சென்னை: நீதித்துறை கருத்து சுதந்திரத்தின் பக்கம் நின்றது; அதனால் நான் விடுதலை செய்யப்பட்டேன் என விடுதலையான நக்கீரன் கோபால் செய்தியாளர்களிடம் கூறினார்.
நீதிமன்றம் நக்கீரன் கோபால் மீது பதியப் பட்ட வழக்குகளின் பிரிவுகளை ரத்து செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நக்கீரன் கோபால், ராஜ்பவன் தொடர்பான ஒரு செய்தியை புலனாய்வு செய்து நக்கீரனில் வெளியிட்டோம். அந்த செய்திக்காக என்னை கைது செய்ததாக நீதிமன்றத்தில் சொன்னார்கள்.
நீதித்துறை கருத்து சுதந்திரத்தின் பக்கம் நின்றதால் நான் இப்போது விடுதலையாகி நிற்கிறேன். உடன் இருந்த அனைத்து பத்திரிகை ஊடகங்களுக்கும் நன்றி. எனக்கு ஆதரவு அளித்த எதிர்கட்சி தலைவருக்கும் நன்றி. நீதிமன்றத்தை வணங்குகிறோம் என்றார் நக்கீரன் கோபால்.
முன்னதாக நக்கீரன் கோபால் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணையில் ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக கைது செய்யப்பட்டவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும் அவர் மீது போடப்பட்ட 124வது பிரிவையும் நீதிபதி கோபிநாத் ரத்து செய்தார்.




