
தமிழகத்தில் ஆளும் ஓபிஎஸ்., ஈபிஎஸ்.,க்கு நெருக்கடி கொடுத்திருக்கிறாரோ இல்லையோ, திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரனுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார். அரசியல் நிகழ்வுகள் அப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது தமிழகத்தில்!
தினகரன் கூடாரத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜி திமுக.,வுக்குத் தாவியதில் இருந்து இந்த நெருக்கடி மேலும் அதிகரித்திருக்கிறது டிடிவி தினகரனுக்கு! 18 எம்.எல்.ஏ.,க்கள் பதவி நீக்கம் செல்லும் என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் பின்னர், செந்தில் பாலாஜி மேல்முறையீட்டுக்கு உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு தினகரன் மறுத்ததாகவும் செய்திகள் உலா வந்தன. அந்த மனவேறுபாடு அதிகரித்து, செந்தில் பாலாஜி இந்த முடிவை எடுத்ததாகக் கூறப் படுகிறது.
மேலும், செந்தில் பாலாஜிக்கு கரூரில் உள்ள அதிமுக., புள்ளியான தற்போதைய போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் எதிர் தரப்பு என்பதால், அவரால் அதிமுக.,வுக்குள் போக முடியாத நிலையில் திமுக.,வுக்கு தாவியதாகக் கூறுகிறார்கள்.
இதன் பின்னே சில நிகழ்வுகள் அரசியல் ரீதியாக முன்வைக்கப் படுகிறது. ஸ்டாலினுடன் டிடிவி தினகரன் அண்மையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் சந்தித்துப் பேசினார். இது குறித்த தகவல்கள் பரபரப்பாக ஊடகங்களில் வெளியாகின.
அந்த சந்திப்பின் போது, ஆர்.கே.நகர் வெற்றி ரகசியம் குறித்து ஸ்டாலின் கேட்டதாகவும், அந்த ரகசியத்தை ஸ்டாலினிடம் சொன்ன தினகரன், அதே போல் வருகின்ற 20 தொகுதிக்கான இடைத் தேர்தலிலும் செயல்பட்டால் வெற்றி உறுதி என்று நம்புவதாகவும் தினகரன் தெரிவித்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், திமுக.,வை டெபாசிட் இழக்கச் செய்யும் அளவுக்கு ஒரு மோசமான தோல்வியை ஆர்.கே.நகரில் பரிசளித்த தினகரன், அந்த ரகசியத்தை அப்படியே வெளியில் சொல்வதற்கு முட்டாளா என்ன என்று கேட்போரும் உண்டு.
ஆனால், திமுக.,வுடன் கூட்டணி அல்லது தோழமை என்ற ரீதியில் தினகரன் குறித்த தகவல் வெளிவந்ததால, இது உண்மையாயிருக்கக் கூடும் என்று கூறுகின்றனர் அதிமுக.,வினர். அப்போது, தினகரனிடம் இருந்து ரகசியங்களைக் கேட்டுக் கொண்ட ஸ்டாலின் அதன் பிறகு டிடிவி தினகரனைத் தொடர்பு கொள்ளவில்லை என்கிறார்கள்.
ஆர்.கே.நகர் படுதோல்வி திமுக.,வுக்கு பெரும் கரும்புள்ளிதான்! தினகரனின் அந்த வெற்றி, அதிமுக., தரப்பை விட திமுக.,வின் ஸ்டாலினை பெரிதும் பாதித்திருக்கிறது என்பதைத்தான் அவரின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் வெளிக்காட்டின. தினகரன் போட்டியிட்டதால்தான் திமுகவிற்கு டெபாசிட்டே போனது என்பது ஸ்டாலின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. தனக்கு இணையாக அதிமுக.,வின் ஒரு சக்தியாக தினகரன் வளர்வதை ஸ்டாலின் விரும்பவில்லை என்பதே பின்னணியில் இருக்கும் அரசியல் உண்மை என்கிறார்கள் அதிமுக.,வில் உள்ள சில புள்ளிகள்!
இந்த நிலையில் தான், 18 எம்.எல்.ஏ.க்கள் குறித்த தீர்ப்பும், தொடர்ந்து அந்த முகாமில் ஏற்பட்ட சலசலப்பும் ஸ்டாலின் கவனத்தை அதிகப் படுத்தியது. ஏற்கெனவே, ஆர்கே நகர் தொகுதியில் தினகரனின் முக்கிய ஆதரவாளராகத் திகழ்ந்த செந்தில் பாலாஜியே தற்போதுவரை பண உதவி செய்வதை அறிந்தார் ஸ்டாலின். எனவே செந்தில் பாலாஜியை தன்வசம் இழுத்தால் தினகரனை வீழ்த்திவிடலாம் என்பது ஸ்டாலின் போட்ட கணக்கு. இதை மனத்தில் கொண்டே, ஆ.ராசாவிடம் தனது எண்ணத்தை ஸ்டாலின் கூறியதாகவும், செந்தில் பாலாஜியை சிவகாசியைச் சேர்ந்த அவரது உறவினர் மூலம் நேரடியாகச் சந்தித்து ஆ.ராசா பேசியதாகவும் கூறப் படுகிறது. மேலும், வருகிற இடைத் தேர்தலில் திமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதாகவும் திமுக அடுத்து ஆட்சியமைக்கும் பட்சத்தில் செந்தில் பாலாஜி முன்னர் வகித்த அதே போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவியை வழங்கவும் ஸ்டாலின் சம்மதித்துள்ளதாக ஆ.ராசா கூறியுள்ளார்.
இதை அடுத்தே தனது ஆதரவாளர்களுடன் கலந்து பேசிய செந்தில் பாலாஜி, ஆதரவாளர்களின் ஆலோசனைப் படி திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். முன்னர், அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்த போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் இடம்பெறவே செந்தில் பாலாஜி விரும்பினாராம். ஆனால், எடப்பாடி தலைமையில் அரசு அமைந்த போது, அமைச்சர் பதவி வழங்குவதாக தினகரன் உறுதி அளித்ததன் பேரிலேயே தொடர்ந்து உடன் இருந்ததாகவும், ஆனால் தினகரனால் தற்போது எம்.எல்.ஏ., பதவியை இழந்தது மட்டுமன்றி, சிபிஐ சோதனையால் தனது சொத்துக்களையும் இழந்து விட்டதாகவும் இனியும் தினகரனை நம்பினால் ஒன்றும் மிஞ்சாது என்று ஆதரவாளர்களிடம் வருத்தப் பட்டதாகவும் கூறப் படுகிறது.
இந்நிலையில்தான் தனது அரசியல் நடவடிக்கைகளுக்கும் பாதுகாப்புக்கும் திமுகவில் இணைவது கைகொடுக்கும் என்றும், இழந்த செல்வாக்கை மீட்க இது உதவும் என்றும் முடிவெடுத்துள்ளார் செந்தில் பாலாஜி. ஆனால் இந்தத் தகவல் தெரியவந்தபோது, தினகரன் எவ்வளவோ சமாதானப் படுத்தியும் செந்தில் பாலாஜி சமாதானம் அடையவில்லை என்று கூறுகின்றனர்.
இந்தப் பின்னணியில்தான் ஸ்டாலினின் அரசியல் சித்து விளையாட்டை தினகரன் இப்போது புரிந்து கொண்டுள்ளார் என்று கூறுகின்றனர் அதிமுக.,வினர்! ஓபிஎஸ்., இபிஎஸ்.,ஸை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்டாலினுடன் பேசப் போக, ஆனால் ஸ்டாலினோ தன் பலம் வாய்ந்த நபர்களையே தன் பக்கம் இழுத்து இப்படி துரோகம் செய்வார் என தான் எதிர்பாக்கவில்லை என்று தனது ஆதரவாளர்களிடம் புலம்பி வருகிறாராம் டிடிவி தினகரன்.
அடுத்து வரும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தினகரனுக்கு மிச்சம் மீதம் இருக்கும் திமுக.,வின் அரசியல் சித்து விளையாடல்களைச் சொல்லிக் கொடுத்துவிடும்!