சன் பிக்சர்ஸின் சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில், நடிகர் விஜய் நடித்துள்ள சர்க்கார் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சன் டிவி குழும தலைவர் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள சர்கார் படம், தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை தன்னுடையது என கூறி சென்னையை சேர்ந்த எழுத்தாளர் கே.வி.ராஜேந்திரன் என்ற வருண் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில் சர்க்கார் படத்தின் கதையை “செங்கோல்” என்ற தலைப்பில் எழுதி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தாம் பதிவு செய்திருப்பதாகக் கூறியுள்ளார். தன் கதையை திருடி, சர்க்கார் என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கியிருப்பதாக வருண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்ததாகவும், அச்சங்கத்தின் தலைவர் கே.பாக்கியராஜ், இருதரப்பையும் அழைத்து விசாரித்தார் என்றும், இறுதியில், இருவரது கதையும் ஒரே கதை தான் என்றும் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
தன் கதையில் சட்ட மாணவன் ஒருவன் வாக்களிக்கச் செல்லும் பொழுது அவனுடைய வாக்கை வேறு ஒருவர் பதிவு செய்வதாகவும், அதனை எதிர்த்து அவன் வழக்கு தொடர்ந்து வெற்றி பெறுவதாகவும் கதை எழுதி இருந்ததாக வருண் தெரிவித்துள்ளார். இவ்வாறான, தமது கதையில், இயக்குநர் முருகதாஸ் சில மாற்றங்களுடன் தொழிலதிபர் ஒருவர் தன் வாக்கை மற்றவர்கள் பதிவு செய்வதை எதிர்த்து வெற்றி பெறுவது போன்று கதையை அமைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
எனவே இந்தக் கதை மற்றும் திரைக்கதை முற்றிலும் தம்முடையதே என்றும் தெரிவித்துள்ளார். எனவே, இந்த படத்தின் கதையில் தன் பெயரையும் இணைக்க வேண்டும், 30 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், வழக்கு முடியும் வரை சர்கார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை வியாழக் கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி சுந்தர் தெரிவித்தார்.




