காந்தி கொலையும் பின்னணியும் – பகுதி 117

கட்டுரைகள் லைஃப் ஸ்டைல்
gandhiji manuben - 2026

அந்த சிமெண்ட் ஜாலியை பார்த்த கோபால் கோட்ஸே, அது சுவரிலே சற்றே உயரமான இடத்தில் அமைக்கப் பட்டிருந்ததைக் கண்டார்.

ஆக நேரிடையாக காந்தி இருக்கும் இடத்தை பார்க்க சாத்தியமில்லை என்பதை உணர்ந்த கோபால் கோட்ஸே எம்பி அந்த ஜாலியின் ஒரு விளிம்பை பிடித்தவாறு மேலே எழும்பி ஜாலியின் வழியாக பார்க்க முயன்றார்.

ஆனால் அந்த நிலையில் தொடர்ந்து இருக்க அவர் தன் இரு கைகளையும் பயன்படுத்த வேண்டியிருந்தது.

சில வினாடிகளுக்கு,ஒரு கையில் ஜாலியின் விளிம்பைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையில் ரிவால்வரை எடுத்துக் கொண்டார்.

ஆனால் அந்த நிலையில் அவரால் தொடர்ந்து இருக்க முடியவில்லை.

ஆக,அந்த ஜாலியின் வழியாக காந்தியை சுடுவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த கோபால் கோட்ஸே அங்கிருந்து தப்பிச் சென்று விடலாமென்று எண்ணி,

கதவருகே திரும்பி வந்து,உள்புறமாக பூட்ட பயன்படுத்தி இருந்த சங்கிலியை இழுத்தார்.

ஆனால் அதை இழுக்க முடியாததை உணர்ந்த போது,அச்சத்தில் உடல் உறைந்து போகத் தொடங்கியது.

சில விநாடிகளுக்கு சங்கிலியை விடுவிக்க முயன்றும் முடியாததால்,ஆஹா உள்ளே வகையாக மாட்டிக்கொண்டு விட்டோம் என்றெண்ணி சற்றே கலங்கிப்போனார்.

தன் பையை கீழே போட்டுவிட்டு இரு கைகளையும் பயன்படுத்தி அந்த கொக்கியிலிருந்து சங்கிலியை விடுவிக்க பலம் கொண்டமட்டும்,இழுத்தார்.

கதவு சத்தத்துடன் திறந்துக் கொண்டது.

வெளியே காத்திருந்த டாக்ஸியை நோக்கி வேகவேகமாக ஓடினார்.

அங்கே நாதுராம்,ஆப்தே,கார்கரே ஆகியோர் ஏற்கெனவே வந்து விட்டிருந்தனர்.

டாக்ஸி டிரைவரும் இருந்தார்.

காருக்குள் வேகவேகமாக ஏறியவர்கள் ,

‘’ காரை START செய் காரை START செய் ‘’ என்று அவசர அவசரமாகக் கூறியதாக பின்னாளில் தன் வாக்குமூலத்தில் அந்த டாக்ஸி டிரைவர் சுர்ஜித் சிங் கூறினார்.

அவர்களை டிரைவர் CONNAUGHT PLACE பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

நம்பமுடியாதபடி,சோட்டு ராமின் அறை,மைதானத்திலிருந்து கீழ்நிலையில் இருந்தது.

வெளியே இருந்து அந்த சிமெண்ட் ஜாலியை அளந்த ஆப்தே சற்றும் சிரமப்படாமல் ஜாலியின் துவாரங்களை அளந்திருந்தார்.

அதனால் உள்ளே இருந்த பிரச்சனையை அவர் எதிர்பார்க்கவில்லை.

அறையின் உள்ளேயிருந்து பார்த்தபோது அந்த ஜாலி ஏழு அடிக்கு சற்றே மேலே அமைந்திருந்தது.

கோபால் கோட்ஸேயாலேயே அந்த ஜாலியின் வழியாக சுடுவது சாத்தியப்படவில்லையென்றால்,நிச்சயம் திகம்பர் பாட்கேவிற்கு அது சாத்தியப்பட்டிருக்காது.

காரணம் கோபால் கோட்ஸே சற்றே உயரமானவர் 5 அடி எட்டு அங்குலம்.திகம்பர் பாட்கே 5 அடிக்கும் சற்றே குறைவானவர்.

காரிலே மராத்தியில் தன் நண்பர்களுடன் பேசியே கார்கரே,மதன்லால் பஹ்வாவை,போலீசாரார் பிர்லா கேட்டின் வெளியே அமைக்கப்பட்டிருந்த டெண்டிற்கு அழைத்து செல்வதைப் பார்த்ததாகவும்,

அவர்கள் அவனுடன் இருப்பதாகவும் அதனால் அதைரியப்பட வேண்டாம் என்று கண்களால் ஜாடை செய்ததாகவும் கூறினார்.

( தொடரும் )

காந்திகொலையும்பின்னணியும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.