
கும்பகோணத்தை அடுத்த திருப்புவனத்தில் தமிழன் சப்ளையர்ஸ் என்ற பெயரில் காண்ட்ராக்ட் கடை நடத்தி வந்தவர் ராமலிங்கம். சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு கொடுப்பது, ஷாமியானா பந்தல் போடுவது, சமையல் காண்ட்ராக்ட் என்று இது தொடர்பான தொழிலில் ஈடுபட்டு வந்தவர். இவர் பாமக.,வில் நிர்வாகியாகவும், முன்னாள் செயலாளராகவும் இருந்தவர்.
ராமலிங்கம் தனது தொழில் வேலையாக, கூலியாட்களை அழைப்பதற்காக குடிசைப் பகுதிக்குச் சென்றபோது, அங்கே, இஸ்லாமியராக மதம் மாற்றம் செய்வதற்காக இஸ்லாமியர்கள் சிலர் வந்துள்ளனர். அப்போது, இஸ்லாமியர்களுடன் மதமாற்றம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த அப்பாவிகளை ஏன் மதமாற்றம் செய்கிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார் ராமலிங்கம்.
மேலும், அங்கே இருந்த இஸ்லாமியர் ஒருவரின் குல்லாவை எடுத்து தாம் அணிந்து கொண்டு, எங்களுக்கு எல்லாம் ஒன்றுதான். ஆனால் நாங்க போடுற திருநீறை நீங்க பூசுவீங்களா…? என்று கூறிய படி திருநீறை எடுத்து அந்த இஸ்லாமியருக்கு பூசி விட்டுள்ளார். (வீடியோ.. கட்டுரை இறுதியில் காண்க)
இதனால் உடன் வந்தவர்களுக்கும் அவருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்தவர்கள் இருவரையும் விலக்கி விட்டு, அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், அன்று இரவு, தனது கடையைப் பூட்டி விட்டு, மூத்த மகனுடன் தனக்குச் சொந்தமான டாடா ஏஸ் வாகனத்தில் வீடு திரும்பியிருக்கிறார். அவர் வழக்கமாகச் செல்லும் முஸ்லிம் தெரு வழியாகவே அவர் தனது வாகனத்தில் திரும்பியுள்ளார்.

அப்போது, தெருவின் குறுக்கே ஒரு கார் நிறுத்தப் பட்டிருந்தது. இதைக் கண்டு வாகனத்தை நிறுத்திய ராமலிங்கம், அங்கே நான்கு பேர் அந்தப் பகுதியில் அமர்ந்தபடி வம்புக்கு இழுப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர்ந்து காரை எடுக்குமாறு ராமலிங்கம் கோர, அந்த நால்வரும் இவருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். அந்த நேரம் ஒருவர் அருகே வந்து அவரது வாகனத்தின் சாவியை அதில் இருந்து எடுத்துள்ளார். இதனால், ராமலிங்கம் தன் வாகனத்தை விட்டு இறங்க, அப்போது அங்கிருந்த நால்வரில் ஒருவர் மிளகாய்ப் பொடியை ராமலிங்கத்தின் முகத்தில் வீசியுள்ளார். (மது கலந்த மிளகாய்ப் பொடி என்று உடன் இருந்த அவரது மகன் கூறுகிறார்)

இதனால் நிலைகுலைந்த ராமலிங்கத்தின் ஒரு கையை இன்னொருவர் வெட்டியுள்ளார். அதில் ரத்தம் பீறிட்டு வந்துள்ளது. அதே நேரம் இதனால் கலவரமடைந்த அவரது மூத்த மகன் ஷ்யாம் சுந்தர், அதனை தடுக்க வந்துள்ளார். அப்போது அவரது மகனை வெட்டுவதற்கு இன்னொருவர் பாய, அதைக் கண்டு தன் இன்னொரு கையால் தடுத்துள்ளார் ராமலிங்கம்.
அவரது இன்னொரு கையும் வெட்டுப் பட, மேலும் கத்திக் கூச்சல் இட்டுள்ளார் ஷ்யாம் சுந்தர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வெளியே வர, இதனால் அந்த நான்கு பேரும் தப்பி ஓடியுள்ளனர். உடனே ஆம்புலன்ஸுக்கு போன் செய்துள்ளார் ஷ்யாம் சுந்தர்.
ஆம்புலன்ஸ் வர சற்று தாமதம் ஆனதும், அங்கிருந்து கும்பகோணம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆம்புலன்ஸில் ஏறிய போது, ரத்த வெள்ளத்தில் மிதந்தாலும், உணர்வு இருந்த நிலையில், தன் கைகள் இரண்டும் மரத்துப் போவதையும் இனி தன்னால் கைகளைத் தூக்கி வேலை செய்ய முடியாது என்றும் அழுதபடி கூறியுள்ளார் ராமலிங்கம். தன்னால் இயலாத நிலையில், இனி நீதான் வியாபாரத்தையும் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும்; என் உயிருக்கு ஒன்றும் ஆகாது, ஆனால் கைகள் இரண்டும் இனி இருக்காது என்று நம்பிக்கையுடன் அவரது மகன் ஷ்யாம் சுந்தரிடம் கூறியுள்ளார் ராமலிங்கம்.

இந்நிலையில், கும்பகோணம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சரியான உபகரணங்களும் மருந்துகளும் இல்லாத நிலையில், முதலுதவி மட்டும் செய்து, உடனே தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், அங்கே சற்று தாமதம் ஏற்பட்டதாலும், அங்கிருந்து தஞ்சைக்கு சுமார் ஒருமணி நேர பயணம் என்ற நிலையிலும் ரத்தப் போக்கு அதிகரித்துள்ளது. அவரது கை மணிக்கட்டுப் பகுதியில் ஏற்பட்ட அரிவாள் வெட்டு இரத்த தமனியை வெகுவாக பாதித்திருந்ததால், ரத்த இழப்பு அதிகரித்து, இதயத் துடிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. இந்நிலையில் அவர் தஞ்சைக்கு அழைத்துச் செல்லப் படும் வழியிலேயே மரணம் அடைந்துள்ளார்.
தன் கண் முன்பே தனது தந்தை இஸ்லாமியர்களால் இப்படி துடிக்கத் துடிக்க வெட்டப்பட்டதும், தன் கண் முன்பே தன் தந்தையின் உயிர் பிரிந்ததும் அவரது மகனை வெகுவாக பாதித்தது.

இந்நிலையில், இன்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா ராமலிங்கம் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அப்போது தன் தந்தை பட்ட சிரமத்தை அவரது மகன் ஷியாம் சுந்தர் கூறியபோது, அங்கிருந்த அனைவருமே உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீரில் மிதந்துள்ளனர்.
அவர்களுக்கு ஆறுதல் கூறிய ஹெச்.ராஜாவிடம், ராமலிங்கம் குடும்பத்தினர், போலீஸார் அவர்களது வாகனத்தையும், செல்போனையும் பறிமுதல் செய்தது குறித்து கூறியுள்ளனர். இதனால் வெகுண்ட ஹெச்.ராஜா, உடனே வெளியில் வந்து, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், போலீஸார் பறிமுதல் செய்த வாகனத்தை திருப்பித் தர வேண்டும் என்றும், அவர்களது தொழிலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு நேராமல் பாதுகாக்க வேண்டும் என்றும், செல்போனை உடனே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் கூறி, தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் ஹெச்.ராஜாவிடம் பேசிய போலீஸ் அதிகாரிகள், ராமலிங்கத்தின் வாகனத்தில் ரத்தக் கறை அதிகம் படிந்திருப்பதால் அதை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமென்றும், அதன் பின்னரே திருப்பி அளிக்க முடியும், நிச்சயம் உடனே கொடுத்து விடுவோம் என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில் அந்த வாகனமும் உடனே நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் பட்டது.,
மேலும், ராமலிங்கத்தின் மகனுக்கும் வீட்டுக்கும் கடைக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப் பட்டது. ராமலிங்கத்தின் செல்போனும் திருப்பி அளிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், அதே போன்ற டாடா ஏஸ் வாகனம் தன்னிடம் இருப்பதாகவும், அதை இந்த நேரத்துக்கு மாற்று ஏற்பாடாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் கூறி இந்து முன்னணியைச் சேர்ந்த சூரக்கோட்டை ராஜா தன் வாகனத்தை அளித்துள்ளார். அவர்களது வியாபாரம் பாதிக்கப் படாமலும், தொடர்ந்து அவர்களது குடும்பம் இயங்கவும் தேவையான உதவிகளை செய்வோம் என்று அங்கிருந்த பாஜக., மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் அவர்களிடம் ஆறுதல் கூறியுள்ளனர்.
இதனிடையே, ராமலிங்கத்தின் மகன் ஷ்யாம் சுந்தர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், கொலையாளிகள் நான்கு பேர் தங்கியிருந்த வீடுகளின் உரிமையாளர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் என முஸ்லிம் தெருவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் 5 பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். கொலையாளிகள் 4 பேரும் தப்பிவிட்ட நிலையில், தொடர்ந்து கொலையாளிகளைத் தேடி வருவதாக போலீஸார் கூறியுள்ளனர்.
போலீஸார் விசாரணை நடத்தி வரும் 5 பேரில் 2 பேர் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா எனும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்.



