மம்தா பானர்ஜியுடன் போராட்டத்தில் அமர்ந்த போலீஸ் அதிகாரிகளின் பதக்கங்கள் திரும்பப் பெறப்படும்: உள்துறை அமைச்சகம்!

இந்தியா சற்றுமுன்

mamta

கோல்கத்தாவில், முதல்வர் மம்தா பானர்ஜியுடன் போராட்டத்தில் அமர்ந்த போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பதக்கங்களைத் திரும்பப் பெற உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியும், சிபிஐ முன் ஆஜராகாமல் போக்குக் காட்டி வந்தார் கோல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார். இதை அடுத்து அவரது அலுவலகத்துக்கே சிபிஐ அதிகாரிகள் வந்தனர். ஆனால், அவரை கைது செய்ய அனுமதிக்க கூடாது என்று கூறி மம்தா பானர்ஜி உத்தரவிட, போலீஸார் சிபிஐ அதிகாரிகளையே கைது செய்தனர்.

இந்தப் பிரச்னை தேசிய அளவில் எதிரொலித்தது. இதனால் மம்தா பானர்ஜி கோல்கத்தாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் டிஜிபி வீரேந்திரா, கூடுதல் டிஜிபி வினீத் கோயல், கூடுதல் டிஜிபி அனுஜ் சர்மா, பிதாநகர் காவல் ஆணையர் ஞான்வந்த் சிங், கொல்கத்தா கூடுதல் ஆணையர் சுப்ரதீம் தர்க்கார் உள்ளிட்டோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகள் கட்சி ரீதியான கூட்டங்களில் கலந்து கொண்டு அரசியலில் ஈடுபடுவது, சீருடைப் பணியாளர்களுக்கான விதிகளை மீறுவதாகும் எனக் கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த அதிகாரிகளின் பணிக்காக வழங்கப்பட்ட பதக்கங்களைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுத்துள்ளது உள்துறை அமைச்சகம்.

அது மட்டுமன்றி, குறிப்பிட்ட காலத்துக்கு மத்திய அரசுப் பணியில் பணியாற்றுவதற்கான பட்டியலில் இருந்து அவர்களின் பெயரை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.