October 21, 2021, 7:55 am
More

  ARTICLE - SECTIONS

  போலீஸின் ‘பார்வை’ பலாத்காரத்திலும்… ஊடகங்களின் கொச்சை ‘கேள்வி’ பலாத்காரத்திலும்… சின்னாபின்னமாகும் மகளிர் மாண்பு!

  "நீங்கள் ஏன் உடனே அந்த கான்ஸ்டபிளை "டேய்! ஏண்டா என் மார்பை உறுத்துப் பார்க்கிறாய்?" என்று கேட்டிருப்பது தானே மேடம்?" என்று ஒரு டிவி ரிப்போர்ட்டர் அவரிடம் கேட்டுள்ளார்!

  woman drawing - 1

  நோ” என்றால் ‘நோ” தானே? அன்னைக்கு என்ன ட்ரெஸ் போட்டிருந்தீங்க? – கொத்தும் வல்லூறுகளாய் ஊடகங்கள்

  ஒரு ஆண் ஒரு பெண்ணைப் பார்க்கையில் முதலில் எங்கு பார்க்கிறான்?

  “கொங்கை இளநீரால் குளிர்ந்த இளஞ்சொற் கரும்பால்
  பொங்கு சுழி என்னும் பூந்தடத்தில் – மங்கை நறும்
  வாசக் குழல் நிழற் கீழ் ஆறேனோ
  வெய்தாமக் காம விடாய் – என்று நளவெண்பாவில் ஒரு பாட்டு உள்ளது.

  அதன் பொருள் இவ்வாறு உள்ளது. “பெண்களைக் கண்டால் ஒருவனுக்கு முதலில் அவர்களுடைய ஸ்தனத்தைக் காண ஆசை தோன்றும். அது பூரிப்பாக இருந்தால் அவனுடைய மனதில் மோகம் மிகுதியாக உண்டாகும். அதனால் கொங்கை இளநீரால் என்று முதலில் சொன்னார் கவி.

  பின்பு அந்த பெண்ணோடு பேச்சுக் கொடுக்கத் தோன்றும். பேசும்போது அவளுடைய இனிய சொல் அவனுடைய உள்ளத்தில் குளிர்ச்சியை உண்டாக்கி கரும்பு போல் இனிக்கும்”..

  அநேகமாக ஆண்களில் பலர் இவ்விதம்தான் பெண்களை போகப் பொருட்களாக பார்க்கிறார்கள். பெண்களும் வேறு வழி இல்லாமல் ‘பாவி! கண்ணு ரெண்டும் அவிஞ்சு போகணும்’ என்று சபித்து விட்டு தம் வேலையைப் பார்த்துக் கொண்டு போகிறார்கள்.

  கண்ணால் கெடுக்கும் காமுகர்களை சகித்துக் கொண்டுதான் பெண்கள் சமுதாயம் வாழவேண்டி இருக்கிறது. தெருவில் நடந்து செல்லும் போதும், பஸ்களிலும் கடைகளிலும்… ஒரு இடம்தான் என்று சொல்ல இயலாமல் எங்கு பார்த்தாலும் இந்த ‘பார்வை வன்முறை’ பெண்களைச் சீண்டுகிறது.

  பெண்களுக்கு உடையில் கட்டுப்பாடு விதிக்கும் தலைவர்கள் ஆண்களின் கண்களுக்கு கடிவாளம் போட மறந்தது ஏன்? சேலை கட்டிய மாந்தரை மட்டும் சீண்டாமல் விடுகிறார்களா என்ன சீர்கெட்ட ஆண்கள்? இதுவும் ஒரு வகை பாலியல் வன்முறைதான்.

  woman - 2

  பெண் சிசுவை கருவிலேயே கலைப்பது முதல், கண் பார்வையால் காமுறுவது வரை பெண்களுக்கான கொடுமைகள் சொல்லிலடங்காது. மனத்தால் வன்முறை, உடலால் வன்முறை என்று வீட்டிலும் வெளியிலும் எதிர்கொள்ளும் அராஜகங்களை மௌனமாக பொறுத்துக்க கொண்டு பெண் என்பவள் பூமிக்குச் சமமாக பொறுமை கொண்டவள் என்பதை நிரூபித்து வருகிறாள்.

  ஆனால் பெண் பிறப்புறுப்பு சிதைப்பு (Female Genital Mutilation) போன்ற கொடூரமான செயல்களையும் எதிர்கொண்டு போராடி ஓரளவு வெற்றி கொண்டு வருகிறது பெண்ணினம். கருவிலிருந்து மரணம் வரை பல்வேறு வழிகளில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகுகிறார்கள் பெண்கள்.

  மொழியைத் தாய் மொழி என்கிறோம். நிலத்தை பூமா தேவி என்கிறோம். தேசத்தை தாய் நாடு என்கிறோம். ஆனால் சுதந்திரமாக வாழ விடாமல் உயிரோடிருக்கும் போதே பெண்களுக்கு நரகத்தின் வேதனையை அனுபவிக்க வைக்கிறது உலகம்.

  woman EMPOWERMENT - 3

  இன்னும் எத்தனை காலம் தான் இந்த இழிநிலையைப் பொறுத்துக் கொண்டிருப்பது? என்று பொங்கி எழுகிறார் குழந்தைகள் நல ஆர்வலரான வர்ஷா என்ற பெண்.

  அவருக்கும் இந்த நிலை ஏற்பட்டது. அவர் என்ன செய்தார்? வர்ஷாவின் தந்தை ஹைதராபாத் ஜீடிமெட்லா என்ற இடத்தில் மனைவியின் மறைவுக்குப் பின், வீட்டு வேலைக்கு ஒரு உதவியாளரை அமர்த்திக் கொண்டு தனியாக வசிக்கிறார். வர்ஷா அமீர்பேட் என்ற இடத்தில் வசிக்கிறார்.

  தந்தைக்கு உடல் நலம் சற்று சரியில்லாமல் இருந்ததால் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார் வர்ஷா. அதற்குள் அந்த உதவியாளர், தந்தையின் வீட்டிலிருந்த பணத்தையும் மதிப்புள்ள சில பொருள்களையும் சுருட்டிக் கொண்டு தலை மறைவாகி விட்டார்.

  அன்று காலை… மருத்துவமனைக்குச் சென்ற வர்ஷா, திருட்டு குறித்து புகார் கொடுக்க நேராக மருத்துவமனையிலிருந்து மாலையில் போலீஸ் ஸ்டேஷன் சென்றுள்ளார். அங்கு அவரை நான்கு மணி நேரம் நிறுத்தி வைத்தனர் போலீசார்.

  மேலும் சம்பவம் நடந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி வர்ஷாவுடன் இரண்டு கான்ஸ்டபிள்கள் வந்துள்ளனர். அவர்களில் ஒரு கான்ஸ்டபிள், வர்ஷா திருட்டு குறித்து விவரிக்கையில் அதில் மனம் செலுத்தாமல் வர்ஷாவின் இடது மார்பகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அதை கவனித்து சங்கடமாக உணர்ந்த வர்ஷா, அவர் கவனத்தை திசை திருப்ப கையை ஆட்டிப் பேசி இருக்கிறார். இடம் மாறி அமர்ந்திருக்கிறார்.

  k r laedy - 4

  ஆனாலும் அந்த ஆணுக்கு புத்தி வரவில்லை. ஒரு வழியாக அவர்கள் சென்றதும். அன்றிரவு தன் வீட்டுக்குத் திரும்பிய வர்ஷா, மனம் பொறுக்காமல் அந்த கான்ஸ்டபிளின் செயல் குறித்து முக நூலிலும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஆனால் நான்கு நாட்கள் ஆனாலும் போலீஸ் தரப்பிலிருந்து எந்த எதிர் விளைவும் இல்லை.

  வர்ஷாவின் தோழிகளும் போலீஸ் கான்ஸ்டபிளின் செய்கையை கண்டித்து தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடவே, ஹைதராபாதின் சைபராபாத் போலீஸ் உதவி கமிஷனர் ஷர்மிளா என்ற பெண் அதிகாரி, வர்ஷாவை தொலைபேசியில் அழைத்து நடந்த விவரத்தைக் கேட்டறிந்துளளர். அவர் கூறிய செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனார் வர்ஷா.

  “என்ன செய்வது? எங்கள் நிலைமையும் இப்படித்தான் உள்ளது. நாங்களும் இது போன்று கேவலமாக உற்றுப் பார்க்கப்படும் அவமானத்துக்கு உள்ளாகிக் கொண்டுதான் இருக்கிறோம்” என்று கூறி வருந்தி இருக்கிறார். இதனையும் சமூக வலை தளங்களில் பதிவிட்டார் வர்ஷா.

  இது ஒரு சின்ன விஷயம். பெரிதாக சொல்ல வந்து விட்டார்கள் என்று அது வரை சும்மா இருந்த உலகம், அதிகாரி கூறிய விளக்கத்தைப் படித்ததும் வர்ஷாவுக்கு இன்னொரு வகையான சித்திரவதையைக் கொடுக்க ஆயத்தமானது.

  “ஆகா! சுவையான சென்சேஷனல் செய்தி” என்று டிவி சேனல்கள் எல்லாம் விழித்துக் கொண்டன. ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு வர்ஷாவை மொய்க்க ஆரம்பித்தன.

  “போதுமடா சாமி! என்னை தனியாக விடுங்கள்!” என்று சமூக வலைத்தளங்களில் அப்பெண் நொந்து போய் புலம்பும்படி செய்து விட்டார்கள் மீடியாக்கள்.

  அந்த கான்ஸ்டபிள் பார்த்த கேவலமான பார்வையை விட கேவலமாக தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் தன்னைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்கின்றன என்று வருந்துகிறார் வர்ஷா.

  51 சேனல்கள் ஒரே நாளில் தன்னை ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் மார்பை உற்றுப் பார்த்த செய்தியை திரும்பத் திரும்ப விவரிக்கச் சொல்லி செய்த கொடுமையை தாள முடியாமல் தவித்தார் வர்ஷா. தன்னைத் துளைத்தெடுத்த டிவி சேனல்கள் பெயர்களை ஒன்றுவிடாமல் முக நூலில் வெளியிட்டு பெண்களிடம் நாசூக்காக நடந்துகொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துளளார் வர்ஷா.

  “அன்றைக்கு அப்படி என்ன உடை அணிந்திருந்தீர்கள்? எக்ஸ்போசிங்காக ஏதாவது அணிந்திருந்தீர்களா? மார்புடன் ஒட்டிய உடையா? என்றெல்லாம் கேட்கிறார்கள். இத்தனைக்கும் ஒரு காட்சி ஊடகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எடுத்த இன்டர்வியூவில் இதே கேள்வியைக் கேட்ட போது பொறுமையாகவே பதிலளித்தேன். அன்றைக்கு பேண்ட்டும் முழுக்கை ஷர்ட்டும் அணிந்திருந்தேன். காலையிலிருந்து மருத்துவமனையில் இருந்து விட்டு சோர்வாக அப்போது தான் திரும்பி இருந்தேன். வருத்தத்தில் இருந்தேன்”.

  “நீங்கள் ஏன் உடனே அந்த கான்ஸ்டபிளை “டேய்! ஏண்டா என் மார்பை உறுத்துப் பார்க்கிறாய்?” என்று கேட்டிருப்பது தானே மேடம்?” என்று ஒரு டிவி ரிப்போர்ட்டர் அவரிடம் கேட்டுள்ளார்!

  “அந்த சமயத்தில் அவ்வாறு கேட்டால், அதை அந்த தீயவன் ஒப்புக் கொள்ளவா போகிறான்? எப்படியோ அவர்கள் எழுந்து சென்றால் போதும் என்றிருந்தது எனக்கு” என்கிறார் வர்ஷா.

  மீண்டும் மீண்டும் எத்தனை சேனல்கள் அவரை நேரடியாக தங்கள் ஸ்டுடியோவுக்கு வந்து காமெராவுக்கு எதிரில் அமர்ந்து நடந்ததைச் சொல்லுங்கள் என்று கோழிக் குஞ்சைத் துரத்தும் வல்லூறுகளாக பின்தொடர்கின்றன?

  கிடைத்தது அவகாசம் என்று அப்பெண்ணை பிராண்டப் பார்க்கிறது மீடியா. செய்தியின் நாசூக்குத் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் சென்சேஷனல் நியூஸுக்காக பறக்கிறார்கள்.

  வர்ஷாவின் வீட்டு வாசலில் காமெராவோடு வந்து காத்திருக்கின்றன டிவி சேனல்கள்.

  “நோ” என்றால் ‘நோ” தானே? ஏன் இவர்களுக்குப் புரிவதில்லை?” என்று கேட்கிறார் வர்ஷா. ‘பிங்க்’ சினிமா பார்த்துமா இவர்களுக்கு புத்தி வரவில்லை?

  பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட அமைப்பு போலீஸ். வேலியே பயிரை மேய்தாற்போல், அவர்களின் நல்ல நடத்தைக்கு உத்தரவாதமில்லாமல் போனதை பற்றி வருந்துகிறார் வர்ஷா.

  படித்த பெண்ணான தனக்கே இந்த அவமானம் என்றால், இளம் கல்லூரி மாணவிகளோ, கிராமத்துப் பெண்களோ இது போல் காவலர் வேடத்தில் உலவும் கயவர்களிடம் சிக்கினால் அவர்களின் நிலை என்னவாகும் என்று அஞ்சுகிறார் வர்ஷா.

  இதற்கு தீர்வாக போலீஸ் பயிற்சியிலும், அமைப்பிலும், Gender sensitization பற்றிய புரிதலிலும் மாற்றமும் முன்னேற்றமும் ஏற்பட வேண்டும் என்று யோசனையும் கூறுகிறார் துணிச்சலான இந்த பெண்மணி.

  பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் உங்களை எங்கெங்கெல்லாம் ஆண்கள் தொட்டால் உஷாராக இருக்க வேண்டும் என்றும் உடனே தாய், தந்தை அல்லது ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் விளக்கப் படத்தோடு அவர்களுக்கு விளக்கப்படுகிறது.

  அதே போல் ஆண் பிள்ளைகளுக்கும் பெண்களை எப்படி எல்லாம் பார்க்கக் கூடாதென்றும் எப்படிப் பழக வேண்டும் என்றும் அறிவுறுத்த வேண்டும்.

  இந்த சமுதாயம் எப்போது சுத்தமாகப் போகிறதோ என்று மலைப்பாக இருக்கிறது.

  • ராஜி ரகுநாதன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,570FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-