
நம் தேசத்தின் சுதந்திர உணர்ச்சிக்கும் ஒற்றுமை உணர்வுக்கும் எழுச்சிக்கும் அடிப்படையாக அமைந்தது ‘வந்தே மாதரம்’ என்ற ஒற்றைச் சொல். எனவே இது நம் தேசத்தின் தாரக மந்திரமாக மாறிப்போனது. இந்த மந்திரத்தை நமக்கு அளித்த ரிஷி பங்கிம் சந்திர சட்டோபாத்யாய. இந்த மந்திர சொல் அமைந்த கீதமே நம் தேசிய கீதமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த கீதம் பிறந்த 150வது ஆண்டை இப்போது கொண்டாடுகிறோம்.
கடந்த மாத மன் கிபாத் – மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி இந்தக் குறிப்பிடத்தக்க நிகழ்வினை நாட்டு மக்களிடம் நினைவூட்டினார்.
பாரதத்தின் தேசியப் பாடலான வந்தே மாதரம் எப்படிப்பட்ட பாடலென்றால், இதன் முதல் சொல்லே கூட நமது இதயங்களின் உணர்வுகளைக் கொள்ளை கொண்டு விடுகிறது. வந்தேமாதரம் என்ற இந்த ஒரு சொல்லிலே தான் எத்தனை உணர்வுகள், எத்தனை சக்திகள்!! இயல்பான வகையிலே இது நமக்கு பாரத அன்னையின் தாய்மையை உணரச் செய்கிறது. இதுதான் பாரத அன்னையின் பிள்ளைகள் என்ற வகையில் நமது பொறுப்புக்களைப் பற்றி நமக்கு அறிவுறுத்துகிறது. கடினங்கள் நிறைந்த வேளையாக இருந்தால், வந்தேமாதரம் என்ற கோஷம், 140 கோடி நாட்டு மக்களுக்குள்ளே ஒற்றுமை சக்தியை நிரப்பி விடுகிறது. தேசபக்தி, பாரத அன்னையிடம் அன்பு, சொற்களுக்கு அப்பாற்பட்ட உணர்வுகள் என்றால், வந்தேமாதரம் அந்த வெளிப்படுத்த இயலா உணர்வுகளுக்கு வடிவம் தரும் பாடலாகும். பல நூற்றாண்டுக்கால அடிமைத்தனத்தில் சிதைந்து போயிருந்த பாரதத்தில் புதிய உயிர்ப்பை ஏற்படுத்த பங்கிம் சந்திர சட்டோபாத்யாய இதனை இயற்றினார். வந்தேமாதரம் 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக இருந்தாலும், இதன் உணர்வு பாரதத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான, என்றும் அழியா விழிப்புணர்வோடு இணைந்தது. மாதா பூமி: புத்ரோ அஹம் பிருதிவ்யா: என்று வேதங்கள் முழங்கி, பாரதீய கலாச்சாரத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தன. பங்கிம் சந்திரர், வந்தேமாதரம் பாடலை எழுதி, தாய்த்திருநாட்டிற்கும், அதன் குழந்தைகளுக்கும் இடையேயான உறவினை, உணர்வு உலகில் ஒரு மந்திரத்தின் வடிவிலே இறுகப் பிணைத்தார்.
நவம்பர் 7ஆம் தேதியன்று நாம் வந்தேமாதரத்தின் 150ஆவது ஆண்டு உத்ஸவத்தில் நுழைய இருக்கிறோம். 150 ஆண்டுகள் முன்பாக வந்தேமாதரம் இயற்றப்பட்டிருந்தாலும், 1896ஆம் ஆண்டில் குருதேவ் ரவீந்திரநாத் டாகுர் முதன்முறையாக இதனைப் பாடினார். வந்தேமாதரம் பாடலில் கோடிக்கணக்கான நாட்டுமக்கள் எப்போதுமே தேசபக்தியின் எல்லையில்லா உணர்வுத் திவலைகளை உணர்ந்தார்கள். நமது தலைமுறைகள் வந்தேமாதரத்தின் சொற்களிலே பாரதத்தின் உயிர்ப்புடைய, மகத்தான ரூபத்தைக் கண்டிருக்கிறார்கள். சுஜலாம், சுஃபலாம், மலயஜ சீதளாம், சஸ்ய சியாமளாம், மாதரம். வந்தே மாதரம்.
நாம் இப்படிப்பட்ட பாரத தேசத்தைப் படைக்க வேண்டும். நமது முயற்சிகளில் என்றைக்குமே கருத்தூக்கமாக வந்தே மாதரம் இருந்துவரும். அந்த வகையிலே நாம் வந்தேமாதரத்தின் 150ஆவது ஆண்டினை நினைவில் கொள்ளத்தக்க ஒன்றாக ஆக்க வேண்டும். வரவிருக்கும் தலைமுறையினருக்காக இந்தக் கலாச்சாரத் தொடரை நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டும். இனிவரும் காலங்களில் வந்தேமாதரத்தோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் இருக்கும், தேசத்தில் பல நிகழ்ச்சிகள் நடக்கும். நாட்டுமக்களான நாம் அனைவரும் வந்தேமாதரம் என்ற இந்த பெருமைமிகு பாடலின் பொருட்டு, உள்ளெழுச்சியோடு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களுடைய ஆலோசனைகளை #VandeMatram150 என்பதிலே அனுப்புங்கள். நாம் அனைவரும் இந்த சந்தர்ப்பத்தை வரலாற்று பூர்வமானதாக ஆக்கும் பணியில் ஈடுபடுவோம்.
– பிரதமரின் இந்த அறைகூவலே வந்தே மாதர கீதத்தின் தன்னெழுச்சியை நமக்குப் புரியவைத்துவிடும்!




