தர்ணாவை முடித்துக் கொண்டார் மம்தா! வெற்றி என பெருமிதம்! ஆனால் வெற்றி..?!

22

தர்ணா போராட்டத்தை முடித்துக் கொள்வதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும், அவர் தனது போராட்டம் குறித்துக் குறிப்பிட்டுள்ள போது, இந்த தர்ணா போராட்டம் ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புக்கும் கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.

ஆனால், மம்தா சொல்வது போன்ற வெற்றி நிச்சயம் அவருக்குக் கிடைக்கவில்லை என்பது நிகழ்வுகளின் மூலம் நன்கு வெளித் தெரிகிறது. மம்தாவின் தேவையற்ற இந்தப் போராட்டத்தின் மூலம், எல்லோரும் மறந்திருந்த சாரதா நிதி மோசடி பசுமையாய் மீண்டும் மக்கள் மனதில் பதிவு செய்யப்பட்டுவிட்டது.

பாஜக இந்த முறை ‘வளர்ச்சி’யை மட்டுமே வைத்து வாக்கு கேட்க நினைத்தது. ராமர் கோவிலில் விஷயத்தில் இந்து இயக்கங்களின் அழுத்தம் இருந்த போதும், நீதிமன்ற தீர்ப்பின் படி எல்லாம் அமைய வேண்டும் என்று நிதானம் காட்டுகிறது. அத்வானி ஆதரவாளர்களை திருப்திப் படுத்த வேண்டிய உள்கட்சி விவகாரம், இந்து இயக்கங்களை திருபதிப் படுத்த வேண்டிய நிலை எல்லாவற்றையும் கடந்து, பொதுத் தேர்தலை எதிர்நோக்கியிருந்த பாஜக.,வுக்கு கேரளமும் மேற்கு வங்கமுமே இப்போது அரசியல் செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன என்கிறார்கள் விமர்சகர்கள்.

கேரளத்தில் சபரிமலை விவகாரம், அங்கும் கம்யூனிஸ்ட்களும் காங்கிரஸும்தான் பாஜக.,வுக்கு எதிரிகள். மேற்கு வங்கத்திலோ கம்யூனிஸ்ட்களும் காங்கிரஸின் துணை அமைப்பு போன்ற திரிணமுல் காங்கிரஸும் எதிரிகள். இப்போது இரு தரப்புமே பாஜக.,வுக்கு சில வாய்ப்புகளை வழங்கியிருக்கின்றன. இப்போது, ஊழல் எதிர்ப்பு என்ற ஆயுதத்தையும் வளர்ச்சியுடன் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளது பாஜக.,!

காங்கிரஸுக்கு மேற்கு வங்கத்தில் கெத்தாக ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால் நல்ல வாய்ப்பு இருந்தும், மம்தாவுகு மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தியை உணர்ந்து கொண்டு அரசியல் செய்ய வாய்ப்பு இருந்தும், மம்தாவிடம் சரணாகதியாகும் அளவிற்கு தன்னைக் கெடுத்துக் கொண்டது. இதற்கு ராகுல் காந்தியின் முதிர்ச்சியற்ற தன்மையே காரணமாகிப் போனது.

சபரிமலை விவகாரத்தைக் கையாண்டது போல், மேற்குவங்கத்திலும் ஓர் அறிக்கை விட்டு காங்கிரஸ் ஒதுங்கி யிருக்கலாம். ஆனால், பேராசை பிடித்த மம்தாவை குளிரவைத்தால் கல்கத்தாவில் கூட்டணி அமைக்கலாம் என்று தப்புக்கணக்கு போட்டு தன்னிலை இழந்து போயிருக்கிறது காங்கிரஸ். தன் பிடியில் இந்தக் கட்சிகளை வைக்காமல், அவர்களின் பிடிக்குள் காங்கிரஸ் போனதால்தான், ஆந்திராவைப் பிரித்து, மாநிலத்தை இழந்தது. தெலங்கானாவில் தோல்வி. இப்போது ஆந்திரத்தையும் நாயுடுவினால் இழந்துவிட்டு, தனி மரமாக நிற்கிறது.

அதேபோன்ற நிலை கோல்கத்தாவிலும் வரலாம். சாரதா சிட் பண்ட் விவகாரத்தால் பாதிக்கப் பட்ட மக்களின் உள்ளக் குமுறல், மம்தா பானர்ஜியை இனி தூங்க விடாது. தான் வெற்றி பெற்றுவிட்டதாக மம்தா வெளியில் சொல்லிக் கொண்டாலும், உள்ளூர அவருக்கு உதறல் எடுத்துவிட்டதையே அவரது நடவடிக்கைகள் வெளிக் காட்டுகின்றன. மாநில பட்ஜெட்டை சமர்ப்பிப்பதைக் காட்டிலும், ஒரு தர்ணா போராட்டம் முக்கியமானதாகி விட்டது மம்தாவுக்கு! அதுவும் ஊழல் அதிகாரியைக் காப்பற்றத் துடிக்கும் காரணத்தை உலகம் அறிந்த போது… மம்தா இப்போது மாட்டிக் கொண்டு முழிக்கிறார்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...