தலையணை மந்திரத்தின் தவப் பயன்..!

உரத்த சிந்தனை கட்டுரைகள் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

ancient veda period guru sishya - 2026

மகள் மருமகளாகும்போது, மகன் மருமகனாகும்போது, மருதாயார், மருதந்தைன்னும் உறவு சொல்லி அழைக்கலாமோ? வார்த்தையிலும் வாழ்க்கை யிலும்!’ என நண்பர்களுடனான ஓர் அரட்டையில் பேசிக் கொண்டிருந்தேன்.

உடனிருந்த வைதீக அன்பர் சொன்னார், “நீர் சொல்வது பளிச்சென்று படுகிறது. அந்தக் காலத்துல மருமகள்கள்தான், மாமியார் மாமனாரை ‘அம்மா, அப்பா’ என அழைத்துக் கொண்டிருந்தார்கள்; இப்போதெல்லாம், சொந்த அம்மா அப்பாவை ‘எக்ஸ்ட்ரா லக்கேஜ்’ என்ற அடைமொழியோடு, விருத்தாச்ரமத்தில் (காப்பகங்களில்) விட்டு விட்டு, மாமியார்,மாமனாரை ‘அம்மா, அப்பா’ என்று அழைக்குமளவு நாகரீக வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள் மாப்பிள்ளைகளான இப்போதைய இளைஞர்கள்” என்று தடாலடியாகவே ஒரு போடு போட்டார்.

ஓ! இதுதான் உண்மையோ என்ற மயக்கம் ஏற்பட்டபோது, இன்னொரு நண்பர் சொன்னார், “பெற்றோரிடம் இருந்து பெற வேண்டியவற்றைப் பெற்ற பின், அவர்களை மறந்துவிடுவது இயல்பாகியுள்ளது! உண்மைதான். ஆனால், இது முழுவதும் மனைவியின் மூளைச் சலவைக்கு ஆட்பட்டதால் வந்த எண்ணம்; டிவி தொடர்களால் வக்கிரமாகிப் போயுள்ள சிந்தனை” என்றார்.

பரவாயில்லையே! ‘தலையணை மந்திரம்’ என்ற சொல், மூளைச்சலவை என்றபடி நவீன சொல்லாக்கத்தில் வந்து நிற்கிறதே என எண்ணிக் கொண்டேன்.

அப்போது இன்னொருவர் சொன்னார், “அப்படி அல்ல! வயதானவர்களும் முதலில் காலத்துக்குத் தக்க நடந்துகொள்ள வேண்டும். தம் மகன் பேரிலான அக்கறையைவிட, டிவி தொடர்களைப் பார்த்து, சுயநலனுடன், சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமல் ஒருவித மயக்கத்தில் இருக்கிறார்கள்” என்றார்.

எனக்கு யாரையும் குற்றம் சொல்ல மனமில்லை! ஆனால், இன்றைய சமூக நடப்புகள் மனத்தைக் குடைந்தெடுப்பது மட்டும் உண்மை! எல்லாவற்றுக்கும் காரணம், பொழுதை சரியானபடி போக்காமல், நம் மனத்தை கொந்தளிப்புக்கு உள்ளாக்கும் நிகழ்வுகளிலும் கதைகளிலும் தொடர்களிலும் செலுத்தி நம்மை நாமே அழித்துக் கொள்கிறோம் என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது.

சில காலம் முன்பு வரை சென்ற தலைமுறையினர் நன்றாகப் பொழுதை பயனுள்ள வகையில் போக்கி வந்தார்கள். அவர்களின் அறிவுரைகள் நம்மை வளர்த் தெடுத்தன. ஆனால் இன்று…? சொல்ல நா எழவில்லை!

‘தரித்திருந்தே னாகவே தாரா கணப்போர்
விரித்துரைத்த வெந்நாகத் துன்னை- தெரித்தெழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது’

– என்று நான்முகன் திருவந்தாதியில் திருமழிசையாழ்வார் அருளிச் செய்து நமக்கு வழிகாட்டுகிறார்.

எப்படிப் பொழுது போக்கினேன்…? நட்சத்திரங்களின் சஞ்சாரத்தை விரித்து உரைத்த ஆதிசேஷனின் அந்தராத்மாவாகிய உன்னை, பெருமானே உன்புகழை உணர்ந்து எழுதியும் வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசனை செய்தும் காலம் கழிக்கின்றேன் என்றார்!

இன்றைய பெரியோர்க்கு அடியேன் விடுக்கும் வேண்டுகோளும் இதுவே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.