சாதுவான கோபால் கோட்ஸேயும்…..கொலை செய்வதற்கு தயாராகி விட்ட கோபால் கோட்ஸேயும்….. இது ஆங்கில நாவல்களில் வரும் JEKYLL and HYDE ஆளுமையை நினைவுப்படுத்தியது.
அவர் நல்லவரா…கெட்டவரா… அமைதியான வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருந்த ஒரு மனிதர்,தன் இரு பெண் குழந்தைகளை விட்டு விட்டு….இளம் மனைவியை விட்டு விட்டு…இப்படியொரு துணிகரமானச் செயலில் இறங்கியது எதனால் உந்தப்பட்டு….?
1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ந் தேதி,7 நாள் விடுப்பு வேண்டி,அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தார் கோபால் கோட்ஸே. விடுப்பிற்காகக் கூறப்பட்ட காரணம் … ‘ கிராமத்தில் அவசரமாக கவனிக்க வேண்டியிருந்த விவசாயப் பணிகளுக்காக’.
விடுப்பு மறுக்கப்பட்டது. மீண்டும் ஒரு விண்ணப்பம்… இம்முறை 17ந் தேதியிலிருந்து விடுப்பு வேண்டி… விடுப்பு அனுமதிக்கப்பட்டது.
செய்ய எண்ணியிருந்த காரியத்தின் காரணமாக என்ன நடக்குமோ என்று தெரியாத நிலை….ஆனாலும் விடுப்பிற்கான விண்ணப்பம்….!! விடுப்பு அனுமதிக்கப்பட்ட பின் தான் தன்னுடைய ‘ லட்சிய ‘ பணியை துவங்கினார் கோபால் கோட்ஸே !!
ஆக,ரிவால்வர் கோபால் கோட்ஸே மூலம் கிடைக்கும் என்பது உறுதியானது.
இப்போது தேவைப்பட்டது வெடிகுண்டுகள்.. ஏற்கெனவே திகம்பர் பாட்கே, மதன்லால் பஹ்வா மற்றும் கார்கரேயிடம் காட்டியிருந்த வெடிகுண்டுகள் மற்றும் இத்தியாதிகளை வாங்கிக் கொள்வது என்று இரண்டு தலைவர்களும் ( நாதுராம் மற்றும் ஆப்தே ) முடிவு செய்தனர்.
ஆப்தே திகம்பர் பாட்கேவிற்கு தகவல் அனுப்பினார். இது நடந்தது 1948 ஆம் வருடம் ஜனவரி மாதம் 13 ந் தேதி மாலை. வெளியூர் சென்றிருந்த பாட்கே சில மணி நேரத்திற்கு முன்புதான் ஊர் திரும்பி இருந்தார்.
ஆனாலும் ஆப்தேயிடமிருந்து அழைப்பு வரவும் உடனே அவரைக் காண புறப்பட்டுச் சென்றார். மதன்லால் பஹ்வாவிடம் பாட்கே காட்டியிருந்த அனைத்து வெடிகுண்டுகள் மற்றும் இதர வெடிப்பொருட்களையும் வாங்கிக் கொள்வதாகவும்,ஆனால் அவற்றை பாட்கே பம்பாயில் ‘டெலிவரி ‘ கொடுக்க வேண்டும் என்றும் ,அதற்கான பணம் பொருட்கள் கைக்கு வந்த பிறகு கொடுக்கப்படும் என்றும் ஆப்தே பாட்கேயிடம் கூறினார்.
வெடிப்பொருட்களோடு கையும் களவுமாகக் பிடிபடுவதை தவிர்க்கவே இந்த ஏற்பாட்டைச் செய்தார் ஆப்தே. ஒரு வேளை அந்த நேரத்தில் பாட்கேயிற்கு கொடுக்கப் பணம் இல்லாதிருந்திருக்கலாம்… பம்பாயில் வசூல் செய்து கொடுத்து விடலாம் என்றும் எண்ணியிருக்கலாம்.!
திகம்பர் பாட்கே,பொருட்களை பம்பாயில் கொடுத்து விட்டு அதற்குப் பிறகு பணம் வாங்கிக் கொள்ளுவதற்கு ஒப்புக் கொண்டார். ஆனால்,தனக்கும் தன் வேலையாள் சங்கர் கிஷ்டய்யாவிற்குமான பயணச் செலவை கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். இதற்கு ஆப்தே ஒப்புக் கொண்டார்.
அடுத்த நாள்,அதாவது ஜனவரி மாதம் 14ந் தேதி மாலையில் பம்பாய் ஹிந்து மஹா சபா அலுவலகத்தில் அனைவரும் சந்திப்பது என்று முடிவானது.
டெக்கன் எக்ஸ்பிரஸ் ரெயில் பூனா ரயில் நிலையத்திலிருந்து மாலை 3.30 க்கு புறப்பட்டு நான்கு மணி நேரம் கழித்து பம்பாய் விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையத்தை அடையும்.
ஜனவரி 14ந் தேதியன்று,திகம்பர் பாட்கே,தன்னுடைய வேலையாள் சங்கர் கிஷ்டய்யாவுடன் மூன்றாம் வகுப்பு பெட்டிக்குள் ஏறினார். சங்கர் கிஷ்டய்யா ,காகி துணியிலான ஒரு தோள் பையில் 5 கையெறி குண்டுகள்,இரண்டு COTTON SLABS 6 DETONATORS மற்றும் ஒரு COIL BLACK FUSE ஆகியவற்றை எடுத்துக் கொண்டார்.
இவைதான் ஆப்தேயிடமும்,நாதுராம் கோட்ஸேயிடமும் திகம்பர் பாட்கே பம்பாயில் சேர்ப்பதாக ஒப்புக் கொண்ட வெடிப்பொருட்கள்.
போலீஸ் தன்னுடைய செயல்பாடுகளை கண்காணித்து வருவதாக அறிந்திருந்த திகம்பர் பாட்கே கூடுதல் எச்சரிக்கையாக இருந்தார். ஒரு வேளை போலீஸ் தேடுதல் ஏதேனும் நடந்தால்,சங்கர் கிஷ்டய்யாதான் வெடி பொருட்களோடு மாட்டிக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்.
பாட்கேவிற்கு தான் மாறுவேடத்தில் இருக்க வேண்டும் எனும் எண்ணம் ஏற்பட்டது. பல வாரங்களாக தாடி வளர்ந்து வந்த அவர்,காவி வேட்டியும், முட்டியை தொடும் அளவிற்கான காவி அங்கியும் அணிந்து கொண்டார்.
கழுத்தைச் சுற்றி காய்ந்த பெர்ரி மாலைகள், நெற்றி நிறைய விபூதி போன்று மர நிறத்திலான பொடியை தடவி இருந்தார்.
இப்போது அவர் ஒரு ‘ சாது ‘ வாம், புனிதமானவராம். எந்த சாதுவும் இது போன்றதொரு படோடோபமான ஆடை அலங்காரம் செய்து கொள்வதில்லை. அந்த மூன்றாம் வகுப்பு ரெயில் பெட்டியில் அவர் ஒரு அபாய அறிவிப்பாகத்தான் காட்சி தந்தார்.
தன்னுடைய இந்த வேடம் தன்னை இன்னும் சந்தேகத்திற்கு உள்ளாக்கும் என்பதை உணராதிருந்தார் பாட்கே.
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
– எழுத்து: யா.சு.கண்ணன்




