தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன்
(ருஷிபீடம் மாத இதழ், தலையங்கம், ஆகஸ்ட், 2024)
நம் கலாசாரத்தில் பண்டிகைகளுக்குச் சிறப்பான இடம் உண்டு. அவை மதத் தொடர்பான பழக்க வழக்கங்களாக மட்டுமின்றி, அழகான கலாசாரத்தின் சின்னமாகவும் விளங்கி, உற்சாகமூட்டுகின்றன.
சில பண்டிகைகள் உபவாசம், கண் விழித்தல் போன்றவற்றோடு ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. மற்றும் சில பண்டிகைகள், வேடிக்கைகளோடும் உற்சவ கொண்டாட்டங்களோடும் பிரகாசிக்கின்றன. குடும்பமாகவும், சமூகமாகவும் சமுதாயத்திற்கு நல்லிணக்கம், நல்லுறவு, சந்தோஷம் ஆகியவற்றைப் பகிர்கின்றன. இவற்றின் பின்னணியில் சம்பிரதாயம், வழிபாடு, பூஜைகள், நிவேதனம், பிரசாதம் போன்றவை உள்ளன.
ஆறு ருதுக்களை (பருவ காலங்களை) அனுசரித்து காலத்திலும் இயற்கையிலும் தென்படும் பரிணாம மாற்றங்களைச் சார்ந்து பல்வேறு பருவங்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகோடு விளங்கி, மகிழ்ச்சியளிக்கிறது. பருவக் காலங்களில் பின்பற்ற வேண்டிய நியமங்களை சாஸ்த்திரங்கள் விதித்துள்ளன.
ஆனால், காலக்கிராமத்தில் அவற்றில் பலவித மாற்றங்கள் நுழைந்தன. சாஸ்திர சம்மதம் பெறாவிட்டாலும், வேறுபாடு இல்லாத மாற்றங்களை ஏற்கலாம். வேற்றுமைகளை ஏற்க இயலாது.
உதாரணத்திற்கு, விநாயக சதுர்த்தியை எடுத்துக் கொள்வோம். இது பண்டைக் காலம் முதல், பாரத தேசத்தில், இமயம் முதல் குமரி வரை குளிர் காலத்தில் கடைப்பிடிக்கப்படும் பண்டிகை. இதில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் உற்சாகமாகப் பங்கு பெறுவார்கள். இருபத்தோரு இலைகளைச் சேகரிப்பது, களிமண்ணால் விநாயகர் சிலையை வடிப்பது என்று வீட்டில் அனைவரும் சேர்ந்து செய்வார்கள்.
பூஜை செய்து கொழுக்கட்டை, லட்டு, பழங்கள், காய்கள், பலகாரங்கள், சுண்டல், அன்னம் எல்லாம் நிவேதனம் செய்து பிரசாதமாக சாப்பிடுவார்கள் அது ஒரு தனி அழகு, சந்தோஷம். ஆனால் காலக்கிரமத்தில் இந்த பண்டிகை வீதிகளில், பள்ளிகளில், நிறுவனங்களில், காலனிகளில் சமுதாயமாகச் சேர்ந்து செய்வது தொடங்கியது. இது சமுதாயத்தின் உயிரோட்டமாகவும், ஒற்றுமைக்குச் சின்னமாகவும் ஏற்பட்ட அழகான மாற்றம்.
ஆனால், இதில் சில வேறுபட்ட உணர்வுகள் நுழைந்தன. கட்டாயமாக சந்தா வசூல் செய்வது, ஏதேதோ இலைகளை எல்லாம் பத்திரம் என்று சொல்லி பிள்ளையார் சிலை மீது எறிவது, சாஸ்த்திர விதிக்குப் புறம்பான வடிவங்களில் விக்கிரகங்களை பெரிய அளவுகளில் தாயரிப்பது, சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படும் விதமாக ஏதேதோ பதார்த்தங்களைக் கொண்டு பெரிய சிலைகளை அமைப்பது, நீரில் கரைப்பது என்ற பெயரில் தேவையற்ற ஆர்ப்பாட்டங்கள்,, பூஜை மண்டபங்களின் முன்பாக ஆபாச நடனங்கள், கர்ண கொடூரமான ஓசைகள் – இவை எல்லாம் விநாயக சதுர்த்தியின் சம்பிரதாயத்திற்கு விரோதமாக நடக்கும் சம்பவங்கள்.
சாத்விகமும், அமைதியும் தெய்விக நிகழ்ச்சிகளின் இலக்கணங்கள். அவற்றுக்கு எதிராக நடக்கும் பழக்கங்கள் உண்மையான ஹிந்து தர்மத்தின் சொரூபங்கள் அல்ல. இப்படிப்பட்ட கேடுகளை சில இடங்களில் தேவி நவராத்திரி கொண்டாட்டங்களிலும், ஹோலி போன்ற பண்டிகைகளிலும் கூட பார்க்க நேர்கிறது.
ஹோலி என்பது அழகான வண்ணங்களின் பண்டிகை. நட்புக்கும், உறவுகளின் நெருக்கத்திற்கும் சின்னம். ஆனால் அதனை பயத்திற்கும் கவலைக்கும் இடம் கொடுக்கும் காரணிகளாக சில இடங்களில் செய்து விடுகிறார்கள். இந்த விகாரங்களால் உண்மையான பண்டிகையின் அழகோ, மகிழ்ச்சியோ கிடைப்பதில்லை.
இவற்றுக்குத் துணையாக, உபாசகர்கள் மட்டுமே செய்யக் கூடிய வாராஹி நவராத்திரி, ஷ்யாமளா நவராத்திரி போன்ற ரகசியமான ஒன்பது நாள் பூஜைகளும், தசமஹா வித்யை போன்ற தாந்திரிக வழிபாடுகளும், சமூக ஊடகங்களின் படாடோபமான அறிவிப்புகளால், ஒரேயடியாகப் பரவி, உபாசனை சம்பிரதாயமற்றவர்களும், தேவையற்றவர்களும் கூட கோரிக்கைகளுக்காக இஷ்டம் வந்தாற்போல் பின்பற்றுவது அதிகரித்து விட்டது.
அரசியல் பதவி மோகத்தால் சிலர் மிக ஆடம்பரமாக இவற்றை ஏற்பாடு செய்து தேவையற்ற பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். முன்பு எப்போதும் கேட்டிராததும், சம்பிரதாயத்தில் இல்லாததுமான முறையில் இவை நடந்தேறுகின்றன.
குரு பூர்ணிமாவாக புகழ் பெற்ற வியாச பூர்ணிமாவும் சாஸ்திரங்களில் இல்லாத விதத்தில் நடத்தப்படுகிறது. வியாயசரையே மறந்து விட்டு நடக்கும் இந்த விசேஷங்களின் விமரிசை, அட்டகாசம் கொஞ்சமல்ல. அதே போல் சம்பிரரதாயமே தெரியாத விதத்தில் புனித நதிகளின் புஷ்கரங்கள் போன்றவையும் பொது மக்களிடையே அதிக குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.
ஆண்டுக்கொருமுறை தீபாவளியன்று வெடி வெடிப்பது பண்டைய சம்பிரதாயங்களில் ஒன்று. ஆனால், அவற்றால் சுற்றுச் சூழல் மாசடைகிறது என்று தவறான பிரசாரம் செய்து ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் போராட்டம் நடத்துவத்தையும், சில மாநில அரசுகள் வெடி வெடிக்கும் சம்பிரதாயத்தைத் தடை செய்வதையும் காண்கிறோம்.
ஆனால் பல தேசங்களில் அவர்களுடைய தேசத்தின் சுதந்திர தினத்தன்றோ அல்லது வேறொரு சந்தர்ப்பத்திலோ ஆண்டில் சுமார் ஒரு வாரம் வீடுகளிலும் வெளியிடங்களிலும் வெடி வெடித்து மகிழ்கிறார்கள். அங்கு யாரும் மாசு கோஷங்களோ போராட்டங்களோ நடத்தவில்லை.
பாரத தேசத்தில் மட்டுமே ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் ஹிந்துக்களின் ஒற்றுமையான சந்தோஷங்களை மறுக்கவேண்டும், தடை செய்யவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது அளவுக்கு அதிகமாக வளர்வதைப் பார்க்கிறோம்.
சிலரின் புரிதல் குறைபாடும், விவேகமற்ற இயல்பும், அனாவசியமான விரோதமான சேஷ்டைகளும், பிறருடைய தேவையற்ற தலையீடுகளும், பொய்யான குற்றச்சாட்டுகளும் நம் பண்டிகைகளின் தனிப்பட்ட, சிறப்பான சௌந்தர்யங்களை அறியமுடியாதபடி செய்கின்றன.
இத்தகு பின்னணியில் நம் சாஸ்திரங்களையும், பரம்பரையாகச் செய்துவரும் உண்மையான பழக்க வழக்கங்களையும் பிரமாணமாக அறிந்து, அறியச் செய்து கடைப்பிடிப்பது அவசியம். நம் சாஸ்திரங்கள் கூறிய விதி, விதானங்கள் அனைத்தும் இயற்கைக்கும் சமுதாயத்திற்கும் தெளிவையும் புஷ்டியையும் அளிப்பவையே தவிர அவற்றை அழிப்பவை அல்ல என்ற உண்மையைப் பரப்ப வேண்டும்.