
— ராம் மாதவ் —
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்
கடந்த வாரம் தில்லியில் அறிஞர்கள் ஆர் எஸ் எஸ் ஸின் சர்சங்கசாலக் மோகன் பாகவதத்தின் மூன்று நாள் தொடர் உரையை கேட்கும் வாய்ப்பை பெற்றனர். ஆர் எஸ் எஸ் ஸின் நூற்றாண்டை ஒட்டி அந்த உரை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மத்தியில் 21 ஆம் நூற்றாண்டில் அந்த அமைப்பின் கருத்தியல் நிலையை பற்றி பாகவத் அவருக்கேவுரிய தன்னடக்கத்துடன் தெளிவாக எடுத்துரைத்தார்.
நூற்றாண்டு பயணம்
நூறு ஆண்டு கால பயணத்தை ‘தொடர்ந்து வளர்ச்சியடைந்து’ வருவதாக அவர் விளக்கினார். இந்த விவரிப்பை முதன் முதலில் பயன்படுத்தியவர் இயக்கத்தின் புகழ்மிக்க சிந்தனையாளரான தத்தோபந்த் தெங்கடி. இறுகிய கருத்தியல் கொண்டவர்கள் அல்ல மாறாக திறந்த மனதுடன் சமூக மாற்றங்களை ஏற்றுக் கொள்பவர்கள் என்ற பொருளில் அவர் அந்த சொற்றொடரை பயன்படுத்தினார். பரம் வைபவ – உலகின் மிக உயர்ந்த நிலையை ஹிந்து ராஷ்டிரம் அடைய வேண்டும் என்ற இறுதி இலக்கை அடைய தொடர்ந்து, அதேவேளையில் சமூக மாற்றங்களுக்கு ஈடு கொடுத்தபடி பயணிக்க வேண்டும் என்பது அதன் பொருள்.
சங்கத்தின் தற்போதைய தலைமையான பாகவத்தும் அவருக்கு அடுத்து நிலையில் இருக்கும் தத்தாத்ரேய ஹொஸோபோலே வும் மையக் கொள்கையில் சமரசம் இல்லாமல் ‘தொடர்ந்து பரிணாம வளர்ச்சி’ அடைந்து வருவதில் நம்பிக்கை கொண்டுள்ளனர். ‘ஹிந்துஸ்தானம் தான் ஹிந்துராஷ்டிரம்’ என்ற அடிப்படையை நம்பிக்கையை தவிர்த்து சங்கத்தில் உள்ள மற்ற எல்லாம் மாறக் கூடியதே என்று பாகவத் கூறினார்.
தலைவர்களில் பங்களிப்பு
பாகவத்தின் உரை தொடரில் இயக்கத்தின் கருத்தியல் மற்றும் பண்பாட்டில் எப்படி வளர்ச்சி ஏற்பட்டு வந்துள்ளது என்பதை உயிர்ப்புடன் சித்தரித்தார். தோற்றம் முதல் தொடர்ந்து வந்த ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இந்த வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர். ஆர் எஸ் எஸ் ஐ துவக்கிய ஹெட்கேவார் , உடல் ரீதியாக வலிமையும் உணர்வுபூர்வமாக ஹிந்து சமுதாயம் ஒருங்கிணைப்பும் பெற்றிருக்க வேண்டும் . சுதந்திரம் பெறுவதற்கு மாத்திரம் அல்ல தன் சொந்த ஆன்ம பலத்தில் தேசம் முன்னேற இது அவசியம் , என்றார்.
அவருக்கு அடுத்து வந்த குருஜி கோல்வல்கர் தேச வாழ்க்கையின் எல்லா தளங்களிலும் அமைப்பை விரிவாக்கம் செய்தார். மூன்றாவது தலைவரான பாளாசாஹேப் தேவரஸ் ஜாதியம், தீண்டாமை, ஹிந்து சமுதாயத்தில் உள்ள நல்லிணக்கமற்ற தன்மை போன்ற சமூக பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முனைந்தார். அவருக்கு பின் வந்த தலைவர்கள் ஊடகங்கள், பண்பாடு, இலக்கியம் போன்ற புதிய களங்களில் அமைப்பை ஈடுபடுத்தியதுடன் கருத்தியலாளர்கள் கட்டமைப்பையும் ஏற்படுத்த முனைந்தனர்.
சர்கார்யவாஹ் பிறகு சர்சங்கசாலக் என கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பொறுப்பில் இருக்கும் பாகவத் இயக்கத்தின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மையையும் பரந்த மனப்பான்மையையும் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மையம் மாறியது
நூறு ஆண்டுகளில் ஷாகாவை மையமாகக் கொண்ட அமைப்பு என்பதிலிருந்து ஸ்வயம்சேவகர்களை மையமாகக் கொண்ட அமைப்பாக , பெரிய மாறுதலை கொண்டதாக , ஆர் எஸ் எஸ் பரிணமித்துள்ளது. ஷாகா – தினசரி சந்திப்பு – என்பது தொடர்ந்து முக்கியமான விஷயமாக இருக்கின்ற போதிலும் பல்வேறு களங்களில் அதன் தொண்டர்கள் மேற்கொண்டு வரும் ஆயிரக்கணக்கான சமூக நல திட்டங்களால் ஆர்எஸ்எஸ் சிறப்பாக அடையாளம் காணப்பட்டு வருகிறது.
முன்பெல்லாம் சங்கத்தை ‘சங்க யானி ஷாகா; ஷாகா யானி கார்யக்கிரமா ‘ (சங்கம் என்றால் ஷாகா ; ஷாகா என்றால் அங்கு நடக்கும் செயல்கள் ) என்று வரையறுப்பார்கள் . ஆனால் இப்போது ‘சங்க யானி ஸ்வயம்சேவக் ; ஸ்வயம்சேவக் யானி பிரகல்ப் ‘ (சங்கம் என்றால் ஸ்வயம்சேவகர்கள்; ஸ்வயம்சேவகர்கள் என்றால் அவர்கள் நடத்தும் செயல் திட்டங்கள்) என்று சொல்வது பொருத்தமாகும்.
மதநல்லிணக்கம்
இன்று தொண்ணூறு சதவீதமான சங்கம் ஷாகாவுக்கு வெளியே உள்ளது. பரந்த சமுதாயத்துடன் உறவாடுவதும் இணைப்பதும் என்ற கருத்தை தளராமல் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார் பாகவத். தேவரஸூம் அவருக்கு பின் வந்த சுதர்சனனும் முஸ்லிம், கிறிஸ்துவ தலைவர்களை சந்தித்து உரையாடினார்கள் . ஆனால் அவை அரிதாக நடந்தன. அடிக்கடி சந்திப்பது , திட்டமிட்ட ரீதியிலும் அவ்வாறு இல்லாமலும் சந்திப்பது, என்று அந்த விஷயத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார் பாகவத். இது அந்த சமூக தலைவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
‘ ஒவ்வொரு மசூதிக்கு அடியிலும் சிவலிங்கத்தை தேட வேண்டாம்’ என்று ஹிந்துக்களுக்கு பாகவத் கூறிய புகழ்பெற்ற வாக்கியம் தொடங்கி ‘எங்களுக்கு முஸ்லிம்கள் தேவையில்லை என்று கூறும் நாள் ஹிந்துத்துவம் இல்லாமல் போகும் நாள்’ என்று வலியுறுத்தியது, காசி மற்றும் மதுரா கோவில்களை மீட்கும் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் பங்கேற்காது என்று உறுதிப்பட தெரிவித்தது என பாகவத் அனைவரையும் அரவணைக்கும் ஏற்றுக் கொள்ளும் புதிய கண்ணோட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விஞ்ஞான் பவனில் நடந்த உரை நிகழ்ச்சியிலும் ‘இஸ்லாம் இல்லாமல் போய்விடும் என்று எந்த ஹிந்துவும் நினைக்கவில்லை’ என்று உறுதிப்பட கூறினார்.
நூற்றாண்டு கண்ட அமைப்பு மேலும் வெளிப்படை தன்மையுடன் அனைவரையும் அரவணைத்து செல்லக் கூடியதாகவும் இருக்க வேண்டுமென பாகவத் விரும்புவது பரந்த இந்திய சமுதாயத்தில் பல்வேறு தளங்களில் உள்ளோரிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருந்தாலும் அவர் கூறிய சில விஷயங்கள், அமைப்புக்கு உள்ளேயும் வெளியேயும் , விவாதிக்கப்பட வேண்டியுள்ளது.
விவாதம் தேவைப்படும் விஷயங்கள்
இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கிலும் மத ரீதியான மோதல்கள் நடந்து வரும் சூழ்நிலையில் ‘மதங்கள் என்பது வெவ்வேறு வழிபாட்டு முறைகள் தான். அதற்கு அப்பால் வேறொன்றும் இல்லை’ என்று அவர் கூறியுள்ளது மேலும் விளக்கப்படவும் விவாதிக்கப்படவும் வேண்டியுள்ளது. செமிட்டிக் மதங்கள் தங்கள் கருத்தியலை உறுதியாக கட்டமைத்துள்ளன. அவற்றை பல்வேறு நாடுகளில் உள்ள மைய சமுதாயங்கள் ஏற்க வேண்டும் என்றால் அந்த (செமிட்டிக்) மதங்களில் பெரிய சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் . அவ்வாறு செய்யப்படாததால் தான் ஐரோப்பாவிலும் உலகின் மற்ற பகுதிகளிலும் சமூக முரண்பாடுகளும் மோதல்களும் வளர்ந்து வருகின்றன.
‘ மதம் மாறினாலும் உங்கள் சமூகம் மாறிவிடாது’ என்று மௌலானா ஆசாத் கூறியுள்ளதை முழுமையாக ஏற்றுக் கொண்டு மேற்கோள் காட்டுகிறார் பாகவத். ஆனால் பெருவாரியான முஸ்லிம்கள் ஆசாத் கூறியதை ஏற்கவில்லை . மாறாக முகமது அலி ஜின்னாவின் கருத்தைதான் ஏற்றுக்கொண்டு உள்ளார்கள் என்பதுதான் உண்மை.
குடும்பத்திற்கு மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பாகவத் கூறியுள்ள மற்றொரு கருத்தும் விவாதிக்கப்பட வேண்டும். அண்மைய தரவுகளின்படி பத்து சதவீதம் குடும்பத்தில் மூன்று குழந்தைகள் உள்ளன. 2025 ஐநா உலக மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி 1.9 சதவீதமாக உள்ளது. உலக சராசரி 2.1 சதவீதமாக இருக்கும் நிலையில் இது சராசரியை விட குறைவாக இருக்கிறது.
இந்த தரவுகள் அறிவியல் பூர்வமாக அலசி ஆய்வு செய்யப்பட வேண்டும். இப்போது உள்ள மக்கள் தொகை வளர்ச்சியின் படி 2065 இல் இந்தியா 170 கோடி மக்களை கொண்டதாக இருக்கும். அதன் பிறகு அந்த வளர்ச்சி விகிதம் குறைய தொடங்கும். பாகவத் சொல்லிய மூன்று குழந்தைகள் என்ற ஆலோசனை சராசரி வளர்ச்சி விகிதம் 2.1 சதவீதத்தை எட்டும் வரை ஏற்புடையதாக இருக்கும். அதன் பிறகு மக்கள் தொகை அபரிமிதமாக பெருகிவிடும்.
அதனால்தான் பிரதமர் மோடி 2019 இல் தனது சுதந்திர தின உரையில், மக்கள் தொகை பெருக்கம் பற்றிய விவாதமும் விழிப்புணர்வும் பெரிய அளவில் நிகழ்த்தப்பட வேண்டும், என்று கூறினார். ‘மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது ஒரு தேசபக்தி செயல்’ என்று அவர் வலியுறுத்தினார்.
அகண்ட பாரதம் ஆரம்பம்
இந்த விவாதங்களுக்கு அப்பால், பாரதம் குறித்து பாகவதத்தின் கண்ணோட்டம் 21 நூற்றாண்டில் ஆர் எஸ் எஸ் இன் வளர்ச்சியை பிரதிபலிப்பாக இருந்தது. நூற்றாண்டு நேரத்தில் இந்த அமைப்பு நாட்டின் தலைமை இடத்தை அடைந்துள்ளது. அதன் குரல் நம்பிக்கையுடன் வெளிப்படுகிறது. 140 கோடி இந்தியர்களை அரவணைத்து செல்வதாக அதன் கண்ணோட்டம் விரிவடைந்துள்ளது.
அகண்ட பாரதம் ஆரம்பமாகிவிட்டது.
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்





