்ய முடியவேண்டும். அத்தகு நிலைக்கு ஹிந்து பக்தர்கள் ஒன்றுபடாவிட்டால் சிறிது சிறிதாக ஆலய அமைப்பு சேதமடையும் ஆபத்து உள்ளது. தரிசனத்திற்காக கியூவில் நிற்பதும் உண்டியலில் காசு போடுவதும் மட்டுமே போதாது. நம் கோவில்களில் என்ன நடக்கிறது? கோவில் வருமானம் எங்கு மடை மாற்றப்படுகிறது? போன்ற விஷயங்களையும் சோதித்து அறிய வேண்டும்.
பிற மத நம்பிக்கை நிலையங்ககளின் வருமானம் அவர்களின் மதத்தைப் பரப்புவதற்கும், அவர்களின் நலன்களுக்கும் மட்டுமே உபயோகிக்கப்படும்போது, ஹிந்து கோவில்கள் அரசாங்கத்தின் கைகளில் சிக்கி பல விதங்களில் நஷ்டமடைகிறது. பிற மதத்தவரை திருப்திப்படுத்தும் ஒட்டு வங்கி அரசியலுக்காக நம் கோவில்களின் வருமானத்தை செலவு செய்கிறார்கள்.
ஓட்டுக்காக அறிவித்த தேவையற்ற இலவசங்களால் அரசு நிதி காலியாகிறது. அதனால் கோவில் நிதி அந்தப்பக்கம் திருப்பி விடப்படுகிறது. கோவிலில் தெய்வத்திற்கு வந்தனம் தெரிவிக்கும் கைகள், தலைவர்களுக்கு புத்தி புகட்டும் பணியையும் செய்ய வேண்டும்.
கோவில்கள், தீர்த்த க்ஷேத்திரங்கள் ஆகியவற்றின் புனிதத்தையும் தூய்மையையும் காப்பாற்றும் விதமாக மக்களிடம் விழிப்பையும் புரிதலையும் வளர்க்க வேண்டும். தன்னார்வத்தோடு கோவில் சேவைகளில் பங்குபெறும்படி இளைய பக்தர்களின் குழுக்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.
பஜனை, கீர்த்தனை போன்ற கைங்கர்யங்கள் மூலமாக அனைத்து இடங்களில் இருந்தும் அனைத்து கோவில்களுக்கும் தொடர்பு இருக்கும்படி சங்கங்களை அமைக்க வேண்டும். கோவில்களை மையாமாக வைத்து விரிந்து வளர்ந்த கலைகள், ஞானிகள், யோகிகள், அரசர்கள்… இவர்கள் அனைவரின் சரித்திரத்தையும் பாதுகாக்க வேண்டும்.
மகான்கள்:
புராண, இதிகாசங்களில் கூறப்படும் மகான்கள் மட்டுமின்றி, நம் வரலாற்றில் கிடைக்கும் சக்ரவர்த்திகள், தியாக சீலர்கள், தார்மிகர்கள், ஞானிகள், பக்தர்கள், யோகிகள், குருமார்கள் போன்ற எத்தனையோ பேர் நம் பரம்பரையில் உள்ளார்கள். எண்ணிக்கையற்ற வகையில் இத்தனை மகநீயர்கள் வேறெந்த தேச வரலாற்றிலும் இருக்கமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. இவர்களின் சரித்திரம், உபதேசம், செய்த சிறந்த செயல்கள் ஆகியவற்றை சேகரித்து, அவற்றிலிருந்து பெற்ற உற்சாகத்தையும் ஸ்பூர்த்தியையும் இன்றைய மற்றும் நாளைய தலைமுறைக்கு கிடைக்கும்படி செய்யவேண்டும்.
வரலாற்று ரீதியாக நடந்த உண்மைகளை ஒன்று திரட்ட வேண்டிய பொறுப்பு மிகவும் முக்கியம். திட்டமிட்டு வரலாற்றைத் திரித்து எழுதிய தீயவர்களால் மறைக்கப்பட்ட சத்தியங்களை வெளியில் தோண்டி எடுத்து மகநீயர்களின் (உதாரணம் – சத்ரபதி சிவாஜி, ராணா பிரதாப், சாவர்கர்) பெருமைகளை அனைவருக்கும் கிடைக்கும் விதமாக கொண்டு வர வேண்டும்.
இந்த மூன்றடுக்கு பெருஞ்செயலை உள்நாடு மற்றும் வெளிநாடு வாழ் பாரதிய தலைமுறையினர் கையிலெடுத்தால், அது மிகப் பெரும் இயக்கமாக உருவாகி, நம் புராதன சிறப்புகளை புனர் நிர்மாணம் செய்து கொள்ள முடியும்.
(ருஷிபீடம் தெலுங்கு மாத இதழ் தலையங்கம், செப்டம்பர், 2023)