கார்கரேயின் சகோதரி திருமதி லலித் வீட்டில் ஒரு கப் தேனீர் அருந்தி விட்டு,செம்பூர் அகதிகள் முகாமிற்கு சென்று தங்கள் வேலையை உடனடியாகத் தொடங்கினார்கள்.
அந்த வார இறுதி பயனுள்ளதாகவே இருந்தது.யாரையெல்லாம் பார்க்க வேண்டும் என்று எண்ணினார்களோ, அவர்கள் அனைவருமே இருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில்,தாதர் பிளாஸா சினிமா வாசலில், தன் நண்பர் Dr.ஜெயினை மதன்லால் பஹ்வா எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது.
மாலையில் அவரை நேரில் வந்து சந்திப்பதாகக் கூறி விட்டு,மதன்லால் பஹ்வா அவரிடமிருந்து விடைப்பெற்றார். இரவு சுமார் எட்டு மணியளவில்,Dr.ஜெயினை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்தார் பஹ்வா.
அப்போது அங்கே,Dr.ஜெயினின் நண்பரும், டெக்ஸ்டைல் ப்ரோக்கருமான, அங்கத்சிங் என்பவர் உடனிருந்தார். அவர் மதன்லால் பஹ்வாவை ஏற்கெனவே சந்தித்திருக்கிறார்.
பின்னாளில் அங்கத்சிங் போலீஸில் சாட்சியம் அளித்த போது, ‘ மதன்லால் பஹ்வா அஹமத்நகரில் தான் நிகழ்த்திய சாகசங்களைப் பற்றி அள்ளி விட்டுக் கொண்டிருந்தார்.
எப்படி தன் நண்பர் கார்கரே சேத்தின் நிதி உதவியோடு முஸ்லீம்களை வேட்டையாடி ஒழிப்பதற்காக ஒரு கட்சியை துவக்கினார் என்று கூறினார்… எப்படி முஸ்லீம்களுக்கு சொந்தமான பழக்கடைகள்,காய்கறி கடைகள் ஆகியவற்றை கைப்பற்றினார் என்று சொன்னார்…
காங்கிரஸ் தலைவர் ராவ்சாஹிப் பட்வர்தன் அஹமத்நகர் வந்து ‘ சகிப்புத்தன்மை பற்றி போதனை செய்து,முஸ்லீம்களை தங்களது சகோதரர்களாக ஹிந்துக்கள் கருத வேண்டும் என்று கூறியது பற்றியும், உடனே அவர் ( பஹ்வா ) ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு மேடையேறி ,பட்வர்தனின் சட்டை காலரைப் பிடித்துக் கொண்டு, சகிப்புத்தன்மைப் பற்றியும் சகோதரத்துவம் பற்றியும் மீண்டும் பேசினால்.. ‘நடப்பதே வேறு ‘ என்று மிரட்டியது பற்றியும் கூறினார் என்றும் வாக்குமூலம் அளித்தார்.
அதன் பிறகு,மதன்லால் பஹ்வா தன் பாக்கெட்டிலிருந்த சில மராத்தி செய்தித் தாள்களை எடுத்து, தன்னைப் பாராட்டி அவற்றில் செய்திகள் வந்திருப்பதாகக் கூறினார்.
Dr.ஜெயினுக்கோ,அங்கத்சிங்கிற்கோ,மராத்தி மொழி தெரியாது,அத்தோடு கூட,Dr.ஜெயினுக்கு,பஹ்வா தனக்குத் தர வேண்டிய பணத்தை எப்போது திருப்பித் தருவார் என்பதை தெரிந்துக் கொள்வதிலேயே அதிக ஆர்வம் இருந்தது.
பஹ்வாவை பற்றி பத்திரிகைகளில் வந்ததைப் பற்றி தெரிந்துக் கொள்வதில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இரவு 8.30 சுமாருக்கு அங்கத்சிங் அங்கிருந்து விடைப்பெற்று சென்றார்.
சில நாட்களில் திரும்பி வந்து,Dr.ஜெயினுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விடுவதாகக் கூறி,மதன்லால் பஹ்வாவும் விடைப்பெற்று சென்றார்.
அன்றிரவு,அஹமத்நகரிலிருந்த தன் காதலி ஷெவந்தாவிற்கு ,மதன்லால் பஹ்வா ஒரு கடிதம் எழுதினார்.
( ஆனால் திங்கட்கிழமை மாலை வரை கடிதத்தை போஸ்ட் செய்யவில்லை.
அதன் காரணமாக,ஜனவரி 14 ந் தேதி,புதன்கிழமை காலையில்தான் ஷெவந்தாவிற்கு அந்த கடிதம் கிடைத்தது.)
அந்த வாரம் அமைதியாகக் கடந்தது. பத்திரிகைகளில் செய்திகள்,மவுண்ட்பேட்டன் சமஸ்தானங்களுடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தைகளைப் பற்றியே இருந்தது.
திங்கட்கிழமை மாலையில்தான் ( 12/01/1948 மாலையில் ) முக்கிய நிகழ்வுகள் நடைபெறத் துவங்கின. காந்தி 55 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு கொடுக்கும்படி வற்புறுத்தி உண்ணாவிரதம் தொடங்கினார் எனும் செய்தி தங்கள் ஆபீஸ் டெலிப்பிரிண்டர் வழியாக வந்தது.
அந்த செய்தியை படித்த அந்த கணத்தில், நாராயண் ஆப்தேயும்,நாதுராம் கோட்ஸேயும் முடிவு செய்தனர்.
‘காந்தி கொல்லப்பட வேண்டும்‘.
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
– எழுத்து: யா.சு.கண்ணன்