ரபேல் ஒப்பந்தம் குறித்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விளக்கங்கள் – எதிர்கட்சிகளின் பொய்யுரையும் அதன் உண்மைத்தன்மையும் :
தேர்தல் நேரம் நெருங்கி கொண்டிருப்பதால், தெளிந்த நீராக சலனமின்றி இயங்கி கொண்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், ரபேல் எனும் கல் வீசி கலங்கடிக்க பார்க்கிறார் ராகுல் காந்தி. இப்போதைக்கு அதை வைத்து மட்டுமே அரசியல் செய்ய முடியும் என்ற முடிவில் உறுதியாக நின்று கொண்டு ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக தினம் தினம் புது புது சர்ச்சைகளை கிளப்பி விடுகிறார். இதனையும் ஒரு மாபெரும் செய்தியாக எடுத்துக்கொண்டு ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு வெளியிடுகின்றன. பிறகு சமூக வலைதளங்களில் ஆதாரமே இல்லாத சில வதந்திகள் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பரப்பி விடப்படுகின்றன. இதனை முதலில் பார்ப்பவர்கள் உண்மை என நம்பி தொடர்ச்சியாக பகிர்வதால், சமூக வலைதளங்கள் முழுவதும், வதந்தி நச்சு பரவி குப்பையாக கிடக்கிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக பரவி வரும் சில வதந்திகளும், அது தொடர்பான முக்கிய விளக்கமும் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது.
1. பிரதமர் மோடி ரபெல் ஒப்பந்தத்தை HAL நிறுவனத்திடம் இருந்து பறித்து அதனை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்து விட்டாரா?
நிச்சயமாக இல்லை, இது தவறான குற்றச்சாட்டு. 36 ரபேல் ஜெட் விமானங்களும் பிரான்ஸ் அரசிடம் இருந்து மட்டும் தான் வாங்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க பிரான்ஸில் தான் தயாரிக்கப்படுகிறது. இதில் ஒரு விமானம் கூட இந்தியாவில் தயாரிக்கப்படப்போவது இல்லை. அதனை ரிலையன்ஸ்சும் தயாரிக்கவில்லை, HAL நிறுவனமும் தயாரிக்கவில்லை. ஒருவேளை, அதிகப்படியான ரபேல் ஜெட் விமானங்கள் தேவைப்பட்டால், வருங்காலத்தில் இந்தியா தயாரிக்கும். ஆனால் அதற்கென்று தனி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.
2. அனில் அம்பானி 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்று விட்டாரா?
நிச்சயமாக இல்லை. 36 ரபேல் ஜெட் விமானங்களுக்காக இந்தியா 8.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிடுகிறது. டசால்ட் நிறுவனம் 50 சதவிகிதம் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்பது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. முதலில் ராகுல் காந்தி ரிலையன்சுக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர் கிடைப்பதாக குற்றச்சாட்டு முன்வைத்தார். பிறகு, ‘ரபேல் Lifecycle Contract'(சுழற்சிமுறை ஒப்பந்தத்திற்காக) 16 பில்லியன் அமெரிக்க டாலர் ரிலையன்ஸ் பெறுகிறது என்று மேலும் மிகைப்படுத்தினார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அருண் ஜெட்லி ரிலையன்ஸ் நிறுவனம் ஈடு செய்யும் முதலீட்டில் 4 பில்லியன் அமெரிக்க டாலரும் பெறவில்லை, 16 பில்லியன் அமெரிக்க டாலரும் பெறவில்லை. இது அடிப்படை ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டு என்று விளக்கமளித்தார்.
3. ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் தான் இந்தியாவில் டசால்ட் நிறுவனத்தின் ஒரே கூட்டாளியா?
நிச்சயமாக இல்லை. இந்தியாவில் ரிலையன்ஸ் மட்டுமே டசால்ட் நிறுவனத்திற்கு கூட்டாளி கிடையாது. ரிலையன்ஸ் போன்று சுமார் 72 நிறுவனங்களுடன் இதுவரையில் டசால்ட் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இவைகள் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு தயாரிப்புகளை டசால்ட் நிறுவனத்திற்கு அளிக்கும். இந்த 72 நிறுவனங்களில் ஒன்று தான் ரிலையன்ஸ் நிறுவனம். ரிலையன்ஸ் தவிர, L & T, Mahindra Group, Kalyani Group, Godrej & Boyce, Tata group இன்னும் பிற நிறுவனகளுடன் ஈடு செய்யும் முதலீட்டிற்கு டசால்ட் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதில் குறிப்பாக தமிழகத்தில் கோவையை சேர்ந்த 3 நிறுவனங்கள் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரையான உபகரணங்களை தயாரித்து வழங்க போகின்றன. அவை லட்சுமி மில்ஸ் நிறுவனம், ரூட்ஸ் நிறுவனம் மற்றும் கோவை எல் அண்ட் டீ(L & T) ஆகியவை. இவைகள் டசால்ட் நிறுவனத்திற்கு மட்டுமே தயாரிப்புகளை தர வேண்டும் என்று அவசியம் இல்லை. டசால்ட் நிறுவனத்திற்கு தயாரிக்கும் பொருட்களோடு சேர்த்து அவற்றின் சொந்த தயாரிப்புகளையும் மேற்கொள்ள முடியும்.
இதோடு சேர்த்து இன்னும் 10 நிறுவனங்களுக்கு மேல் ஒப்பந்தம் பேச டசால்ட் முயற்சித்து வருகிறது. ஜெட் விமான தயாரிப்பு என்பது மிக மிக சவாலானது. ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட விமான உதிரி பாகங்கள், மிகச்சரியான முறையில், நூற்றுக்கும் மேற்ப்பட்ட வெவ்வேறு கம்பெனிகளில் இருந்து பெறப்பட்டு கட்டமைக்கப்படும். இதற்கு உலகம் முழுவதும் உதிரி பாகங்கள் சப்பளை செய்ய நிறுவனங்கள் இருக்கும் போதிலும், ரபேல் ஒப்பந்தத்தின் படி, 50 சதவிகித முதலீடு இந்தியாவில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால், டசால்ட் நிறுவனம், இந்திய நிறுவனங்களில் இருந்தே உதிரி பாகங்களை பெற வேண்டும். இதனால், இந்தியாவில் முதலீடு அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும், நாட்டின் பெருளாதாரம் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் டசால்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிறுவனங்கள் வரிசையில், HAL உடன் கூட்டணி சேர்ந்த(Joint Venture) நிறுவனமான Snecma HAL Aerospace Ltd என்ற நிறுவனமும் இடம்பெற்று இருக்கிறது. இந்த நிறுவனத்தில் இருந்து பெறப்படும் பாகங்களை கொண்டு ரபேல் ஜெட் விமானத்தின் Snecma M88 engine தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் HAL நிறுவனம் புறக்கணிக்கப்படுகிறது என்ற கூற்று பொய்யாகியுள்ளது. ரபேல் ஜெட் விமானம் முழுக்க முழுக்க பிரான்ஸ்சில் தான் தயாரிக்கப்படுகிறது. ஒரு சில பாகங்கள் மட்டும் ஈடு செய் முதலீட்டின் படி இந்தியாவில் இருந்து சப்பளை செய்யப்படுகிறது. இதில் HAL நிறுவனமும் இடம்பெற்றுள்ளது.
4. பாதுகாப்பு மற்றும் விமான உற்பத்தியில் அனுபவமே இல்லாத ரிலையன்ஸ் நிறுவனம் ஏன் தேர்வு செய்யப்பட்டது?
Reliance Defence எனும் ரபேல் ஒப்பந்தத்தை பெற்றிருக்கும் நிறுவனம் Pipavav Defence என்ற நிறுவனத்தை ரிலையன்ஸ் குழுமம் வாங்கிய பிறகு உருவாக்கப்பட்ட நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. Pipavav Defence நிறுவனம் இதற்கு முன்னர் ராணுவ தளவாடங்கள் உற்பத்தியிலும், இந்திய கடற்படைக்கு தயாரிப்புகளை அளிப்பதிலும் அனுபவம் மிக்கது. இந்திய பாதுகாப்பு துறை சமீபத்தில் தனியாருக்கு தொழில் துறைக்கு முதலீடுகளை உருவாக்கியது. இதனை தொடர்ந்து இத்துறையில் அனுபவம் மிக்க நிறுவனங்கள் உதிரி பாகங்களை சப்பளை செய்ய அனுமதிக்கப்பட்டன. ஆனால் முழு தளவாட தயாரிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த போதே Medium Multi-Role Combat Aircraft ஏலத்தின் போது குறிப்பிடப்பட்டது.
5. அப்போது ரிலையன்ஸ் நிறுவனத்துடன் என்ன ஒப்பந்தம்?
36 ஜெட் விமானங்களும் இந்தியாவில் உருவாக்கப்படுவது இல்லை. ரிலையன்ஸ் அதை உருவாக்க போவதும் இல்லை. இன்னொரு ஆச்சர்யமான தகவல் என்னவென்றால் ரபேல் விமானத்திற்கான பாகங்களை கூட ரிலையன்ஸ் முழுவதுமாக உருவாக்க போவதில்லை. சொல்லப்போனால் டசால்ட், ரிலையன்ஸ் மற்றும் இன்னும் பிற இந்திய நிறுவனங்கள் சேர்ந்து ரபேல் விமானத்தை உருவாக்க போவதில்லை. மாறாக இவை எல்லாம் டசால்ட் நிறுவனத்தால் உருவாக்கப்படும் Falcon 2000 என்ற விமானத்திற்கான உதிரி பாகங்களையே பெரும்பாலும் தயாரிக்கின்றன. இந்தியாவில் டசால்ட் முதலீடு செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் படி, உலகம் முழுவதும் டசால்ட் நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் நெட்வொர்க்கில் இந்திய நிறுவனங்களும் இணைத்துக்கொள்ளப்பட்டன அவ்வளவு தான். மாற்றபடி, ரபேல் தயாரிப்பு முழுவதுமாக தூக்கி கொடுக்கப்படவில்லை. இதில் டாசல்ட் நிறுவனம் தான் ரிலையன்ஸ் நிறுவனத்தில் 100 மில்லியன் யூரோ முதலீடு செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, ஈடுசெய் முதலீட்டை விட 3 சதவிகிதம் குறைவாகும். இதனால் ரிலையன்ஸ் 4 பில்லியன் அமெரிக்க டாலரும் பெறவில்லை, 16 பில்லியன் அமெரிக்க டாலரும் பெறவில்லை. முதலீடு 120 மில்லியன் அமெரிக்க டாலரை விட குறைவு தான் என்பதை ராகுல் காந்தி நம்பி தான் ஆக வேண்டும்.
6. பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹொலாந்த் குற்றச்சாட்டு என்ன?
ரஃபேல் போர் விமானங்களின் உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்காக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்தது தாங்கள்தான் என்று பிரான்ஸைச் சேர்ந்த “டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. உரிய விதிகளுக்கு உட்பட்டு அதுதொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொண்டதாகவும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் தலையீடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இத்தகைய விளக்கத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், ரபேல் ஒப்பந்தத்தில் எந்தத் தவறும் நடைபெறவில்லை என்று மத்திய அரசு தெரிவித்து வரும் கூற்றுக்கு வலு சேர்க்கும் வகையிலும் இது அமைந்துள்ளது.
பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹொலாந்த், நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறு இந்தியாதான் பரிந்துரைத்தது” என்றார். தங்களுக்கு வேறு எந்த வாய்ப்பும் வழங்கப்படாததால், அந்நிறுவனத்துடன் உடன்படிக்கை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உருவானது எனவும் அவர் கூறினார். இந்த கருத்தும் அவரிடம் கேட்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட கேள்வியின் ஒரு பாக பதில் தான். இதனை திரித்து இந்திய ஊடகங்களும், எதிர்கட்சிகளும் பொய்யுரைகளை பரப்பி வருவது மிகவும் வெட்கக்கேடான செயல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இந்தக் கருத்து சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது. இதை முன்னிறுத்தி பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்தச் சூழலில், டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் சார்பில் விளக்க அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: “ரிலையன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் பாதுகாப்புத் தளவாட கொள்முதல் நடவடிக்கை விதிகள் 2016-இன் படியே மேற்கொள்ளப்பட்டது. ‘இந்தியாவில் தயாரிப்போம்'(Make In India) திட்டத்தின் கீழ் அந்நிறுவனத்துடன் சில உடன்படிக்கைகளை செய்து கொள்ள நாங்கள் திட்டமிட்டோம். ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அந்த வாய்ப்பை வழங்கியது எங்களுடைய முடிவுதான்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து கட்டுரை: எஸ்.ஜி.சூர்யா SG suryah




