spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைகலவரத்தைத் தூண்டும் ரத யாத்திரை அரசியல்; 'ஓவர் ஆக்ட்' அன்சாரியின் 'வைரலான குரல்'?

கலவரத்தைத் தூண்டும் ரத யாத்திரை அரசியல்; ‘ஓவர் ஆக்ட்’ அன்சாரியின் ‘வைரலான குரல்’?

- Advertisement -

ஐந்து மாநிலங்களில் எந்தப் பிரச்னையும் இன்றி அமைதியாகச் சென்று கொண்டிருந்த ராம ராஜ்ய ரத யாத்திரையை, தமிழகத்தில் பிரச்னையாக்கி கடந்த இரு தினங்களாக தமிழகத்தை கொந்தளிப்புக்கு உள்ளாக்கியிருப்பவர்கள் யார் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. ஓவர் ஆக்ட் செய்து அனைத்தையும் காட்டிக் கொடுத்துவிட்டார், பிரச்னையின் காரணியாகத் திகழும் தமிமுன் அன்சாரி என்கிறார்கள், சட்டசபையில் தமிமுன் அன்சாரியின் ஆட்டத்தை நேற்று டிவி., செய்திகளில் பார்த்தவர்கள்!

வெகு சாதாரணமாக, வியாழக்கிழமை தோறும் தெருக்களில் டேப் ரிக்கார்டரில் பாடலை ஒலிபரப்பிக் கொண்டு, சாய்பாபா படத்தை வைத்தபடி மூன்று சக்கர வண்டிகளில் போகிறவர்களைக் கண்டு நாம் என்ன செய்வோமோ அப்படித்தான் இந்த ரத யாத்திரை வெகு சாதாரணமாக வந்து கொண்டிருந்தது.

கேரள கர்நாடக மாநிலங்களில் உள்ளூர் ஆன்மிக அன்பர்கள் வெகு சிலரே இதில் வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்த அந்த ஊர்களில் உள்ள சாதுக்கள் சன்யாசிகள் வந்து பூஜை செய்திருக்கிறார்கள்.

மற்றபடி பெரிய அளவில் இதனை எவரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவோ, தடபுடல் வரவேற்பு கொடுத்து கொண்டாடவே இல்லை. இதனை இந்த இயக்கத்தின் இணையதளமான https://www.ramarajyarathayatra.com/ இல் காணலாம். மேலும் இதன் பேஸ்புக் பக்கத்திலும் https://www.facebook.com/ramarajyarathayatra/ அந்த அந்த ஊர்களில் உள்ள வீடியோக்களை பகிர்ந்திருக்கிறார்கள். அவற்றைப் பார்த்தாலே இதன் உண்மை நிலவரம் நமக்குப் புரியும்!

இந்த ரத யாத்திரையும் கூட ராமதாச சொசைடி எனும் தனியார் அமைப்பு மூலம், வருடந்தோறும் நடத்திக் கொண்டிருக்கும் யாத்திரை. பார்க்கப் போனால், வட இந்திய லாரியின் முகப்பில் அலங்காரம் செய்து, அதையே ரதம் போல் மாற்றி ஊர் ஊராகச் சென்று கொண்டிருக்கிறார்கள். இதற்கும் விஎச்பி., ஆர்.எஸ்.எஸ்., பாஜக., போன்ற அமைப்புகளுக்கும் கட்சிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற போதும், ஆன்மிக அமைப்பு என்ற காரணத்தால், எல்லா சமூக நல ஹிந்து இயக்கங்களுக்கும் அளிக்கும் ஆதரவைப் போல் இதற்கும் தங்கள் தார்மீக ஆதரவைத் தந்திருக்கிறார்கள். ஆனால், இதனை நடத்துவது ராமதாச யுனிவர்சல் என்ற தனிப்பட்ட அமைப்புதான்! விரிவான தகவல்களுக்கு இந்த செய்திக் கட்டுரையில் காண்க… ராம ராஜ்ய ரத யாத்திரையின் பின்னணி என்ன? ஏன் இவ்வளவு சர்ச்சை ஆனது? 

இத்தகைய பின்னணியில், தமிழகத்தில் பெரிய அளவுக்கு எவருக்குமே தெரியவராமல் போய் விடக் கூடிய ஒரு ரதத்தை, தேசிய அளவில் பெரிய செய்தியாக்கி, சர்வதேச அளவில் பேசப்படும் செய்தியாக்கியிருக்கிறார்கள் தமிழகத்தில் உள்ள அரசியல் வாதிகள். இதற்கு தூபம் போட்டிருக்கிறார் தமிமுன் அன்சாரி என்பது, அவரது நட்புமுறையிலான மூவர் கூட்டணியில் இருந்து தெரியவந்திருக்கிறது.

துவக்கத்தில் இந்த ரத யாத்திரைக்கு எதிராக கவன ஈர்ப்புத் தீர்மானம் போட முயன்றவர், அன்சாரியின் மூவர் கூட்டணியில் கடைசியில் இருப்பவரான கருணாஸ். இன்றைய அதிமுக.,வினரின் அரசியல் மேடைப் பேச்சுகளில் அடிக்கடி கேட்கும் வார்த்தைகளில் சொல்லப் போனால், ஜெயலலிதா போட்ட பிச்சையில் சட்டமன்றத்துக்குள் காலடி எடுத்து வைத்த கருணாஸ். அதாவது தேசியமும் தெய்வீகமும் என் இரு கண்கள் என்று சொன்ன பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை தெய்வமாகக் கருதும் தேவர் சமுதாயத்தின் ஓட்டுகளைப் பெற்று எம்எல்ஏ ஆனவர்.

இவர் இப்போது கைகோத்திருப்பது, பசும்பொன் தேவர் திருமகனார் வாழ்நாளின் நெறியெனப் போற்றி வாழ்ந்த இந்து ஆன்மிக மரபுகளை ஷிர்க் எனும் சொல்லால் அழித்துவிடத் துடித்துக் கொண்டிருக்கின்ற இஸ்லாமிய கூட்டாளிகளுடன்! தமிமுன் அன்சாரி, தனியரசு சொல்லிக் கொடுத்தபடி, ஆடிக் கொண்டிருக்கிறார் கருணாஸ். ஒருவேளை அவருக்கே தெரிந்து விட்டதோ என்னவோ, அடுத்து எப்படியும் நாம் தேர்தலில் வெற்றி பெறப் போவதில்லை என்று!

தமிழ்நாட்டின் பிரச்னைகள் பல குவிந்து கிடக்கும் போது, ஆட்சியாளர்களை சிக்கலில் மாட்டவைப்பதே எதிர்க்கட்சியின் குறிக்கோள் என்ற ரீதியில், பிரச்னை எது, தகுந்ததா தகாததா என்றெல்லாம் பார்க்காமல், கண்மூடித்தனமான எதிர்ப்பு அரசியலில் செயல்படும் மு.க.ஸ்டாலின், தன்னையறியாமல் இரையாகிவிட்டார் இவர்களின் சதி வலைப் பின்னலில்!

இத்தனை ஆண்டுகள் அரசியலில் இருந்து பண்பட்ட அரசியல் நாகரிகம், நெளிவுசுளிவுகளைக் கற்றும், தனக்கேயான அரசியலை மேற்கொள்ளாமல், அடுத்தவர் செய்யும் அரசியலுக்கு ஆடத் தொடங்கியிருக்கிறார் ஸ்டாலின். சட்டமன்றத்தில் ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு என்ற பெயரில் கருணாஸ் மூலம் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு, ஸ்டாலின் கவனத்தைக் கவர வைத்து, மறுநாள் மைக் முன்னர் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவைக்கு நடுவே ஆவேசமாக ஓடி வந்து, கையை உதறு உதறென உதறி, அன்சாரி போட்ட ஆட்டத்தைக் கண்டு, செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார் ஸ்டாலின். இதனை டிவி.,க்களின் செய்திகளில் கண்ட மக்களும் அதிர்ந்துதான் போனார்கள்.

இப்படி இஸ்லாமியக் குழுக்களின் இந்து ஆன்மிக விரோத எதிர்ப்பு அரசியலுக்கு ஒவ்வொரு கட்சிகளும் இரையாகிப் போய்க் கொண்டிருப்பது தமிழகத்தைப் பிடித்துள்ள சாபக்கேடு! காரணம், இந்து விரோத உள்நோக்க அரசியலை இஸ்லாமிய அமைப்புகள் முன்வைப்பது, தமிழர் என்ற போர்வையில்தான்! இதனைத்தான் தமிமுன் அன்சாரியின் குரல் என்று கூறப்படும் ஒரு வீடியோ பதிவு வெளிப்படுத்தியிருக்கிறது.

இன்று இணையத்தில் வைரலானது ஒரு குரல். அது தமிமுன் அன்சாரி, தனது மார்க்க ஊடகப் பிரிவினருக்கு இடும் கட்டளைகளைத் தாங்கியிருந்ததாகக் கூறப் படுகிறது.

அதில், எப்படி செய்தி போட வேண்டும் என்று பாடம் எடுக்கிறார் தமிமுன் அன்சாரி! இது அனேகமாக அனைத்து செய்தி ஊடகங்களுக்குமான கட்டளையாக இருக்காது. காரணம், அவர் சோஷியல் மீடியாவில் என்று தனது இஸ்லாமிய சமூக ஊடகத் தோழர்களுக்கு இடும் கட்டளையாகவே தோன்றுகிறது.

அதில், ஒலிக்கும் அவரது குரலாகத் தோன்றுவதில்…

“சோஷியல் மீடியாவில் இது சமுதாயத்தின் குரல், முஸ்லிம்களின் உணர்வு என்று எந்த வார்த்தையும் போடாம பாத்துக்கச் சொல்லுங்க.
எப்பிடி நீங்க கொண்டு போணும்னா…
சட்டசபையில் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய தமீமுன் அன்சாரி எமெல்யே…
சமூக நீதிக்காக ஆவேசக் குரல் எழுப்பிய தமிமுன் அன்சாரி எமெல்யே…
இப்படித்தான் வாசகங்கள் இருக்கணும்..
சமுதாயம் முஸ்லிம்னு வார்த்தை எங்கையும் வந்துடக் கூடாது… நம்ம ஊடகப் பிரிவுல சொல்லி வைங்க… அப்டியே யாராவது போட்டாலும் தனியா போய் கரெக்ட் பண்ணி போடச் சொல்லுங்க…” என்கிறார்.

இந்த ஆடியோ ஒரு பதிவாக எடுக்கப் பட்டு, இன்று சமூக ஊடகங்களில் வைரலாக வலம் வந்தது.

தமிமுன் அன்சாரி கூறுவதாகத் தெரியும் இந்தக் கட்டளையின் படி பார்த்தால்….

முஸ்லிம்களின் உணர்வு, சமுதாயத்தின் குரல் என்றெல்லாம் வெளித் தெரிந்தால், மற்றவர்களின் ஆதரவு கிடைக்காது என்றோ, அல்லது தங்களது உள்நோக்கம் வெளிப்பட்டு விடும் என்றோ நினைத்துப் பதறுவது புரிகிறது.

ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுதான், தமிழர்களின் குரலா? தமிழனுக்கும் ராமராஜ்யத்துக்கும் தொடர்பு இல்லை என்று, இஸ்லாமியர் ஒருவர் சொன்னால் அதை இந்தத் தமிழகம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? எது தமிழன் பிரச்னை, எது தமிழ்ப் பிரச்னை? யார் தமிழர் என்று தீர்மானிப்பதற்கு இவர்கள் யார்?

ரத யாத்திரையை நிறுத்துவதுதான் சமூக நீதி என்று யார் சொன்னார்கள்? அதை எவர் தீர்மானிப்பது? ரத யாத்திரையைத் தடுக்க வேண்டும் என்று சொல்வதுதான் சமூக நீதி என்று எந்தப் பாடத் திட்டத்தில் எழுதி வைத்தார்கள்?

நம்ம ஊடகப் பிரிவில் சொல்லி வைங்க என்றால், எல்லா ஊடகங்களுமே அப்படித் தானே இருக்கின்றன..! தமிமுன் அன்சாரி என்ற எம்.எல்.ஏ., இந்தப் போராட்டத்தில் ஆவேசமாக ஈடுபட்டார் என்பதை வெளிப்படுத்துவதற்காக ஊடகங்கள் அந்த செய்திக் காட்சியைக் காட்டப் போக. இப்போது அது எதிர்மறைச் சிந்தனையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருப்பது மறுக்க முடியாதது. சட்ட சபையிலும் சாலை மறியலிலும் மீண்டும் மீண்டும் தமிமுன் அன்சாரி போட்ட ஆட்டத்தைக் காட்டப் போக, அது மக்களிடம் வேறு விதமாக சென்று சேர்ந்திருப்பதை அவரே உணர்ந்திருப்பதால்தான், அதை மறைக்க முயலுகிறாரோ என்று தோன்றுகிறது!

தென்காசியில் ஜவாஹிருல்லா கைது செய்யப் பட்டார். அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னை அண்ணா சாலையில் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று சேர்ந்தனர்.

தென்காசி, கடையநல்லூர், பரமக்குடி என்று ரத யாத்திரை வந்த போது கோஷமிட்டவர்களும் அவர்கள் எழுப்பிய கோஷங்களும் என்ன என்பது ஆங்காங்கே சமூக வலைத்தளங்களில் உலவும் வீடியோக்கள் காட்டிக் கொடுக்கின்றன.

பரமக்குடியில் ரத யாத்திரையை கண்டித்து போராட்டம் நடைபெற்ற போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நுழைந்த யாத்திரையை எதிர்த்து, செங்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்… திமுக, மதிமுக, நாம் தமிழர், மமக, முஸ்லீம் லீக், மா.கம்யூ., உள்ளிட்டவை. நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ரத யாத்திரைக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதற்கு சென்னையில் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி கேட்கும் ‘நம்ம’ ஊடக ஊதுகுழல்கள், ரத யாத்திரைக்கு 144 தடை உத்தரவு கிடையாதா என்று ஏக்கத்துடன் கேட்கின்றனர்!

ஆங்காங்கே போராட்டம், மறியல், ஆர்ப்பாட்டம் என நடத்தப்பட்டதால், இந்த ராமர் ரதம், இவர்கள் வார்த்தையில் சொல்லப் போனால் படம் வெச்ச லாரி, எங்கும் நிற்காமல் வேகமாகச் செல்கிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பரமக்குடி உள்ளிட்ட இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் யார் எனப் பார்த்தால், தமுமுக, விசிக, மமக, எஸ்டிபிஐ ஆகியோர்தான்!

ஆகவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது போல, இது மதசார்பற்ற நாடு. எல்லா மதத்தினருக்கும் அவரவர் வழிபாட்டை மேற்கொள்ள உரிமை உண்டு.

ஒரு சாதாரண முஸ்லிம் நடுப் பகலில் நடு சாலையில் அல்லது பொது இடத்தில், மார்க்கக் கடமையை நிறைவேற்ற தொழுகை மேற்கொள்கிறார். அதனை எவரும் தடுப்பதில்லை. சொல்லப் போனால் அதற்கு உதவியாக ஒரு ஹிந்து செயல்படுகிறார். ரயிலில் பயணிக்கும் போது தனது இடத்தை விட்டு எழுந்து, இஸ்லாமியரின் தொழுகைக்கு தன்னாலான உதவியைச் செய்கிறார். இஸ்லாமியர் இந்துக்கள் என்பது அவரவர் வழிபாடு, மதக் கோட்பாடுகள் சார்ந்த செயல்களால்தானே வெளித் தெரிகிறது. இப்படி சமூக நல்லிணக்கம் பேணுவதை ஹிந்துக்கள் தங்கள் இயல்பாகவே பெற்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பதிலுக்குக் கிடைக்கும் மரியாதை?

உண்மையில், பிரியாணி வாங்கி உண்டு பிரியமுடன் அமைதியாக ஒருவரை ஒருவர் அரவணைத்து இருக்கும் மாநிலத்தில் மதக் கலவரத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். அது யார், எவர் என்பதை, திறனுள்ள தமிழக உளவுத் துறையும், மத்திய உளவுத் துறையும் நிச்சயம் கண்டுபிடித்து குறிப்பெடுத்து வைத்திருக்கும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe