29-05-2023 7:39 AM
More

  Shut up. Shall We?

  A Centenary Plus, Retold 

  Homeகட்டுரைகள்எடப்பாடி சொன்ன ‘மத்திய அரசுடன் இணக்கம்-8’; மாநில வளர்ச்சிக்கு முதல்வர் இனி என்ன செய்ய வேண்டும்?
  spot_img

  சினிமா...

  Featured Articles

  To Read in Indian languages…

  எடப்பாடி சொன்ன ‘மத்திய அரசுடன் இணக்கம்-8’; மாநில வளர்ச்சிக்கு முதல்வர் இனி என்ன செய்ய வேண்டும்?


  சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை சேலம்-சென்னை விமான சேவையைத் துவக்கி வைத்தார்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும். இது மத்திய அரசின் ‘உடான்’ திட்டத்தின் கீழ் நகர்ப்புற வளர்ச்சிக்காக செயல்படுத்தப் படுவது.

  இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உடான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் தமிழகத்திற்கு பல்வேறு நலன்களை நிச்சயம் செயல்படுத்தும். மாநில அரசுகள் மத்திய அரசோடு இணைந்து பணியாற்றினால்தான் மக்களுக்குத் தேவையான திட்டங்களை எளிதில் செயல்படுத்த முடியும். அந்த வகையில், தமிழகம் இணக்கமாக இருப்பதால்தான் எதைக் கேட்டாலும் அதை நிறைவேற்றித் தர பிரதமர் மோடி தயாராக இருக்கிறார்.- என்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய இந்த உண்மைச் சூழலின் பின்னணியைப் பார்த்து வருகிறோம்.

  முந்தைய 7 கட்டுரைகளில்,கடந்த 60 ஆண்டு கால ஆட்சிகளில் ஏன் மத்திய முதலீடுகளை தமிழகம் ஈர்க்கவில்லை, தமிழகத்துக்கு வரவேண்டிய பொதுத்துறை நிறுவனங்களின் பல திட்டங்கள், தமிழகத்தில் அமையாமல், மற்ற மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப்பட்டன, ஏன் பொதுத்துறையை இவர்கள் அன்னியர்களாகக் கருதினார்கள், குடும்ப வளர்ச்சிக்காக மாநிலத்தின் வளர்ச்சியை எப்படி கோட்டை விட்டார்கள், ஜெயலலிதாவின் திமுக., விரோதப் பாங்கு எப்படி மத்திய அரசுடனான விரோதப் பாங்காக மாறி திட்டங்களை எல்லாம் தடுத்துக் கொண்டிருந்தார் என்றெல்லாம் பார்த்தோம். இப்படியே கடந்த காலத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தால் போதுமா? இனி என்ன செய்ய வேண்டும் என்றும் யோசிக்க வேண்டுமல்லவா? இந்தக் கட்டுரையில் வருங்காலத்தில் தமிழக அரசு எப்படி செயல்படலாம் என்பது குறித்து பார்ப்போம்.

  மத்திய பொதுத்துறை முதலீட்டை ஊக்குவிக்க என்ன செய்ய வேண்டும்?

  ஒரு காலத்தில் தனியார் துறை முதலீடுகள் மிகச் சிறிய அளவில் அமையும் போது, மத்திய அரசு பொதுத் துறை மூலம், அத்தகைய முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலைக்கு தூண்டப் படுகிறது. மாநிலத் தலைமை, அதன் தற்போதைய நெருக்கமான உறவுகளைக் கொண்டு, அத்தகைய முதலீடுகளைக் கவர்ந்து வென்றெடுக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

  தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா ஆகியவை பிஎச்ஈஎல்.,லை முன்னிறுத்தி, மிகப் பெரும் திறன் கொண்ட அனல் மின் நிலையங்களை இம்மாநிலங்களில் நிர்மாணித்துக் கொள்ள முடியும். பிரமாண்டமான அளவில், எரிவாயு அடிப்படையிலான தொழில்சாலைகளில் முதலீடுகளுக்கான வாய்ப்புகளைப் பார்த்தால், கொச்சியையும் பெங்களூருவையும் இணைக்கும் வகையில் மேற்கு தமிழகப் பகுதியின் வழியே கொண்டு செல்லப்பட்ட எரிவாயுக் குழாய்க் கட்டமைப்பை மீட்டெடுக்க வேண்டும்.

  அதன் தொடர்ச்சியாக கேஜி பேசினில் எரிவாயு உற்பத்தியின் பகிர்தலை உறுதி செய்வதுடன், காகிநாடாவுக்கும் சென்னைக்கும் இடையேயும், பெங்களூரில் இருந்து சென்னைக்கும் பின் தூத்துக்குடிக்குமான எரிவாயு குழாய் கட்டமைப்பை எந்த அளவில் முதலில் திட்டமிட்டார்களோ அதே வகையில் நிறைவேற்றவும் வேண்டும்.

  அதற்கு தமிழக அரசுக்கு தில்லியில் வலுவான பொருளாதாரத் தொடர்புகளை வளர்த்தல் அவசியமான ஒன்றாகிறது.

  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைப் போல், தில்லியில் ஒரு சிறந்த நெட்வொர்க்கை ஏற்படுத்தி வலுவான தொடர்புகளைக் கொண்டிருப்பதைப் போல், தமிழக முதல்வர் பழனிசாமியும் ‘நெட்வொர்க்’கை பலப்படுத்துவதுடன், ’லாபி’ செய்யும் கலையைக் கடைப்பிடிக்க வேண்டும். இது, அவருக்கு மட்டுமானது அல்ல, தில்லியில் பணியிலிருக்கும் தமிழக அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பிக்கள், வர்த்தகத் தலைவர்கள் என பலருக்கும் இது பொருந்தும்.

  தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுடைய பிரதிநிதிகள், தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்களே தவிர, தில்லியில் உள்ள தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை. அதற்கான திறன்களையும் வளர்த்துக் கொள்வதில்லை.

  அணுக இயலாத நிலையில் செயல்பட்ட அதிமுக., பொதுச் செயலராக இருந்த ஜெயலலிதா ஒரு இரும்புத்திரையுடன் செயல்பட்டார். மத்திய தலைவர்களுடன் அவர் அவ்வளவாக நல்லுறவு கொண்டிருக்கவில்லை. மத்திய அமைச்சர்களை மிக மிக அரிதாகவே சந்தித்துப் பேசினார். தில்லிக்கும் கூட அரிதாகவே பயணப் பட்டார். தேசியப் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த கூட்டங்களுக்குக் கூட மோதல் போக்குடன் கூடிய அணுகுமுறையுடன்தான் அவர் சென்று வந்தார்.

  மாநில தலைமை நல்ல தலைமைப் பண்பும் சிந்தனைத் திறனும் கூடிய ஒரு வலுவான சிந்தனையாளர் குழுவை உருவாக்குவது நல்லது. அந்தக் குழு, மாநில வளர்ச்சிப் பணிகளில் காணப்படும் சிக்கல்களுக்கு ஆலோசனை வழங்குவதில் குறியாய் இருக்க வேண்டும்.

  பொருளாதார வளர்ச்சி என்பது குறித்த அக்கறை எதையும் கொண்டிருக்காமல், வெறும் வாக்குகளைக் கவரக் கூடிய வகையிலான கவர்ச்சிகரமான தலைவர்களை முன்னிறுத்தும் போக்கிலும் இத்தகைய அணுகுமுறையிலும் ஒரு மாற்றம் காணப்பட வேண்டும். அண்மைக் காலத்தில் நாடு முழுதும் நடந்த தேர்தல்கள் ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. அது, மத்திய மாநில அரசுகள் காட்டும் வளர்ச்சி, செயல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில்தான் மத்திய மாநிலங்களில் அரசுகள் தேர்தல்களில் வெற்றிகளை ஈட்டியுள்ளன என்பதே!

  வடகிழக்கும் இப்போது மாறிவிட்டது. அண்மைத் திரிபுரா தேர்தல்கள் நமக்குக் காட்டும் பாடமும் இதுதான்! முதல்வர் என்பவர் மட்டும் எளிமையானவர் என்பதாக இருந்தால் போதாது, மாநிலத்தில் செழிப்பும் செழுமையும் இல்லாவிட்டால், மக்கள் அந்த ஆட்சியைத் தூக்கி எறிவார்கள்.

  இப்படி, கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரு வித்தியாசமான அணுகுமுறையை அரசியல்வாதிகள் கொண்டிருக்கிறார்கள். அது, வாக்கு வங்கியின் அடிப்படையில், பெரும்பாலான மக்களை ஈர்க்கும் வகையில், இலவசங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், மானியங்களை முன்னிலைப்படுத்தியும் வந்ததுதான்! இவற்றில் பெரும்பாலானவை, மிகவும் தகுதியற்ற பிரிவினருக்குத்தான் சென்று சேர்ந்தன. எடுத்துக்காட்டாக, பொது விநியோகத் திட்டம், மானிய விலையில் வழங்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் இவற்றைச் சொல்லலாம்!

  மாநிலத்தின் நிதி நிலை சொல்லிக் கொள்ளும்படி அவ்வளவு சிறப்பாக இல்லைதான்! மது விற்பனையின் மூலமான வருவாய் சுருங்கிப் போய், பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. மாநிலத்தின் வருவாயில் பெரும்பகுதியை விழுங்கிக் கொண்டிருப்பது, அரசுப் பணியாளர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம், இதர படிகள், மானியங்கள், கடன் சுமைக்கு ஈடு செய்வது ஆகியவை. இவற்றை சமாளிப்பதற்கான நிதி வருவாய் குறைந்து கொண்டே வரும் நிலையில், தமிழகம் ஒரு வழியைக் கண்டறிந்தாக வேண்டும்.

  இது நிலையானதும் அல்ல! நிதி ஆதாரங்களைப் பெருக்குவதற்கும், வருவாயை அதிகரிக்கச் செய்வதற்கும், வளர்ச்சியில் கவனம் செலுத்தும் ஒரு மகத்தான பொருளாதார அணுகுமுறை கட்டாயமாகிறது. இதற்காக, மாநில அரசு நிச்சயமாக மத்திய அரசுடன் தனது உறவை பலப்படுத்தி, அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்குரிய பணிகளைச் செய்வது மிகவும் நல்லது.

  ஆந்திர மாநில அரசியல் பின்னணியில், தற்போதைய தேவைகள் வேறாகத் தெரிவதால், சந்திரபாபு நாயுடு மாநிலத்தின் வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறை காட்ட வில்லை என்று குற்றம் சாட்டி கூட்டணியில் இருந்து கழன்று கொண்டார். ஆனால், அவருக்கான தேவை என்ன என்பது அவருக்குத் தெரியும். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதன் மூலம் தமிழகத்துக்கு மிகப் பெரும் பாதகம் ஏற்படப் போகிறது என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர்ந்திருப்பது போல், தமிழக அரசியல் வாதிகளும் உணரத் தலைப்பட வேண்டும்.

  நமக்கு நம் மாநில வளமும் நலமும் முதலில் முக்கியம். எனவே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இப்போது முதல் முறையாக, மத்திய அரசுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்ற வாதத்தை சட்டமன்றத்தில் வைத்தாலும் கூட, அதை அரசியல் காரணங்களுக்காக என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு, மத்திய அரசுடன் இணக்கமாக நடந்து கொண்டால் மாநிலத்துக்கு நல்லது என்ற அவரது மாநிலத்தின் நலன் சார் நோக்கத்தில் குறைகாணாமல் ஆதரவளிக்க வேண்டியது தமிழர்களின் கடமை. தமிழக இளைஞர்கள் தொலைநோக்குப் பார்வையில் சிந்திக்க வேண்டும் என்பதை மட்டும் நாம் இங்கே பதிவு செய்கிறோம்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  three + 20 =

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  Follow us on Social Media

  19,024FansLike
  389FollowersFollow
  83FollowersFollow
  0FollowersFollow
  4,749FollowersFollow
  17,300SubscribersSubscribe

  ஆன்மிக