புனித தாமஸ் – தோமையர் 2000 வருடங்களுக்கு முன்பாக இந்தியாவிற்கு வருகை புரிந்தார். அவர் கேரளக் கடற்கரையில் சில நாட்கள் தங்கியிருந்து கிறிஸ்துவின் மத போதனைகளைப் பரப்பினார். பிறகு அவர் சென்னைக்கு வருகை தந்து திருவள்ளுவரைச் சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டார். புனித தோமையரின் கருத்துக்களால் உந்தப்பட்டு திருவள்ளுவர் திருக்குறளைப் படைத்தார். புனித தோமையரை சென்னை வாழ் மக்கள் அய்யர் என்று அன்புடன் அழைத்தனர். சென்னையில் வசித்து வந்த ஸ்ரீவைஷ்ணவ ப்ராஹ்மணர் ஒருவர் தோமையரை ஈட்டியால் குத்திக் கொன்றார், தோமையர் உடல் தற்போதுள்ள சாந்தோம் கிறிஸ்துவ சர்ச்சில் அடக்கம் செய்யப் பட்டுள்ளது போன்ற நிகழ்ச்சிகளை சித்தரிக்கும் வகையில் திரைப்படத்தின் திரைக் கதையை அமைத்துள்ளனர்.
திருவள்ளுவர் வேடத்தில் நடிகர் ரஜினிகாந்தை நடிக்க வைக்க முயற்சிப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இந்தத் திரைப்படம் பொய் வரலாற்றைத் திணிக்கும் சதிச் செயலாகும். இத்தகைய முயற்சிகளை தமிழகத்து கிறிஸ்தவ மிஷினரிகள் தொடர்ந்து செய்து வருகின்றன. இப்போது நமது தமிழ்நாட்டின் வரலாற்றைத் திருத்தி அமைக்கும் உள்நோக்கத்துடன் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வரலாறாக நுழைக்க இவர்கள் முயற்சி செய்கின்றனர். திரைப்படம் என்பது ஒரு வலிமையான ஊடகமாகும்.
புனித தோமையர் தமிழத்திற்கு வந்தார், திருவள்ளு வரோடு சமய விவாதங்களில் ஈடுபட்டார், பழந்தமிழ் இலக்கிய ங்களான பத்துப்பாட்டு எட்டுத் தொகை ஆகியவை தாமஸ் வந்தபின் நூறு வருடங்கள் கழித்து உருவானவை, சங்க இலக்கியங்கள் அனை த்துமே கிறிஸ்தவ சிந்தனைகளை உள்ளடக்கியவை, திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூலே என்று வாதிட்டு ஐந்தவித்தான் என்பது கிறிஸ் துவையே (அவரது ஐந்து காயங்களை) குறிக்கிறது என்றும், திருக்குறளில் பொறி என்று குறிப்பிடப்படுவது சிலுவையே. திருக் குறளில் உள்ள வான் சிறப்பு பரிசுத்த ஆவியை வாழ்த்தும் அதிகாரம்.
கிறிஸ்தவத்தில் மகனாக அவதரித்த கடவுளுக்கு நான்கு குணங்கள் உள்ளன. சாத்தானை வென்றநிலை சூரனை வென்ற நிலையாக மாற்றம் செய்யப்பட்டது. இறந்து உயிர்த்தெழுந்த நிலை தலைவெட்டப்பட்ட பிள்ளையாராக ஆனது. உலகைப் படைத்த நிலை பிரம்மனாக ஆகியது. உலகின் ஒளியாக இருக்கும் நிலை மலைமீது ஒளியாகத் தெரியும் ஐயப்பனாக மாறியது. புனித தாமஸால் முன்வைக்கப்பட்ட ஆதிகிறிஸ்தவ சிந்தனைகள் இவை என்று தெரியாதபடி பிராமணர்களால் இவை புராணங்களாக ஆக்கப் பட்டன‘ போன்ற கிறிஸ்தவ ப்ரச்சார கருத்துகள் அதிக அளவில் நூல்கள் வழி பரப்பப்பட்டு வருகின்றன. இந்தக் கருத்துக்கள் தயாரிக்கப்பட உள்ள திரைப்படத்தில் இடம் பெறலாம்.
பாமர மக்களின் ஆழ்மனதில் முறையற்ற வரலாறு பதிவு செய்யப்படும் அபாயம் ஏற்பட உள்ளது. கிறிஸ்தவ மக்களின் ஓட்டுக்காகத் தமிழக வரலாற்றை அடகு வைக்க முற்படுகிறார்கள் ‘சில திராவிட‘ அரசியல்வாதிகள். அரசியல் காரணங்களுக்காக, சிறுபான்மை வாக்கு வங்கிக்கு ஆசைப்பட்டு பண்டைய தமிழர் பண்பாட்டையும், வரலாற்றையும் திருத்தலாமா? இந்தத் திரைப்படம் வெளிவந்தால் மெல்லமெல்ல இது ஒரு வலுவான உண்மையாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் நடிகர் திரு. கமலஹாசன் திருவள்ளு வரை சிலர் சமணர் என்கிறார்கள் சிலர் சைவர் என்கிறார்கள் சிலர் கிறிஸ்தவர் என்கிறார்கள்… என்றெல்லாம் பேசியுள்ளார். (1970 களில் ஆர்ச்பிஷப் அருளப்பா காலத்தில் திருவரங்கத்தை இருப் பிடமாகக் கொண்ட கணேசய்யர் என்பவரால் மோசடியாக செப்பேடு ஒன்று உருவாக்கப் பட்டு திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூல் என்று சொல்லப்பட்டது. பின்பு அது மோசடி என்று நிரூபிக்கப்பட்டது. ஆர்ச் பிஷப் மன்னிப்புக் கோரினார். இன்று அந்த செய்தி இயல்பான ஒரு வரலாற்றுச் செய்தியாக உருக்கொண்டுள்ளது. (இதுபற்றிய விரிவான செய்திகளுக்கு முந்தைய பாஞ்சஜன்யம் இதழ்களைப் பார்க்கவும்)
தமிழ்நாட்டின் தலைவிதி திரைப்பட நடிகர்களை தெய் வத்திற்கு ஒப்பாக கருதுவதும், கட்சி தொடங்கிய ஒவ்வொரு நடிகரும் முதலமைச்சராக வர ஆசைப்படுவதும் ஆகும். திரு.ரஜினி காந்த், திரு.கமலஹாசன் போன்றவர்கள் வரலாற்று உண்மைகளை கற்றறிந்த பேராசிரியர்கள் போலச் செயல்படுகின்றனர். அத்தகைய தொரு செயல் தான் கமலஹாசன் ரஜினிகாந்த் போன்றோர் செயின்ட் தாமஸ் பற்றிய திரைப்படத்தில் நடிக்க செய்யும் முயற்சி.
மேல்மருவத்தூர் என்ற கிராமம் திண்டிவனம் செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு அந்த ஊரைப்பற்றி யாருக்கும் தெரியாது. மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி என்ற பெயரில் இரண்டு மூன்று திரைப்படங்கள் திரு. ஜகதீசன் என்பவரால் தயாரிக்கப்பட்டு வெளிவந்தன. அதில் பல உதிரிக் கதைகள் சேர்க்கப்பட்டு மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மக்களை ஆபத்திலிருந்து எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைச் சித்தரிக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டன. இதன் விளைவாக இந்தக்கோயில் பிரபலமடைந்தது. இன்றைக்கு ஸமாச்ரயணம் ஆகி, பரந்யாஸம் பெற்றுக்கொண்ட ஸ்ரீவைஷ்ணவர்களும் அவர்தம் மனைவிமார்களும் இந்தக் கோயிலுக்குச் சென்று ‘அம்மாவின்‘ அருளாசியைப் பெற்றுக் கொள்வதை ஓர் பெறாப் பேறாகக் கருதி வருகின்றனர். அந்த அளவிற்கு அவர்கள் மூளைச்சலவை செய்யப் பட்டுள்ளனர்.
இதேபோன்று திருவேற்காடு கருமாரியம்மன், மாங்காடு காமாட்சியம்மன் ஆகிய கோயில்கள் திரைப்பட நடிகர், நடிகை களோடு தொடர்பு படுத்திய பிறகே பிரபலமடைந்துள்ளன. இவை எல்லாம் இந்து சமயத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளவை. ஆனால் புனிதத் தோமையர் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படம் வரலாற்றையே திசை மாறச் செய்திடும். இந்தப் படத்தில் கமலஹாசனோ ரஜினிகாந்தோ பேசும் வசனங்களைத் தெய்வ வாக்காகக் கொண்டு திசை மாறக்கூடிய மக்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தப் புனித தோமையர் என்பார் யார், அவர் உண்மையிலேயே தமிழ்நாட்டுக்கு வந்தாரா, அவர் பெயரில் ஆறு இடங்களில் கல்லறைகள் அமைந்துள்ளனவே அதற்கு என்ன காரணம், கிறிஸ்தவர்கள் இந்துக் கோயில்களை இடித்து அந்த இடங்களில் எவ்வாறு கிறிஸ்துவ தேவாலயங்களை நிறுவினர், எப்படியெல்லாம் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர், அவர்களுடைய பிரச்சாரம் எந்த அளவிற்கு வெற்றி பெற்றுள்ளது போன்ற வை பற்றிய ஆதார பூர்வமான குறிப்புகளை இனிக் காண்போம்.
1988 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையின் கீழ் அமைந்த பாட திட்டத்திற்கிணங்க இயற்றப்பட்டது என்ற முத்தாய் ப்புடன் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், பதிப்புரிமை தமிழ்நாடு அரசு என்று குறிப்பிட்டு சரித்திர ஆதாரமில்லாத செயின்ட் தாமஸ் கட்டுக் கதையைப் பரப்ப ஆரம்பித்தது.
– கிருஷ் வாசுதேவன்




