கடந்த வருடம் தேர்வு நேரத்தில் அரசு ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் பெரும் கண்டனத்தைப் பெற்றது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் சந்தித்தது. ஜாக்டோ ஜியோ எனும் அமைப்பு, திமுக., தலைவர் ஸ்டாலினின் தூண்டுதலால், ஆளும் அரசுக்கு நெருக்கடி கொடுக்க அரசியல் ரீதியாக போராட்டங்களை தொடர்ந்து நடத்தின. திமுக., ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம், இன்னும் சலுகைகள், சம்பள உயர்வெல்லாம் உண்டு என்று திமுக., தலைவர் ஸ்டாலின் கூறியதும் அதற்கு ஜாக்டோஜியோ தலையாட்டியதும் கண்டு பெற்றோர்களின் வயிறு எரிந்தது.
அப்போதே பெற்றோர்கள் தங்களது அதிருப்தியையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்தினர். தேர்வு நேரத்தில் திட்டமிட்டு, ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகின்றனர் என்று கூறினர். ஆனால், அது தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு நடத்திய போராட்டங்களாக பின்னர் வெளிப்பட்டது. தொடர்ச்சியான பள்ளிமூடல் நாட்கள். போராட்டத்தை சமாளிக்க தனியார் துறை ஆசிரியர்களை இட்டு நிரப்ப முயன்ற அரசின் நடவடிக்கைகள் என பல்வேறு குழப்பங்கள்.
இவற்றின் வெளிப்பாடு, தேர்வு முடிவுகளில் வெளிப்பட்டுள்ளது. இதற்காக, ஆயிரக்கணக்கிலும் லட்சத்துக்கு நெருக்கமாகவும் சம்பளம் வாங்கி, டியூசன் என்ற பெயரில் தனி வகுப்புகள் நடத்தி பணத்தில் மட்டுமே குறியாக இருக்கும் அரசு ஆசிரியர்கள் வெளியில் தலை காட்டவே வெட்கித் தலை குனிய வேண்டும்.
தேர்தலில் தபால் ஓட்டு போடுவதிலும், தேர்தலில் பூத் வேலை பார்ப்பதிலும் திமுக.,வுக்கு ஓட்டு போடுங்க என்று கூவுவதிலும் குறியாக அரசியல் வேலை பார்த்த ஆசிரியர்கள் இனி, வெட்கம் மானம் சூடு சுரணை ஏதாவது இருந்தால் கல்வி கற்றுக் கொடுக்கும் வேலையில் இருந்து அரசியலில் நேரடியாக சேர்ந்து தேர்தல் வேலை பார்க்கலாம் என்று பெற்றோர்கள் வெளிப்படையாகவே விமர்சனம் செய்கின்றனர்.
அதற்குக் காரணம், அரசுப் பள்ளிகளில் இந்த வருடம் பெரிதும் சரிந்துள்ள தேர்ச்சி சதவீதம்தான்!
2,700 அரசு பள்ளிகளில் 80 பள்ளிகள் மட்டுமே 100% தேர்ச்சி பெற்றுள்ளதாக, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முடிவில் தகவல் வெளியாகியுள்ளது.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 91.3 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.பல புள்ளி விவரங்களை அரசு வெளியிடாத நிலையில், தற்போது தற்போது சில விவரங்கள் கசிந்துள்ளன.
அதன்படி, 2,700 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வெறும் 80 பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன என்றும், 1200 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.
2018 ஆம் ஆண்டு 238 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்ற நிலையில், தற்போது வெறும் 80 பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சியை பெற்றிருப்பது கல்வித்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இயற்பியல், வேதியியல், உயிரியல் என முக்கிய பாடங்களில் நூற்றுக்கு நூறு எடுத்த மாணவர்கள் எண்ணிக்கையும் பெரிய அளவிற்கு இல்லை! அதிகபட்சமாக கணிப்பொறி அறிவியல் பாடத்தில் 1500 பேரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 1200 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதனிடையே, பள்ளி கல்வித்துறையில் 2019- 20ம் கல்வியாண்டில் அறிமுகப் படுத்தப்பட உள்ள புதிய பாட புத்தகங்களுக்கு 30 ரூபாயிலிருந்து, 180 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகங்கள் மே இறுதியில் விற்பனைக்கு வர உள்ளன என்று பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.




