அடுத்த 10 நாட்களுக்கு காவிரியில் 15 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவு

புது தில்லி:
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு திங்கள்கிழமை (செப்.5) கணக்கிட்டு அடுத்த 10 நாள்களுக்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பா பயிரை பாதுகாக்கவும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை நீர் 50.052 டிஎம்சி நீரை கர்நாடக அரசு உடனே திறந்து விட உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த உச்ச நீதிமன்றம், பருவ மழை சராசரியாக பெய்யாத காலங்களில் தமிழகம் உள்பட சம்பந்தப்பட்ட பிற மாநிலங்களுக்கு எவ்வளவு நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்பதைத் தெரிவிக்க வேண்டும். “வாழுங்கள்! வாழ விடுங்கள்!!’ எனும் கொள்கை அடிப்படையில் இந்த விவகாரத்தில் கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது.

இந்த விவகாரம் தொடர்புடைய மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்டே ஆஜராகி, “காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில், “பருவ மழை சராசரி அளவு பெய்யாத காலத்தில் சில வழிமுறைகளின்படி பிற மாநிலங்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்’ என்று கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களுக்கு பருவமழை சராசரி அளவு பெய்தால் 94 டிஎம்சி நீரும், சராசரி அளவு பெய்யாதபோது 68 டிஎம்சி நீரும் வழங்க வேண்டும். அந்த வகையில் தற்போது வரை 33 டிஎம்சி நீர் மட்டுமே தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்கியுள்ளது’ என்றார்.

இதற்கு கர்நாடக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் ஃபாலி எஸ்.நாரிமன் ஆஜராகி ஆட்சேபம் தெரிவித்து முன்வைத்த வாதம்: பருவ மழை பொய்த்துப் போகும்போதும், இடர்பாடு காலங்களிலும் எவ்வளவு நீர் திறந்து விட வேண்டும் என்பதை காவிரி நடுவர்மன்றம் அதன் இறுதித் தீர்ப்பில் தெளிவுபடுத்தவில்லை. நீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி 2013-இல் மேற்பார்வைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. அதன்படி, காவிரி நீர்ப் பங்கீடு நடவடிக்கையை அக்குழு கண்காணித்து வருகிறது. தற்போது கர்நாடகாவில் பருவ மழை பொய்த்து விட்டதால், அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை. இது பற்றி மேற்பார்வைக் குழுவிடமும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், காவிரி நடுவர்மன்றம் 2007-இல் அளித்த இறுதித் தீர்ப்பில், பிற மாநிலங்களுக்கான நீர்ப் பங்கீட்டு முறை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுதலுக்கு உள்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை நீர்ப்பங்கீட்டு முறையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் பழைய நடைமுறையின்படி நீர்ப் பங்கீட்டைக் கோருவது ஏற்புடையதல்ல. நீர்ப் பங்கீட்டு முறையில் மாற்றம் செய்ய காவிரி மேற்பார்வைக் குழுவுக்குத்தான் அதிகாரம் உள்ளது என ஃபாலி நாரிமன் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநில அரசுகள் முன்வைத்த கருத்துகளை நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது. எனினும், தமிழகத்தில் சம்பா சாகுபடி பயிர்களைப் பாதுகாக்கும் வகையில் காவிரியில் இருந்து வினாடிக்கு 15,000 கன அடி நீரை திங்கள்கிழமை (செப். 5) கணக்கிட்டு 10 நாள்களுக்கு கர்நாடக அரசு திறக்க வேண்டும். அதில் இருந்து புதுச்சேரிக்கு உரிய பங்கீட்டை தமிழக அரசு திறந்துவிட வேண்டும்.

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீர்ப் பங்கீட்டு முறையில் மாறுதல் கோருவது தொடர்பான கருத்தை தமிழக அரசு, மூன்று நாள்களுக்குள் மேற்பார்வைக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு கர்நாடக அரசு தரப்பு அக்குழுவிடம் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும். இரு மாநிலங்களின் கருத்துகள் கிடைத்தவுடன், அடுத்த நான்கு நாள்களுக்குள் அவற்றின் முறையீடுகள் மீது மேற்பார்வைக் குழு முடிவெடுத்து அத்தகவலை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் வரும் 16-ஆம் தேதி மீண்டும் விசாரணை நடைபெறும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.