அடிக்கடி நான் காசி செல்வது வழக்கம். அப்படி கங்கா-காவிரி எக்ஸ்ப்ரஸில் செல்லும்போது, விஜயவாடா நிலையத்தில் வெளியே நடைமேடையில் இறங்கி, கிருஷ்ணா நதிக்கரையோரம் மலைமேல் அமர்ந்து அருள் புரியும் கனகதுர்க்கா தேவியை மானஸீகமாக வணங்கி நிற்பதும் வழக்கம்.
அப்படி ஒரு முறை இறங்கி சின்னதாய் சோம்பல் முறித்துக் கொண்டிருந்த நேரம். மெதுவாக என் அருகில் ஒரு வயதான, தர்மத்திற்காக கைகள் நீட்டும் பெண்மணி வந்து நின்று “நமஸ்காரம் ஸ்வாமி” என்றார்.
மெதுவாக பார்த்த நான் கைகளால் சட்டைப்பையை குடைந்து பார்த்தேன். சில்லறையாக இல்லை. ஒரு ஐந்து ரூபாய் நோட்டு எடுத்து அவரிடம் நீட்டினேன்.
மெதுவாக புன்னகையோடு தலையசைத்து, அதை மறுத்த அவர் “மீறு காசிகு வெள்ளுதுன்னாரா?” என்று தெலுங்கில் கேட்க, ‘அவுனம்மா’ என்றேன்.
மெதுவாக தன் இடுப்பிலிருந்த அழுக்கு மூட்டைக்குள் கையை விட்டு ஒரு கிழிந்த பணப்பையை எடுத்தார். அதில் விரலைவிட்டுத் தேடி ஐந்து ஒரு ரூபாய் நாணயங்களை மெதுவாக எண்ணி என்னிடம் நீட்டினார்.
நான் தயங்க தெலுங்கில் என்னிடம் “ஏ ஜென்மால நேனு சேஸின பாபமோ பிக்ஷ எத்தே ஈ நர ஜென்மம். இந்த ஜன்மத்த கடந்தேறி முக்தி கிடைக்கணும் இந்த சாராதாம்மாக்குன்னு எனக்காக பிரார்த்தனை செய்து கங்கைல சேர்த்துடுங்க” என்று கண்ணீரில் கண்கள் பளபளக்க என் கையில் கொடுத்துவிட்டு வணங்கி, மெதுவாக அடுத்த கம்பார்ட்மென்டின் ஜன்னலில் கைஏந்திய வண்ணம் நகர்ந்தார்.
வண்டி நகர்ந்ததை உணராமல் பேச்சற்று கனத்த இதயத்தோடு நின்றேன். உடன் வந்தவர்கள் அழைக்க ஓடி ஏறி இருக்கையில் அமர்ந்தேன். நான் நீட்டிய அந்த ஐந்து ரூபாய்த் தாளிலிலேயே அந்த ஐந்து ஒரு ரூபாய் காசுகளைப் பொதிந்து வைத்து கங்கையில் சாராதாம்மா பேர் சொல்லி பிரார்த்தனை செய்து காசுகளை தீபத்தோடு விட்டேன்.
நீட்டிய எனது கைகளின் மேல் காசுகளை வைத்த அந்த சுருங்கிய தோல் கொண்ட அவர் கைகளை என் மனக்கண்கள் மறக்கவேயில்லை. அவர் எனக்கு இட்ட பிச்சை அல்லது கட்டளையாக எடுத்துக் கொண்டேன். அவர் எண்ணம் நிறைவேறியிருக்கும்.
அந்த வாய்ப்பு இறை எனக்கிட்ட பிச்சை. !!
அனுபவம்: ஆங்கீரஸ்




