December 9, 2024, 8:50 AM
27.1 C
Chennai

சபரிமலை விவகாரத்தில் சட்ட பூர்வமான தீர்வு காண ஆர்.எஸ்.எஸ்., அழைப்பு!

சபரிமலை குறித்த தீர்ப்பு விவகாரத்தில், நம்பிக்கை கொண்டோர் அனைவரும் கலந்து ஆலோசித்து சட்ட பூர்வமான வகையில் தீர்வு காண வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்., கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலர் பையாஜி ஜோஷி விடுத்த அறிக்கையில்,

சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆலயங்களில் பின்பற்றப்பட்டு வரும் வெவ்வேறு சம்பிரதாயங்களை நாம் மதிக்கும் அதே வேளையில், உச்ச நீதிமன்றத்திற்கும் அதற்குரிய மரியாதையை அளிக்க வேண்டும்.

சபரிமலை விவகாரத்தைப் பொறுத்தவரை, அங்கு கடைபிடிக்கப்படும் சம்பிரதாயமானது கோடிக்கணக்கான பக்தர்களின் (பெண்கள் உட்பட)  நம்பிக்கையுடன் தொடர்புடையதாகும். இந்த பக்தர்களின் உணர்வுகளை புறந்தள்ள முடியாது. துரதிருஷ்டவசமாக கேரள அரசு, மக்களின் இந்த எண்ண ஓட்டத்திற்கு மதிப்பளிக்காமல், நீதிமன்ற தீர்ப்பை உடனே அமல்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது.

ALSO READ:  மதமாற்ற பாதிரி மீது புகார் கொடுத்த இளைஞர்கள் மீது தாக்குதல்: இந்து முன்னணி கண்டனம்!

இதையடுத்து, ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் தங்களது சம்பிரதாயம் வலுக்கட்டாயமாக உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு, ஆண்கள், பெண்கள் என பக்தர்கள் பலரும் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கும் அதே வேளையில், இவ்விவகாரம் தொடர்பாக ஆன்மீகவாதிகள், சமுதாய தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும், அடுத்த கட்ட சட்டபூர்வ நடவடிக்கை குறித்து ஒன்றாகக் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கேட்டுக் கொள்கிறது.

அனைவரும் தங்களின் மத நம்பிக்கை, பக்தி உள்ளிட்ட விஷயங்களின் அடிப்படையில், உரிய அதிகாரிகளிடம் அமைதியான முறையில் எடுத்துரைத்து தீர்வு காண வேண்டுகிறோம்… என்று குறிப்பிடப் பட்டுள்ளது.