பாஜக தமிழகத்தைக் கைவிடவோ, புறக்கணிக்கவோ செய்யவில்லை.
தமிழகம் தற்போது தன் கட்டுப்பாட்டில் இருப்பதாக தவறாக நினைக்கிறது. அல்லது அப்படி நினைக்கும்படி நம்பவைத்துக் கழுத்தறுக்கிறார்கள். ஊழல் வழக்கு, ஜெயலலிதாவின் மரணம் என்ற நெருக்கடிகளில் சிக்கிய சின்னம்மா கும்பல் பாஜகவிடம் மீட்கச் சொல்லித் தூதனுப்பியது. பா.ஜ.க. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு நமக்கு தோதான நபரை முதலமைச்சராக்கி தமிழகத்தில் காலூன்றலாம் என்று நினைத்தது. இப்போதுவரை தனக்கு சாதகமான விஷயங்களே நடந்துவருவதாக நம்பிக் கொண்டும் இருக்கிறது.
ஆனால், பாஜகவிடம் தூதனுப்பிய கையோடு காங்கிரஸிடமும் சின்னம்மா கும்பல் உதவி கேட்டது. காங்கிரஸ் தெளிவாக, புத்திசாலித்தனமாகத் திட்டம் தீட்டிக் கொடுத்தது. பாஜகவுக்கு வளைந்து கொடுப்பதுபோல் பன்னீர், எடப்பாடி போன்ற விசுவாசிகளை அனுப்பிவையுங்கள். நான்காண்டு காலம் பின்னிருந்து ஆட்சி செய்து தமிழகத்தில் கால் ஊன்றலாம் என்று ஒரு போலி நம்பிக்கையை பாஜகவுக்குக் கொடுத்துவிட்டு மிக சாதுரியமாக அதன் காலை உடைத்துப் போடுங்கள் என்று சொல்லிக் கொடுத்தது.
ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் பாஜகவைவிட வருமான வரித்துறையையும் நீதித்துறையையும் ஊடகங்களையும் கையில் வைத்திருக்கும் காங்கிரஸின் பக்கம் போனாலே தலை தப்ப முடியும் என்பது சின்னம்மா கும்பலுக்குப் புரிந்ததால் பாஜகவுக்கு நண்பன் போலவும் (பன்னீர், எடப்பாடியை அனுப்பிவைத்து) காங்கிரஸுடன் தொடர்பே இல்லாதது போலவும் நாடகமாடிவருகிறார்கள். எந்த நான்காண்டை நற்பெயரைச் சம்பாதிக்கப் பயன்படுத்தலாம் என்று பாஜக நம்பியதோ அதே நான்காண்டுகளில் அதுவரை இருந்த சொற்ப நற்பெயரையும் அழித்துவிடும் வேலையில் காங்கிரஸ் 200 சதவிகிதத்துக்கும் மேல் வெற்றிபெற்றுவிட்டிருக்கிறது. போதாக்குறையாக, மோதி எதிர்ப்பு என்பதை இந்து மத, இந்திய தேசிய எதிர்ப்பாகவும் ஆக்கிவருகிறது.
இதில் வேதனையான இன்னொரு வேடிக்கை என்னவென்றால், தமிழகத்துக்கான ஸ்கெட்ச் ஒன்றைப் போட்டு பாஜக தமிழகத்தில் யாரிடம் பொறுப்பை ஒப்படைத்ததோ அவருக்கான ஸ்கெட்சை காங்கிரஸ்-சின்னம்மா கும்பல் வெகு தெளிவாக ஏற்கெனவே போட்டுவிட்டிருக்கிறது. அன்னாரும், ஊடகங்களில் பாஜகவுக்கு எவ்வளவு எதிர்ப்பு பெருகிகிறதோ அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது என்று ரிப்போர்ட் அனுப்பி வருகிறார். அதோடு, பாஜக யார் யாரையெல்லாம் களமிறக்கத் தீர்மானிக்கிறதோ அவர்கள் அனைவரையும் ஏதாவது வழியில் மிரட்டித் தன் பக்கம் திருப்புவதிலும் பாஜகவின் பக்கமே இருப்பதுபோல் நடிப்பைத் தொடரச் செய்வதிலும் முழு வெற்றி பெற்றுவிட்டிருக்கிறது.
இதைவிட வருத்தப்படவேண்டிய இன்னொரு விஷயம் : பாஜகவில் சேர்; அதற்கு எதிராகச் செயல்படு என்ற வழிகாட்டுதலுடன் நுழைந்திருக்கும் நபர்களிடம் தமிழக பாஜக சிக்கிக் கொண்டிருக்கிறது. அதனால் பாஜக பல நியாயமான போராட்டங்களைக்கூடச் செய்ய முடியாமல் தடுமாறிவருகிறது.
உண்மையில், பாஜக தமிழகத்தைக் கைவிடவில்லை. தன் கைக்குள் இருப்பதாக நினைத்து ஏமாந்து வருகிறது. கட்சியில் இருப்பவர்கள் கட்சியின் விசுவாசிகள் என்று நம்பி ஏமாந்து வருகிறது.
சாணக்கியரை மேக்ய-வில்லி வெல்லும் துரதிஷ்டவசமான தருணம்.
– பி.ஆர்.மகாதேவன், பத்திரிகையாளர்




