
வந்தே மாதரம் பாடலின் ஓரிரு சொற்களை மாற்றியமைத்து, தேசம் முழுமைக்கும் வலம் வர வைத்தவர் ரவீந்திரநாத் டாகுர். அவரே வங்கத்தில் மட்டும் சுருங்கிக் கிடந்த இந்த மந்திரத்தை தேசிய எழுச்சிக்குக் காரணி ஆக்கினார்.
பங்கிம் சந்திரரால் எழுதப்பட்ட ஆனந்தமடம் நாவலில் இடம்பெற்ற வந்தே மாதரம் பாடலின் முதல் சரணத்தில், பிரிவுபடாத வங்கத்து மக்கள்தொகையைக் கணக்கில் கொண்டு, பங்கிம் சந்திரர், ஸப்த கோடி கண்ட கலகல நினாதகராலே… நிசப்த கோடி புஜைர் த்ருத கர கரவாலே…. கே போலே, மா துமி அபலே என்று எழுதியிருந்தார். அதாவது ஏழு கோடி சிரங்கள் தரை பணிந்து உனைப் போற்றுதலும், ஈரேழு கோடித் தோள்கள் கரம் உயர்த்தி உனைப் பாடுதலும் எனும் பொருளில் எழுதியிருந்தார்.
1896ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் அமர்வில் முதன்முறையாக அவரே வந்தே மாதரத்தைப் பாடினார். மாநாட்டுக்கான கீதத்தை வடிவமைத்த டாகுர், தம் மாகாணத்தைச் சேர்ந்த பங்கிம் சந்திரரின் வந்தே மாதர கீதத்தை ஓரிரு வரிகளில் திருத்தம் செய்து பாடினார்! ஏழு கோடி என்பதை பாரத தேசத்தின் முழுமைக்குமான மக்கள்தொகையைக் கணக்கில் கொண்டு கோடி கோடி கண்ட கல கல நினாத கராலே.. கோடி கோடி புஜைர் த்ருத கர கரவாலே… என்று மாற்றினார். கே போலோ, மா துமி அபலே என்பதை எடுத்தார். இன்னும் சிற்சில மாற்றங்களுடன்… வந்தே மாதரம் காங்கிரஸ் அவையில் டாகுராலேயே பாடப் பட்டது. அதற்குக் கிடைத்த வரவேற்பும் பேரெழுச்சியும்தான், தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை ஜீவனுள்ள போராட்டமாக மாற்றி, இந்தத் தாய் நாட்டை வணங்குகின்ற, ‘தாயை வணங்குவோம்’ எனும் கோஷத்துடன் வந்தே மாதரம் எனும் சக்திமிகு மந்திரமாய் உருப்பெற்றது.
1896 செப்.28ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் டாகுரால் பாடப்பட்ட பின்னர் 1905ல் கவிஞர் சரளா தேவி சௌதுராணி பனாரஸ் காங்கிரஸ் அமர்வில் தேசியப் பாடலாக இதனைப் பாடினார். லாகூரிலிருந்து, லாலா லஜ்பத் ராய் வந்தே மாதரம் என்ற பத்திரிகையை வெளியிட்டார். 1905ல் ஹிராலால் சென் தயாரித்த முதல் அரசியல் படத்தில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது.
இந்தப் பாடல், பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பாரதத்தின் தேசியக் கொடியில் குறியீடாக வந்தேமாதரம் என்ற எழுத்துகள் சேர்க்கப்பட்டன. அதுவே இந்த மந்திரச் சொல்லின் மரியாதையை உணர்த்தும்!
“வந்தே மாதரம்” என்பது மக்கள் உள்ளங்களில் வெறும் பாடலாகப் புகவில்லை; தேசபக்தி, பக்தி மற்றும் பாரதீயர்கள் தங்கள் தாய்நாட்டுடனான வலுவான உணர்ச்சிப் பிணைப்பின் சக்திவாய்ந்த வெளிப்பாடாக இதனைக் கண்டனர்.
இந்தப் பாடலின் வரிகள் தாய்நாட்டுக்கு அஞ்சலி செலுத்துகின்றன. பாரதத்தை தெய்வீகத் தாயின் உருவமாகச் சித்திரித்து, அதன் அழகு, வலிமை, கம்பீரத்தை மகிமைப்படுத்தின. தொடக்கத்தில் டாகுரால் இசையமைக்கப்பட்டு, மக்களின் உணர்வுகளைப் பேசும் ஒரு மெல்லிசையாக வலம் வந்தது. பின் பல வகைகளாகவும் விளக்கங்களாகவும் பரிணமித்து, இறுதியில் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்கு எதிரான எதிர்ப்புணர்வின் அடையாளமாக மாறியது.
பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜனவரி 24, 1950 அன்று, நாட்டில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய வந்தே மாதரம் பாடலை ஜன கண மன பாடலுடன் சமமாக மதிக்க வேண்டும் என்றும், அதற்கு சமமான அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் அரசியலமைப்புச் சபையில் ஒரு பிரகடனத்தை முன்வைத்தார். எனவே தேசியவாதத்தின் சக்திவாய்ந்த அடையாளமாக மாறிய இந்தப் பாடல், அன்று இந்திய அரசியலமைப்பு சபையால் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டு, தேசிய கீதத்துடன் சமமான அந்தஸ்தைப் பகிர்ந்து கொண்டது.
வந்தேமாதர கீதத்தின் சுருக்கப்பட்ட பல்லவி இன்றும் காலை வேளைகளில் வானொலியில் இசைக்கக் கேட்கலாம். இன்றும், தேசிய நிகழ்வுகளில், வந்தே மாதர கீதம், நம் கலாச்சாரம் மற்றும் தேசிய வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையில் தொடர்ந்து பாடப்படுகிறது. சுதந்திர தினம், குடியரசு தின விழாக்கள், அரசு விழாக்கள், பள்ளிக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் உட்பட தேசிய நிகழ்வுகளில் இசைக்கப்படுகிறது. மகாகவி பாரதி வந்தேமாதர கீதத்தின் தமிழாக்கமாக இரு வடிவங்களை அளித்தார். இதன் பெருமையை இந்த 150ம் ஆண்டில் மேலும் வளர்க்கச் செய்வோம்!





