மதுரை மண்ணுக்கு ஒரு மகிமை உண்டு. தலைவர்களை உருவாக்கிய மண். தலைவர்கள் உருவான மண். காந்திஜி மதுரை நோக்கி ரயிலில் வந்த போது, விவசாயிகள் கோவணம் மட்டுமே அணிந்து கொண்டிருந்த ஏழ்மை நிலை கண்டு, தன் கோட் சூட்டைத் தூக்கி எறிந்து விட்டு, அரையாடை மனிதராக மதுரையை விட்டுச் சென்றார்.
இந்த நூற்றாண்டின் இணையற்ற தலைவராக விளங்கிய முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் அப்படியே எளிய மனிதராக, அதுவும் ஒரு நாடாளுமன்ற எம்பியாக இருந்த போதே அரசுப் பேருந்தில் பயணித்தார் என்பது ஆச்சரியப்படும் செய்தி.
அரசு பேருந்தில் நின்று கொண்டே மதுரையை நோக்கி பய்ணித்த வாஜ்பாய்! மனதை நெகிழ வைக்கும் உண்மைச் சம்பவம் இது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்த தமிழக பாஜக., தலைவர்களில் ஒருவரான சுப.நாகராஜன் இவ்வாறு கூறுகிறார்…

37 ஆண்டுகளுக்கு முன் 1981 ஆம் ஆண்டு தமிழகத்தின் பல பகுதிகளில் ஹிந்து ஹரிஜனங்கள் இஸ்லாமியர்களாக பெருவாரியாக மத மாற்றம் செய்யப்பட்ட காலகட்டம். அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் கூரியூர் மதமாற்றத்தின் கேந்திரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
பல்வேறு ஹரிஜன கிராமங்களில் நடைபெற்ற ஒட்டுமொத்த மதமாற்ற நிகழ்வுகளைத் தடுக்கும் நோக்குடன் அடல் பிகாரி வாஜ்பாய் 1981 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ராமநாதபுரம் வந்தார். அவரை ஆர்.எஸ்.எஸ்., கார்யகர்த்தர்களாகிய கோவிந்தன்ஜி, கே.ஆர். கங்காதரன், எம்.ஏ. பெருமாள் ஆகியோருடன் நானும் சென்று அவரை வரவேற்றேன்.
வாஜ்பாய் அவர்களை சேதுபதி மன்னர் அரண்மனை விருந்தினர் இல்லத்தில் தங்க வைத்தோம். சங்க கார்யகர்த்தர் வீட்டில் தயாரிக்கப் பட்ட காலைச் சிற்றுண்டி அவருக்கு வழங்கப்பட்டது. அன்றைய தினமே அடல் பிகாரி வாஜ்பாயுடன் ஜனா. கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தன்ஜி, ஆர்.வி.சேஷாத்திரி ஆகியோருடன் நானும் வன்னிவயல், பேராவூர், வெல்லா உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்றோம்.
ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாகச்சென்று மக்களை “மதம் மாறவேண்டாம். நாமெல்லாம் ஒரு தாய் மக்கள் இதில் வரும் விவாதங்களைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்” என்று வாஜ்பாய் வலியுறுத்தினார். இறுதியாக கூரியூர் வந்த வாஜ்பாய் கிராம மக்களின் உற்சாகமான வரவேற்பை ஏற்றுக் கொண்டு, அனைத்து மக்களையும் சந்தித்ததோடு, மதம் மாறிய சிலரையும் சந்தித்தார்.
அவர்களது குறைகளையும் கேட்டார். பிறகு என்னைப் பார்த்து “உனது வீடு எங்கே” என்று கேட்டார். “இதே கிராமத்தில் தான் இருக்கிறது” என்று சொன்னேன்.
அதன் பின் ஜனா.கிருஷ்ணமூர்த்தியிடம் எனது வீடு ஒரு குடிசை. மாடு கட்டியிருக்கும் ஒரு கொட்டகையில் தான் நான் குடியிருந்து வருகிறேன். அங்கே அடல்ஜி அவர்களை அழைத்துச் செல்ல மனம் ஒப்பவில்லை என்று கூறி அடல்ஜியை என் வீட்டிற்கு அழைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தேன். அதை ஜனாஜி அடல்ஜியிடம் அப்படியே சொல்லி விட்டார்.
இதனைக் கேட்ட உடனேயே வாஜ்பாய் ஆச்சரியப் பார்வையுடன் என்னைப் பார்த்து, “நான் தில்லியில் இருந்து சுமார் 3000 கி.மீ கடந்து ராமநாதபுரம் வந்திருக்கிறேன். இங்கே எனது சகோதரன் வீடு இருக்கிறது. நான் அந்தச் சகோதரனுடைய வீட்டிற்கு செல்லாமல் திரும்பினால், நான் தில்லி சென்றதும் மன வேதனை அடைவதை உணர்வேன். எனவே உன்னுடைய வீடு குடிசையாக இருக்கட்டும் அல்லது கோபுரமாக இருக்கட்டும். அது எனது சகோதரன் வீடு, நான் கட்டாயம் வீட்டிற்கு வர வேண்டும்” என்று சொல்லி என்னையும் அழைத்துக் கொண்டு, எனது வீட்டிற்கு வந்துவிட்டார்.
அப்போது வந்தவர்களை அமரச் செய்ய எங்கள் வீட்டில் இருக்கைகள் இல்லை. பக்கத்து வீடுகளில் உள்ளவர்களிடம் நாற்காலிகள் இரவல் வாங்கி அவற்றை வட்ட வடிவில் போட்டு அடல்ஜியையும் உடன் வந்தவர்களையும் அமர வைத்தேன். எனது வீட்டில் எங்களது நாட்டுப் பசு மாட்டிலிருந்து கறந்த பசுவின் பாலை கற்கண்டு சேர்த்து காய்ச்சி வாஜ்பாய் அவர்களுக்கும், வந்திருந்தவர்களுக்கும் வழங்கினோம்.
அதன் பிறகு வாஜ்பாய் அவர்களோடு சேர்ந்து ஒரு வாடகைக் காரில் மதுரைக்குக் கிளம்பினோம். அவர் மதுரை ரயில் நிலையத்தில் தொடர் வண்டியைப் பிடித்து நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வேண்டிய காலம் அது.
ரயிலைப் பிடிக்க மதுரையை நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்த வாடகைக் கார் திருபுவனத்திற்கு முன்பாகவே பழுதடைந்து நின்றுவிட்டது. அது கடுமையான வெள்ளம் வந்து கொண்டிருந்த நேரம்.
அடல்ஜி எப்படியாவது மதுரை சென்று ரயிலைப் பிடித்து நாடாளுமன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள தில்லி செல்ல வேண்டியது அவசியமானதாக இருந்தது. அதை எங்களிடம் வலியுறுத்திக் கூறினார்.
அந்தக் காலகட்டத்தில், அந்த இடத்தில் எந்த வாடகை வாகனமும் கிடைக்காத சூழல்! தமிழக அரசுப் பேருந்துகள் சேரன், சோழன், பாண்டியன் என மூவேந்தர்களின் பெயர்களாலும் ஓடிக் கொண்டிருந்த காலம் அது. அந்த நேரத்தில் ராமநாதபுரத்திலிருந்து மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்த பாண்டியன் பஸ்ஸைப் பார்த்து இதோ பாண்டியன்தான் வந்து கொண்டிருக்கிறார் என்றோம்.
“முடிந்தால் பேருந்தை நிறுத்துங்கள். அதிலேயே சென்று விடுகிறேன்” என்று வாஜ்பாய் கூறினார். நாங்கள் நின்று கொண்டிருந்த இடம் பேருந்து நிறுத்தம் கூட இல்லை. இருந்தாலும், நாங்கள் கை காட்டியதை உணர்ந்து ஓட்டுநர் பேருந்தை உடனே நிறுத்தினார்.
நான் உள்ளே ஏறிய பிறகு அடல்ஜியும் மற்றவர்களும் ஏறினர். அந்தப் பேருந்தில் சுமார் 5 நிமிடங்கள் வாஜ்பாய் நின்று கொண்டே வந்தார். அப்படி அவர் நின்று கொண்டே பயணித்த காட்சி இன்றுகூட என் கண்களைக் குளமாக்குகிறது.
5 நிமிடங்களிலேயே அப்பேருந்தில் பயணித்த பயணிகளில் ஒருவர் திடீரெனத் திரும்பிப் பார்த்து, “இவர் அடல் பிகாரி வாஜ்பாய் இல்லையா” என்று கூறி வேகமாக எழுந்தார். உடனே அவருடன் அருகில் அமர்ந்திருந்த மற்ற இருவரும் சரேலென எழுந்து நின்றுகொண்டு, “நீங்கள் அமருங்கள்” என்று அவரை வற்புறுத்தி இருக்கையில் அமரச் செய்தனர்.
நான் ஓட்டுநரின் அருகில் சென்று, “இவர் அடல் பிகாரி வாஜ்பாய்” என்று சொன்னதும், “அவரைப் பார்த்ததால் தான் நானும் நிறுத்தம் இல்லாத இடத்திலும் நிறுத்தினேன்” என்றார் ஓட்டுநர்.
ஓட்டுநரிடம் நான் அவரது அவசர நிலையைச் சொல்லி முடித்தேன். தலைவர் ரயிலைப் பிடிக்க வேண்டும் என்று நான் ஓட்டுநரிடம் நிலைமையை விளக்கினேன். ஓட்டுநரும், பேருந்து நிலையத்திற்குச் செல்வதற்கு முன்னால் வேறு வழியாக ரயில் நிலையம் வந்து எங்களை இறக்கி விட்டார். அவரிடம் நன்றி தெரிவித்த போது, நான் வாஜ்பாய் அவர்களை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகப் பார்க்கவில்லை, நம் நாட்டின் வருங்கால பிரதமரை எனது பஸ்ஸில் ஏற்றி வந்ததாகவே பெருமிதம் கொள்கிறேன் என்றார் நெகிழ்ச்சியுடன்!
பஸ்ஸில் இருந்து இறங்கிய அடல்ஜி ஓட்டுநருக்கு கையை அசைத்து தனது நன்றியைத் தெரிவித்தார். ஓட்டுநர் இருக்கையில் இருந்து எழுந்து இருகை கூப்பி இது என் பாக்கியம் என்று கூறிய அந்த வார்த்தையும் கூட இன்றும் என் நினைவில் நிற்கிறது.
எனது வாழ்நாளில் ஒவ்வொரு மணித் துளியும் தேன் துளியாய் தித்தித்த மகிழ்வான நாள் ஒன்று உண்டு என்றால் அது அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் கூரியூர் விஜயம் செய்த நன்னாளே. அதுவே என் வாழ்வின் பொன்னாள்.
தகவல்: ஒரே நாடு




