சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை சேலம்-சென்னை விமான சேவையைத் துவக்கி வைத்தார்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும். இது மத்திய அரசின் ‘உடான்’ திட்டத்தின் கீழ் நகர்ப்புற வளர்ச்சிக்காக செயல்படுத்தப் படுவது.
இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உடான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் தமிழகத்திற்கு பல்வேறு நலன்களை நிச்சயம் செயல்படுத்தும். மாநில அரசுகள் மத்திய அரசோடு இணைந்து பணியாற்றினால்தான் மக்களுக்குத் தேவையான திட்டங்களை எளிதில் செயல்படுத்த முடியும். அந்த வகையில், தமிழகம் இணக்கமாக இருப்பதால்தான் எதைக் கேட்டாலும் அதை நிறைவேற்றித் தர பிரதமர் மோடி தயாராக இருக்கிறார்.- என்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய இந்த உண்மைச் சூழலின் பின்னணியைப் பார்த்து வருகிறோம்.
அதில், கடந்த 60 ஆண்டு கால ஆட்சிகளில் ஏன் மத்திய முதலீடுகளை தமிழகம் ஈர்க்கவில்லை, தமிழகத்துக்கு வரவேண்டிய பொதுத்துறை நிறுவனங்களின் பல திட்டங்கள், தமிழகத்தில் அமையாமல், மற்ற மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப்பட்டன, ஏன் பொதுத்துறையை இவர்கள் அன்னியர்களாகக் கருதினார்கள், குடும்ப வளர்ச்சிக்காக மாநிலத்தின் வளர்ச்சியை எப்படி கோட்டை விட்டார்கள், ஜெயலலிதாவின் திமுக., விரோதப் பாங்கு எப்படி மத்திய அரசுடனான விரோதப் பாங்காக மாறி திட்டங்களை எல்லாம் தடுத்துக் கொண்டிருந்தார் என்றெல்லாம் பார்த்தோம். இப்படியே கடந்த காலத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தால் போதுமா? இனி என்ன செய்ய வேண்டும் என்றும் யோசிக்க வேண்டுமல்லவா? இந்தக் கட்டுரையில் வருங்காலத்தில் தமிழக அரசு எப்படி செயல்படலாம் என்பது குறித்து பார்ப்போம்.
இந்த யோசனைகளும் கூட, மூத்த பத்திரிகையாளரும் இண்டஸ்ட்ரியல் எகனாமிஸ்ட் ஆங்கில இதழின் ஆசிரியருமான எஸ்.விஸ்வநாதனுடன் பேசிக் கொண்டிருந்ததில் பெறப்பட்ட விஷயங்கள்தான்! நாம் என்னதான் அரசியல் ரீதியாக திண்ணைக் கலாசாரத்தில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிப் பேசிக் கொண்டிருந்தாலும், பொதுவில் தமிழக நலன் என்று பார்க்கும் போது, சிலவற்றை விட்டுக் கொடுத்துதான் சென்றாக வேண்டும்.
நாட்டில் எங்கும் நடக்காத போராட்டங்கள் தமிழகத்தில் தலை தூக்குகின்றன. குஜராத்தில் நர்மதா சரோவர் விஷயத்தில் மேதா பட்கர் என்ற சமூகப் போராளியாக தன்னை அறிவித்துக் கொண்டவர் மேற்கொண்ட போராட்டங்களை தவிடு பொடியாக்கி, இன்று சர்தார் சரோவர் மாநிலத்தில் பெரும் பயனைத் தந்து கொண்டிருக்கிறது. அந்தப் போராட்டங்களை மாநில அரசு உறுதியாகக் கையாண்டது.
தொழில் வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்கள் சூறையாடப் படுவது நிறுத்தப் பட வேண்டும். ஆனால், அந்த ஒன்றையே காரணம் காட்டி, மாற்று ஏற்பாடுகளோ அல்லது அனுகூலமான தீர்வுக்கு வரத்தக்க சூழலையோ ஏற்படுத்தாமல், தொடர்ந்து போராட்டங்களை மட்டுமே முன்னிறுத்தி அரசியல் செய்து கொண்டிருப்பதும், அதன் பின்னே அரசியல் கட்சிகள் குளிர் காய்ந்து கொண்டிருப்பதும், தமிழக வளரும் தலைமுறைக்குச் செய்யும் மாபெரும் துரோகம் மட்டுமல்ல, இளைஞர்களை மேலும் மேலும் பின்னிழுக்கும் படுபாதகமான செயலும் கூட!
ஜெயலலிதா சென்ற ஆட்சிக் காலத்தின் கடைசிக் கட்டத்தில் ஒரு சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார். சென்னை வர்த்தக மையத்தில் 2015 செப்டம்பர் 9.10 ஆகிய தேதிகளில் தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற அந்த மாநாட்டில், ரூ.2.42 லட்சம் கோடிக்கான சர்வதேச முதலீடுகளை ஈர்த்ததாக தமிழக அரசு அறிவித்தது. அதன் பின்னர் மீண்டும் 2016ல் ஜெயலலிதாவே ஆட்சிக்கு வந்தார். அப்போது, மீண்டும் அதுபோல், உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்த வேண்டும் என்றும், வருடந்தோறும் மாநாடுகளை நடத்தலாம் என்றும் யோசனை முன்வைக்கப் பட்டது.
ஆனால், முதல் முதலீட்டாளர் மாநாட்டில் கிடைத்த பலன்கள் என்ன என்று அறிவதற்கு முன்னமே, அடுத்த ஆட்சிக் காலத்தில் பொறுப்பேற்ற ஓரிரு மாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்குச் சென்றுவிட்டார். அதன் மூலம் கோமாவில் படுத்தது தமிழக அரசும் தொழில்துறையும் மாநிலத்தின் முன்னேற்றமும்தான்!
இந்நிலையில், ஜெயலலிதா விட்டுச் சென்ற அந்த முதலீட்டாளர் மாநாட்டு விவகாரத்தை அடுத்து எடப்பாடி தலைமையில் வந்த அமைச்சரவை கையில் எடுத்துக் கொண்டது என்பது ஒரு ஆறுதல். கடந்த 2015ஐப் போல், தமிழக அரசின் சார்பில் இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் 2019 ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.
அந்த அறிவிபில் முதல் மாநாட்டில் கிடைத்த பலன்களைப் பட்டியலிட்டது. அதில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்ட முதல் மாநாட்டில், 9 நாடுகள் பங்குதாரர் நாடுகளாகப் பங்கேற்று, ரூ.2.42 லட்சம் கோடி மதிப்பிலான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் இதுவரை, ரூ.62,738 கோடி மதிப்பில் 61 நிறுவனங்களின் முதலீடுகள் பல்வேறு கட்டங்களில் செயலாக்கத்தில் உள்ளன. அதன் மூலம், 96,341 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து இரண்டாவது மாநாட்டை நடத்துவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார் என்று கூறப்பட்டது.
முதல் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலேயே பல்வேறு பணிகள் இன்னும் நடைபெறாமல் இருப்பதாகவும், அரசு கூறியவாறு போதுமான முதலீடுகள் ஈர்க்கப்படவில்லை எனவும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன. இந்நிலையில் முதல் மாநாட்டையும் விட, 2ஆவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்ட வேண்டும் என்ற முனைப்பில் தமிழக அரசு உள்ளது.
இந்தப் பின்னணியில் நமது சில எளிமையான முதலீடுகள் குறித்த யோசனைகளை அரசுக்கு முன்வைக்க வேண்டியுள்ளது. அதற்கு முன் கடந்த காலத்தையும் சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டும். அதனை அடுத்த கட்டுரையில் காண்போம்.