திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் 77.94 கோடி ரூபாய் செலவில் உணவுப் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (பிப்.14) தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டைத் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார்.
அவர் கூறும்போது, ”தமிழக பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு 11,894.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் 77.94 கோடி ரூபாய் செலவில் 53.36 ஏக்கர் பரப்பளவில் மெகா உணவுப் பூங்கா அமைக்கப்படும். 2020-21 ஆம் கல்வியாண்டில், பிரதான் மந்திரி கிஷான் சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் 218 கோடி ரூபாய் செலவில் தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளன.
தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் உணவுப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.70 கோடி ஆகும்.
ஒருங்கிணைந்த உழவர் விற்பனை மைய வளாகங்கள் திருவண்ணாமலை, திருச்சி, தர்மபுரி, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்” என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.