வங்காளப் படுகொலைகளும், பீகாரின் வன்முறைகளும் நடைப்பெற்ற நேரத்தில் காந்தி தில்லியில் இருந்தார். நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வந்ததால் தில்லியில் அவர் இருப்பது அவசியமானது.
ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல், அவர் எல்லா பணிகளையும் விட்டு விட்டு, கல்கத்தாவிற்கு ரயிலில் புறப்பட்டார். ரயில் பீகார் வழியாகப் பயணித்த போது, தூரத்தில் கிராமங்கள் பற்றி எரிவதை அவரால் ரயிலில் இருந்தவாறு பார்க்க முடிந்தது.
கல்கத்தா சென்றைடைந்தவுடன் அவர் பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் பீகாரில் வன்முறையில் ஈடுபட்டு வந்த ‘ காட்டுமிராண்டிகள்‘, 24 மணி நேரத்திற்குள், ’திருந்திய புதிய மனிதர்கள்’ ஆகாவிட்டால் தான் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவித்தார்.
காந்தியின் அறிவிப்பைக் கேட்ட பீகார் வாழ் ஹிந்துக்கள் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்தினார்கள். காந்தி கல்கத்தாவில் சில நாட்கள் தங்கியிருந்தார். பின் நவ்காளிக்கு புறப்பட்டுச் சென்றார்.
வங்கத்து ஹிந்துக்களுக்காக இரத்தக் கண்ணீர் வடித்தவர்கள் வேறு பலர் இருந்தனர். வங்கத்து வன்முறை ஏற்படுத்திய பேரழிவினால் பாதிக்கப் பட்டவர்களுக்கான நிவாரணப் பணியினில் ஈடுபட்டவர்களில் விஷ்ணு கார்கரேவும் ஒருவர். பின்னாளில் காந்தி கொலை வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக கூறப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்.
அவர் பூனா அருகேயிருந்த அஹமத்நகரில் ஹிந்து மகா சபாவை நிறுவி நடத்தி வந்ததைப் பற்றி முந்தைய பதிவு ஒன்றில் ஏற்கனவே பார்த்தோம். இப்போது விஷ்ணு கார்கரேயின் பின்னணி பற்றி பார்ப்போம்.
விஷ்ணு கார்கரே பிராமண பெற்றோர்களுக்கு பிறந்தவர். அவருடைய பால்யபருவம் பற்றி அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான். அவருடைய பிறந்த தேதி அவருக்கு தெரியாது.ஏனென்றால் அவருடைய பெற்றோர்கள், அவருடைய சிறு வயதிலேயே காலமாகி விட்டார்கள்.
பம்பாய் நார்த்கோட் ஆதரவற்றோர் விடுதியில் வளர்ந்து வந்தார். ஆதரவற்றோர் விடுதி ஆவணங்கள்படி அவருடைய பிறந்த வருடம் 1910.
சிறுவனாக, அவர் பள்ளிக்கு அனுப்பப் படவில்லை. அவராகவே பின்னாளில் மராத்தி எழுதவும், படிக்கவும் கற்றுக் கொண்டார். ஹிந்தியும் பேசக் கற்றுக் கொண்டார்.
10 வயதாக இருக்கும் போது பம்பாயில் ஒரு டீ கடையில் வேலை பார்த்தார். திடீரென ஒரு நாள் அங்கிருந்து பூனாவிற்கு ஓடிப் போய் விட்டார். 15 ஆண்டுகள் கடினமாக உழைத்த பின், ஒரு சாக்குப் பையில் தன் உடைமைகள் என இருந்த பொருட்களை மூட்டைக் கட்டிக் கொண்டு அஹமத்நகர் போய்ச் சேர்ந்தார்.
அங்கு, புறக்கணிக்கப்பட்டுக் கிடந்த ஒரு மாட்டுத் தொழுவத்தில் ஒரு சிறு டீ கடை துவங்கினார். தேநீரோடு, பூரியும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்தார். வாழ்க்கையால் மிகக் கேவலமாக நடத்தப்பட்ட ஒருவர், எப்படி மதத்தின் மீது ஈடுபாடு கொண்டார், எப்படி தேசத்திற்காகப் பணிபுரிய தோன்றியது என்பதெல்லாம் வியக்க வைக்கும் விஷயங்கள்.
அதுவும் சாதாரண ஈடுபாடு அல்ல. வெறியென்றே கூற வேண்டும். தேசமும் மதமும் அவருடைய இரு கண்கள் ஆயின. தேநீர்க் கடை முயற்சி வெற்றி பெற்றது. சில நாட்களில் அதை விரிவுப்படுத்தி சிறு, மலிவு விலையில் உணவு மற்றும் சிற்றுண்டி விற்கும் ஹோட்டல் ஆக்கினார்.
அதுவும் வெற்றி அடைந்தது. அங்கேயே வாடிக்கையாளர்கள் தங்கும் விடுதி ஒன்றையும் ஏற்படுத்தினார். ஹோட்டலுக்காக சிறு கட்டிடத்தையும் கட்டினார்.
திருமணம் செய்து கொண்டார். ஹோட்டலில் பணிபுரிய ஆட்களை நியமித்தார். அதன் பிறகு சமூகப் பணியில் ஈடுபடவும் அவருக்கு நேரம் கிடைத்தது.
தான் படிக்காவிட்டாலும் கல்விக்காக தான் ஏதாவது செய்ய வேண்டும் என ஆவல் கொண்டு, தன் விடுதியில், மாணவர்கள் தங்க அனுமதித்து குறைந்த வாடகைப் பெற்றுக் கொண்டார். மாணவர்களின் பொருளாதார வசதியை பொறுத்து இலவசமாகவும் அறைகள் கொடுத்தார்.
ஒரு அமெச்சூர் நாடக கம்பெனி தொடங்கினார். ஹிந்து மகா சபா பணியிலும் ஈடுபாடு கொண்டார். 1938ல் கட்சி வேலையாக சாவர்க்கர் அஹமத்நகர் வந்த போது,கார்கரே தன் அமெச்சூர் கம்பெனியின் நாடகம் ஒன்றைப் பார்க்க அவரை அழைத்தார்.
15 நிமிடம் மட்டுமே இருக்க சம்மதித்து வந்த சாவர்க்கர் 3 மணி நேரம் அமர்ந்து முழு நாடகத்தையும் பார்த்தார்.
1939ல் ஆப்தே முதன்முதலாக கார்கரேயை சந்தித்த போது, கார்கரே ஹிந்து மகா சபாவின் மாவட்டச் செயலாளராக இருந்தார். மூன்று வருடங்கள் கழித்து அந்த பகுதியிலே நகராட்சி தேர்தலிலே நின்று போட்டியின்றி வெற்றி பெற்றார்.
ஆக 32 வயதில் விஷ்ணு கார்கரே அஹமத்நகர் கபட் பஜாரில் இருந்த டெக்கான் விருந்தினர் விடுதிக்கு சொந்தக்காரர் .அத்தோடு முனிசிப்பல் கவுன்சிலரும் கூட. நார்த்கோட் ஆதரவற்றோர் விடுதி சிறுவன், இந்த உயரத்தை தொட்ட நேரத்தில் தான் நவ்காளி கலவரம் நடந்தது.
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
– எழுத்து: யா.சு.கண்ணன்




