நாம் பள்ளிகளிலே பாரத தேசத்து எந்த சரித்திரத்தை படித்துக் கொண்டிருக்கிறோம் ? ஒன்று, பாரதம் ஒரு தேசமே இல்லை,தாங்கள் வந்துதான் இதை ஒரு தேசமாக உருவாக்கியதாகக் கூறும் வெள்ளைக்காரர்கள் எழுதி வைத்த சரித்திரம்..
இந்த தேசத்தின் பெருமைகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளிய சரித்திரம்..
இன்னொன்று, கொள்ளைக்கார காங்கிரஸ் எழுதி, பள்ளிப் பாடத் திட்டத்திலே புகுத்திய சரித்திரம்.
இந்த கொள்ளைக்கார காங்கிரஸின் சரித்திரப் படி,சுதந்திரம் என்ற வார்த்தையை சொன்னவுடன்,தாத்தா காந்தியையும்,மாமா நேருவையும் மட்டும் தேசியமயமாக்கி விட்டு,மற்றவர்களை அந்தந்த மாநிலங்களில் குழித் தோண்டி புதைத்து விட்டார்கள்.
சிலர் எந்த வேலையைச் செய்தாலும் அதற்கு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.. அவர்கள் எதிர்பார்த்தது போலவே புகழும் பெருமையும் வந்து சேரும்.இது முதல் வகை.
சிலர் மலையையே புரட்டிப் போட்டாலும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். இவர்கள் இரண்டாவது வகை. சாவர்க்கர் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.
சுதந்திரம் கிடைத்த பிறகு காங்கிரஸ், தாங்கள்தான் சுதந்திரத்திற்குக் காரணம் என்று பிரபலப்படுத்திக் கொண்டு இருந்தனர். கத்தியின்றி, இரத்தமின்றி போராடி சுதந்திரத்தை பெற்றதாக பள்ளிப் பாடத் திட்டத்திலே சேர்த்து இந்த தேசத்து குழந்தைகளை ஏமாற்றி வந்திருக்கின்றனர்.
ஆனால் அதுதான் உண்மையா? உண்மையில் நம்முடைய புரட்சியாளர்களின் தூண்டுதலால் பலம் வாய்ந்த நம் சேனை வாளை உருவி, வீரத்துடன் போராடியது. இதனால்தான், ஆங்கிலேயர்கள் பயந்து போய் சுதந்திரம் கொடுக்க பேச்சு வார்த்தை துவங்கினர்.
இது என்னுடைய கற்பனை அல்ல. இந்த சரித்திர புகழ் வாய்ந்த உண்மையை, பிரிட்டிஷ் பிரதம மந்திரியே அவர்களது பாராளுமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.
‘இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் ராணுவம் சிங்கப்பூரின் மீது குண்டுகளை போட்டது. இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் ராணுவமும் போரில் குதித்தது. அந்தச் சமயத்தில் தளபதி ராஷ்பிஹாரி போஸின் ஆசாத் ஹிந்த் படை, ஆங்கிலேயர்களுடன் போரிட்டது.
சுதந்திரம் அடைவதற்காக ஐம்பதாயிரம் வீரர்கள் போரிட்டனர். அதில் 25,000 பேர் வீர மரணம் அடைந்தனர். மீதமிருந்தவர்களில் பெரும்பாலோர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் INA வில் சேர்ந்து விட்டனர்.
இந்த நிகழ்வை ஜே.ஜி.ஒஹஸாவா என்பவர் எழுதிய ‘ தி டூ க்ரேட் இந்தியன்ஸ் இன் ஜப்பான் ‘ எனும் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்தியர்களின் வீரப்போர், வெள்ளையனை நடுநடுங்க வைத்ததாகக் கூறுகிறார். பிரிட்டிஷ் பார்லிமெண்டில், ஆங்கிலேய அரசு ‘தி இண்டிபெண்டென்ஸ் ஆஃப் இந்தியா ஆக்ட் ‘எனும் சட்டத்தை நிறைவேற்றியது.
இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டவுடன் பிரிட்டிஷ் அரசின் சாம்ராஜ்யவாதியான சர் வின்ஸ்டன் சர்ச்சில் வருத்தமடைந்தார். ‘இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழி இல்லையா? இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்காமல் நம் பிடியிலேயே வைத்துக் கொள்ள முடியாதா?’ என்று கேட்டார்.
‘இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுப்பதற்கான காரணம், அங்குள்ள ராணுவம் இப்பொழுது வெறும் ரொட்டிக்காக ஏங்கிக் கொண்டு இருக்கவில்லை. மேலும், பிரிட்டனுக்கு தற்போதைய நிலையில், இந்திய ராணுவத்தை அடக்கி வைக்கும் சக்தியும் இல்லை‘ என்று பதிலளித்தார் பிரதமர் கிளெமெண்ட் அட்லி.
அட்லியின் கருத்தையே பிரிட்டிஷ் பாராளுமன்ற அங்கத்தினர்கள் பலரும் வெளிப்படுத்தினர். ஆகவே சுதந்திரம் என்பது புரட்சிக்காரர்களின் போராட்டங் களுக்கு கிடைத்த வெற்றிதான்!!
அந்தமான் எனும் ஊர் இருக்கும் வரை, அதன் சிறையையும், சாவர்க்கரையும் மறப்பது என்பது இயலாத ஓன்று. சுதந்திரம் கிடைத்த பிறகு , அதன் பெருமையை மறக்கடிக்கச் செய்யும் நோக்குடன்,சிறைச்சாலையை இடித்துத் தள்ளி விட்டு,அங்கு ஒரு மருத்துவமனையை கட்ட நேரு முயற்சித்தார். பிறகு அம்முயற்சி கைவிடப்பட்டது.
சில மாதங்களில் அங்கு விஜயம் செய்த அப்போதைய உள்துறை அமைச்சர் ஒய்.பி.சவான் சாவர்க்கர் தங்கியிருந்த அறைக்குச் செல்ல மறுத்து விட்டார்.
பல வருடங்களுக்குப் பிறகு அங்கே சென்ற பிரதமர் மொரார்ஜி தேசாயும் சாவர்க்கர் அறைக்குச் செல்ல மறுத்து விட்டார். இவற்றையெல்லாம் மிஞ்சிவிடும் காரியத்தை, 2004 ஆம் ஆண்டு செய்தார் அப்போது பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த மணிசங்கர் ஐயர்.
எந்த மணிசங்கர் ஐயர் ?
பாகிஸ்தான் கைக்கூலியாகி, தேசவிரோதியாகிவிட்ட மணிசங்கர் ஐயர் தான். அந்தமானில் சுதந்திர ஜோதி பீடத்திலிருந்த சாவர்க்கரின் வாசகங்களை அகற்ற உத்தரவிட்டு, அகற்றவும் செய்தார். இதைக் கண்டித்து திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது பெரும் பாக்கியமே !
இப்போது, நம் தொடருக்குத் திரும்புவோம். அந்தமானில் சாவர்க்கர் கிட்டத்தட்ட இறந்தே விட்டார் என்றே கூற வேண்டும். பத்து வருட காலத்தில் அவருடைய உடல்நிலை கடுமையான பாதிப்பிற்குள்ளானது.
அவரை அங்கிருந்து இந்தியாவிற்கு அழைத்து வந்து இங்கிருந்த ஒரு சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு.
நான்கு வருடங்களுக்குப் பிறகு, அதாவது பல்வேறு சிறைகளில் 14 வருடஙகள் கழித்த பிறகு (அதாவது அந்தக் காலத்தில் ஆயுள் தண்டனை என்று கருதப்பட்ட 14 வருடங்களை சிறையில் கழித்த பிறகு) சாவர்க்கரை பரோலில் விடுவித்து, ரத்தினகிரியில் அந்த மாவட்டத்திற்குள்ளேயே தங்கியிருக்கும்படியாக உத்தரவிட்டது.
இந்த சாவர்க்கரை தான் 1929ஆம் ஆண்டு சந்திக்கச் சென்றார் கோட்ஸே!
(தொடரும்)
எழுத்து: யா.சு.கண்ணன்




