அனைத்து ஜாதி அர்ச்சகர் சட்டம் ஒரு திராவிட மாயை – 2

இந்து அறநிலையத்துறை சட்டம் 1959 பிரிவு 55 
 
 இந்து ஆலயங்கள் மற்றும் அறக்கட்டளைகளை நிர்வகிப்பதற்காக தமிழக அரசு 1959ம் ஆண்டு, இந்து அறநிலையத்துறை சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. அப்போது அந்தச் சட்டத்தின் 55 வது பிரிவு, “சமய நிறுவனங்களில் பணியாளர்களுக்கான காலியிடங்கள் ஏற்படும்போது, அறங்காவலர், பரம்பரை உரிமைப் படி பணியமர்த்தலாம்” என்று கூறியிருந்தது. அவ்வாறு பரம்பரை உரிமை பெற்றிருப்பவர், பருவம் அடையாதவராகவோ அல்லது உடல் ஊனம் கொண்டவராகவோ இருந்தால் மட்டுமே அவரைப் பணியமர்த்தக் கூடாது என்றும் கூறியிருந்தது. 
 
 
Archaga 2
 
1970 ஆம் ஆண்டு இந்தப் பிரிவுக்குச் சட்டத்திருத்தம் கொண்டுவந்தபோது, பரம்பரை உரிமையை ரத்து செய்தது தமிழக அரசு. இதை எதிர்த்துத்தான் சேஷம்மாள் வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் சட்டத்திருத்தத்தை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல், ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது என்பதைப் பார்த்தோம். அதன் பிறகு 2006 ஆம் அண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்கும் வரையில் இவ்விஷயத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. 
 
 2006ல் பொறுப்பேற்றுக்கொண்ட தி.மு.க அரசு, “ஹிந்து மதத்தைச் சேர்ந்த எவரும் தேவையான தகுதிகளும் பயிற்சியும் பெற்றிருப்பின், ஆலயங்களில் அர்ச்சகராக நியமனம் செய்யப்படலாம்” என்கிற அரசாணையை (GO 118 / 23.05.2006) வெளியிட்டது. அந்த அரசாணையைப் பின்பற்றி அவசரச்சட்டம் (Ordinance No: 5/2006 dated 14.07.2006) கொண்டு வந்தது. அதில் 1970ல் ஏற்கனவே திருத்தம் செய்யப்பட்ட இந்து அறநிலையத்துறை சட்டம் 55(2)வது பிரிவில் மேலும் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்தது. அதாவது, “அல்லது எந்த மரபின் பழக்கவழக்கத்தின் படியும்” (“or on the ground of any custom or usage”) என்கிற திருத்தத்தையும் இணைத்தது. 
  
இந்தத் திருத்தத்தை விவரிக்கும் விதமாக, அவசரச்சட்டத்தின் 4ம் பத்தியில், “ஜாதி வேறுபாடு இல்லாமல் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும். மரபுவழிப் பழக்கவழக்கங்கள் இதற்கு இடையூறாக இருக்க முடியாது. இந்த நிலைப்பாட்டை சட்டத்தில் தெளிவு படுத்தியுள்ளமையால், அதற்கேற்றார் போல், இந்து அறநிலையத்துறை சட்டத்தின் 55வது பிரிவு திருத்தம் செய்யப்படுகிறது” என்று விளக்கம் கொடுக்கப்பட்டது. 
 
 பின்னர் அந்தச் சட்டம் (Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act 1959 – 15 of 2006) 20.08.2006 அன்று ஆளுனரின் கையெழுத்தைப் பெற்றது. ஆனால், அதில் 55வது பிரிவில் செய்யப்பட்ட இரண்டாவது திருத்தம் குறிப்பிடப்படவில்லை. அதாவது அவசரச் சட்ட அறிவிப்பில் காண்பிக்கப்பட்ட திருத்தம், சட்டத்திருத்தம் செய்யப்படும்போது காண்பிக்கப்படவில்லை. 
 
 அவசரச்சட்ட (Ordinance No: 5/2006 dated 14.07.2006) அறிவிப்பை எதிர்த்து சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் வழக்கு தொடர்ந்தபோது தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை சட்டம் 15/2006 கொண்டுவரப்படவில்லை. பிறகு இந்தச்சட்டம் ஆளுனரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கையெழுத்தாகி அமுலுக்கு வந்தபிறகு, அவசரச்சட்டம் (Ordinance) அனாவசியமானதாக (Redundant) ஆகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில், சிவாச்சாரியார்கள் தாக்கல் செய்துள்ள ரிட் மனுக்கள் மீதான விசாரணையில், அரசாணையின் (GO 118 / 23.05.2006) செல்லத்தக்க தன்மை மட்டுமே உச்ச நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட வேண்டியதாக ஆகிவிட்டது. 
 
 
இந்து அறநிலையத்துறை சட்டம் 1959 பிரிவு 28:
 
1947 ஆம் ஆண்டு தமிழ்நாடு கோயில் நுழைவு அதிகாரமளிப்புச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, ஒவ்வொரு சமய நிறுவனத்தின் அறங்காவலரும், கட்டளையின் வரையுரைகளுக்கும் நிறுவனத்தின் வழக்கத்திற்கும், அவற்றைப் பொறுத்து தகுதிறமுடைய அதிகாரி பிறப்பிக்கலாகும் சட்டப்படியான பணிப்புரைகள் அனைத்திற்கும் இணங்கவும், அதன் அலுவல்களும், நிதியங்களும், சொத்துக்களும், ஒரு சாதாரண நுண்ணறிவு உடைய ஒரு மனிதனுக்குச் சொந்தமாக இருக்குமாயின், அவர் அதனை எத்துணை கவனத்துடன் கையாளுவாரோ, அதே கவனத்துடனும், நிர்வகிக்கவும், பயன்படுத்தவும் கட்டுப்பட்டவர் ஆவார்.
 
 
இந்து அறநிலையத்துறை சட்டம் 1959 இன் பிரிவு 28 மேற்கண்டவாறு கூறுகிறது. இந்தப் பிரிவையும், பிரிவு 55ல் செய்யப்பட்ட திருத்தத்தையும், சேஷம்மாள் வழக்கு விசாரணையின்போது கருத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாஸன அமர்வு, பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தது:
 
ஆகம முறைப்படியான கோவில்களில், குறிப்பிட்ட மதக்குழுவினர் (உட்பிரிவினர் – Denomination) அர்ச்சகரகளாகப் பணிபுரிவதும், அவர்களே அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்படுவதும், மத மரபுப்படியான வழக்கத்தின் இன்றியமையாத நடைமுறைகளாகும். அந்தக் குழுவினரன்றி வேறு பிரிவினர் எவர் பணியமர்த்தப்பட்டு அவரால் கர்ப்பக்கிரகத்தில் உள்ள தெய்வம் தொடப்பட்டாலும் அது மாசுபட்டு அசுத்தம் ஆகிவிடுவதாக ஆண்டாண்டுகள் காலமாக நம்பப்படுகிறது. அகவே ஆகம விதிகளின் படியே அர்ச்சகர் நியமனம் செய்யப்பட வேண்டியது இன்றியமையாத மத நடைமுறையாக (Essential Part of Religious Act) ஆகிவிடுகிறது. ஆகவே அறங்காவலர் இந்த நடைமுறை வழக்கத்திற்குக் கட்டுப்பட்டவர் ஆகிறார். 
 
அதே சமயம், அர்ச்சகர்களாக ஆவதற்குப் பரம்பரை உரிமை கோருவது என்பது சமயச்சார்பற்ற (Secular) நடப்பாகக் கருதப்படலாம். சமயச்சார்பற்ற செயலை சமூக நலன் கருதி, ரத்து செய்யவோ, மாற்றியமைக்கவோ, அரசுக்கு உரிமையும் அதிகாரமும் உள்ளது. அவ்வாறு சமூக நலன் கருதி அரசு ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவருவதை அரசியல் சாஸனத்தின் 25 மற்றும் 26 க்ஷரத்துக்கள் அனுமதிக்கின்றன. உரிமையும் அதிகாரமும் அளிக்கின்றன. அதன் படி, பரம்பரை உரிமையை சட்டத்திருத்தம் மூலம் ரத்து செய்துள்ளதை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. 
 
Archaga 3
 
மேலும், அர்ச்சகர் நியமனம் என்று வரும்போது, பரம்பரை உரிமையில் மட்டும்தான் அறங்காவலர் குறுக்கீடு செய்யும் உரிமை உடையவரே தவிர, மற்றபடி கட்டளையின் வரையுரைகளுக்கும், நிறுவனத்தின் மரபுப்படியான வழக்கங்களுக்கும் அவர் கட்டுப்படவர் ஆகிறார். இதைத்தான் இந்து அறநிலையத்துறை சட்டத்தின் 28வது பிரிவு வலியுறுத்துகிறது. 
ஆகமங்களின் முக்கியத்துவம் 
 
சைவ சமயத்தில் மொத்தம் 28 ஆகமங்கள் உள்ளன. இவை சிவபெருமானால் நேரிடையாக அருளப்பட்டவை. எப்படி தன்னை முதலாம் தீக்ஷிதராகக் கொண்டு 2999 தீக்ஷிதர்களுடன் தில்லை மூவாயிரத்தார் என்று உருவாக்கினாரோ, அதே போல, ஆகமங்களைப் பின்பற்ற ஆதி சைவர்களையும் சிவபெருமானே உருவாக்கினார் என்பது ஐதீகம்; பல்லாண்டுகளாக இந்துக்கள் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை. 
 
திருமூலர் தன்னுடைய திருமந்திரத்திலும், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரும், பெரியபுராணத்தில் சேக்கிழாரும் ஆகமங்கள் மற்றும் ஆதிசைவர்களின் சிறப்புக்களைப் போற்றியுள்ளனர்.
 
Archaga 4
 
ஆலயம் கட்டும் முறைகள், சன்னிதிகள் கட்டும் முறைகள், தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்யும் முறைகள், தீக்ஷை, மந்திரங்கள், வழிபாட்டு முறைகள், உற்சவங்கள், திருவிழாக்கள் ஆகியவற்றை நடத்தும் முறைகள், மேற்கொள்ள வேண்டிய சம்ஸ்காரங்கள், பிராணாயாமம் (இடை, பிங்கலை முதலான நாடிகள்), யோகம் (மூலாதாரம் முதலியவை), அஷ்டமா சித்திகள், ஸ்ருஷ்டி முதல் மோக்ஷம் வரையுள்ள சைவத்தின் தத்துவக் கோட்பாடுகள் ஆகியவற்றை கிரியாபாதம், சரியாபாதம், யோகபாதம், ஞானபாதம் ஆகிய பிரிவுகளின் மூலம் விளக்குபவை ஆகமங்கள். (www.shaivam.org) 
 
காமிகம் முதலான 28 ஆகமங்களும், அவற்றின் அடிப்படையில் 207 உபாகமங்களும் ஆகம சாஸ்திரங்களை விளக்குகின்றன. ஆகமச் செயல்முறைகளை விளக்கும்படியாக பதத்திகள், ஆகம ஸ்லோகங்கள் தொகுக்கப்பட்ட ஸகலாகமஸங்கிரஹம், ஆச்சாரியார்கள் பலர் எழுதிய ஆகம உரைநூல்கள் ஆகியவை இருக்கின்றன. 
 
அதே போல, வைணவத்தில் இரண்டு ஆகமங்கள் இருக்கின்றன. அவையாவன வைகானஸம், பாஞ்சராத்ரம் ஆகியவை. சிவாலயங்களில் எப்படி சிவாச்சாரியார்கள் மதக்குழுவினராக உரிமை பெற்றுள்ளார்களோ, அதே போல வைணவ ஆலயங்களில் பட்டாச்சாரியார்கள் மதக்குழுவினராக பூஜைகள் செய்ய உரிமை பெற்றுள்ளார்கள். (துக்ளக் 30.12.2015)
 
தமிழகத்தின் வரலாற்றைப் பார்க்கும்போது நமக்கு நம்முடைய ஆன்மீக மரபு நன்கு விளங்கும். தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் ஆகம விதிகளின் படியே தான் ஆலயங்களை எழுப்பினார்கள். அவற்றின் படிதான் அர்ச்சகர்களையும் நியமித்து அவர்களுக்கு வாழ்வாதாரங்களையும் அளித்தார்கள். ஆகமவிதிகளின் படிதான் வழிபாட்டுமுறைகளையும், திருவிழாக்களையும் நடத்தினார்கள். ஆலயத்தின் நலன், அர்சகர்களின் நலன், பக்தர்களின் நலன் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு செயலாற்றினார்கள். இவற்றுக்கெல்லாம் கல்வெட்டு அதாரங்கள் இருக்கின்றன. ஆகவே, எப்படி ராமாயணத்திற்கு வால்மீகியே முழு அதிகாரம் உடையவரோ, மகாபாரதத்திற்கு வியாசர் முழு அதிகாரம் உடையவரோ, அதே போல நமது ஆலயப் பாரம்பரியத்திற்கு ஆகமங்களே முழுமையான இறுதியான அதிகாரம் உடையவை. 
 
 
 
 
Archaga 5
 
“ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட கோவில்களில், அதற்குரியோர் அர்ச்சனை செய்ததை தான், அந்தந்த கோவில்களின் கல்வெட்டுகள், செப்பேடுகள் தெரிவிக்கின்றன. அதையே, சுப்ரீம் கோர்ட்டும் தெரிவித்திருந்தால், அந்த தீர்ப்பு சரியானதாகவே இருக்கும். பொதுவாக, தென் மாநில கோவில்களில், கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகம விதிமுறைகள் பற்றி கூறுகின்றன. வட மாநிலங்களைப் பொருத்தவரை, இஸ்லாமியர்களின் படையெடுப்பிற்கு பின், கோவில்களும், அவற்றின் ஆவணங்களும் அழிக்கப்பட்டன. இருந்தாலும், பலர் பாதாள அறைகளில், ஆகம சுவடிகள் உள்ளிட்ட ஆவணங்களை மறைத்து வைத்து, படித்து பாதுகாத்து வந்துள்ளனர். அர்ச்சனை செய்வோருக்கு, காணி என்னும் நிலம் தானமாக வழங்கப்பட்டதை பற்றிய கல்வெட்டு செய்திகள் அதிகம் உள்ளன. பல்லவ, சேர, சோழ, பாண்டிய, விஜயாலய, நாயக்கர் உள்ளிட்ட அனைத்து மன்னர்கள் கட்டிய கோவில்களிலும், இந்த செய்திகள் கிடைக்கின்றன. கிராம கோவில்களில் பூஜை செய்யும், சைவ ஆகமங்களை பின்பற்றும் பல குருக்கள் குடும்பங்கள், மிகவும் ஏழ்மை நிலையில் தான் உள்ளன. ஆகமங்களில், பூஜைக்கு சமைக்கும் முறை, பிரசாதமாக கொடுக்கும் முறைகள் கூட சொல்லப்பட்டுள்ளன. தற்போது, கோவில்களில் விற்கப்படும் பிரசாதங்கள் ஆகமத்திற்கு எதிரானவை. இறைவனுக்கு படைக்கப்பட்ட பொருளை, விற்பது குற்றம் எனவும், ஆகமம் சொல்கிறது. அப்படிப்பட்ட ஆகமங்களை கற்று, வழிவழியாக பூஜை செய்யும் மரபை உடைப்பதால், பூஜை, பக்தி, கோவில்களின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கைகள் உடையும்” என்று பிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் நாகசாமி கூறியுள்ளார். (தினமலர் – 17.12.2015)
 
இன்றைய யதார்த்த நிலை
நமது நாட்டில் உள்ள கோவில்களில் ஆகம விதிகள் பின்பற்றும் கோவில்கள், சமுதாயக் கோவில்கள், கிராமக் கோவில்கள் என்று பலவகை கோவில்கள் உண்டு. 
ஆகம விதிகளின் படி கட்டப்பட்ட கோவில்களில் குறிப்பிட்ட வகுப்பினர் தான் அர்ச்சகர்  ஆகலாம் என்றிருக்கிறது. மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் அர்ச்சகராக இருப்பவர் சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் அர்ச்சனை செய்ய முடியாது. ஸ்ரீரங்கம் அர்ச்சகர் திருப்பதியில் பணிபுரிய முடியாது. ஆகம விதிகள் பின்பற்றும் கோவில்களில் மற்றவர் பூஜைக்கு உரிமை கோர முடியாது. இதைத்தான் உச்ச நீதிமன்றமும் சுட்டிக்காட்டியுள்ளது. 
 
பிறகு காலப்போக்கில் ஆகம விதிகளின் படி அல்லாமல் பல கோவில்களும் கட்டப்பட்டன. அவற்றில் பல ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகராகப் பணி புரிய ஆரம்பித்தனர். 
 
சமுதாயக் கோவில்கள் என்பவை ஜாதி சமுதாயங்கள் கட்டி நிர்வகிப்பவை. அவற்றில் அவர்கள் தங்கள் சமுதாயத்தினரையே அர்ச்சகராகப் பணியமர்த்துகிறார்கள். சில சமூகத்தினர், பிராம்மணர்களையே அர்ச்சகர்களாக நியமனம் செய்கிறார்கள். 
 
மற்றொரு புறம் எல்லைத் தெய்வங்களுக்கென கோவில்கள், கிராமக் கோவில்கள் ஆகியவையும் கட்டப்பட்டன. அவற்றில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பூசாரிகளாக பணியில் இருந்து வருகின்றனர். 
 
 
Archaga 6
 
 
இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் பல ஜாதிக்காரர்களுக்கும் அந்த மாதிரியான எல்லை தெய்வங்கள், கிராமக் கோவில்களின் தெய்வங்கள் குல தெய்வங்களாக இருப்பதுதான். 
உதாரணத்துக்கு காஞ்சி முனிவர் பரமாச்சாரியாருக்கு சிறுவாச்சூர் மதுர காளியம்மன் தான் குல தெய்வம். அவர் அங்கே கர்ப்பக்கிரகத்தில் நுழைய மாட்டார். அந்தக் கோவில் பூசாரிகள் கொடுக்கும் பிரசாதத்தை வெளியிலிருந்துதான் பெற்றுக்கொள்வார். 
 
பல பிராம்மணர்களுக்கு சாஸ்தா, சுடலை மாடன், மதுரை வீரன், ஐயனார் பெரியாண்டவர் போன்ற கிராமத் தெய்வங்களே குலதெய்வம். இவற்றில் சில தெய்வங்களுக்கு உருவமில்லை. உருவமில்லா கல் தான் குல தெய்வமாக இருக்கின்றது. பல ஜாதியினருக்கு ஒரே குல தெய்வம் உள்ளது.  
 
எப்படி ஆகம விதிகள் பின்பற்றும் கோவில்களில் மற்றவர் பூஜைக்கு உரிமை கோர முடியாதோ, அதே போல, கிராமக் கோவில்களில் சிவாச்சாரியார்களும், பட்டாச்சாரியார்களும் பூஜைக்கு உரிமை கோர முடியாது. ஏன், சங்கராச்சாரியார்கள் கூட அந்தக் கோவில்களில் கர்ப்ப க்ருஹத்தில் நுழைவதில்லை. இந்தக் கிராமக் கோவில்களில் பெரும்பாலும் தலித்துகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தாம் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். 
 
மேற்குறிப்பிட்ட வகைகளில் இல்லாத பல கோவில்கள் இருக்கின்றன. இவைகளிலும் அனைத்துத் தரப்பினரும் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள்.
 
இந்தப் பிரச்சனையில் கவனிக்க வேண்டிய விஷயம், அந்தக் கால மன்னர்கள் ஆகம விதிகளின் படி கட்டிய கோவில்களில், ஆகம விதிகளின் படி நியமிக்கப்பட்ட சிவாச்சாரியார்களும், பட்டாச்சாரியார்களும் தான் பரம்பரை பரம்பரையாக அர்ச்சகர்களாகப் பணி புரிந்து வருகின்றனர். இந்த ஆன்மிகப் பாரம்பரியத்தை நமது அரசியல் சட்டம் காப்பாற்றுகிறது. பாதுகாக்கிறது. அந்த சிவாச்சாரியார்களும், பட்டாச்சாரியார்களும் நமது அரசியல் சாஸனப்படி Separate Denominations. அவர்களுடைய நலனை அரசியல் சாஸனம் (க்ஷரத்து 25, 26) பாதுகாக்கிறது. 
 
இதைத்தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. அதே சமயத்தில், பிறப்பு அடிப்படையில் அர்ச்சகர் நியமிக்கப்படுவதையும் நிராகரித்துள்ளது. அதாவது, ஆகம விதிப்படி கட்டப்படாத கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கலாம்.  எந்த சிவாச்சாரியாரும், பட்டாச்சாரியாரும், ஆன்மீக ஆர்வலர்களும் அதை எதிர்க்கப் போவதில்லை.  
 
 
சிதம்பரம் கோவில் தீர்ப்பை ஏன் சுட்டவில்லை? 
 
Archaga 7
 
பல வருடங்களாக நடந்துகொண்டிருந்த சிதம்பரம் கோவில் வழக்கில், ஜனவரி 2014ல் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம். அந்தத் தீர்ப்பில் ஒரு முக்கியமான அம்சமாக, “அரசியல் சாஸனப்படி, அதன் க்ஷரத்து 26-ன் கீழ் சிதம்பரம் தீக்ஷிதர்கள் “மத உட்பிரிவினர்” (Religious Denomination) என்கிற அந்தஸ்தை உடையவர்கள். ஆகவே சிதம்பரம் கோவிலை நிர்வகிக்க அவர்களுக்கு பரிபூரண உரிமை உண்டு. தீக்ஷிதர்களின் இந்த உரிமைகளை இந்து அறநிலையத்துறை சட்டத்தின் 107வது பிரிவும் உறுதி செய்கிறது. மேலும், இந்து அறநிலையத்துறை சட்டத்தின் 45-வது பிரிவின் கீழ் ஒரு கோவில் நிர்வாகத்தைச் சரி செய்து முறைப்படுத்த குறிப்பிட்ட கால அளவிற்குத்தான் செயல் அலுவலரை நியமிக்க முடியும். நிர்வாகத்தை முறைப்படுத்திய பின் சம்பந்தப்பட்டவர்களிடம் அதை மீண்டும் கொடுத்துவிடவேண்டும். ஆகவே, எந்தக் காரணத்தைக்கொண்டும் நிரந்தரமாக ஒரு செயல் அலுவலரை அரசு நியமிக்க முடியாது” என்று குறிப்பிட்டிருந்தது உச்ச நீதிமன்றம். 
 
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் வழக்கில், பல வழக்குகளின் தீர்ப்புகளைக் கருத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம், சமீபத்தில் தானே தீர்ப்பளித்த முக்கியமான வழக்கான சிதம்பரம் கோவில் வழக்கை ஏன் கருத்தில் கொள்ளவில்லை என்பது புதிராக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் சிதம்பரம் கோவில் வழக்கின் தீர்ப்ப்பைக் கருத்தில் கொண்டிருந்தால், சிவாச்சாரியார்களும், பட்டாச்சாரியார்களும் தீக்ஷிதர்களைப் போல மத உட்பிரிவினர் (Religious Denomination) என்று உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அனைத்து ஆகம கோவில்களிலிருந்தும் செயல் அலுவலர்களை நீக்கியிருந்திருக்கலாம். அதுவே சரியானதும் கூட! 
 
இந்து அறநிலையத்துறை தகவல்கள்
 
தமிழகத்தில் தன்னுடைய கட்டுப்பாட்டில் எத்தனைக் கோவில்கள் இருக்கின்றன என்பதே தமிழக அரசுக்குத் தெரியாது. கடந்த பல ஆண்டுகளில் பலவிதமான கணக்குகளைப் பல தருணங்களில் கொடுத்துள்ளது அரசு. கடந்த சில ஆண்டுகளாக ஏறக்குறைய 36,000 கோவில்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்று கொள்ளலாம். இவற்றை, சிவன் கோவில்கள், விஷ்ணு (பெருமாள்) கோவில்கள், முருகன் கோவில்கள், விநாயகர் கோவில்கள், அம்மன் கோவில்கள், மற்ற கோவில்கள் என்கிற வகைகளில் பிரித்துள்ளது அறநிலையத்துறை. 
 
 
இதில் 1961ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி, முறையாக பூஜைகள் நடைபெறும் கோவில்களில் அர்ச்சகர்கள் பணியாற்றும் சதவிகிதம் பின்வருமாறு:
 
 
 
 
 
கோவில்கள்சிவன்விஷ்ணுமுருகன்விநாயகர்அம்மன்மற்றவை
அர்ச்சகர்கள்      
பிராம்மணர்20911641247528357370
மற்றவர்168285814201692585
பிராம்மணர்%92.585.27155.717.439.5
மற்றவர் %7.514.82944.382.660.5
 
 
இது 1961ல் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள, அதுவும் முறையான பூஜைகள் நடந்துகொண்டிருக்கும் கோவில்களின் அர்ச்சகர்கள் கணக்கு. 1971ல் தான் பரம்பரை உரிமையை ரத்து செய்த சட்டம் அமலுக்கு வந்தது. அதன் பிறகு மாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு அதிகம். அதாவது பிராம்மணர் அல்லாத மற்ற ஜாதியினரருக்கு அதிக வாய்ப்புகள் கிட்டியிருக்கும். 
 
மேலும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத ஜாதி சமுதாயக்கோவில்கள், கிராமக் கோவில்கள் ஆகியவற்றில் பிராம்மணர் அர்ச்சகராக இருப்பது மிகவும் குறைவே. 
ஆகவே தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் பிராம்மண்ர்கள் தான் அர்ச்சகர்களாக இருப்பது போலவும், மற்ற ஜாதியினர் அனுமதிக்கப்படுவதில்லை போலவும் திராவிட அரசுகளும் மற்ற கட்சிகளும் கிளப்பிவிடுவது வெறும் திராவிட மாயை அன்றி வேறில்லை. இப்படி ஒரு திராவிட மாயையைக் கிளப்பிவிட்டு, அதற்கென ஒரு அரசாணையைப் பிறப்பித்து சட்டமும் கொண்டு வருவது திராவிட அரசுகள் செய்யும் அநியாயம். ஜாதிவாரியாக மக்களைப் பிரித்து விளையாடும் அராஜகம் ஆகும். 
 
  
முடிவுரை:
 
பெருமதிப்பிற்குரிய சிவாச்சாரியார் திரு.அருண சுந்தரம் அவர்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையொட்டி, ஆகம சாஸ்திரங்கள் பற்றியும், ஆகம ஆலயங்கள் பற்றியும், சிவாச்சாரியார் ஆவதற்கான தகுதிகள் பற்றியும் விவரமாகத் துக்ளக் இதழில் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றைப் படிக்கும்போது, நமது ஆலயங்களில் நிலவும் ஆன்மீகப் பாரம்பரியம் பற்றி நமக்கு அளப்பரிய பெருமிதம் ஏற்படுகின்றது. 
  
சிவாச்சாரியார்களும், பட்டாச்சரியார்களும், தீக்ஷிதர்களும் இறைவனால் இறைப்பணிக்காக உருவாக்கப்பட்ட பரம்பரையினர் என்று பகதர்களால் மதித்துப் போற்றப்படுகின்றனர். இவர்களில் வெகு சிலர் பக்தர்களிடம் முறையாக, நல்லபடியாக நடந்துகொள்வதில்லை என்கிற கருத்து பொதுவில் நிலவுகிறது. இந்தக் கருத்து களையப்படவேண்டும். அதற்கேற்றவாறு ஆகம அர்ச்சகர்கள் நடந்துகொள்ள வேண்டும். அருண சுந்தரம் அவர்கள் சுட்டிக்காட்டியபடி தமது தகுதிகளை வளர்த்துகொள்ள வேண்டும். அவ்வாறு இவ்விஷயத்தில் உடனடியாகக் கவனம் செலுத்தி நடந்துகொண்டால், பொதுமக்கள் அனைவரின் ஆதரவையும் பெறலாம். பொது மக்களின் ஆதரவு இருக்கும்போது, அரசுகளின் அனாவசியக் குறுக்கீடுகள் இருக்காது. 
 
 
(முற்றும்)

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.