
உலகின் ஆன்மிக குருவாய் பாரதம் திகழ வேண்டும் என்ற கனாக் கண்டவர்கள் நம் குருமார்கள். ஆனால், இந்த பாரதத்தின் ஆன்மிக குருவாய்த் திகழ்ந்தது நம் தமிழ் மண் தானே!ஆன்மிக, இறை நெறித் தத்துவங்களுக்கு குறைவில்லாத தெய்வீக மண் இந்த பாரத புண்ணிய பூமி. பன்முகத் தன்மை கொண்ட பல தத்துவங்கள். போதிப்பது ஒற்றை இறைத் தன்மையை!
ஆகாயத்தில் இருந்து மண்ணில் வீழும் மழைத் துளி, அங்கங்கே சிறு சிறு ஓடைகளாகி, ஆறுகளாகி, முடிவில் சாகரத்தில் சேர்கிறது. சாகரத்தின் நீரை ஆதவன் தன் வெப்பக் கிரணங்களால் உறிஞ்சி மீண்டும் ஆகாயத்தில் சேகரித்து மழையால் மண்ணைக் குளிர்வித்து மீண்டும் நீர் சாகரத்தில் சேகரமாகிறது. இந்த மழை நீர்த் தத்துவம் போல், ஆன்மாவின் இறை சுற்றுப் பயணத்தை விளக்கியிருக்கிறார்கள் நம் ஆசார்ய புருஷர்கள்.
ஆயின் இந்த ஆசார்ய புருஷர்களின் தோற்றம் நம் தென்னகத்தில் நிகழ்ந்தவை என்பதுதான் ஆச்சரியமான உண்மை. ராமனும் கிருஷ்ணனும் வட புலம் சார்ந்த கடவுளர்கள் என்று தென்னகத்தில் ஒதுங்கிப் போய் விட முடியாது. அந்த ராமனையும் கண்ணனையும் வட நாட்டை விட தென்னகத்து ஆசார்ய புருஷர்கள்தான் கடவுளாய் உணர்ந்து தெளிந்து தத்துவம் படைத்தார்கள்.
பாரத தேசத்தில் ஆசார்யர்கள் கடந்த ஈராயிரம் வருடங்களுக்குள் எத்தனையோ பேர் தோன்றியிருக்கிறார்கள். வைணவ நெறியில் புஷ்டீ மார்க்க வைணவம் நிறுவிய வல்லபாசார்யர், கிருஷ்ண சைதன்யர் என பல ஆசார்யர்கள் இருந்தாலும், இந்த தேசம் மூவரை மட்டுமே நிறைவான ஆசார்யர்களாக போற்றிக் கொண்டாடுகிறது.
ஆசார்யர் என முழுதாய்க் கொண்டாட, அவர் பகவத் கீதைக்கு விளக்கம் எழுதியிருக்க வேண்டும். விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் எழுதியிருக்க வேண்டும். முக்கியமாக, பிரம்ம சூத்திரத்துக்கு வியாக்யானம் படைத்திருக்க வேண்டும்! இவற்றை நிறைவு செய்தவர்கள் சங்கர, ராமானுஜ மத்வாச்சாரியர்கள்.
சிலமுறை முயன்றும், ஆதி சங்கரர் கரத்தில் விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்குப் பதிலாய், லலிதா சஹஸ்ரநாமமே கிடைத்தது என்பர். அதற்கு அவர் விளக்கவுரை எழுதினார்.
இவர்கள் மூவரும், மூன்று தத்துவங்களை முழுதாய்ப் படைத்த மகான்கள். பரமாத்மாவும் ஜீவாத்மாவும் இரண்டல்ல எனக் கண்ட ஆதி சங்கரரும், இரண்டல்ல என்றாலும் ஒன்றல்ல எனக் கண்ட ராமானுஜரும், இரண்டும் வேறானவை எனக் கண்ட மத்வாசார்யரும் தென்னகத்தில்தான் அவதரித்தார்கள்.
இந்தத் தென்னகம், தத்துவக் கடலாய்த் திகழ்ந்தது. வேத காலத்தில் இறைத் தத்துவங்களை உணர்ந்து அறிந்து தொகுத்த முனிவர்கள் கங்கைக் கரையில் அமர்ந்திருந்தார்கள். அவற்றின் விளக்கங்களாய் அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத தத்துவங்களைப் படைத்த ஆசார்யர்கள், தென்னகத்தில், காவிரிக் கரையில் தடம் பதித்தார்கள்!
நேபாளத்தில் உள்ள ஜனகபுரி நாயகி சீதை அயோத்தியில் அவதரித்த ராமனின் துணையானார். அந்த ராமனோ, பின்னாளில் கானகம் ஏக, தென்னகம் நோக்கி வந்தான். இங்கே அவன் பாதம் பதித்த முத்திரைத் தடங்கள் ஏராளம்! அந்த ராமனே, பண்டைத் தமிழ் மண்ணில் சங்க இலக்கியங்களாலும் பாடப் பெற்ற புண்ணியன் ஆனான். அந்த அழகுத் தமிழ் இலக்கியங்களை அடியொற்றி பின்னாளில் பக்தி இலக்கிய மரபில் துளித்த ஆழ்வார்கள், ராமனைப் பாடிப் பரவசம் எய்தினர்! ராமன் சென்ற இடங்கள் எல்லாம் புனிதத் தலங்கள் ஆயின. அவற்றைப் பாடிப் பரவிய ஆழ்வார்களால், அவை திவ்யதேசங்கள் ஆயின.
பண்டைத் தமிழர் மரபில் முல்லைத் தெய்வமாய் போற்றப் பட்ட திருமாலுக்குத்தான் எத்தனை சிறப்பு! பரிபாடலும் சிலப்பதிகாரமும் சிறப்பித்துக் கூறும் மாயோன் வடிவை! குறிஞ்சிக் கடவுள் சேயோன், கைலாசத்தின் நாயகன் சிவபெருமானின் புதல்வன் என வழிபாட்டில் முதலிடம் பெற்றான். அந்த சிவபெருமானுக்கு தென்னகத்தில், நாயன்மார்கள் பாடிய அழகுத் திருத்தலங்கள் எத்தனை எத்தனை! கைலாசபதியோ தென்னாடுடைய சிவன் ஆனார்!
பண்டைய பாரதத்தின் இரு வேறு மொழிகளாகத் திகழ்ந்தவை இரட்டைச் சகோதரிகளாய்ப் பிறந்த வடமொழியும் தென்மொழியும்! இவை இரண்டும் சிவபெருமானின் உடுக்கை ஒலியில் இருந்து தோன்றியவை என புராணம் கூறும். உடுக்கையின் இரு பகுதிகளிலும் இருந்து தோன்றிய காரணத்தால்தான், அவை இரட்டைச் சகோதரிகள் எனப்பட்டன. வட நாட்டில் பின்னர் கிளைத்த மொழிகளின் தாயாய் சமஸ்கிருதம் ஆனது. தென்னகத்தின் மொழிகளுக்கெல்லாம் தாயாய் தமிழ் ஆனது!
இந்தத் தமிழ் மண், தத்துவங்களின் கடலாய்த் திகழ்ந்தது. எங்கெங்குத் திரும்பினும், பக்த கவிகள், ஆன்ம தத்துவம் உணர்ந்த அறிஞர் பெருமக்கள்,தங்கள் தத்துவங்களால் மக்களை நல்வழிப் படுத்திய ஞானப் பேராசான்கள் என ஆன்மிக நிலமாய்த் திகழ்ந்தது!
வடமொழி வேதங்களின் தத்துவ விளக்கமாய், தமிழில் தமிழ்மறை தத்துவ தரிசனங்களைப் படைத்தார்கள், பக்தி இலக்கியக் காலத்தில் உதித்த ஆழ்வார்கள் மற்றும் சைவம் போற்றிய நாயன்மார்கள். மனிதப் பிறப்பின் மகத்துவத்தை உணர்ந்தவர்களாய்த் திகழ்ந்தவர்கள் தமிழர்கள். சொல்லும் செயலும் சிவனுக்கும் சக்திக்கும் ராமனுக்கும் கண்ணனுக்குமாய் முழுதாய் அமைந்திருந்தது. இவற்றின் வெளிப்பாடு பக்தி இலக்கியங்களாய் முகிழ்த்தன.
உதாரணத்துக்கு ஒன்று! ஒருமுறை என் சிறு வயதில் பெரியோரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, அர்த்த பஞ்சக ஞானம், அர்த்த பஞ்சக ஞானம் என்ற வார்த்தைகள் அடிக்கடி என் காதில் விழுந்தன. பஞ்சக என்று அவர்கள் தவறாகச் சொல்கிறார்கள் போலும், பஞ்ச என்றுதான் இருக்கும் என, அதிபுத்திசாலித்தனமாக எண்ணி, அர்த்தம் சொல்வதில் பஞ்சம் இருக்கும் ஞானம் போலும் என்று அந்தப் பதின்ம வயதில் எண்ணியதுண்டு.
பிறகு, அது பஞ்ச அல்ல, பஞ்சக எனும் ஐந்து என்று அறிவுக்கு எட்டியது. அப்போதுதான், அந்த ஞானம் பெறாவிட்டாலும், குறைந்தது அந்த ஐந்து என்ன என்றாவது தெரிந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது.
ஒருநாள், நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி சொல்லத் தொடங்கியபோது, முன்னதாக வரும் தனியன்கள் சொல்லி வந்தேன். யதேச்சையாக பராசர பட்டர் எனும் ஆசார்யர் அருளிய இந்த தனியனில் சற்று நின்று நிதானித்து ஊன்றி அனுபவித்தேன்…
மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகி- தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழின்இசை வேதத் தியல்
– என்ன ஓர் அருமையான வெண்பா!
அடடா.. அர்த்த பஞ்சக ஞானத்தைப் பெற, அதாவது ஐம்பொருள் அறிவு குறித்து அறிய என்னமாய் நம்மாழ்வாரைத் துணைக்குக் கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது.
இதில் என்னவெல்லாம் சொல்கிறார்… மிக்க இறை நிலை, மெய்யாம் உயிர் நிலை, தக்க நெறி, தடையாகும் ஊழ்வினை, மோட்ச வாழ்வாகிய வாழ்நிலை – இவை ஐந்தையும் அறியும் நிலைதான் இந்த மனிதப் பிறப்பாகிய பிறவிக்கு திருப்தி நிலை!
சத் சித் ஈஸ்வரன் எனும் மூன்றின் அடிப்படையில் ஆன்ம ஞானம் அமைகிறது. இம்மூன்றில் முடிவாகிய ஈஸ்வரனின் இயல்பு என்பதை, பரத்வம், வியூகம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சாவதாரம் என ஐந்தாக விளக்குவர்.
ஆன்மாவின் இயல்பு என்பது, நித்தியர், முக்தர், பக்தர், கேவலர், முமுட்சு என ஐவகையாக வெளிப்படும்.
ஆன்மா அடையும் பயனென்பது, புருஷார்த்தம் அதாவது புருஷனாகிய ஆன்மாவால் அடையப்படும் பயன் என்பது, அறம், பொருள், இன்பம், ஆன்ம அனுபவம், பகவத் அனுபவம் என ஐந்தாகும்.
ஆன்மா, இந்தப் பயனை அடைவதற்கான வழிகளாக கர்மம், ஞானம், பக்தி, பிரபத்தி, ஆசார்ய அபிமானம் என ஐந்து வழிகள் உள்ளன.
இந்தப் பயனை அடைவதற்குத் தடையாக, அதாவது விரோதியாக உள்ளவை, சொரூப விரோதி, பரத்துவ விரோதி, புருஷார்த்த விரோதி, உபாய விரோதி, பிராப்தி விரோதி என ஐவகை.
நம்மாழ்வாரின் திருவாய்மொழி ஒன்றே போதும், இந்த அர்த்த பஞ்சக ஞானத்தை நாம் பெறுவதற்கு!
உயர்வற உயர்நலம் உடையவன் இறைவன். இந்த ஆன்மாவுக்கான சொரூபம் அடியேன் எனும் தாஸ்ய நிலை. சரணாகதி செய்வதே அவனை அடைய வழி. பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் அவனை அடையத் தடையாக நிற்கும் விரோதிகள். ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்வதே பரம புருஷார்த்தமாகிற பேறு… எனும் இந்த ஐந்து அறிவு நிலையை அடையப் பெறுவது நம் பாக்கியம்!
அதற்கு ஆழ்வார்களின் தமிழ் நமக்குத் துணை நிற்கிறது. ஆழ்வார்களிலும் இயல்பிலேயே பெண்ணாய்ப் பிறந்த ஆண்டாளின் அழகுத் தமிழ், நம் பாரம்பரியத்தின் ஊற்றுக் கண். அதனால்தானே தமிழக அரசின் சின்னமாய் ஆண்டாள் ஆலய கோபுரம் தன்னை இருத்திக் கொண்டது!
இறைவனை நாயக நாயகி வடிவத்தில் பாடினர் ஆழ்வார்கள். ஆயினும் ஜென்ம ஸித்த ஸ்த்ரீத்வம் எனும்வகையில் ஆண்டாள் இயல்பில் பெண்ணாய் அவதரித்து, பெண் தன்மை ஏறிய பாசுரங்களால், நாயக நாயகித் தன்மையை பொதிந்து பாடினார். அந்த அழகுத் தமிழுக்கு ஓர் உதாரணம்!
கருப்பூரம் நாறுமோ..? கமலப்பூ நாறுமோ..?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ..?
மருப் பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்,
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே. – என்று ஆண்டாள் நாச்சியார் வெண் சங்கமான பாஞ்சஜன்யத்தைப் பார்த்துக் கேட்கும் இந்த இலக்கிய பக்திச் சுவை தனி ரகம்தான்!
சங்க காலத் தமிழ் முதல் இந்தக் காலம் வரை… காதலன் அல்லது காதலியின் நினைவில், பிரிவினால் வாடும் இணையர், அவர்கள் பயன்படுத்திய பொருள்களைப் பார்த்து, தொட்டு அந்தப் பிரிவுத் துயரைப் போக்கிக் கொள்ள முயலுவர்.
குறுந்தொகையில் ஒரு பாடல்… புகழ்பெற்ற பாடல்… ஔவையார் பாடியது. 23வது பாடல்.
குறத்தி ஒருத்தி. ஊரெல்லாம் சுற்றி ஓர் ஊருக்கு வருகிறாள். அங்கே ஓர் இல்லத்தில் தலைவி ஆனவள் தலைவிரி கோலமாக சோகத்தில் ஆழ்ந்திருந்தாள்.
குறத்தியின் பாடல் கேட்டு அவள் வெளியே வந்து எட்டிப் பார்த்தாள். அப்போது அவள் தோழி குறத்தியிடம் வந்து, ”முன்பு ஒரு முறை தலைவனின் மலையைப் பற்றிப் பாடினாயே அதைப் பாடேன்… என் தோழி அதைக் கேட்க வேண்டுமாம்!” என்றாள்.
அதைக் கேட்டு, தலைவியின் தாய் அதிர்ந்தாள். ”என்ன..? அவரின் மலையைப் பாட வேண்டுமா? அதை என் மகள் கேட்க விரும்புகிறாளா? யார் அவர்? இவள் ஏன் அதைக் கேட்க வேண்டும்” என்று எண்ணியவளாக, தோழியிடம் விளக்கம் கேட்டாள்.
அதற்கு தோழி, ”ஒரு நாள் இவள் தினைப்புனத்தில் காவல் காத்துக் கொண்டிருந்தாள். திடீரென ஒரு யானை வந்தது… புனத்தை அழிக்கத் தொடங்கியது. அதைப் பார்த்து இவள் அஞ்சினாள். அப்போது அழகும் திறனும் உடைய மன்னன் ஒருவன் அந்த யானையின் மேல் வேல் எறிந்து ஓட்டி இவளைக் காப்பாற்றினான். அன்று முதல் இவள் அந்த மன்னனின் நினைவாகவே இருக்கிறாள். அதுவே இவளின் உடல் மெலிவு முதலானவற்றின் காரணம்…” என்றாள்.
இப்படி, குறத்தியாகிய அந்த அகவல் மகள் பாடும் போது, “அவர் நன்னெடுங் குன்றத்தை இன்னும் பாடு’ என்று தோழி சொன்னாள். அவ்வாறு வரும் பாட்டு இது.
அகவல் மகளே, அகவல் மகளே,
மனவுக்கோப்பு அன்ன நன்னெடுங் கூந்தல்
அகவல் மகளே, பாடுக பாட்டே;
இன்னும் பாடுக, பாட்டே; அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.
தெய்வங்களை அழைத்துப் பாடும் குறப் பெண்ணாகிய அகவல் மகளே, நீ பாட்டுப் பாடு! இன்னும் பாட்டுப் பாடு! அவருடைய நல்ல உயர்ந்த மலையை முன்பு பாடினாயே, அந்தப் பாட்டைப் பாடு! என்றாள். காரணம்… அந்த மலையைப் பற்றி இவள் பாடி, அதைக் கேட்க, அந்த நினைவில் மன்னனின் எண்ணத்தை மனதில் நிலைத்திருக்கச் செய்து, அந்த நினைவு சுகத்தில் தன் தலைவி மூழ்கியிருக்கலாமே…” என்பது தோழியின் எண்ணம்.
இது போல், அகத்துறைப் பாடல்கள் நம் இலக்கியங்களில் அதிகம். இன்னொரு பாடல்…
குறிஞ்சியில் கபிலர் பாடிய பாடல். இதில், காதலன் வாழும் மலையை தொலைவில் இருந்தே பார்த்து, ஏக்கப் பெருமூச்சோடு தன் தாபத்தைத் தணித்துக் கொள்கிறாள் இந்தக் காதலி.
அன்னாய்! வாழிவேண்டு அன்னை! கானவர்
கிழங்கு அகழ் நெடுங்குழி மல்க, வேங்கைப்
பொன்மலி புதுவீத் தாஅம் அவர்நாட்டு
மணிநிற மால்வரை மறைதொறு இவள்
அறைமலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே.
அன்னையே, நீ வாழ்வாயாக! நான் சொல்லும் இதனைக் கேட்க விரும்புவாயாக… அன்னையே, குறவர்கள் கிழங்குகளைப் பறித்ததால் அங்கே ஆழமான குழிகள் உண்டாயின. அந்தக் குழிகள் நிறையும்படி, வேங்கை மரத்தின் பொன்னிறம் மிக்க புதிய மலர் உதிர்ந்து இறைந்து கிடக்கிறது. அப்பேர்ப்பட்ட நிலத்தை உடைய தலைவருடைய நாட்டில், நீலமணி போன்ற திருமாலின் நிறத்தை ஒத்த பெரும் மலையும் உண்டு. அந்த மலை மறையும் போதெல்லாம், பாத்தியிலே வளர்ந்த மலர் போன்ற இவளுடைய நீண்ட கண்களில் நீர்த் துளிகள் நிரம்புகின்றன… – என்று காதலியின் துயரத்தை வெளிப்படுத்துகிறாள் தோழி.
மாலையில் பார்வையில் இருந்து மறையும் வரை அந்த மலை இவள் கண்களில் பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த மலையைப் பார்த்து, தன் தலைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் எண்ணத்தை உள்ளத்தில் போட்டு வைக்கிறாள் தலைவி. மாலையில் அது மறையத் தொடங்கும்போது, தலைவியின் கண்கள் பிரிவினால் கண்ணீரைச் சிந்துகின்றன.
இப்படி பண்டைத் தமிழர் வாழ்வியலிலும் இயல்பாய்ப் புகுந்து கலந்து கரைந்திருந்தது பக்தியும் பண்பாடும். காணும் இடமெல்லாம் சக்தியின் வடிவம். செயலெல்லாம் பெருமானுக்கானதே என்று வாழ்ந்த பண்டைய தமிழ் இலக்கிய மரபை ஒட்டித் தான், பக்தி இலக்கியத்திலும் ஆண்டாள் நாச்சியார் திருமொழி எனும் பாடல்களைப் பாடினார்.
மானிடவர்க்கு என்று பேச்சுப் படின் வாழகில்லேன்… என்று, தெய்வக் காதலில் கரைந்தவள் ஆண்டாள். அதுவும் கண்ணன் என்னும் கருந்தெய்வத்தின் மீதான காதலில் கரைந்த ஆண்டாள் நாச்சியார், கற்பூரம் நாறுமோ பாடலில், கண்ணனின் கை விட்டு நீங்காது இருக்கும் வெண்சங்கத்திடம் கண்ணனின் திருவாய்ச் சுவை பற்றிய அனுபவத்தைக் கேட்கின்றார்!
திரு ஆழி எனப்படும் சக்கரம் மிகவும் மேன்மை வாய்ந்தது. சக்கரப் படை கொண்டே கண்ணன் பகைவரின் சிரம் அறுத்தான். சங்கத்தின் முழக்கம் கேட்டால் பகைவரின் தொடைகள் இரண்டும் நடுக்கமுறும். அவ்வளவு பயத்தை பகைவருக்குத் தோற்றுவிக்கத் தக்கது போர்க்களத்தில் சங்கத்தின் பேரொலி.
இதில், சக்கரமானது பகைவரை அழிப்பதற்காக அவ்வப்போது பகவானின் கையை விட்டு நீங்கி, தன் செயலை முடித்து, மீண்டு வந்து பகவானின் கையைச் சேரும். இப்படி, கண நாழிகை நேரமேனும் பகவானை விட்டு நீங்கியிருக்கும்படி நேர்கிறது சக்கரத்துக்கு. ஆனால், சங்கின் நிலை அப்படி அல்ல. அது, பகவானின் கையை விட்டு எப்போதும் நீங்காதது. எந்த நேரமும் பகவானின் கையிலேயே இருக்கும். ‘அகலகில்லேன் நிறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன்’ என்று நம்மாழ்வார் பாடியபடி, பரந்தாமன் மார்பிலிருந்து அகலாமல் எப்படி மகாலட்சுமி உறைகிறாளோ அப்படி,
ஒரு நொடிப்பொழுதும் பகவானின் கரத்தை விட்டு நீங்காத வரம் பெற்றது வெண்சங்கம். அந்த பாஞ்சஜன்யப் பெருஞ் சங்கம், இன்னொரு பேறும் பெற்றது. எதிரிகளைக் கலங்கடிக்க, இந்த சங்கத்தினை தன் வாயில் வைத்து ஊதி, பேரொலி எழச் செய்வான் கண்ணன். இப்படி, கண்ணனின் திருப் பவளச் செவ்வாயில் படும் பேற்றினைப் பெற்றது அது. அதனை நினைத்தபடியே… கண்ணனின் நினைவுகளில் மூழ்கிப் போனாள் ஆண்டாள். வெண்சங்கம் பெற்ற பேற்றினை தானும் பெற வேண்டும். அதற்கு முன்னோட்டமாகத்தான், அதன் அனுபவத்தை இப்படிக் கேட்கிறாள்…
மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!
ஆக, இந்தத் தமிழ் மண் பாரதத்துக்கே ஆன்மிகத்தை வாழ்ந்து காட்டி அனுபவமாய்த் தந்த மண். அந்த மண்ணில் பிறந்து வாழும் நாம் பெரும் பேறு பெற்றவர்கள்! யாம் செய்த பெருந்தவத்தால் இம்மண்ணில் பிறந்தோம் என்று பெருமிதமாய்ச் சொல்லலாம்!
– செங்கோட்டை ஸ்ரீராம்