January 24, 2025, 6:05 AM
23.5 C
Chennai

எடப்பாடி சொன்ன ‘மத்திய அரசுடன் இணக்கம்-5’; விரோத அரசியலில் மூழ்கித் திளைத்த ஜெயலலிதா!

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை சேலம்-சென்னை விமான சேவையைத் துவக்கி வைத்தார்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும். இது மத்திய அரசின் ‘உடான்’ திட்டத்தின் கீழ் நகர்ப்புற வளர்ச்சிக்காக செயல்படுத்தப் படுவது.

இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உடான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் தமிழகத்திற்கு பல்வேறு நலன்களை நிச்சயம் செயல்படுத்தும். மாநில அரசுகள் மத்திய அரசோடு இணைந்து பணியாற்றினால்தான் மக்களுக்குத் தேவையான திட்டங்களை எளிதில் செயல்படுத்த முடியும். அந்த வகையில், தமிழகம் இணக்கமாக இருப்பதால்தான் எதைக் கேட்டாலும் அதை நிறைவேற்றித் தர பிரதமர் மோடி தயாராக இருக்கிறார்.- என்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய இந்த உண்மைச் சூழலின் பின்னணியைப் பார்த்து வருகிறோம்.

அதில், கடந்த 60 ஆண்டு கால ஆட்சிகளில் ஏன் மத்திய முதலீடுகளை தமிழகம் ஈர்க்கவில்லை, தமிழகத்துக்கு வரவேண்டிய பொதுத்துறை நிறுவனங்களின் பல திட்டங்கள், தமிழகத்தில் அமையாமல், மற்ற மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப்பட்டன, ஏன் பொதுத்துறையை இவர்கள் அன்னியர்களாகக் கருதினார்கள், குடும்ப வளர்ச்சிக்காக மாநிலத்தின் வளர்ச்சியை எப்படி கோட்டை விட்டார்கள் என்றெல்லாம் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் அரசியல் ரீதியான காழ்ப்பு உணர்வுகளால் எப்படி மாநிலத்தின் நலனை கோட்டை விட்டார்கள் என்பது குறித்துப் பார்ப்போம்.

திமுக., தன் குடும்ப நபர்களை மத்தியில் அமைச்சரவையில் நுழைத்து, குடும்ப வளத்தைப் பெருக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தியது. அதற்காக தங்களின் குடும்ப அரசியலை மறைத்து, எதிர்க்கட்சிக்கான எதிர்மறை அரசியலை முன்னிறுத்தியது. அந்தப் போக்குக்கு ஏற்ப, தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகால அசைக்க முடியாத அரசியல் சக்தியாகத் திகழ்ந்த ஜெயலலிதாவும், ஜெயலலிதாவின் நட்பு சசிகலா என்ற குடும்ப அமைப்பும் வளைந்து கொடுத்தன என்பதுதான் உண்மை. ஆனால் அதற்காக அவர்கள் மேற்கொண்டதுதான் எதிர்மறை, விரோத நிலைப்பாடு. தமிழகம் வளர்ச்சியடைய வேண்டுமானால், இந்த எதிர்மறை நிலைப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

ALSO READ:  ஃபெங்கல் புயல்: வட தமிழகத்தில் கன மழை! எச்சரிக்கை நடவடிக்கைகள்!

அஇஅதிமுக., விஷயத்தில் பிரச்னை வேறு விதமானது! தனது இரட்டை நிலைப்பாடுகளால் அது மேலும் குழம்பியது! திமுக., மீது கடும் விரோதத்தில் இருந்தார் ஜெயலலிதா. மத்திய அமைச்சரவையில் திமுக.,வினர் 15 ஆண்டுகளாக அங்கம் வகித்தனர். அவர்கள் மீதான விரோதம், மத்திய அரசின் மீதான விரோதமாகவே தெரிந்து குழப்பியது ஜெயலலிதாவுக்கு. மத்திய அமைச்சரவையை அவர் அப்படித்தான் பார்த்தார்.

திமுக., அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா போன்றவர்கள் ஏற்கெனவே மத்திய அமைச்சரவையில் இருந்துகொண்டு, மத்திய அரசுத் திட்டங்களால் வளம் கொழித்தனர். எனவே, அதே விரோத மனப்பான்மையில் மத்திய அரசுத் திட்டங்களை மறுப்பதற்கு ஜெயலலிதாவுக்கு இவையே காரணங்களாக அமைந்துவிட்டன.
விளைவு – மத்திய அரசுத் திட்டங்கள் பலவற்றை அவரால் இயன்ற அளவுக்கு சீர்குலைத்தார். சென்னை- எண்ணூர் துறைமுகத்தை இணைக்கும் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை திட்டம், எரிவாயுக் குழாய் திட்டம் ஆகியவற்றின் முதலீட்டில் கணிசமான நஷ்டமும், மாநில வருவாயில் பெரும் நஷ்டமும் ஏற்பட்டன.

இதில் மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், அதிகாரிகள் மட்டத்திலான அதிகார வர்க்கத்தின் செயல்பாடு. திறமைசாலிகளான அவர்களோ, ஜெயலலிதா எடுத்த முடிவுகளில் அமைதியாக அடிபணிந்து போனார்கள்! தங்கள் திறமைகளை எல்லாம் ஆட்சியாளர்களின் போக்குக்கு ஏற்ப அடகு வைத்து விட்டு, தாங்களும் இயன்ற அளவு லாபம் பார்க்க தலைப்பட்டு விட்டார்கள். அரசியல்வாதிகளின் அளவுக்கு ஊழல் புரிவதில் அதிகார வர்க்கமும் கில்லாடித் தனமாக செயல்பட்ட கேவலத்தை தமிழகத்தில்தான் பார்க்க முடியும். அதற்கு எல்லோருக்கும் தெரிந்த ஓர் உதாரணமாகத் திகழ்ந்தவர் ராமமோகன ராவ்.

ஜெயலலிதாவின் இத்தகைய அசைக்க முடியாத, விரோத மனப்பாங்கு நிலைக்குக் காரணம், ஒரு வலுவான வாக்கு வங்கியை ஜெயலலிதாவால் உருவாக்க முடிந்ததுதான். தலைமையை எந்த விதத்திலும் கேள்வி கேட்காத கட்சியை அவர் கொண்டிருந்தார். இத்தகைய பின்புலங்கள், மத்தியத் தலைவர்களை அலட்சியமும் அவமரியாதையும் செய்ய அவரைத் தூண்டியது. குறிப்பாக, பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங்கை அவர் மரியாதைக் குறைவாக நடத்தினார். இது பெரிதும் வருந்தத் தக்க விஷயம்!

ALSO READ:  காசி தமிழ் சங்கமம் 3.0; நீங்களும் விண்ணப்பிக்கலாமே!

மத்திய அமைச்சரவையின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தது மட்டுமல்லாமல், 2001-06 காலகட்டத்தில், மன்மோகன் சிங் மாநிலத்துக்கு வரும் நேரங்களில் அவரை வரவேற்கக் கூட விமான நிலையத்துக்குச் செல்லாமல், அதனைத் தவிர்ப்பதற்காக நகரில் அதே நேரத்தில் வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அவற்றுக்குச் சென்று விடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.

மன்மோகன் சிங்குடன் தமிழகத்தில் உள்ள மூத்த பத்திரிகையாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், தொழிலதிபர்கள் என சிலர் நட்புறவு கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர், இண்டஸ்ட்ரியல் எகனாமிஸ்ட் இதழின் வெளியீட்டாளரும் ஆசிரியருமான எஸ்.விஸ்வநாதன். மூத்த பத்திரிகையாளரான அவரிடம் அண்மையில் நான் பேசிக் கொண்டிருந்த போது, அவரது அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

அவர் சொன்னதும் இதைத்தான்…. “ நான் டாக்டர் மன்மோகன் சிங்கை அவரது ரேஸ் கோர்ஸ் சாலை அலுவலகத்தில் 2005ஆம் வருடம் நவம்பர் 19ஆம் தேதி சந்தித்தேன். அவரிடம், மேம்படுத்தப்பட்ட வேளாண் உற்பத்தி நுட்பங்களை எடுத்துச் சொல்லி, அதனைத் துவக்கி வைக்க வருமாறு அழைப்பு விடுத்தேன். என் கருத்துகளை எல்லாம் ஆர்வத்துடன் கேட்டவர், இது தமிழகத்திலா துவங்கப் படுகிறது என்று விசாரித்தார். அப்படித்தான் என்று தெரிந்ததும், அவரது அசௌகரியத்தை நான் உணர்ந்து கொண்டேன். அவர் தனக்குப் பதிலாக, தனது தனிச் செயலர் எம்.எஸ். அலுவாலியாவை இதற்காக நியமித்து, அந்த விளக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செய்தார். எம்.எஸ்.அலுவாலியாவும், சென்னை நிகழ்ச்சிகளில் மன்மோகன் சிங் கலந்து கொள்வதில், தாம் அசௌகரியத்தை உணர்கிறார் என்பதை கோடிட்டுக் காட்டினார்.” என்றார் எஸ்.விஸ்வநாதன்.

இப்படி, 2001-2006 கால கட்டத்தில் மட்டுமல்ல, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த 2011-16 காலகட்டத்தில் கூட, அவரின் இத்தகைய அணுகுமுறை தொடர்ந்தே இருந்தது. அத்தகைய நேரங்களில், எதிர்க் கட்சிகளால் ஆளப்பட்ட பெங்களுரோ அல்லது கொச்சியோ, அங்கெல்லாம் மிகப் பெரும் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக, அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் வந்தார், ஆனால் தமிழகத்துக்கு வரவில்லை என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்!

ALSO READ:  அரசியல் சட்ட மேதை - பி.என். ராவ்... புகழ்பெறாத மாமனிதர்!

ஜெயலலிதாவின் இத்தகைய அணுகுமுறை எந்த நம்பிக்கையில் பிறந்தது என்றால், தில்லியில் ஆட்சியில் உள்ள தேசியக் கட்சிகளை மிரட்டி தங்கள் தனிப்பட்ட காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் மாநிலக் கட்சித் தலைவர்களின் அரசியலைப் பார்த்துதான்! அந்த அரசியலில் முன்னோடியாகத் திகழ்ந்தது, திமுக.

மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக., அமைச்சர்களின் செயல்பாடுகளையும், மத்திய அரசு செயல்பட வேண்டுமானால் தங்கள் தயவு தேவைப்படும் என்ற நிலையில் அக்கட்சி மேற்கொண்ட பிளாக் மெயில் உத்தியையும், திமுக., வின் நெருக்குதல்களையும் ஜெயலலிதா நன்றாகவே புரிந்து வைத்திருந்தார். இடையில், தமிழர்களுக்காகவே தாங்கள் இருப்பதாகக் கூறி, ஈழத்தில் போர் நடக்கக் காரணமாக அமைந்து, மத்திய அமைச்சரவையில் ஊழல்களின் பின்னே ஒளிந்து கொண்டிருந்த தங்கள் கட்சியின் நபர்களைக் காப்பதற்காக சோனியாவிடம் தில்லிக்கே சென்று மு.கருணாநிதி அடிபணிந்ததையும் ஜெயலலிதா கண்டு வந்தார்.

அதற்கு முன்னரும், மத்திய அரசுடனான மோதல் போக்கை அவர் தீவிரமாக மேற்கொண்டார். இருப்பினும் ஒரு கட்டத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைக்க வேண்டிய ஒரு நிலை வந்த போது, விழுப்புரம் கூட்டத்தில் சோனியாவைத் தவிர்த்து அசிங்கப்படுத்தியதையும் தமிழகம் கண்டது.

ஆனால், 2014ல் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான மோடி பிரதமராகி, பாஜக., தலைமையில் நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை பலம் கொண்ட ஆட்சியாக அமைந்த போதும் கூட, துரதிருஷ்டவசமாக ஜெயலலிதாவின் இத்தகைய அணுகுமுறை மாறவில்லை என்பதைத்தான் அவருடைய பல கடிதங்களும் செயல்பாடுகளும், மத்திய அரசின் சார்பில் நடத்தப்பட்ட கூட்டங்களில் அவர் பேசியவையும், மேலும் கூட்டங்களில் தான் கலந்து கொள்ளாமல் தனது உரையை மட்டும் கொடுத்துவிட்டு வேறு அமைச்சர்களைக் கலந்து கொள்ளச் செய்ததுமான நிகழ்வுகள் எல்லாம்!

அடுத்த கட்டுரையில், தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்க ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டின் விளைவுகளைப் பார்ப்போம்…

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week