
* பாஷ்யம் எனும் இயற்பெயர் கொண்ட ஆர்யா (1907- ) இந்திய விடுதலைப் போராட்ட வீரர். 1932-ல் இன்று சென்னை தலைமைச் செயலகம் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கொடிக்கம்பத்தின் உச்சியில் ஒருவரும் அறியாமல் ஏறி, பிரிட்டிஷ் கொடியான யூனியன் ஜாக்கை இறக்கிவிட்டு, இந்திய தேசியக் கொடியை ஏற்றிய மாவீரர் பாஷ்யம் எனும் ஆர்யா. சிறந்த ஓவியர்; சிற்பி; தற்காலத்தில் புழக்கத்தில் இருக்கும் மகாகவி பாரதியாரின் படத்தினை வரைந்தவர். *
இன்று யார் யாரெல்லாமோ ‘மாவீரன்’ என்ற பட்டப் பெயரைத் தாங்கிக் கொண்டிருந்தாலும், நிஜமான, மாவீரச் செயலைப் புரிந்த ஒரு மாவீரன் நம்முடன், நம் காலத்தில் வாழ்ந்து மறைந்தார் என்பது நமக்குப் பெருமை. யார் தெரியுமா அவர்..
மன்னார்குடிக்கு அருகிலுள்ள சேரங்குளம் எனும் கிராமத்தைச் சேர்ந்த பாஷ்யம் என்ற ஆர்யா…”சுதேசமித்திரன்’” ஆசிரியராக இருந்த ஏ.ரங்கசாமி ஐயங்கார் இவரது உறவினர்.
மன்னார்குடியில் கல்வி பயின்றார். தன் 11ஆம் வயதில் பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக்கில் நடந்த படுகொைலையினால் ஆவேசம் கொண்டார். உயர்நிலைப் பள்ளிப் படிப்பை மன்னார்குடியில் முடித்தபின் திருச்சி சென்று தேசியக் கல்லூரியில் பயின்றார். அங்கு படித்த காலத்தில் இவர் படித்த நூல்கள் பாடப்புத்தகங்களைக் காட்டிலும் தேசபக்தி நூல்களே அதிகம்.
இங்கிலாந்திலிருந்து ‘சைமன்’ என்பவர் தலைமையில் ஒரு கமிஷன் இந்தியா வந்தது. சைமன் கமிஷன் திருச்சி வந்தது. அங்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம். முன் வரிசையில் தேசியக் கல்லூரி மாணவர்கள், அவர்களுக்குத் தலைமை பாஷ்யம்.இதனால் கல்லூரி திரும்பிய மாணவர்களுக்கு 2 உரூபாய் அபராதமும் தலைமை தாங்கிய பாஷ்யத்திற்கு 5 உரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பணத்தைக் கட்ட மறுத்தார் பாஷ்யம். முதல்வர் சாரநாதன் 5 உரூபாய் தானே கொடுத்து கட்டச் சொன்னதால் அபராதம் கட்டினார். ஆனால் இது தனது தேசபக்திக்கு அவமானம் எனக் கூறி கல்லூரியை விட்டு வெளியேறினார்.
தேசவிடுதலை இவரை அழைத்துக் கொண்டது. புதுச்சேரி சென்றார். அய்யலூர் ரயில்வே நிலையத்துக்கு 7 மைல் தூரமுள்ள பஞ்சந்தாங்கிப் பள்ளத்தாக்குப் பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றார். இதற்காக மகாகவி பாரதியாரின் நெருங்கிய நண்பர் முத்துக்குமாரசாமிப் பிள்ளை மூலம் துப்பாக்கிகள் வாங்கிக்கொண்டார். இங்கு புதுவை விடுதலை வீரர் வ. சுப்பையாவைச் சந்தித்தார். “யுனிவர்சிட்டி டிரைனிங் கோர்” படையில் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற பாஷ்யம் தனது நண்பர்களுக்கும் இப்பயிற்சியை அளித்தார்.
பாரதமாதா சங்கம் போன்ற சங்கத்தில் உறுப்பினராகி, காளி படத்தின் முன் ரத்தக் கையெழுத்திட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
விடுதலைப் புரட்சிக்காகப் பணம் தேவைப்பட்டது. எனவே மதுரை இம்பீரியல் வங்கியைக் கொள்ளை அடிக்கத் திட்டம் தீட்டினார். ஆனால் ராமசாமி, மாரியப்பன் என்ற இரு நண்பர்கள் அவசரப்பட்டு முயற்சியில் இறங்கி தோல்வியடைந்து காவலர்களிடம் சிக்குண்டனர். சித்திரவதைக்கு உள்ளானதில் மாரியப்பன் என்பவர் பாஷ்யத்தின் பெயரைக் காட்டிக்கொடுத்தார்.
ஆனால் பாஷ்யம் இரவோடு இரவாக தடயங்களை எல்லாம் அழித்துவிட்டு தனது அறைக்குச் சென்றார். விடிந்ததும் இவரைக் கைது செய்த காவலர்கள், இரண்டு மாதங்கள் சித்திரவதை செய்துவிட்டு இவர் மீது எந்த ஆதாரமும் இல்லையென விடுதலை செய்தனர். ஆனால் “சதிகாரக் கேடி” என்ற பட்டியலில் இவர் பெயர் சேர்க்கப்பட்டது.
1931இல் சென்னை சென்று தமையனார் வீட்டில் தங்கினார். போலீஸ் கண்காணிப்பு இருந்தும், இவர் கதர் அணிந்து கதர் துணி விற்பனை செய்தார். அந்நிய துணிகளை வாங்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அதன் பயனாய் துணிக்கடைக்காரர்கள் இவர் மீது வெற்றிலைப் பாக்கு எச்சிலை உமிழ்ந்தார்கள், சிகரெட் துண்டுகளை நெருப்புடன் வீசினார்கள். ஐஸ் ஹவுஸ் பகுதியில் கள்ளுக்கடை முன்பு மறியல் செய்த போது கடைக்காரர் பாஷ்யத்தின் தலையில் கள்ளுப்பானையைப் போட்டு உடைத்தார்.
அதுமட்டுமல்ல சென்னை ஜார்ஜ் டவுன் பகுதிகளில் அந்நிய துணிகளை விற்கும் பிரம்மாண்டமான கடைகளில் பாஷ்யமும் அவரது நண்பர்களும் துணிகள் வாங்குவது போல் சென்று ஆடைகளுக்குள் செல்லுலாய்டு பெட்டி எனப்படும் ஒரு சிறிய பெட்டியை திணித்துவிடுவார்கள். எனவே இவர்கள் வெளிவந்த சிறிது நேரம் கழித்து அக்கடைகள் அடிக்கடி தீப்பற்றி எரிந்தன. ஆனால் இதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை.
பெரிய தேசிய மூவண்ணக் கொடியொன்றை இவரே தைத்துக் கொண்டார். நடுவில் மையினால் ராட்டை வரைந்து கொண்டார். அதன் கீழ் “இன்று முதல் இந்தியா சுதந்திரம் அடைகிறது” என்று எழுதினார். ஜனவரி 25, மாலை 7 மணிக்கு கொடியைத் தன் உடைக்குள் மறைத்துக் கொண்டு, தன்னுடன் தியாகி சுப்பிரமணிய சிவாவின் மருமகன் வேணுகோபாலனைத் தன்னைப் பின் தொடரும்படி சொல்லிவிட்டுச் சென்றார்.
ஒரு திரைப்படக் கொட்டகை சென்று சினிமா பார்த்துவிட்டு நள்ளிரவு 12 மணிக்கு காவலர் உடையில் ரகசியமாக தென்புற வாயில் வழியாகக் கோட்டைக்குள் நுழைந்தார். அங்கு 140 அடி உயரமும் 3 அடி குறுக்களவும் உள்ள கம்பத்தில் ஏறினார். அப்போது சென்னைக் கலங்கரை விளக்கில் உள்ள சுழலும் விளக்கின் வெளிச்சம் இக்கம்பத்தின் மீது பட்டது. அதுபடும் நேரத்தைக் கணக்கிட்டுத் திட்டமிட்டு, ஒளி படும்போதெல்லாம், கம்பத்தின் மறுபுறம் ஒளிந்து ஏறி யூனியன் ஜாக் என்ற பிரித்தானியரின் கொடியை இறக்கிவிட்டு அதில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிவிட்டு இறங்கி ஓடி தப்பிவிட்டார்.
காலையில் இக்கொடியினைக் கண்ட கோட்டை ராணுவ வீரர்கள் பதட்டமடைந்தனர். கவர்னருக்குச் செய்தி போயிற்று. இதனைச் செய்தவரைக் கண்டுபிடிக்க போலீஸ் தலைகீழாக நின்றும் பயனில்லை. இன்று வரை அந்த செயலைச் செய்தவர் கண்டுபிடிக்கப்படவில்லை என்றுதான் அரசாங்க ஆவணங்கள் கூறுகின்றன.
பாஷ்யம் அப்போது கம்யூனிஸ்டுகளாக இருந்த அமீர்ஹைதர் கான், சி.எஸ்.சுப்பிரமணியம், புதுச்சேரி சுப்பையா ஆகியோரோடு தொடர்பு வைத்திருந்தார். இந்த நிலையில் 1942இல் ஆகஸ்ட் புரட்சி தொடங்கியது. பாஷ்யம் துப்பாக்கிகளைக் கடத்துதல், தண்டவாளங்களைத் தகர்த்தல், பாலங்களை வெடிவைத்துத் தகர்த்தல் ஆகிய புரட்சிகளில் ஈடுபட்டார்.
இவர் வரைந்த மகாகவி பாரதியின் படமே பின்நாளில் சென்னை அரசாங்கத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றளவும் வளைய வருகிறது. 1945இல் முழு நேர ஓவியரானார். “யுனைடெட் ஆர்ட்ஸ்” என்னும் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.
இவர் நீண்ட நாட்கள் வாழ்ந்து சில ஆண்டுகளுக்கு முன்புதான் காலமானார்.
வாழ்க வீரர் பாஷ்யம் எனும் ஆர்யா அய்யங்கார் புகழ்!
தகவல் : புகழ்



