இப்போது காங்கிரஸ் தலைவர்கள் சாவர்க்கரை துரோகியாகப் பார்த்தார்கள். தாங்கள் ‘வெள்ளையனே வெளியேறு‘ இயக்கத்தை நடத்தும் இந் நேரத்தில், சாவர்க்கர் தன் ஆதரவாளர்களை, பிரிட்டிஷ் ராணுவத்தில் சேரும்படி கூறுகிறாரே, என கோபப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள், அவரை எதிரியாகப் பார்க்கத் தொடங்கினார்கள்.
தன் எண்ணங்களை வெளிப்படையாகத் தெரிவிக்கும் குணமுடையவர் சாவர்க்கர் என்பதால்,அவருடைய முன் யோசனையில்லாத பேச்சுக்களால் காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் அவருக்கு எதிரிகள் ஆயினர்.
எதிர்காலத்தில் இதை வைத்தே, தன்னை வழக்குகளில் சிக்க வைப்பார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இதையெல்லாம் மனதில் வைத்து கறுவிக் கொண்டே, நேரு போன்றோர் அவரை காந்தி கொலை வழக்கில் சிக்க வைத்தனர்.
சாவர்க்கரை பொறுத்த வரை, பாரதத்திற்கு சுதந்திரம் கிடைக்கக் கூடிய காலம் நெருங்கி விட்டது என்பதை உணர்ந்திருந்தார். இரண்டாம் உலகப் போரால், பிரிட்டிஷ் அரசாங்கம் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என்று எதிர்பார்த்தார்.
ஏற்கெனவே,அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஃப்ராங்கிலின் ரூஸ்வெல்ட் இந்தியாவிற்கு சலுகைகள் அளிக்க வேண்டும் என்று வெளிப்படையாக வற்புறுத்தி வந்த நிலையில்,உலக நாடுகளின் அழுத்தம் இங்கிலாந்து மீது அதிகமாகி வருவதை உணர்ந்தார்.
ஆகவே,’ வெள்ளையனே வெளியேறு ‘ இயக்கம் இல்லாமலே,வெள்ளையர்கள் வெளியேறக் கூடிய காலம் நெருங்கி விட்டதை அவர் கணித்து உணர்ந்தார்.
இதுவே அவருடைய நிலைப்பாட்டிற்குக் காரணம். சாவர்க்கர் இப்போது தன் கட்சியான ‘ ஹிந்து மகாசபா’ வை வளர்ப்பதில் கவனம் செலுத்தத் துவங்கினார்.
அது ஒரு தேசிய இயக்கமாக,முஸ்லீம் லீகிற்கும்,காங்கிரஸுக்கும் போட்டியாக உருவாக வேண்டும் என்று சாவர்க்கர் விரும்பினார்.
ஆனாலுல் அதன் வளர்ச்சி மராத்தி மொழி பேசப்படும் பகுதிகளில் அதிகமிருந்தது என்றே கூற வேண்டும். குறிப்பாக, பூனா மற்றும் நாக்பூரில் அதன் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது.
ஹைதரபாத் சிறையிலிருந்து விடுதலையான பிறகு,நாதுராம் கோட்ஸே பூனா திரும்பி, ’ஹிந்து மகா சபா’ கட்சி அலுவலகத்தில் தன் பணியை தொடர்ந்தார்.
1941 ஆம் வருடம்… ஒரு துறுதுறுப்பான இளைஞன் கட்சியின் பூனா அலுவலகத்திற்கு வந்தான். பூனாவிலிருந்து 70 மைல் தூரத்தில் அமைந்திருந்த அஹமத்நகரில்,கட்சி பணியாற்றி வந்தவன் அந்த இளைஞன்.
அவன் பெயர் நாராயண் தத்தாத்ரேய ஆப்தே.
அடுத்த இரண்டு வருடங்களில் ,கோட்ஸேயும்,ஆப்தேயும் நெருங்கிய நண்பர்கள் ஆயினர். அப்போது கோட்ஸேக்கு வயது 31.
கோட்ஸே எளிமையானவர்.கண்டிப்பான நடவடிக்கைகள் கொண்டவர்.சீரியஸான நபர். பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டவர். பெண்கள் இருக்கும் பக்கமே தலைவைத்து படுக்க மாட்டார். பெண்கள் கூட்டம் இருந்தால் மெல்ல நழுவி விடுவார்.
வாழ்க்கையின் ஆசாபாசங்களிலிருந்து முற்றிலுமாகத் தன்னை விடுவித்துக் கொண்டவர். சிறு ஒழுக்க நெறித் தவறுதலும் கூட அவரை கோபம் கொள்ளச் செய்யும்.
தன் எண்ணங்களை உயர்ந்த நிலையிலேயே வைத்துக் கொள்ள பழகியவர். அவருக்கு பிடித்தது ஏற்கெனவே கூறியப்படி நாட்டிற்கு உழைத்தல், புத்தகங்கள் படிப்பது, மேடையில் மக்களை ஈர்க்கும் வண்ணம் பேசுவது.
அவருடைய பலவீனம், அதிகமாக காபி சாப்பிடுவது. ஆனால் நாராயண் ஆப்தே, கோட்ஸேயிடமிருந்து முற்றிலும் மாறுப்பட்ட குணங்களை உடையவர்.
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
– எழுத்து: யா.சு.கண்ணன்




