Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்புரட்டாசி சனியில் ரங்கநாதர் பட்டினி! வெறும் கூடையுடன் நிவேதனம்? ஸ்ரீரங்கத்தில் நடப்பது என்ன?

புரட்டாசி சனியில் ரங்கநாதர் பட்டினி! வெறும் கூடையுடன் நிவேதனம்? ஸ்ரீரங்கத்தில் நடப்பது என்ன?

emptybag srirangam - Dhinasari Tamil
வெறும் கூடையுடன் நிவேதனத்துக்கு எடுத்துச் சென்றதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில்… சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளித்த போது…

வைணவ சமயத்தின் தலைமையகமான திருவரங்கத்தில் புரட்டாசி சனிக்கிழமைகள் பிரச்னைகளினூடே நகர்ந்துள்ளன. நாளுக்கு நாள் திருக்கோயில் நிர்வாகத்தின் மீது சுமத்தப் படும் குற்றச்சாட்டுகளால் எழும் பிரச்னைகளின் வீரியம் அதிகரித்து வருகின்றனவே தவிர, பிரச்னைகள் குறைந்த பாடில்லை! தீர்வு எதுவும் கிடைத்தபாடில்லை!

இந்த வருட புரட்டாசி மாதத்தில், நான்கு சனிக்கிழமைகளிலும் பெரிய அவசரம் என்று கூறப்படும் பெரிய தளிகை (நம் உலகியல் மொழியில் சொல்லப் போனால் ஃபுல் மீல்ஸ் – முழு மதிய உணவு) திருவரங்கத்து பெரிய பெருமாளுக்கு நிவேதனம் செய்யப் படவில்லை; பட்டினி போடப் பட்டார்! பெரிய பெருமாளுக்கே இதுதான் கதியா! நாம் கண்காணிக்கிறோம் என்பது தெரிந்தவுடன், வெறும் கூடையை மூடிக் கொண்டு சந்நிதியில் நிவேதனம் செய்வது போல் நாடகம் நடத்தினார்கள் என்று, ஒரு குழு புரட்டாசி கடைசி சனிக்கிழமையான நேற்று பகல் 12 மணி அளவில் இருந்து சந்நிதி முன்னுள்ள மண்டபத்தில் காத்திருந்து, சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் லைவ்- செய்து உலகுக்குக் காட்டிக் கொண்டிருந்தார்கள்! கூடவே கூடையைச் சுமந்து வந்தவருடன் வாக்குவாதம் செய்து, ஏன் இப்படி ஏமாற்றுகிறீர்கள் என்று அவர்களை சபிக்கவும் செய்தார்கள்!

இந்தப் பிரச்னை, திருவரங்கம் கோயில் மீதும், வைணவத்தின் ஆணிவேர் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கும் லட்சக்கணக்கான வைணவர்களுக்கும், இந்து ஆலயங்களின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் பக்தர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்துள்ளது! இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்படும் நபர்கள் யார், குற்றம் சுமத்தப் பட வேண்டியவர்கள் யார் என்ற தெளிவின்மையால், ஒவ்வொரு தரப்பும் மற்றவரைக் குற்றம் சொல்லி தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்! அதனால் எழும் விளைவோ, முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்த வழிபாட்டு முறைகளில் தொய்வும், பிடிப்பின்மையும், அலட்சியப் போக்கும் ஏற்பட்டு, சடங்குகளும் பூஜைகளுக்குமே ஊறு ஏற்பட்டு விடுகிறது!

srirangam3 - Dhinasari Tamil
கோப்பு படம்: ஹிந்து ஆலயங்கள் மீட்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில்… ஹெச்.ராஜாவுடன் ரங்கராஜன்

திருவரங்கம் கோயிலில் ஓரிரு பத்தாண்டுகளாகவே வியாபாரத் தனத்துடன் கூடிய அணுகுமுறையை அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டதன் விளைவு- திருவரங்கம் திருக்கோயிலின் பாரம்பரியத்துக்கும் ஆசார்ய புருஷர்களான முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் நித்தியப் படி பூஜைகளுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது கண்கூடாகத் தெரிகிறது. இதுவே குழு மோதல்களுக்கு வழிவகுத்துள்ளது எனலாம்! எங்கே வணிக ரீதியான அணுகுமுறை புகுந்துவிட்டதோ அங்கே பாரம்பரியத்துக்கு ஊறு ஏற்பட்டுவிடுவது கண்கூடு! அதற்கு திருப்பதி கோயில் நடைமுறைகள் ஒரு சான்று!

ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்கள், ஆத்திகப் பெருமக்கள் முதலில் இவற்றின் பின்னணியைப் புரிந்து கொள்ள வைணவ சமயத்தின் அடிப்படை அணுகுமுறையைப் புரிந்து கொண்டாக வேண்டும்! இதென்ன வெறும் கற்களால் கட்டப்பட்ட ஒரு கட்டடம் இந்தக் கோயில், கற்சிலை, சிலைக்கு ஒரு படையல், பூ பூஜை என்றெல்லாம் கேள்வி கேட்டு கேலி செய்யும் நாத்திகர்களுக்கு இதன் உளவியல் ரீதியான அணுகுமுறை புரியாது! அந்த நாத்திகர்களே அறநிலையத்துறையில் ஏதோ ஒப்புக்கு ஒரு தேர்வு எழுதி பணம் கொடுத்து நிர்வாக அதிகாரிகளாகவும் ஆணையர்களாகவும் வந்துவிடுவதால், அவர்களுக்கு பக்தி ஒரு முதலீடு; ஆலயம் ஒரு தொழிற்சாலை; சிலை வெறும் காட்சிப் பொருள்; அவற்றின் மூலம் வரும் வருமானத்தைப் பெருக்கி, அரசுக்கு ஒரு கணக்குக் காட்டி, தங்கள் பைகளையும் நிரப்பிக் கொள்ள வேண்டும்! இது ஒரு வர்த்தக கேந்திரம் அவ்வளவுதான்! என்ற எண்ணம் வலுவாக அமைந்து விடுகிறது! பிரச்னையே இங்குதான் துவங்குகிறது!

மனிதன் இறைவனைத் தன் அறிவுக்கு எட்டிய வகையில் மனித உருவிலேயே அனுபவித்து உணர்ந்தான். அந்தப் பரிணாம வளர்ச்சியில், புராணங்களும் தத்துவங்களும் எழுந்தன. பரமாத்மா ஜீவாத்மா என்ற ஆத்ம அனுபவத்தில் கிளைத்த தத்துவ தரிசனத்தில், பரமனைத் தன் அணுக்கத்தில் ஜீவன் உணர்கிறான். அதனால்தான், ஆலயத்தில் அவனுக்கு சிலை வைத்து, அவனாக அதைக் கருதி, அருகே தானும் நின்று, நெருக்கத்தை உணர்ந்து, அதனுடனேயே ஒன்றிவிடுகிறான்! இந்த ஒன்றுதல் எனும் உணர்வுதான், இறை உருவத்துக்கு உயர்ந்ததை எல்லாம் செய்து அழகு பார்க்கும் செயல்பாட்டை மனிதனுக்குள் விதைக்கிறது.

மகான் ஸ்ரீராமானுஜர் தாம் உணர்ந்த உயர்ந்த தத்துவ தரிசனத்தை அத்தகைய ஞானம் பெறாத எளியோனுக்கும் புரிய வைக்க வேண்டும் என்பதற்காகவே ஆலய நடைமுறைகளை சீர்படுத்தினார். கோயில் உத்ஸவங்கள், வழிபாடு, நிவேதனம் செய்விக்கும் முறை, திருவாராதனம் எனப்படும் ஆராதன கிரமம் எல்லாவற்றையும் சீரமைத்தார். இவை புதிதாக அவரால் உருவாக்கப் பட்டதல்ல! முன்னோர் வழிவழியாகச் செய்து வந்தவை, காலத்தால் நசிந்து போனபோது, மீண்டும் சீர்படுத்தி ஒழுங்கு செய்தல்! அவர் செய்த ஒழுங்குமுறைகளையே ஆலயங்களில் வழிவழியாக இதுநாள்வரை கடைப்பிடித்து வருகிறோம்; வருவதாகச் சொல்லிக் கொள்கிறோம்!

ஒரு பேரரசனுக்கு, சக்ரவர்த்திக்கு எத்தகைய பணிவிடைகளை சேவகன் செய்வானோ அதனைக் காட்டிலும் உயர்வானதாக ஆலயத்தில் குடிகொண்ட இறைவனுக்கு செய்ய வழிகாட்டப் பட்டது! துயில் எழுப்புதல், பல் துலக்குதல், பால் நிவேதித்தல், திருமஞ்சனம் எனும் நீராட்டல், ஆசனம் அளித்தல், பூச்சூட்டி அலங்கரித்தல், நறுமணப் புகை பரப்பி மனம் மகிழச் செய்தல், நிவேதனம் அளித்து, உணவு ஏற்க வேண்டுதல், பள்ளியறையில் எழுந்தருளச் செய்தல் என, சடங்குகள் சற்று உயர்வானதாகவே அமைக்கப் பட்டன! இப்படி எல்லாம் பார்த்துப் பார்த்து, ரசித்து, பக்தியுடன் மனத்தைப் பக்குவப் படுத்தி, விக்ரஹ ஆராதனம் செய்யும் போது, இறைவன் தானாகவே முன்நின்று பேசுவான் என்பதை உணர்ந்தார்கள்!

திருவரங்கம் கோயில், ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் மகான் ஸ்ரீராமானுஜரால் திருத்தி அமைக்கப் பட்டு, ஒவ்வொரு துறையாக பிரிக்கப் பட்டு, அனைத்துக்கும் தகுந்த நபர்களை நியமித்து, இந்தச் செயல்களில் எந்தக் குறைவும் வராமல் பார்த்துக் கொண்டார். இந்தத் துறைகளில் முக்கியமானவை, நந்தவனம் நிர்வகித்தலும், பெருமானுக்கான நிவேதனம் தயாராகும் மடைப்பள்ளி நிர்வாகமும்! இவற்றில் எச்சில் பட்டு குறைவு நேர்ந்துவிடக் கூடாது என்பதில் முன்னோர்கள் குறிப்பாக இருந்தார்கள்!

மற்ற ஆலயங்களுக்கு வருடாந்திர பிரம்மோத்ஸவம் அல்லது கூடுதலாக உத்ஸவங்கள் நடைபெறக் கூடும்! ஆனால் திருவரங்கத்தைப் பொறுத்தவரை, ஆசார்ய புருஷர்கள் தங்கியிருந்து, பார்த்துப் பார்த்து அரங்கனை ஆராதித்த காரணத்தால், நித்யோத்ஸவம் (தினசரி பூஜை, பட்ச உத்ஸவம் (மாதம் இருமுறை), மாச உத்ஸவம் (மாதந்தோறும்), சம்வத்ஸர உத்ஸவம் (இரு மாதங்களுக்கான) என்று உத்ஸவங்கள் விரிந்து செல்லும்! தினமும்தான் பூஜை செய்கிறோமே, பின் எதற்காக மாச உத்ஸவமும் சம்வத்ஸர உத்ஸவமும்! அதையும் தினசரி பூஜையிலேயே சேர்த்துச் செய்துவிடலாமே! என்று கேள்வி கேட்டால், தினமும் தான் வீட்டில் காலை இட்லி சாப்பிடுகிறாயே, பின் ஏன் மாதம் ஒரு நாள் ஹோட்டலுக்குச் செல்ல ஆசைப்படுகிறாய்?! என்று எதிர்க்கேள்வி எழுவது இயல்பானதே!

இதைச் சொல்வதற்குக் காரணம், திருவரங்கத்தில் புரட்டாசி சனிக்கிழமையில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கான மூல காரணம் இத்தகைய கேள்வியில்தான் அடங்கியிருந்தது! ஆறு கால பூஜை என பெரிய கோயில்களில் செய்விக்கிறார்கள். அப்போது நிவேதனம் செய்விப்பது வழக்கம்! திருவரங்கத்தில் மதியம் செய்யப் படும் பெரிய அவசரம் என்பது, அந்த நாளுக்கான முழு மதிய உணவு படைப்பது! அதில் இத்தனை வகை அன்னங்கள், இவ்வளவு அன்னம், பட்சண வகைகள் என்று திட்டம் வகுத்து குறித்து வைத்திருக்கிறார்கள்! தற்போது ஆலயம் அறநிலையத்துறை வசம் வந்து, பக்தர்களை வரவழைத்து கூட்டத்தைப் பெருக்கி, டிக்கெட் போட்டு வசூல் செய்து, வருவாயைப் பெருக்கி, அவார்டு வாங்க வேண்டும் என்ற உந்துதல் அதிகாரிகளுக்கு வந்துவிட்ட படியால், பெருமாளுக்கு வேளாவேளைக்கு அமுது செய்விப்பதிலும், திருவாராதன பூஜை நடத்துவதிலும் ‘பிரேக்’ விழுந்து, பக்தர்கள் தரிசனத்துக்கான நேரம் கூடுதலாக்கப் பட்டுவிட்டது!

குறிப்பாக, விசேஷ காலங்கள், திருவிழாக் காலங்களில் மதிய நேர நிவேதனத்தை காலையிலேயே சேர்த்துச் செய்துவிடச் சொல்வதும், அதற்கு ஆகமம் வழிவகுக்கிறதே என அங்கிருக்கும் அர்ச்சகர்கள் மூலம் சொல்ல வைத்து அன்பர்கள் வாயை அடைப்பதிலும் நிர்வாக அதிகாரிகள் குறிப்பாக இருக்கிறார்கள்! ஒருமுறை நிவேதனத்துக்காக சந்நிதியில் திரை போடப் பட்டு, அமுது செய்விக்க அரை மணி நேரமாவது ஆகும் என்பதால், அந்த நேரத்தில் ஆயிரம் பேர் தரிசித்தால் கோயிலுக்கு அரை லட்ச ரூபாய் வருமானம் தேறும்! வெறுமனே அரை மணியை வீணாக்கி அமுது செய்விப்பதால் கோயிலுக்கு என்ன பலன் என்ற எண்ணம்தான் நாத்திக எண்ணம் கொண்ட அதிகாரிக்கு தோன்றும்!

சொல்லப் போனால், ஆண்டவன் அருங்காட்சியக பொம்மையோ சிலையோ இல்லை; உயிருள்ள ஜீவன், பேசும் தெய்வம் என்றெல்லாம் ஒரு மனோபாவம் பக்தனுக்கு எழுமானால், அந்தப் பெருமானுக்கு வேளா வேளைக்கு பூஜை செய்து, நிவேதித்து அந்த விக்ரஹத்துக்கு ஜீவ சக்தியை கூட்டுவதற்காகவே இவை எல்லாம் நடக்கின்றன, அப்போதுதான் அந்த விக்ரஹத்தின் முன் நின்று பெருமானே என்னை காப்பாய் என்று நாம் வேண்டும் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும் சக்தி அங்கே கிடைக்கிறது எனும் எண்ணம் வலிமை பெறும்! எனவே பக்தர்கள் எவருமே, நேரத்தைப் பயன்படுத்தி எப்படியாவது தரிசனத்தை முடித்துவிட்டு அவசர அவசரமாக சென்றுவிட வேண்டும் என்று கருத மாட்டார்கள். அப்படிக் கருதினால், ஆன்மிகத்தின் உள்ளுணர்வை அறியாத வெற்று வியாபாரிகளாகவே அவர்கள் இருப்பார்கள்!

srirangam1 - Dhinasari Tamil
கோப்பு படம்: சிலைக்கடத்தல் தொடர்பில் கூறப்பட்ட புகார்களை அடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, திருவரங்கம் கோயிலில் பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்ட போது….

திருவரங்கம் கோயிலில் தற்போது இருக்கும் பிரச்னைகளில் அறநிலையத்துறை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கும் நிதி திரட்டும் பண வெறியும்தான் முதல் பிரச்னையாகப் பார்க்கப் படுகிறது. இந்த ஒரு தன்மையே, பல பிரச்னைகளுக்கும் காரணமாகிவிடுகிறது!

ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜன் என்பவர், கோயில் ஆகம பூஜை நடைமுறைகளில் ஏற்பட்டு விட்ட மாற்றத்துக்கு எதிராகவும், நிர்வாகச் சீரழிவுக்கு எதிராகவும் குரல் கொடுத்து, நீதிமன்றத்திலும் வழக்குகளைத் தொடுத்து வருகிறார். ஆலயத்தின் மீது நம்பிக்கை கொண்ட பக்தர் எவருமே, இந்த நோக்கத்தில் குறை காண மாட்டார்கள்! இவர் செய்வது சரிதான் என்று ஒப்புக் கொள்வார்கள்! ஆனால், நடைமுறைச் சிக்கல்களைக் கவனிக்கும் போது, இந்தப் போராட்டங்களின் பின்னணியில் விளைந்த நன்மைகள் என்ன என்று கேட்டால், அது வெறும் பூஜ்ஜியமே!

நான்காம் சனிக்கிழமையில் பெரிய அவசரம் (பிரசாதம்) இல்லாத வெறும் கூடையை எடுத்துச் சென்று, நாடகம் ஆடினார்கள் என்பது இவர் தரப்பு குற்றச்சாட்டு. அதற்காக தன் நட்பு குழுவினருடன் ஆலயத்தில் செல்போன் மூலம் பேஸ்புக்கில் லைவ் செய்து, அங்கே நடப்பவற்றை அதிரடியாகக் காட்டிக் கொண்டிருந்தார். இது தொடர்பில் அவர் செய்த பேஸ்புக் பதிவில்….
***
பிரசாதமில்லாத வெறும் கூடையே ஸ்ரீரங்கநாதருக்கு நித்யபடி மதிய பிரசாதம்

சில தினங்களுக்கு முன் “இந்து” நாளிதழில் (06.07.2018), “பெருமாளுக்கு ஏற்ற உணவு” Food fit for Lord என்ற தலைப்பில் ஸ்ரீரங்கத்தில் இரண்டு இளைஞர்கள் தங்கள் ஐ.டி. வேலையை விட்டுவிட்டு கைங்கர்யம் செய்கின்றனர் என்றும், ராமாநுஜரை விட பல மடங்கு கோவில் சீர்திருத்தம் செய்கின்றனர் என்றும் இந்த கேடுகெட்ட கோவில் நிர்வாகம் பணத்தை இறைத்து சுய விளம்பரம் தேடிக்கொண்டது நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.

இன்று இவர்கள் செய்யும் கைங்கர்யத்தின் அழகு உலகிற்குத் தெரிந்தது. இதுதான் வேணு சீனிவாசனின் கைவண்ணம். இப்படி ஊரில் இருக்கும் ஊடகங்களில் பணத்தை செலவு செய்து தனக்கு வேண்டிய செய்தியை வெளியிட்டுக்கொள்ளும் “உத்தமர்”. பைபிள் வித்து பிழைப்பை நடத்தியவர் இப்படி ஐ.டி.யில் பணிபுரிந்து கொண்டிருந்த இளைஞர்களுக்கு தானே தன் கைகாசை செலவு செய்து கோவிலில் வேலை போட்டு கொடுத்த பெரிய மனிதர்.

இனியும் இவர்களை இக்கோவிலில் இருக்கவிடலாமா?! மதியம் பெரிய அவசரத்திற்கு 24 படிக்கு குறையாமல் அன்னமும், ஐந்து வகை காய்கறிகளும், கூட்டும், அதிரசமும், தேங்குழலும், சாற்றுமது (ரசம்) என்று நித்யம் நடந்து கொண்டிருந்தை கெடுத்து “பெருமாளுக்கு உகந்த உணவு” என்று வெறும் கூடையை எடுத்துச் செல்லும் கயவர்கள்!!

இன்று வெறும் கூடையை வைத்து பெருமாளுக்கு திருவாராதனம் செய்த அர்ச்சகர் ஸ்ரீதர் பட்டர்!! இவர் சென்னைக்கு வந்து என்னிடம் கோவிலை நாம் சேர்ந்து சீர்திருத்தம் செய்யலாம் என்று சொன்னவர்! வெறும் கூடையை பெருமாளுக்கு கண்டருளுவது சீர்திருத்தமா!!!
***
– என்று கேள்வி கேட்டு ஒரு பதிவைச் செய்திருந்தார். மேலும், ‘கோயில் யானைக்கு முகப்படாம் செய்து போட்டிருக்கிறார்கள், அதில் திருமண் இல்லாமல் கேரள பாணி வேலைபாடுகளுடன் இருந்தது! திருவரங்கம் திருக்கோயிலில் பெருமாள் குறித்த பாரம்பரியப் பாடல்கள் போடாமல், வைரமுத்து எழுதிய ஸ்ரீரங்கநாதனின் சினிமாப் பாடல்கள் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்’ என்று குற்றச்சாட்டுகளை பேஸ்புக் தளத்தில் பதிவு செய்து கொண்டிருந்தார்கள்!

இந்தப் பதிவுகளைப் படிக்கும் எவருக்குமே கோயில் நிர்வாகத்தின் மீதும், அர்ச்சகர்கள், திருமடைப்பள்ளி கைங்கர்யம் செய்பவர்கள் மீதும் கோபம் எழுவது இயல்பே! அந்தக் கோபத்துடனேயே சம்பந்தப் பட்ட இரு தரப்பினரிடமும் நாம் பேசிய போது, கிடைத்த தகவல்கள் நமக்கு ஒரு தீர்வை நோக்கி செல்லவைக்கத் தோன்றுகின்றன! காரணம், இதே மண்ணில் பிறந்து, சில காலம் இங்கேயே வாழ்ந்து, இந்தப் பெருமானையும் கோயிலையும் சிறுவயது முதல் ஆராதித்து, நடைமுறைகளை கவனித்து வந்த ஒரு பக்தனாகவும், பத்திரிகையாளனாகவும் பார்க்கும் பார்வைதான்!

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து, திரு.ரங்கராஜனின் நெருங்கிய சகாக்களும் அவருடைய போராட்டத்துக்கு துணை நிற்பவருமான ஒரு நண்பரிடம் கேட்டபோது, எல்லா குற்றச்சாட்டுகளிலும் மையப் புள்ளியாக வந்தவர் டிவிஎஸ்., அதிபர் வேணு சீனிவாசன் என்றும், அறநிலையத் துறையையும் மீறி அவரது ஆதிக்கம் ஆலயத்தில் இருப்பதால்தான் இந்த குளறுபடிகள் என்றும் குற்றம்சாட்டினார்.

இதனிடையே, ரங்கராஜன் தனது இன்னொரு பதிவு ஒன்றில், வேறு வகையில் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அந்தப் பதிவில்…
// செருப்பு உள்ளேயும், சிலைகள் வெளியேயும் செல்லும் ஸ்ரீரங்கம் கோவில்

இன்று மதியம் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத ஸ்வாமியின் மதிய பூஜையான “பெரிய அவசரம்” நடக்கின்றதா என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க கோவிலுக்குச் சென்றேன். சென்ற வருடம் யுனெஸ்கோ அமைப்பினர் ஸ்ரீரங்கத்திற்கு வந்து சென்றது முதல் என்னை கோவிலுக்குள் விடாமல் இந்த அரக்கர்கள் தடுத்து வந்தது பலருக்குத் தெரியாது. ஆனால், 11.10.2018 அன்று சென்னை நீதிமன்றத்தில் இதை நான் கூறியபோது, மாண்புமிகு நீதிபதிகள் இந்த தகாத செயலைக் கண்டித்தனர். அதன் அடிப்படையில் இன்று மதியம் சென்றேன்.

பெரிய அவசரம் நடந்த விதத்தை இதற்கு முந்தின பதிவில் பதிவிட்டிருக்கிறேன். கோவிலிலிருந்து வெளியே வரும்பொழுது, ஆயிரம் கால் மண்டபம் வாசலில் ஒரு சின்ன டிரக் இருந்தது. அந்த வண்டிக்கு நம்பர் பிளேட் முன்பக்கத்தில் இல்லை. உள்ளே எட்டிப் பார்த்தேன், இரண்டு ஜோடி செருப்புகள் இருந்தன.

25.05.2018 அன்று கோவிலுக்குள் ஒரு கிராதகன் நுழைந்து பெருமாளின் மீது செருப்பை வீசியது நினைவிருக்கும். அதற்குப் பின், இந்த கோவிலின் தகுதியில்லாத செயல் அலுவலர், பல தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் அவனை ஒரு பைத்தியக்காரன் என்றும், இனி இப்படி நடக்காமல் இருக்க தக்க நடவடிக்கை எடுத்ததாகவும் சொன்னான். ஆனால், இன்றும் கோவிலுக்குள் செருப்புகளும் இன்னும் ஏதேதோ வந்த வண்ணம் இருக்கின்றன.

அங்கு இருந்த காவலாளியிடம் பதிலில்லை. எங்கிருந்தோ ஒரு பெண் போலீஸ் வந்தார். அவருக்கும் வண்டி யார் கொண்டு வந்தார் என்பது தெரியவில்லை. அவரிடம் வண்டி வந்து போகும் ரிஜிஸ்டர் உள்ளதா என்று கேட்டேன்!! அது தெரியாது என்றார்!! என்ன இப்படி சொல்கிறீர்கள் என்று நான் அவரைக் கேட்க, அவர் வேக வேகமாக மற்றொருவருக்கு போன் போட்டு அந்த இடத்திற்கு வரச் சொன்னார்.

கோபுரத்தின் அடியில் இரண்டு அறைகள் இருக்கின்றன. அதில் எட்டிப் பார்த்தால் ஏராளமான செருப்புக்கள். கோவிலுக்குள் வாகனம் அனுமதி இல்லை என்கின்ற ஒரு பலகையும் அங்கு இருந்தது. அதைக் காட்டி எப்படி அனுமதித்தீர்கள் என்று கேட்டுக்கொண்டு இருக்கும் பொழுதே, மற்றொரு வண்டி கோவிலுக்குள் வர முயன்றது. அதில் இருக்கும் ஓட்டுனர் கால்களிலும் செருப்பு. உள்ளே எதற்கு வண்டி செல்கிறது என்று ஓட்டுனரைக் கேட்டேன். திருப்பணி வேலை என்றார். அதற்கு வண்டி எதற்கு என்று கேட்டேன். பதில் இல்லை. வண்டியை உள்ளே போகக்கூடது என்று சொன்னேன். போகவேண்டும் என்றால் என்னை ஏற்றிவிட்டுச் செல்லவேண்டும் என்று சொன்னதும் வண்டியிலிருந்த நபர்கள் இறங்கி நடந்து உள்ளே சென்றனர்.

இது நடந்து கொண்டிருக்கும் பொழுதே ஒரு ஆட்டோ கோவிலுக்குள் நுழைய முற்பட்டது. ஆட்டோ ஓட்டுனரின் கால்களிலும் செருப்பு. ஆட்டோவில் என்ன உள்ளது என்று பார்த்தால், அதிர்ச்சி. கூடை கூடையாக அதிரசம். வெளியே ஏதோ ஓர் இடத்தில் தயாரித்து கோவிலுக்குள் “தேவஸ்தான பிரசாதமாக” விற்கப்படுகின்றது. எங்கிருந்து வருகின்றது என்று கேட்க, சிட்டாய்ப் பறந்தார் நம் ஆட்டோ ஓட்டுனர்.

அதற்குள் கோவிலின் உள்ளே இருந்த வண்டி வெளியே வந்தது. ஓட்டுனரிடம் எதற்கு உள்ளே சென்றீர்கள் என்று கேட்டேன். ஏன் வண்டியில் நம்பர் பிளேட் இல்லை என்று கேட்டேன். ஏதேதோ சாக்கு சொன்னார்.

போலீசிடம் கேட்டேன். இப்படித்தான் பல சிலைகள் கடத்தப்படுகின்றன என்று தெரிந்தும் எப்படி இந்த வண்டிகளை விடுகின்றீர்கள். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு புகார் கொடுப்பேன் என்றேன். வண்டிகள் உள்ளே வந்து போவதை ஒரு ரிஜிஸ்டர் போட்டு, வரும் வன்டியின் எண், உள்ளே சென்ற நேரம், எந்த காரணத்திற்கு வந்தது, யார் ஓட்டுனர், அவர் செல் நம்பர், முகவரி, எத்தனை மணிக்கு வெளியே செல்கிறது என்ற அடிப்படை விவரங்கள் அதில் இருக்க வேண்டாமா?

நம் கோவில்கள் கொள்ளை போய்க் கொண்டு இருக்கின்றன. ரன்வீர் ஷ்வின் வீட்டிலும் கிரண் ராவின் வீட்டிலும் ஒரு முழு கோவிலே கிடைத்தது நாம் அறிந்ததே. ஸ்ரீரங்கதிலிருந்து பல பொக்கிஷங்கள் இப்படித்தான் போலீஸ் உதவியுடன் வெளியே சென்றுள்ளது. உள்ளே செல்லும் வாகனத்தை சோதனை இடுவார்களாம், வெளியே போகும் பொழுது எதையும் பார்க்க மாட்டார்களாம். என்ன ஆணவ பதில்.?!

இந்த விவகாரங்களை வரும் 23ஆம் தேதி நீதிமன்றத்தில் என் ஆவணப் பத்திரமாக நான் தாக்கல் செய்வேன். இந்த அரக்கர்களுக்கு அவர்கள் எங்கு இருக்கவேண்டுமோ அங்கு இருக்க வேண்டியது செய்யப்படும்.! //

– என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த வாதங்கள், ஆலயங்களைக் காக்க வேண்டும்; மரபுகளைக் காப்பாற்ற வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொருவரும் ஏற்கக் கூடிய காரணங்கள்தான்!

இந்நிலையில், நேற்றைய பெரிய அவசரம் விடுபட்டுப் போன விவகாரம் குறித்தும், காலி கூடைகள் குற்றச்சாட்டு குறித்தும், ஸ்ரீரங்கம் நகர் வாழ் பெரியவர்கள் இருவரிடமும் சம்பவத்தில் உடனிருந்த இளைஞர் ஒருவரிடமும் விசாரித்தபோது, எல்லாப் பிரச்னைகளுக்கும் மையப் புள்ளியாய் அமைந்தது, அறநிலையத்துறையின் அகோர பணப் பசி உணர்வே!

srivaishnavasri krishnamachari swamy - Dhinasari Tamil
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாச்சாரியார் ஸ்வாமி

இந்த விவகாரம் குறித்த மறு பக்கத்தை அறிவதற்காக, திருவரங்கம் கோயில் ஒழுகு தொகுத்தவரும் நகரவாசியுமான ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசாரியாரிடம் கேட்டபோது, திருவரங்கம் கோயில் வரலாற்றில், சுந்தர பாண்டியனின் பங்கு மகத்தானது. அவன் எழுதி வைத்த பெரிய அவசரம் போல் இன்று நடக்குமா என்று கேள்வி எழுப்பினார். சுந்தர பாண்டியன் காலத்தில் 300 தடா அமுது செய்வித்ததாக குறிப்பு உள்ளது என்று கூறிய அவர், பிரிட்டிஷ் காலத்தில் ஒரு திட்டம் வகுத்திருக்கிறார்ர்கள்; அதைச் செய்வதற்கே இப்போது நபர்கள் இல்லை என்று வருத்தப் பட்டார். நமக்கு ஐடியலிஸம் இருக்கலாம். இப்படி எல்லாம் செய்யவேண்டும் என்று கொள்கை கோட்பாடு இருக்கலாம். அதைச் செய்ய வேண்டும் என்றால் நாம்தான் அதற்கு வந்தாகவேண்டும்! இதை விட பெரிய ‘திட்டம்’ எல்லாம் கூட அப்போது இருந்திருக்கிறது.

பெருமாள் வெளியே செல்லும் போது, புளியமுது உள்பட அமுதுபடிகள் கொண்டு செல்ல வேண்டும். திருப்பாவாடை என்றெல்லாம் அப்போது இருந்தது. இருந்து. பெருமாள் 10 கி.மீ., தொலைவு தாண்டி செல்கிறார். உடன் பலர் செல்கிறார்கள். அப்படி போகிறவர்கள், எப்படி மதிய சாப்பாட்டுக்கு வருவது? அப்போது, திருப்பாவாடை பத்து கலம் பன்னிரண்டு கலம் என்றெல்லாம் வைத்து நடந்திருக்கிறது! இந்தக் காலத்தில் அதைச் செய்வதற்கு மனித பலம் இல்லை! இன்னும் சொல்லப் போனால், ஜேஷ்டாபிஷேகம் திருப்பாவாடை வாங்கிக் கொண்டு செல்வதற்கே ஆள் இல்லை என்று வருத்தப் பட்டார் கிருஷ்ணமாச்சாரியார்.

தொடர்ந்து, மடைப்பள்ளி கைங்கர்யம் என்பதே வெகு காலத்துக்குப் பின்னர் இப்போதுதான் சரியாகி இருக்கிறது என்கிறார்கள் கோயில் கைங்கர்யத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள படித்த இளைஞர்கள் இருவர்.

அவர்களின் கூற்றுப்படி, ஸ்ரீவத்ஸனும் லட்சுமிநரசிம்மனும் கோயில் மடைப்பள்ளி கைங்கரியத்துக்கு வந்த பின்னரே… பெருமாளுக்கு அமுதுபடிகள் சரியாகச் செய்விக்க வேண்டும் என்ற எண்ணமே இங்கே பலருக்கும் வந்திருக்கிறது. எது எதற்கெல்லாமோ ஆட்களைப் போடுகிறார்கள், ஆனால் மடைப்பள்ளி கைங்கர்யத்துக்கு ஆட்களைப் போடுவதே கிடையாது. இதில் ஆட்கள் பற்றாக்குறை! அதிலும், கடந்த ஒரு மாதமாக லட்சுமிநரசிம்மனுக்கு உடல் நலக் குறைவு என்பதால் அவரும் வரவில்லை! இந்த வேலைக்காக ஆட்கள் எடுக்க அறிவிப்பும் செய்யவில்லை! இருக்கும் நபர்கள் தங்களுக்குள் வேலையைப் பகிர்ந்து, அனுசரித்துக் கொண்டு இந்தப் பணிகளை செய்துவருகிறார்கள்.

இதில், வெறும் கூடையை எடுத்துக் கொண்டு அமுது படைக்கச் சென்றார்கள் என்பதெல்லாம் சுத்தப் பொய். அமுது இல்லாமல் அப்படி கொண்டு செல்லவே மாட்டார்கள். அதில் அமுதுபடி இருந்தது உண்மை. தளிகை கூடையை வெளியில் திறந்து காட்டுவது ஆகம விரோதம். உள்ளே இருப்பதை இவர்களாலும் பார்க்க முடியாது. அப்படி இருக்க, உள்ளே எதுவும் இல்லை என்ற தீர்மானத்துக்கு இவர்கள் எப்படி வந்தார்கள்?

ஸ்ரீவத்ஸன், லட்சுமிநரசிம்மன் இருவரும் வந்த பின்னர்தான், மடைப்பள்ளி ஒழுங்குபடுத்தப் பட்டிருக்கிறது. தி ஹிந்துவில் இவர்கள் இருவரும் செய்த சீரமைப்புகள் குறித்து கட்டுரை வந்த பின்னர், என்னமோ தெரியவில்லை இது போன்று அவர்களைக் குறி வைத்து சிலர் தாக்கிப் பேசி வருகிறார்கள். இது முழுக்க முழுக்க அந்த இருவரையும் குறித்து கிளப்பும் அவதூறுதானே ஒழிய வேறில்லை. உயிரைக் கொடுத்து, ரெண்டு ஷிப்ட் மூணு ஷிப்ட் என்று வேலை செய்பவர்கள் குறித்து டோட்டல் கேரக்டர் அசாஸினேஷன்…தான் இது என்று முடித்தார் அந்த நண்பர்.

24 படி அமுது செய்ய வேண்டும் என்றால் அதற்கு எத்தனை நபர்கள் வேண்டும்?! மடைப்பள்ளியில் ஆட்களே கிடையாது! இருக்கும் ஓரிருவரை வைத்துக் கொண்டு அமுது செய்கிறார்கள்! ஒரு நேரத்தில் பன்னிரண்டு பேருக்குக் குறையாமல் வேலை செய்த மடைப்பள்ளியில் இன்று ஐந்து பேர்தான் இருக்கிறார்கள். இந்த நாலைந்து நபர்களை வைத்துக் கொண்டு, முன்னர் எழுதி வைத்த திட்டத்துக்கு ஏற்ப அமுதுக்கான மூலப் பொருள்களைக் கொடுக்கிறார்களா என்பது நமக்குத் தெரியாது! அறநிலையத்துறையில் என்ன கொடுக்கிறார்களோ அதை வைத்துத்தான் அவர்களால் தளிகை பிரசாதம் செய்ய முடியும்!

இரண்டு பேர் இருந்து கொண்டு ஆசார அனுட்டானங்களைப் பின்பற்றி, இப்போதுதான் மடைப்பள்ளியை சரி செய்திருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் அனாசாரம்! பத்து, பன்னிரண்டு இருந்த சிறிய வயதில் மடைப்பள்ளி கைங்கர்யத்துக்கு வழிவழியாய் வந்துவிட்டு, ஆசாரம் இல்லாமல், திருமண், சிகை, வஸ்திரம் என எதுவும் ஒழுங்காக இல்லாமல் ஏனோதானோவென்று இருந்தார்கள். இப்போது நாங்கள் மிகவும் சிரமப் பட்டு, பல இடங்களில் தேடி, இந்த இருவரையும் கொண்டு வந்திருக்கிறோம்! இருவருமே நன்கு படித்தவர்கள். லட்சுமி நரசிம்மன் ஐ.டி., வேலையில் நல்ல பதவியில் இருந்தார். ஸ்ரீரங்கம் பெருமாளுக்காக எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு, மடைப்பள்ளி கைங்கர்யத்துக்கு வந்திருக்கிறார்.

srirangam - Dhinasari Tamil
திருவரங்கம் பெரியபெருமாள் மடைப்பள்ளி கைங்கர்யபரர்கள்

ஆனால், ஸ்ரீவத்ஸன், லட்சுமி நரசிம்மன் இருவர் குறித்தும் தேவையற்ற வகையில் வாட்ஸ்அப் மூலம் அவதூறு பரப்பி வருகிறார்கள் சிலர். இவற்றால் மனதளவில் இருவரும் வருத்தப் பட்டு சோர்வடைகிறார்கள்! அவர்களின் வீடுகளில் இவை எல்லாம் தேவையா என்று கேட்டு, வேறு வகை ஆன்மிக கைங்கர்யம் செய்தால் போதும்; இப்படி இவர்களுடன் போய் முட்டிக் கொள்ள வேண்டுமா என்று கேட்டு அவர்கள் மனத்தின் உறுதியைக் குலைத்து வருகிறார்கள். இது இயல்புதானே! உண்மையில் தகுதியுள்ள நபர்களைத் தயார் செய்து நம்மால் மடைப்பள்ளியைச் சீர் செய்ய முடியவில்லை; ஆனால் பேச்சு மட்டும் நீளத்துக்குப் போகும்! இத்தகைய அசிங்கமான நடவடிக்கைகளால் நம் சம்பிரதாயம் மேலும் சீரழியும்; நல்லவற்றைச் செய்யவே யாரும் முன் வரமாட்டார்கள்.

ஐ.டி. பணியில் உட்கார்ந்து வேலை செய்தவர் லட்சுமி நரசிம்மன். திடீர் என்று மடைப்பள்ளி பணிக்கு வந்ததால், அவருக்கு கைகளில் சற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால் சிகிச்சை எடுத்துக் கொண்டு ஒரு மாதம் விடுப்பில் உள்ளார். ஆனால் அதற்கு இட்டுக் கட்டி, பெரிய பெருமாளுக்கு சரியாய தளிகை செய்யாததால், பெருமாள் கொடுத்த தண்டனை, அவருக்கு கையில் வாதம் வந்துவிட்டது, கையைத் தூக்கவே முடியவில்லை என்று கதை கட்டி விட்டார்கள். லட்சுமி நரசிம்மனோ எனக்கு வாதம் எல்லாம் இல்லை, இவர்களால் ஏற்பட்ட அபவாதம்தான் என்று சொல்லி வருத்தப் படுகிறார் என்று நம்மிடம் நிகழ்ந்தவற்றைப் பதிவு செய்தார் வீரராகவன் எனும் இளைஞர்.

டிவிஎஸ்., வேணு சீனிவாசன் மூலமே மடைப்பள்ளியில் ரூ.3 லட்சம் செலவில் பராமரிப்புப் பணி செய்யப் பட்டு, ஸ்ரீவத்ஸன், லட்சுமி நரசிம்மன் இருவரும் நியமிக்கப் பட்டு, அவர்களுக்கான மாத ஊதியமும் டிவிஎஸ்., மூலமே வழங்கப் பட்டு வருகிறதாம்! இதை தனது பதிவில் ரங்கராஜனும் குறிப்பிடுகிறார். ஆனால் நல்லவிதமாக அல்ல!

சொல்லப் போனால், ஆலய கைங்கர்யங்களுக்கு பெருமளவில் உதவி வரும் ஒருவரை ‘கார்னர்’ செய்வதிலேயே சிலர் குறியாக இருப்பது, நல்லதாகத் தெரியவில்லை! கோயிலில் யார் வர வேண்டும், யானைக்கு அணிவிக்கப் படும் முக படாம் எப்படி இருக்க வேண்டும், மதிய பெரிய அவசரத் தளிகை என்ன இருக்க வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் தீர்மானிப்பதற்கும் கண்காணிப்பதற்கும் வேணு சீனிவாசன் போன்ற தொழிலதிபர்களுக்கு எங்கிருந்து நேரம் கிடைக்கும் என்ற அடிப்படை யோசனை கூட எதிர்ப்பாளர்களிடம் எழுவதில்லை! அறங்காவலர் குழுத் தலைவர் என்ற ஒரு காரணத்துக்காக, கோயிலில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் அவர்களிடம் கேள்வி கேட்டு, கண்ணுக்குத் தெரியாமல் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் அறநிலையைத் துறையைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதும் நல்லதல்ல! வருங்காலங்களில் இத்தகைய போக்கைக் கண்டு, எவருமே ஆலய கைங்கரியங்களுக்கு உதவி செய்ய முன்வரமாட்டார்கள்! கேள்வி கேட்பவர்களால் கேள்வி மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க முடியுமே தவிர, ஒரு கல்லை அங்கிருந்து அசைக்கக் கூட முடியாது!

இப்படி மடைப்பள்ளி விவகாரத்தில் மானங்கெட்டுப் போய் சந்தி சிரிக்க நிற்கிறது அறநிலையத்துறை! தகுந்த நபர்களை நியமித்து, அவர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட வழியில்லாமலா ஆலய நிர்வாகம் இருக்கிறது என்ற கேள்வி நம்முன் எழுகிறது.

இவை குறித்து செயல் அலுவலர் தரப்பில் என்ன சொல்லப் படுகிறது? ஏன் மடைப்பள்ளிக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படவில்லை!?

இப்போது அறநிலையத்துறை மடைப்பள்ளிக்கு ஆட்களை அறவே எடுக்கவில்லை. இருந்த சிலரிடம் பேரம் பேசி, நிரந்தர வேலைக்கு வாய்ப்பு வரும் போது உனக்கு போட்டுத் தரச் சொல்கிறேன் என்று அரசியல் ரீதியாக வாக்குறுதிகள் கொடுக்கப் பட்டு, அதன் மூலம் லட்சக் கணக்கில் பணம் கைமாறி, தகுதியற்ற நபர்கள் உள்ளே நுழைகிறார்கள் என்று குற்றம் சாட்டப் படுகிறது.

இத்தகைய பின்னணியில், நம்மால் அறநிலையத்துறையின் செயல்பாடுகளையே விமர்சிக்கத் தோன்றுகிறது. காரணம் அர்ச்சகர்களால், அறநிலையத்துறை மற்றும் அரசியல் செல்வாக்கு பெற்ற அதிகாரிகளைப் பகைத்துக் கொண்டு, அவர்களை மீறி செயல்பட முடியாது. மதிய பெரிய அவசர தளிகையை காலையிலேயே சேர்த்துச் செய்துவிடுங்கள் என்று அதிகாரி சொல்லும் போது, அதற்கு அர்ச்சகர்களும் தலையாட்டி யிருக்கிறார்கள். விசேஷ காலங்களில் அதுவும் கூட இல்லாமல் போயிருக்கிறது. இதற்கு ஆகம மீறலில்லை என்று அர்ச்சகரும் அதிகாரிக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு ஊடகங்களில் பேட்டி அளிக்கிறார்!

srirangam2 - Dhinasari Tamil
கோப்பு படம்: ஸ்ரீரங்கம் கோயிலில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், பொன்.மாணிக்கவேல் தலைமையில் விசாரணை மேற்கொண்ட போது… உடன் ரங்கராஜன்

மூன்று வேளை உணவையும் ஒரே நேரத்தில் காலையில் மட்டும் சாப்பிட நம்மால் முடியுமா? ஆறு கால பூஜையையும் ஒரே மணி அடித்து முடித்துவிட்டு, சந்நிதியை பக்தர் தரிசனத்துக்கு திறந்து வை என்று அதிகாரி கட்டளையிடும் போது, அர்ச்சகர் என்ன செய்ய வேண்டும்?!

ஏன் முன்னர் இருந்த படி, இலவச தரிசன நேரம், கட்டண தரிசன நேரம், பூஜாகாலம், தளிகை நேரம், திருவாராதன சமயம் என்று நேரம் பிரித்து அதனை கண்டிப்பான முறையில் நடைமுறைப் படுத்திட அறநிலையத் துறையால் இயலவில்லை?!

இந்த நேரத்தில் ஒன்று நினைவுக்கு வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன் நான் சக்தி விகடனில் ஆசிரியராக இருந்த போது, இதே ஸ்ரீரங்கம் கோயில் பிரதான அர்ச்சகர் முரளி பட்டர் எழுதிய ‘பேசும் அரங்கன்’ தொடரை வெளியிட்டு வந்தேன்.

அதில், ஓர் இடத்தில் கோயில் நிர்வாக அதிகாரியாக அப்போது இருந்தவர், திருப்பதி கோயிலைப் போல், திருவரங்கத்திலும் விஸ்வரூப தர்சனத்தை அதிகாலை 3 அல்லது 4 மணிக்கு வைத்துக் கொண்டு, அதன் பின்னர் காலை தரிசனத்துக்கு சந்நிதியைத் திறந்து விடலாம் என்று கூறினாராம். அதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்த கோயிலார்கள், இங்கே தொண்டரடிப்பொடியாழ்வாரின் கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான் எனும் பாசுரம் பாடி, சூரிய உதயச் சூழலில்தான் பெருமாளை துயிலெழுப்புவோம். சூரிய உதயமே நிகழாமல், கதிரவன் கிழக்கு திசையில் வந்துவிட்டான் அரங்கனே பள்ளி எழு என்று நாங்கள் பொய்யாக பள்ளி எழுச்சி பாட முடியாது என்று மறுத்தார்கள். அதனால் அந்த முயற்சி கைவிடப் பட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த நடைமுறையில் சலனம் எதுவும் இன்றி உறுதியாக நின்றது போல், அர்ச்சகர்களும் தளிகை கைங்கர்ய விவகாரத்திலும், பழைய நடைமுறைகளைப் பின்பற்ற அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை சொல்லி உறுதியாக நிற்க வேண்டும் என்பதே நம் எண்ணம்! மட்டுமல்ல, திருவரங்க நகர் வாசிகளின் எண்ணமும் கூட!

– செங்கோட்டை ஸ்ரீராம் 

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,153FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,540FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

4 COMMENTS

 1. மடைப்பள்ளியில் தளிகை செய்ய ஆட்கள் இல்லை என்றும் அறமழிப்புத் துறையினர் என்ன தருகிறார்களோ அதை வைத்துத்தான் ஏதேனும் செய்ய முடியும் என்பது போன்ற நிலவர உண்மைகள் கவனிக்கத் தக்கவை. இவையே பிரச்சினையின் காரணங்கள். மறுக்க முடியாத இந்த உண்மைகளை ஆதாரங்களோடு வெளியிட்ட கட்டுரையாளருக்குப் பாராட்டுகள்.

  இக்குறைகளை வைத்துக் கொண்டு பெருமாளுக்கு சரியான நிவேதனம் செய்ய முடியாது என்பதும் உண்மையே. இதுபோன்ற காரணங்களால் அர்ச்சகர்கள் சரியாக நிவேதனம் செய்ய முடியவில்லை என்பதையே இக்கட்டுரையும் சொல்கிறது.

  அதைத்தானே ரங்கராஜன் நரஸிம்மன் ஜியும் சொல்கிறார். அவர் சொல்வதும் கட்டுரையாளர் சொல்வதும் ஒன்றேதான் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

  ரங்கராஜன் ஜி எடுத்த வீடியோவில் இக்கட்டுரை குறிப்பிடும் அர்ச்சகர் நிவேதிக்க எடுத்துவரும் கூடை காலியாக இருக்கிறது. காலியான கூடை என்பது பொய் எனக் கட்டுரையாளருக்குப் பேட்டியளித்தவர் சொல்லி இருக்கிறார்.

  வீடியோவில் தெரிவது எப்படி பொய் ஆகும் ? ரங்கராஜன் ஜி போட்ட வீடியோவில், 2:44 நிமிடத்தில் இருந்து இந்த வீடியோவைப் பாருங்கள். அர்ச்சகர் ஒரு கையில் கூடையை எடுப்பதிலிருந்து காலி கூடை என்பது உறுதியாகிறது.

  _https://m.facebook.com/story.php?story_fbid=10213108374963797&id=1226675652_

 2. மடைப்பள்ளியில் தளிகை செய்ய ஆட்கள் இல்லை, அறமழிப்புத் துறையினர் என்ன தருகிறார்களோ அதை வைத்துத்தான் ஏதேனும் சமையல் பெருமாளுக்குச் செய்ய முடியும் என்பது போன்ற நிலவர உண்மைகளை இந்தக் கட்டுரை சொல்கிறது.

  கட்டுரை சொல்லும் இக்குறைபாடுகள் கவனிக்கத் தக்கவை. இவையே பிரச்சினையின் காரணங்கள். மறுக்க முடியாத இந்த உண்மைகளை ஆதாரங்களோடு வெளியிட்ட கட்டுரையாளருக்குப் பாராட்டுகள்.

  இக்குறைகளை வைத்துக் கொண்டு பெருமாளுக்குச் சரியான நிவேதனம் செய்ய முடியாது என்பதும் உண்மையே. இதுபோன்ற காரணங்களால் அர்ச்சகர்கள் சரியாக நிவேதனம் செய்ய முடியவில்லை என்பதையே இக்கட்டுரையும் சொல்கிறது.

  அதைத்தானே ரங்கராஜன் நரஸிம்மன் ஜியும் சொல்கிறார். அவர் சொல்வதும் கட்டுரையாளர் சொல்வதும் ஒன்றேதான் என்பதை அனைவரும் உணர்கிறோம்.

  தேவையான பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதும், அவர்கள் கோவில் மரபுகளின்படி நடந்துகொள்ள விதிப்பதும் அறமழிப்புத் துறையின் கடமைகள். அவற்றை அவர்கள் செய்வதில்லை.

  அநியாயங்கள் செய்கிறார்கள். இந்த அநியாயங்களில் சிலவற்றை அர்ச்சகர்கள் எதிர்த்துத் திருத்துகிறார்கள். பலவற்றை அவர்களால் எதிர்த்து மாற்ற இயலாமல் தவிக்கிறார்கள்.

  காலியான கூடை என ரங்கராஜன் ஜி சொல்வது பொய் எனக் கட்டுரையாளருக்குப் பேட்டியளித்தவர் சொல்லி இருக்கிறார். ஆனால், ரங்கராஜன் ஜி எடுத்த வீடியோவில் இக்கட்டுரை குறிப்பிடும் அர்ச்சகர் நிவேதிக்க எடுத்துவரும் கூடை காலியாக இருக்கிறது.

  வீடியோவில் தெரிவது எப்படி பொய் ஆகும் ? ரங்கராஜன் ஜி போட்ட வீடியோவில், 2:44 நிமிடத்தில் இருந்து பாருங்கள். அர்ச்சகர் ஒரு கையில் கூடையை எடுப்பதிலிருந்து காலி கூடை என்பது உறுதியாகிறது.

  https://m.facebook.com/story.php?story_fbid=10213108374963797&id=1226675652

 3. As as nose is there Cold will be there. Like that the temples are targeted by politicians for income and idols lifting. These are being done by Dravidian members who do not have faith or fear God. The temples are under their control. Why not the minister or commissioner arrange to take persons for Madapalli. Is that temple run short of funds.Besides that local senior Vaishnavites should be appointed as Honorary Observers to ensure the Agma rituals are followed. The temples should not be under control of Govt but they should be managed and maintained by a committee and the persons with honest record and not political oriented. All Hindus should unite and fight for it. If temples are well the people in that place will prosper.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவாஜி கணேசன் குடும்பத்தில் மற்றுமொரு நடிகர் உதயம்!

தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக் கூத்து நாடகங்களில் பங்கேற்றுள்ளார்.

175 நாள்.. அகண்ட சாதனை படைத்த அகண்டா!

பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' படம் 175 நாட்கள் ஓடியிருப்பது திரையுலகினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

AK61: விமான ஓடு தளத்தில் இருக்கும் வீடியோ..!

அஜித் குமார் மற்றும் மஞ்சுவாரியர் இருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

பிரதமரின் சரியான, தொலைநோக்கு அணுகுமுறையை சிலாகித்த நடிகர் மாதவன்!

பதவிக் காலத்தை தொடங்கியபோது, ​​மைக்ரோ எகானமி மற்றும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினார்

Latest News : Read Now...