
வடலூரில் தைப்பூசத்திருவிழா. அன்றைய முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையில் நடைபெற்ற விழாவில் முத்துராமலிங்கத் தேவர் கலந்துகொண்டார்.
தேவர் பேசுவதற்கு முன், ரெட்டியார் அவரிடம், ‘இதுவரை அச்சில் வராத வள்ளலாரின் ஒன்பது பாடல்களின் ஏட்டுச்சுவடிகளை அவரது உறவினர்கள் தர மறுக்கிறார்கள். அவற்றை எல்லாரும் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று கோரினார்.
தேவர் தனது சொற்பொழிவின் இறுதியில் ‘அடிகளாரின் உறவினர்க்கு
இந்தக்கூட்டத்தில் வாயிலாக ஒன்று கூறுகிறேன். அச்சுக்கு வராத வள்ளலாரின் சுவடிகளை மடத்துக்குத் தந்து உதவுங்கள். அல்லது நீங்களே நூலாக வெளியிடுங்கள்.
இரண்டையும் செய்யாமல் நீங்கள் பிடிவாதமாக இருப்பதால் அடிகளாரின் அந்த ஒன்பது பாடல்களும் உலகத்துக்குத் தெரியாமல் போய்விடும் என்று எண்ண வேண்டாம். அந்த ஒன்பது பாடல்களையும் அடியேன் பாடுகிறேன், கேளுங்கள்’ என்று கூறி தம் கணீர்க் குரலில் பாடினார்.
சற்று நேரத்தில் வள்ளலாரின் உறவினர் மேடையேறி, தனது கையிலிருந்த ஓலைச்சுவடிகளை தேவர் கையில் தந்து வணங்கிச் சென்றார்.
(தேவர் போன்ற மகான்கள் ஒரு குலத்துக்கோ இரு குலத்துக்கோ முக்குலத்துக்கோ மட்டும் உரியவரல்லர். எக்குலத்திற்கும்-மனித குலத்திற்கே உரியவர்களாவர்)



