காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 129)

கட்டுரைகள் லைஃப் ஸ்டைல்

gandhi godse - 2026

காந்தி என்ன சொல்ல போகிறார் என்னும் தகவல் பலருக்கு முன்பே தெரிந்திருக்கிறது எனும் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது அதுபற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட ஜஸ்டிஸ் J.L.கபூர் தலைமையிலான ஒரு நபர் கமிஷன் போலீஸ் விசாரணை தரமாக இருக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியது.

டெல்லி போலீஸ் முற்றிலும் செயலிழந்துவிட்டதாகவே தோன்றுகிறது என்றார் அவர்.

குறிப்பாக அவர் கூறுகிறார் : ’’ ஹிந்து மஹா சபா பவன் குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை ; சதியில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலோர் அங்குதான் தங்கியிருந்தனர்.

நாதுராமையும்,ஆப்தேயையும் நன்கு அறிந்திருந்த அஷுதோஷ் லஹிரியிடம் விசாரணை நடத்தப்படவில்லை ‘’.

தன்னை விசாரித்தபோது மதன்லால் பஹ்வா தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் கூறி விட்டாரா ?

இரண்டாவது முறை தான் விசாரிக்கப்பட்டபோது அதிகமாக விவரங்களை தெரிவிக்கவில்லை என்று மதன்லால் பஹ்வாவும் உறுதிப்படுத்துகிறார்.

ஆனால் கைதுசெய்யப்பட்ட அன்று,போலீசாரிடம் தன்னுடன் ஆறு கூட்டாளிகள் இருப்பதைப்பற்றியும் அவர்களைப்பற்றிய அங்க அடையாளங்களையும் தெரிவித்ததாகவும் ஒப்புக்கொள்கிறார்.

அதேபோல் தங்களை பிர்லா ஹவுஸிற்கு அழைத்துச்சென்ற டாக்ஸியை பற்றிய விவரங்களையும் தெரிவித்திருக்கிறார்.

அஹமத்நகரை சேர்ந்த கார்கரே சேத் என்று கார்கரே பற்றியும்,இன்னொருவர் ஹிந்து ராஷ்ட்ரா அல்லது அக்ரணி என்ற பெயர் கொண்ட பத்திரிகையின் ஆசிரியர் என்றும் அந்த பத்திரிகை பம்பாயிலிருந்தோ அல்லது பூனாவிலிருந்தோ வெளியாகும் மராத்தி மொழி பத்திரிகை என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஜனவரி மாதம் 21ந்தேதி பிற்பகலில்,அதாவது மதன்லால் பஹ்வா கைதுசெய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக,

டெல்லி போலீஸின் இரண்டு அதிகாரிகள்,துணைக்கண்காணிப்பாளர் ஜஸ்வந்த் சிங் மற்றும் இன்ஸ்பெக்டர் பால்கிஷண் பம்பாயிற்கு விமானத்தில் பயணித்தனர்.

அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவு : பம்பாயில் துணைக்கமிஷனர் J.D.நகர்வாலாவை சந்தித்து விவரங்களை தெரிவித்துவிட்டு,பூனாவிற்கு சென்று அங்கு CID யின் துணை உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலிஸ் ராவ்சாஹிப் குர்டுவை சந்திக்கவேண்டும் என்பதாகும்.

பம்பாய் போலீஸிற்கு இருவரும் விசாரணையில் உதவவேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

பின்னாளில் இதுபற்றி கூறும்போது,தாங்கள் மதன்லால் பஹ்வாவின் வாக்குமூலத்தின் நகலோடு பம்பாய் சென்றிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

அப்போது வட இந்தியாவில் போலீஸ் நடைமுறையிலிருந்த வழக்கத்தின்படி அந்த வாக்குமூலம் உருது மொழியில் இருந்தது.உருதுமொழியை படிக்கக்கூடிய உயர் அதிகாரிகள் யாரும் அப்போது பம்பாய் போலீஸில் இல்லை.

பின்னாளில்…ஜஸ்டிஸ் கபூர் கமிஷன் முன் வாக்குமூலம் அளித்த இரண்டு அதிகாரிகளும்….

ஜனவரி மாதம் 22ந் தேதி காலையில் டெல்லியிலிருந்து பம்பாய் வந்தவுடன் துணைக்கமிஷனர் நகர்வாலாவிடம் அந்த வாக்குமூல நகலையும்,அதனுடைய ஆங்கில மொழி சுருக்கத்தையும் அவர்கள் தந்ததாக தெரிவித்தனர்.

அது தவிர தங்களுக்குத் தெரிந்த அனைத்து விவரங்களையும் வாய்மொழியாக தெரிவித்ததாகவும் கூறினர்.

ஹிந்து ராஷ்ட்ரா அல்லது அக்ரணி என்ற பெயர் கொண்ட பத்திரிகையின் பெயர்கொண்ட பத்திரிகையின் ஆசிரியர் தன்னுடைய கூட்டாளிகளில் ஒருவர் என்று மதன்லால் பஹ்வா கூறியதுபற்றியும் துணைக்கமிஷனர் நகர்வாலாவிடம் தெரிவித்ததாகவும் கூறினர்.

ஆனால் இதைமறுத்த துணைக்கமிஷனர் நகர்வாலா,கார்கரே எனும் பெயர் மட்டுமே தனக்கு கூறப்பட்டதாகவும்,அந்த இரண்டு டெல்லி அதிகாரிகள் தெரிவித்ததாக கூறுவதுபோல வேறெந்த தகவலும் தனக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் ஜஸ்டிஸ் கபூர் கமிஷன் முன் தெரிவித்தார்.

கார்கரேயின் பெயர்கூட அவர்களுக்கு சரியாகத்தெரியவில்லை…அவர்களிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை…ஒரு துண்டு காகிதத்தில் ….ஓரிரு வார்த்தைகள் உருது மொழியில் எழுதப்பட்டிருந்தன…இந்த நிலையில் யாரென்றே தெரியாத ஒருவரை கைதுசெய்ய எப்படி உத்தரவு பிறப்பிக்கமுடியும்…

ஆகவேதான் அந்த இரண்டு அதிகாரிகள் கேட்டுக்கொண்டபடி கைது வாரண்ட் கொடுக்கப்படவில்லை என்று ஜஸ்டிஸ் கபூர் கமிஷன் முன் துணைக்கமிஷனர் நகர்வாலா வாக்குமூலம் அளித்தார்.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

~ எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.