
சென்ற ஆண்டு குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது குஜராத்தில் மக்கள் நலப் பணிகள் நடப்பதைச் சொல்லிக் காலம் தாழ்த்தியது தேர்தல் ஆணையம்.
அது போல கர்நாடகத் தேர்தல் அட்டவணையையும் சற்றுக் காலம் தள்ளிப் போட்டிருக்கலாம்.
ஏன் என்றால் அங்கு புதிய சட்டமன்றம் அமைக்க மே 30 வரை அவகாசம் இருக்கிறது.
மார்ச் 30 என்ற சுப்ரீம்கோர்ட் காலக்கெடு முடிவடைய மூன்று தினங்களே இருந்தபோது கர்நாடகத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது.
இடைப்பட்ட நாற்பது தினங்களிலும் “இதோ-அதோ” என்று போக்குக் காட்டிக் கொண்டே இருந்தது புது டெல்லி.
சுப்ரீம்கோர்ட் உத்தரவை அமல்படுத்த ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை.
இப்போது “ஸ்கீம்” என்று தீர்ப்பில் இருந்த ஒற்றை வார்த்தையைப் பயன்படுத்தி மாய்மாலம் செய்கிறது மத்திய அரசு. அதற்கு விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட் போகிறது.
“ஸ்கீம்” என்பதற்கும் காவிரி மேலாண்மை வாரியத்திற்கும் எந்த வேறுபாடும் கிடையாது.
அணைகளைத் திறக்கும் அதிகாரம் பெற்ற அமைப்பே மேலாண்மை வாரியம்.
அந்த அதிகாரம் இல்லை என்றால் பற்றாக்குறை காலத்தில் கர்நாடகா அணைகளைத் திறக்காது.
இதுவே கடந்த கால அனுபவம். எனவே தான் நாம் அதை வற்புறுத்துகிறோம்.
நதி நீர்த் தாவா சட்டத்தின் 6A. ஷரத்து அதைத் தெளிவாகச் சொல்கிறது.
6A. Power to make schemes to implement decision of Tribunal.—(1) Without prejudice to the provisions of section 6, the Central Government may, by notification in the Official Gazette, frame a scheme or schemes whereby provision may be made for all matters necessary to give effect to the decision of a Tribunal.
அதாவது “நடுவர் மன்றத்தின் முடிவைச் செயல்படுத்தக்கூடிய ஒரு அமைப்பு அல்லது செயல்திட்டம்” என்பதே “ஸ்கீம்”.
ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் மேலாண்மை வாரியம் எப்படி அமைக்கப்படவேண்டும் என்று தெளிவாகக் கூறி விட்டது.
எனவே அணைகளைத் திறக்கும் அதிகாரம் பெற்ற ஒரு ஏற்பாடு தான் வறட்சிக் காலத்தில் தமிழகத்தின் பங்கைப் பெற்றுத் தரும். ..
இத்தகைய செயல்திட்டத்தை இறுதி செய்வதில் மத்திய அரசிற்கு தன்னிச்சையான அதிகாரம் கிடையாது என்றே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு (பக்கம் 463 பத்தி xix) தெளிவாக்கிவிட்ட பிறகு மத்திய அரசின் துறைகள் ஏன் குழப்புகின்றன?
கர்நாடகத் தேர்தலைத் தவிர வேறு காரணமே கிடையாது.
அதற்கான அட்டவணையை முன் கூட்டியே அறிவித்து அரசியல் சதுரங்கம் ஆடுகிறது புது டெல்லி.
இனி கர்நாடகாவில் புதிய அரசு அமைந்த பிறகு மறுபடியும் முதலில் இருந்து துவங்குவார்கள்.
தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டாலும் ஒரு புண்ணியமும் கிடையாது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடகத் தேர்தல் நடத்தை விதிகள் தடையாக இருக்காது என்ற தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்தாலும், பூர்வாங்கப் பணிகளில் ஈடுபடவேண்டிய கர்நாடக அதிகாரிகள் புதிய அரசு அமையும் வரை காத்திருப்பார்கள்.
மத்திய அரசே ஏதாவது கண்துடைப்பு அமைப்பை நிறுவினாலும் அது வெற்றுக் காகிதமாகத் தான் இருக்கும்.
பொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின், பூவிரி புதுநீர்க் காவிரி
என்று சங்கத் தமிழ்ப் பாடல் காவிரியை வர்ணிக்கிறது.
மணலோடு தங்கத் தாது இருந்த காரணத்தால் “பொன்னி” என்று அழைக்கப்பட்டாள் காவிரி மங்கை.
இனி அது கற்பனையில் மட்டுமே சாத்தியம்.
காவிரியில் கர்நாடகம் நீர் விடவில்லை என்றால் அது விவசாயிகளின் பிரச்னை மட்டுமல்ல. தமிழகத்தின் சுமார் 12 மாவட்டங்களின் குடிநீர்ப் பிரச்னையும் கூட.
ஏற்கனவே காவிரிப் படுகையின் பல மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீரைப் பாழ்படுத்தி விட்டது.
எனவே இப்போது தமிழகம் கிளர்ந்து எழவில்லை என்றால் இனி எந்நாளும் தாழ்வு தான்.
கருத்து: பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்



