spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைகாஷ்மீரம் - ஒரு ஹிந்து பூமி! ஹிந்து மதத்தின் அடித்தளம்!

காஷ்மீரம் – ஒரு ஹிந்து பூமி! ஹிந்து மதத்தின் அடித்தளம்!

- Advertisement -

காஷ்யபபுரி எனும் காஷ்மீர்!  வேதம் விளைந்த பூமி! தெய்வங்கள் தேடி வந்த பூமி! ரிஷிகள், முனிவர்களின் அருந்தவ பூமி! ஆசார்யர்களின் ஆன்மீக பூமி!

காஷ்மீர்=காஷ்யபர்+ மீரா. காஷ்யப ரிஷியின் பெரிய ஏரி. பெரிய ஏரிக்கு சம்ஸ்க்ருதத்தில் ‘மீரா’என்பர். காஷ்யப ரிஷி இப்போதைய வைவஷ்வத மந்வந்ரத்தின் சப்த ரிஷிகளில் ஒருவர். அதாவது ஏழு ரிஷிகளில் ஒருவர் காஷ்யபர்.

காஷ்யப கோத்ரத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ரிஷியின் மரபினர். ப்ரஜாபதி தக்ஷர் தம் 13 குமாரத்திகளை காஷ்யபருக்குத் திருமணம் செய்து கொடுத்தார். தேவர்கள், கன்வர்கள், யக்ஷர்கள், நாகர்கள் எல்லாம் காஷ்யபரின் பிள்ளைகள்.

மேரு பர்வத மலைகளின் நடுவே ஒரு மிகப்பெரிய அழகிய ஏரி இருந்ததாம். சிவனும், சதி (தாக்ஷாயிணி) யும் இந்த ஏரியின் அழகைக் காண அடிக்கடி இங்கு வருவார்களாம். காஷ்யப ரிஷி அந்த ஏரியை சதிக்குப் பரிசாகக் கொடுத்தார். அதனால் அது சதிசரோவர் என்று அழைக்கப்பட்டது.

அனந்த்நாக், பாராமுல்லா

அந்த ஏரியில் இருந்த ஜலோத்பவன் என்னும் அரக்கன், ஏரிக்குப் பக்கத்தில் இருந்த மக்களைத் துன்புறுத்தி வந்தான். அவர்கள் காஷ்யப ரிஷியிடம் சென்று முறையிட்ட னர். அவர் தன் மகன் அனந்த் நாகனைக் கூப்பிட்டு, ஜலோத்பவனை அழிக்குமாறு கூறினார்.

அனந்த்நாக் ஏரிக்கு மேற்கே ஒரு பள்ளத்தாக்கை வெட்டி, ஏரியில் இருந்த தண்ணீரை எல்லாம் அதில் திருப்பிவிட்டார். அந்தப் பள்ளத்தாக்கு வராஹ முகம் போல இருந்ததால் ‘வராஹ முக்’ என்றழைக்கப்பட்டது.
அதுவே மருவி “பாராமுல்லா” ஆயிற்று. பின்னர் ரிஷி காஷ்யபரும், அனந்த்நாக்கும் விஷ்ணுவைப் பிரார்த்தித்து, வேண்டி ஜலோத்பவனைக் சொல்லச் செய்தார்கள்.

காஷ்பியன் கடல்(Caspian Sea)

பள்ளத்தாக்கின் வழியாக விடப்பட்ட தண்ணீர் ஒரு மிகப்பெரிய நிலம் சூழ்ந்த கடல்/ஏரியில்(Land Locked Sea) சென்று சேர்ந்தது. காஷ்யப முனிவரின் பெயரால் காஷ்பியன் கடல்/ஏரி என்றழைக்கப்பட்டது. இதுவே இன்றைய காஸ்பியன் கடல் (ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் நடுவில் கஜகஸ்தான், ரஷ்யா, துர்க்மேனிஸ்தான், அஜர்பெய்ஜான், இரான் இவற்றுக்கு நடுவில்).

ஸ்ரீநகர்/ குல்மார்க்

பெரிதும் வற்றிப்போன ஏரியின் பெரும்பகுதியைச் சமப்படுத்தி ஊராக்கினார் அனந்த்நாக். அங்கு பல குருகுலங்கள், சர்வகலாசாலைகள் நிறுவி மிகப் பெரிய ஞான நகரம் ஆக்கினார்.

உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் பல சமயங்களைச் சார்ந்த அறிஞர்களும் ஞானிகளும் வந்து கூடி சத் சங்கம் செய்யும் இடமாகத் திகழ்ந்தது. ஞானம் என்னும் செல்வத்தை(ஸ்ரீ) உடைய நகர் என்பதால் ‘ஸ்ரீநகர்’ ஆயிற்று. இவற்றை எல்லாம் நிர்வாகம் செய்ய நிர்மாணித்த இடமே இன்றைய ‘அனந்த்நாக்’.

ஸ்ரீநகரின் ஞானச் செல்வத்தை அனுபவிக்க கெளிரி தேவியும், விநாயகரும் கைலாயத்திலிருந்து அங்கு வருவார்களாம்! அவர்கள் வரும் வழிக்கு “கெளரிமார்க்” என்று பெயர். அதுவே மருவி இன்றைய ‘குல்மார்க்’ ஆயிற்று.

ஞானபூமியை ஆளும் ஞானதேவி ஸ்ரீ சரஸ்வதி:

காஷ்மீரை ஆளும் காவல் தெய்வம் சரஸ்வதி தேவி. சரஸ்வதிக்குரிய ஸ்லோகத்தில்  “காஷ்மீர பூர வாசினி” என்று போற்றப்படுகிறார்.
“நமஸ்தே சாரதா தேவி!
காஷ்மீர் பூர வாசினி!
த்வமஹே ப்ரார்த்யே நித்யம்,
வித்யா தான் இஞ்சா தேஹிமே!”

காஷ்மீர மொழியின் எழுத்துவடிவங்கள் ‘சாரதா’ என்று அழைக்கப்பட்டது. கலாசாலைகள் “சாரதாபீடங்கள்”ஆயின. அந்த நாடே ‘சாரதா தேசம்’ என்றும் அழைக்கப்பட்டது.

(சரஸ்வதி கோவில், சாரதா பீடம் எல்லாம் இன்றைய பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் – POK – இடிந்த நிலையில் உள்ளன! வழிபாடு இல்லாமல் பாழடைந்து கிடக்கின்றன!)

ஆதிசங்கரரின் ‘செளந்தர்ய லஹரி’

ஆதிசங்கராசார்யர் எட்டாம் நூற்றாண்டில் காஷ்மீர் வந்து, பல ஆண்டுகள் தங்கியிருந்தார். கோபாலாத்ரி மலைமேல் அமர்ந்து தான் சிறந்த “செளந்தர்ய லஹரி”பாடினார். இந்த மலை சங்கராசார்ய மலை என்றும் அழைக்கப் படுகிறது.

நீலம் நதி (கிருஷ்ண கங்கா)க் கரையில் இருந்த சாரதா கோவிலுக்குச் சென்ற ஆதிசங்கரர், அந்தக் கோவிலின் அமைப்பு, சாந்நித்யம் ஆகியவற்றைக் கண்டு மிக உகந்து அதே போல சிருங்கேரியில் துங்கபத்ரா நதி தீரத்தில் கோவில் கட்டினாராம். சிருங்கேரியில் உள்ள சாரதாம்பாளின் சந்தன மரத்தாலான மூல விக்ரகம் காஷ்மீரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது.

ஸ்ரீராமானுஜரின் “ஸ்ரீபாஷ்யம்”

ஸ்வாமி ராமாநுஜர் 11 ஆம் நூற்றாண்டில் காஷ்மீர் வந்தார். வேத வியாசரின் பிரம்ம சூத்திரங்களுக்கு உரை எழுதுவதற்காக, சாரதா பீடத்தில் இருந்த, வேத வியாசரின் சீடர் போதாயன மகரிஷி இயற்றிய ‘போதாயன விருத்தி கிரந்தம்’ என்னும் நூலைப் பார்க்க வந்தார்.

ராமாநுஜர் இயற்றிய ஸ்ரீபாஷ்யத்தை சரஸ்வதி தேவி தம் சிரசில் சூடிப் பெருமைப் படுத்தினார். சில சூத்திரங்களுக்கு ராமானுஜரின் வ்யாக்யானங்களைக் கேட்டு, அவரை உச்சி முகர்ந்தார்.

ராமாநுஜரை “ஸ்ரீபாஷ்யகாரர்” என்று போற்றினார். சரஸ்வதி தேவி தாம் வணங்கி வந்த “லக்ஷ்மி ஹயக்ரீவர்” விக்ரகத்தை ராமாநுஜருக்குத் தந்தருளினார்.

பிற மத அறிஞர்கள்:

பெளத்த, சமண மத அறிஞர்களும் இங்கு வந்து தத்துவ விசாரம் செய்தனர். பல பெளத்தத் துறவிகள் இங்கு பல ஆண்டு காலம் தங்கி இருந்து கற்றனர். யுவான் சுவாங்(சீனா) ஹேமசந்திரர்(சமண) ஆகியோர் இங்கிருந்தனர்.
இஸ்லாமிய மத அறிஞர்களும்-அல்பரூனி-இங்கு வந்து படித்துச் சென்றதாகக் குறிப்புகள் உள்ளன. பெளத்தம் இங்கு வளர்ந்ததற்கு அடையாளமாக இன்றைய லடாக் பிரதேசம் விளங்குகிறது.

இஸ்லாமிய ஆக்கிரமிப்பைத் எதிர்த்து வென்ற இந்து மன்னர்கள்:

இஸ்லாமியர்கள் உலகின் பல நாடுகளிலும் தங்கள் ஆதிக்கத்தைக் காட்டிய போதும், பரத கண்டத்துக்குள் அவ்வளவு சுலபமாக நுழைய முடியவில்லை. ‘லோஹனா’ வம்சத்து மன்னர்கள் அவர்களை உள்ளே நுழைய விடாமல் நம் வட மேற்கு எல்லையைப்பாதுகாத்தனர். லோஹனா வம்சத்தின் முன்னோர் ‘லவ’ பேரரசரின் (ஆம்… ஸ்ரீராமரின் திருக்குமாரர் தான்) படையில் வாள்படைத் தளபதிகளாக இருந்தார்கள்! ஸ்ரீராமாயண காலத்து லவபுரி தான் இன்றைய லாகூர் (பாகிஸ்தான்).

காஷ்மீரின் வரலாறு:

மகாகவி கல்ஹணர் காஷ்மீரின் வரலாற்றை “ராஜ தரங்கிணி” என்னும் நூலாக எழுதியுள்ளார். எட்டு பகுதிகள்- தரங்கங்கள்-கொண்ட இந்நூலில் 7826 ஸ்லோகங்கள் உள்ளன.

இதையே காஷ்மீர் பற்றிய அடிப்படை ஆதார நூலாக மற்ற ஆராய்ச்சி யாளர்கள் / எழுத்தாளர்கள் கொண்டுள்ளனர். கல்ஹணர் காஷ்மீரை ஆண்ட பல மன்னர்களின் பெயரைப் பட்டியல் இட்டுள்ளார்.

அவர்களுள் சில பெயர்கள்: கோநந்தா, தாமோதரா யஷோவதி, லவ, குசேஷயா, சுரேந்திரா, ஜனகா, அசோகா, ஜலோகா, அபிமன்யு… மற்றும் பலர்.

இந்த நூல் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
சுருக்கமாக M.A.Stein என்பவர் ஆங்கிலத்தில் Kalhana’s Rajatarangini-A Chronicle of the Kings of Kashmir என்று மூன்று புத்தகங்களாக எழுதியுள்ளார்.

-அடியேன்
பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe