பின்னாளில் காந்தி கொலை நிகழ்ந்த பிறகு,

பம்பாய் போலீஸாரிடம் டெல்லி போலீஸார் சொன்னது என்ன சொல்லாதது என்ன என்று டெல்லி போலீஸாரும் பம்பாய் போலீஸாரும் பரஸ்பரம் ஒருவர்மீது இன்னொருவர் குற்றஞ்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இவர்களது சர்ச்சை சந்திசிரித்ததுதான் மிச்சம்.

மதன்லால் பஹ்வாவை விசாரித்ததில் கிடைத்த தகவல்களை சரியான முறையில் போலீசார் பயன்படுத்தாததன் காரணமாக ,காந்தியை கொல்லதிட்டமிட்டவர்களை உரிய நேரத்தில் கைது செய்யாமல்,காந்தி கொலை நடந்தேற போலீசாரே காரணமாகிவிட்டனர்.

குறிப்பாக மதன்லால் பஹ்வா,தன்னுடைய கூட்டாளிகளில் ஒருவராக குறிப்பிட்டவர் ‘ ஹிந்து ராஷ்ட்ரா ‘ பத்திரிகையின் ஆசிரியர்.

அவர் யார் என்று போலீசாரால் உடனடியாக கண்டுபிடிக்க முடியாதுபோனது விநோதத்திலும் விநோதமே.

பத்திரிகைச்சட்டத்தின் ( PRESS ACT ) கீழ் ஒவ்வொரு மாகாண அரசும் அதனுடைய ஆளுகையின் கீழ் உள்ள பகுதிகளிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளின் உரிமையாளர்கள் யார்,ஆசிரியர்கள் யார் என்ற தகவல்களை வைத்திருப்பார்கள்.

ஒரு போலீஸ் அதிகாரியோ,ஏன் ஒரு தனிநபரோகூட டெல்லியிலிருந்து பம்பாயிற்கு தொலைபேசியேலேயே தொடர்புகொண்டு கேட்டிருந்தால்,’ ஹிந்து ராஷ்ட்ரா ‘ பத்திரிகையின் ஆசிரியர் நாதுராம் கோட்ஸே என்பதும்,அவருடைய விலாசம் முதலியனவும் மிகவும் எளிதாகத் தெரிந்திருக்கும்.

இந்த முயற்சி ஏன் மேற்கொள்ளப்படவில்லையென்பது விநோதமாகவும் மர்மமாகவும் இருக்கிறது.

இதற்கான பதில் கடைசிவரை கிடைக்கவே இல்லை.

ஒருவேளை இந்த தகவல் பம்பாயின் போலீஸ் துணைக்கண்காணிப்பாளர் நகர்வாலாவிற்கு கொடுக்கப்பட்டிருக்குமேயாயின் அவர் உரியநேரத்தில் நாதுராமை கைதுசெய்து காந்தி கொலை நிகழாமல் தடுத்திருக்கமுடியுமோ என்னவோ ?

குறைந்தபட்சம் நாதுராமை அடையாளம் தெரிந்த பூனா போலீசார் சிலரை பிர்லா ஹவுஸில் பாதுகாப்பிற்கு போட்டிருக்க முடியும்.

டெல்லி போலீசாரின் தவறுகளை சுட்டிக்காட்டும் அதே நேரத்தில்,துணைக்கமிஷனர் நகர்வாலாவும் தன் பங்கிற்கு ஒரு கற்பனை உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தார் என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.

அவரிடம் சொல்லப்பட்ட எந்த தகவல்களையும்,அபிப்பிராயங்களையும்,அனுமானங்களையும் காது கொடுத்து கேட்கவே தயாராக இல்லை.

அவருடைய வாதங்களும் கோட்பாடுகளும் வித்தியாசமாக இருந்தன.

தன்னுடைய சக காவல் அதிகாரி ஒருவரிடம் அவர் ஒரு வித்தியாசமான எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்தினார்.

’’ சதிகாரர்கள் காந்தியை ஏதோ ஒரு காரணத்திற்காக கடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.அது மிகப்பெரிய இயக்கம்.அதில் 20 முக்கிய சதிகாரர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.ஒவ்வொருவரின் கீழும் மேலும் 20 பேர்கள் இருக்கிறார்கள்.அவர்களிடம் மிகப்பெரிய அளவில் வெடிகுண்டுகளும் ,துப்பாக்கிகளும்,வேறு அபாயக்கரமான ஆயுதங்களும் இருக்கக்கூடும் ‘’.

இப்படிப்பட்ட அற்புதமான சிந்தனையாளராக,தன்னுடைய கற்பனை உலகத்திலேயே நகர்வாலா இருந்துபோனார்.அதன் காரணமாக டெல்லி போலீசார் கூறிய எதையுமே அவர் ஏற்கவில்லை.

மதன்லால் பஹ்வாவின் வாக்குமூலத்தை படித்தபின்னும்கூட ‘டெல்லி போலீசாரை கடத்தல்காரர்கள் திசைதிருப்பிவிட்டார்கள்’ என்று பிதற்றிக்கொண்டே தன் வழியில் விசாரணையை மேற்கொண்டிருந்தார்.

ஜனவரி மாதம் 30ந் தேதி காந்தி கொலை செய்யப்பட்ட நாள் வரையும்கூட நகர்வாலா தன்னுடைய கடத்தல் ‘ தியரியை ‘ வலியுறுத்தியே டெல்லி போலீசாருக்கு கடிதங்கள் எழுதிக்கொண்டு இருந்தார்.

ஜனவரி மாதம் 30ந் தேதி காந்தி கொலை செய்யப்பட்டபிறகே தன்னுடைய ‘ கடத்தல் பிதற்றலை ‘ நகர்வாலா நிறுத்தினார்.கற்பனை உலகிலிருந்து வெளியே வந்தார்.

ஆக,

காந்தி கொலைச்சதியைப்பற்றிய போதுமான தகவல்கள் தெரிந்தபின்னரும்கூட டெல்லி மற்றும் பம்பாய் போலீசார் தங்களிடையேயிருந்த ‘’ நீ பெரியவனா நான் பெரியவனா ‘’ எனும் மனோபாவத்துடனான செயல்பாடுகள் காரணமாக காந்தி கொலை நிகழ்வதற்கு ஒரு விதத்தில் காரணமாகி விட்டனர் .

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

~ எழுத்து: யா.சு.கண்ணன்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...